Tuesday, October 13, 2020

திருப்பாத தரிசனம் - 42

                                           திருக்கச்சூர்  - அமிர்த தியாகர் -2

                                                  

அடுத்து மலைக்கோவிலின் சிறப்பைப் பற்றியும் காணலாம் அன்பர்களே. மலைக்கோவில் ஊர்க்கோவிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆலக்கோவிலைப் பாடும் போது சுந்தரர் மற்றும் ஏயர்க்கோன் கலிக்காம நாயனார் இருவரும் மலைக்கோவிலையும் சேர்த்தே பாடியுள்ளனர்.

மேலை விதியே விதியின் பயனே விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே  மறவே னடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.

 பொருள் : மேம்பட்டதாகிய அறநெறியாயும், அதன் பயனாயும் உள்ளவனே, பகைவரது திரிபுரங்களை எரித்தவனே, காலையில் எழுந்து உன்னை வணங்குபவர் மனக்கவலையை அடியோடு நீக்குபவனே, நீலகண்டத்தை யுடையவனே, மாலைக் காலத்தில் தோன்றும் சந்திரன் போன்றவனே , மலைமேல் இருக்கின்ற மருந்து போல்பவனே, வயல்கள் நிறைந்த கரும்பாலையை உடைய இடங்களைக் கொண்ட பண்ணையை உடைய திருக்கச்சூரில் உள்ள ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, அடியேன் உன்னை மறவேன் என்று மலைக்கோவிலையும் பாடியுள்ளார். ஏயர்கோன் கலிக்காம நாயனார் “வன்றொண்டர் பசி தீர்க்க மலையின் மேல் மருந்தானார்” என்றும் போற்றுகின்றார்.

                                 

இவ்வூரில் அமைந்துள்ள மலைக்கு ஔஷத கிரி எனும் பெயருண்டு. அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து சென்ற போது அதன் ஒரு துண்டு கீழே விழுந்து ஔஷத மலையானது. சுந்தர மூர்த்தி நாயனார் பசித்திருந்த சமயம் இம்மலையில் இறங்கி இறைவனார் பிச்சையேற்று உணவு கொணர்ந்து தமது அடியாரின் பசியாற்றிய தலம். இத்தலத்தில் கொடி மரத்தின் கீழுள்ள திருமண் திருநீற்றுத் தன்மையுடன் உள்ளது. இந்திரன் தன்னுடைய தீராத நோய்  தீர  நாரதரின் அறிவுரைப்படி மருந்தீஸ்வரர் மலையில் இருக்கும்  பலை, அதிபலை என்ற மூலிகை  வேண்டி  சிவனை நோக்கி கடும் தவம் இருந்தானாம். பலன் இல்லையாம். அதனால்,  நாரதரிடம் உபாயம் கேட்க,  அன்னையை மறந்து தவம் இயற்றியதால்,  அன்னை இந்திரனுக்கு தெரியாமல் மூலிகையை மறைத்து திருவிளையாடல் புரிகிறார் என்றாராம், தன் தவறை உணர்ந்த இந்திரன்,  அஸ்வினி, தேவர்கள் ஆகியோர் சிவ சக்தியை தியானித்தார்களாம்.  பிறகு அன்னை மனம் குளிர்ந்து மூலிகையை அருளினாராம்.  இந்திரனுக்கு மருந்து கொடுத்ததால் சிவன் இங்கே மருந்தீஸ்வரர் என்றும்,  மறைத்து வைத்த மூலிகைகளின் மீது ஒளி பரப்பி இருள் நீக்க செய்து அவற்றை வழங்கியதால் அம்பாள் “அந்தக நிவாரணி“,  இருள் நீக்கி அம்மையார் என்றும் அழைக்கபடுகிறார். அகத்தியரும், அழுகண்ணி சித்தரும் தவம் செய்த மரத்தடிகள் இம்மலையில் காணப்படுகிறது. அதன் அடியில் பௌர்ணமி நாளில் உட்கார்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தவம் செய்தால் நமது பிரார்த்தனைகள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறுமாம்.  மலைக்கோவிலின்

மூலவர்: மருந்தீசர்

அம்பாள்: அந்தநிவாரணி, இருள் நீக்கி அம்மை

தலவிருட்சம் : வேர்ப்பலா.

தீர்த்தம்: ஔஷதி தீர்த்தம்.

கோவிலின் முன்பு நான்கு கால் மண்டபம்  அழகாக காட்சி தருகின்றது இராஜகோபுரம் இல்லை நுழைவாயில் மட்டுமே கற்றளியாக உள்ளது. அதை தாண்டி மண்ணே மருந்தானமருந்தீசரை தரிசிக்க நுழைவாயிலை கடந்து கோவிலின் உள்புறம் நுழையும்போதே,  நுணுக்கமான வேலைப்பாடுடன் கூடிய அழகான ஒரு கோவிலுக்குள் நாமிருப்பதை உணரலாம். த்தலம் 108 சக்தி பீடங்களில் ஒன்றான  ”ஔஷதைஎன்கிற சக்தி பீடமாகும். தெற்கு நோக்கிய வாயிலை கடந்து உள்ளே சென்றால் அழகிய சிற்பங்கள் கொண்ட தூண்கள் நிறைந்த மண்டபம். மண்டபத்தின் தூண்களில் துவார பாலகர்கள், இலிங்கோத்பவர்,  மாவடி சேவை  பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின்  சிற்பங்கள் கண்ணுக்கு விருந்து. சுந்தரரை நோக்கியவாறு கையில் அமுதுடன் இறைவனின் சிற்பமும் உள்ளது.  மண்டபத்தின் நடுவில் அழகாக செதுக்கப்பட்ட தாமரை போன்ற அமைப்பில் வட்டவடிவில் சிறிய சக்கரம் காணப்படுகிறது.

சுற்றிலும் இயற்கை சூழல். மிகவும் ரம்மியான அமைதியான இடம். பச்சைப் பசேலென்று அமைதியாக உள்ள பிரதேசத்தில் அமைந்துள்ளது ஆலயம். உள்பிரகாரத்தில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி,   மேற்கு நோக்கி திருவண்ணாமலையாரை சேவித்தபடியான  அமைப்பில் வீற்றிருக்கிறார் பிள்ளையார். இங்கே வழிபட்டால் திருவண்ணாமலையில் வழிபட்ட புண்ணியம் கிடைக்குமாம். கணபதியை வணங்கிய பின் வலம் வரும்போது ஐயன் சன்னதிக்கு எதிரே ஒரு சாளரம் அதன் வழியே கொடிமரம், நந்தி, பலி பீடத்தை தரிசிக்கலாம்.

எம்பெருமான் மருந்தீஸ்வரராக சிவலிங்க ரூபத்தில் எழுந்தருளி மேற்கு நோக்கி அருள் பாலிக்கின்றார். சனகாதி முனிவர்கள் வழிபட்ட பெருமான். அஸ்வினி தேவர்கள் வழிபட்ட இறைவர். மருந்தீஸ்வரரை வேண்டிக் கொண்டால் தீராத நோய்கள், துன்பங்கள் நீங்கும். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன.   உள்சுற்றில் சுப்பிரமணியர் சன்னதி.  இச்சன்னதி அருகில் நின்று பார்க்கும் போது கோவிலின் அழகு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அருகில் ஒரு மண்டபத்தில் நவகிரக சன்னதியும் அமைந்துள்ளது.   பிரம்ம தேவன் இங்கு தவம் செய்த இடம் என்பதால் இங்கு பிரம்ம தேவனுக்கு அபிஷேகம் ஆராதனைகள் உண்டு. சண்டிகேஸ்வரர் இங்கே பிரம்ம முக சண்டிகேஸ்வரராக தரிசனம் தருகின்றார். இவருக்கு ஒன்பது வாரம் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறுமாம். சகலவித இடையூறுகளும் இன்னல்களும் அகலும் என்பதும் ஐதீகம்.  பைரவர் சன்னதியும். மேலும்,  விநாயகரின் நேர் பார்வையில் நவகிரகங்கள் அமைந்து இருப்பது இக்கோவிலின் சிறப்பு.

அம்பாள் சன்னதி வெளிப்பிரகாரத்தில் தனிக்கோவிலாக முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. மருந்தீஸ்வரர் மற்றும் இருள் நீக்கி அம்பாள் இருவரும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு சிறப்பு.  அம்பாளிடம் வேண்டிக் கொண்டால் ஆணவம், கிரக தோஷம், கண் நோய்கள் தீரும், பிரம்மஹத்தி, பித்ரு தோஷங்கள் நீங்கும்,  குறைவில்லாத வாழ்வும் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்பாள் சன்னதி மேற்கு நோக்கி நின்ற நிலையில்  அபய வரத்துடன் நான்கு திருகரங்களுடன் காட்சி தருகிறார். அம்பாள் சன்னதிக்கு எதிரே நாக லிங்க மரம் மரத்தடியில் நாகர்கள்.
கொடி மரத்திற்கு கவசம் எதுவும் இல்லை. இதன் அடியில் உள்ள மண்ணே மருந்தாகின்றது. அடுத்து அழகாக இறங்கி செல்லும் அமைப்புடைய படிக்கட்டுகளுடன் கூடிய ”ஔஷததீர்த்த குளம்” அமைந்துள்ளது.

மாசி மகத்தில் இக்கோவிலில் திருவிழா நடைப்பெறுகிறது. இங்கு கிரிவலம் சிறப்பு,  எல்லா நாட்களிலும் எந்நேரத்திலும் கிரிவலம் வரலாம் என்றாலும்  பௌர்ணமி நாட்களில் வெறும் தேகத்தில் மூலிகைகள் அடங்கிய காற்று படுவதால் உடலில் உள்ள நோய்கள் அகலுமாம்.  மேலும். இந்திரன் கடும் தவமியற்றிய இடத்து மண்ணே மருந்தாக மாறி பூலோக வாசிகளுக்கு பயன் பெறட்டும் என்று   சிவபெருமான்  வரம் அருளினாராம். இம்மருந்தான மண்ணை விவசாய நிலங்களில் தூவினால் பயிர்கள் செழித்து வளரும் என்பது நம்பிக்கை.

இவ்வாறாக சோழ மண்டலத்தின் சப்த விடங்கத்தலங்களின் தியாகேசர்கள் மற்றும் தொண்டை மண்டலத்தின் உப விடங்கத்தலங்களின் தியாகேசர்கள் தரிசனமும் சிறப்பாக நிறைவுற்றது.  இது வரை வந்து தரிசனம் கண்ட அனைவருக்கும் சிவசக்தியின் அருள் வேண்டி இத்தொடரை இப்பதிவுடன் நிறைவு செய்கின்றேன். அடுத்து நவராத்திரி பதிவுகளுடன் சந்திக்கின்றேன் அன்பர்களே.

சுபம்

No comments: