இந்த பத்தாவது ஸ்லோகம் தீபம் ஏற்றி அன்னையின் ஸந்நிதானத்தை கண்டு வணங்குவதற்கு ஏதுவாக பிரகாசமாக்குவதை விளக்குகின்றது.
லக்ஷ்மீம்- உஜ்வலயாமி ரத்ன-நிவஹ- உத்
பாஸ்வத்தரே மந்திரே
மாலா-ரூப விலம்பிதை:மணிமய
ஸ்தம்பேஷு ஸம்பாவிதை: I
சித்ரை: ஹாடக-புத்ரிகா-கர-த்ருதை:
கவ்யை: க்ருதை: வர்த்திதை:
திவ்யை: தீபகணை: தியா கிரிஸுதே!
ஸந்துஷ்டயே கல்பதாம் II 10.
இரத்தின கற்கள் இழைத்த உனது திருக்கோவிலில் மாலை போல் தொங்குகின்றவையும், இரத்தினமயத் தூண்களில் நிழலாகத் தெரிகின்றனவையும், பலவித தங்கப் பெண் பதுமைகளால் கையில் ஏந்திய வண்ணம் என்னும் பலவித பசுநெய் விளக்குகளால் மனதளவில் அழகை கூட்டுவிக்கிறேன். மலை மகளே அது உன்னை மகிழ்விக்கட்டும்.
லக்ஷ்மீம்- பிரகாசத்தை, ஹாடக புத்ரிகா_ தங்கப் பதுமை
.ஆதி பராசக்திக்கு பலவித சித்ரான்னங்கள் நைவேத்யம் செய்வதை ஆச்சார்யர் இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் அருளுகின்றார்.
ஹ்ரீம்கார ஈச்வரி! தப்த-ஹாடக-க்ருதை:
ஸ்தாலீ- ஸஹஸ்ரைர் ப்ருதம் திவ்ய அன்னம்
க்ருத-ஸூப-சாக-பரிதம் சித்ரான்னபேதம் ததா I
துக்த அன்னம் மது-சர்கரா-ததி-யுதம் மாணிக்ய-
பாத்ரே ஸ்திதம் மாஷ-ஆபூப-ஸஹஸ்ரம் அம்ப!
ஸபலம் நைவேத்யம் -ஆவேதயே II 11.
ஹே ஹ்ரீங்காரேச்வரித் தாயே! உருக்கிய தங்கத்தால் செய்யப்பட்ட பல கிண்ணங்களில் பரிமாறப்பட்டுள்ள நைவேத்தியம் அனைத்தையும் நிவேதனம் செய்கிறேன். நெய்யும் பருப்பும் கலந்து தயாரித்த கறி வகைகளும், சித்ரான்னங்களும், தயிர், தேன், சர்க்கரை சேர்த்து மாணிக்கம் பதித்த பாத்திரத்தில் இருக்கும் பாலன்னம், ஆயிரம் வடைகள் இப்படி நைவேத்தியம் இங்கு பாவிக்கப்படுகிறது.
ஸூப-சாக – பருப்பும் காய்கறியும்
அம்மனுக்கு தாம்பூலம் அளித்து மரியாதை செய்வதை ஜகத் குரு ஆதி சங்கரர் இந்த பன்னிரண்டாவது ஸ்லோகத்தில் அருளுகின்றார்.
ஸச்சாயை: வர-கேதகீ-தல-ருசா
தாம்பூல-வல்லீ-தலை:
பூகை: பூரி-குணை: ஸுகந்தி-மதுரை:
கர்ப்பூர- கண்ட -உஜ்ஜ்வலை: I
முக்தா-சூர்ண-விராஜிதை: பஹுவிதை:
வக்த்ர அம்புஜ ஆமோதிதை:
பூர்ணா ரத்ன-கலாசிகா தவ
முதேந்யஸ்தா புரஸ்தாத்-உமே II 12
ஹே உமை அன்னையே! உனது எதிரில் இதோ முழுவதும் ரத்ன கற்கள் பதிந்த வெற்றிலை பெட்டி வைத்துள்ளேன். அது உன் மகிழ்ச்சிக்காகவே வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் நல்ல தாழை மடல்கள் போன்ற (நிறமான) வெற்றிலைகளும், இனிய மனம் கொண்ட பாக்குத் துகள்களும், பச்சை கற்பூரம், சுண்ணாம்பு கலந்து திருவாய்க்கு மணம் உண்டாக்கும் விதத்தில் அனைத்து பொருட்களும் நிரம்பியுள்ளன.
வரகேதகீதலருசா- தாழை மடல்கள் போன்ற, பூக- பாக்கு, கலாசிகா- தாம்பூலத் தட்டு.
மலையரையன் பொற்பாவைக்கு கற்பூர ஆரத்தி (தீபாரதனை) செய்வதை இந்த பதிமூன்றாவது ஸ்லோகத்தில் ஆச்சார்யர் அருளுகின்றார்.
கன்யாபி: கமனீய-காந்திபி:
அலங்கார- அமல ஆராத்ரிகா-
பாத்ரே மௌக்திக சித்ர-
பங்க்தி-விலஸத் கற்பூர தீபாலிபி: I
தத்தத்-தால-ம்ருதங்க கீத-ஸஹிதம்
ந்ருத்யத் பதாம்-போருஹம்
மந்த்ராராதன-பூர்வகம் ஸுநிஹிதம்
நீராஜனம் க்ருஹ்யதாம் || 13
அழகிய பெண்கள், அலங்கார ஆரத்தி பாத்திரத்தில் வரிசையாக முத்துக் கோர்த்தாற் போல கற்பூர தீபங்களை ஏந்தியவர்களாய், மிருதங்கத்தின் தாள ஒலிக்கு ஏற்றார் போல் ஸங்கீதமும், நாட்டியமும் சேர்ந்து செய்பவர்களாய், மந்திரங்களுடன் காட்டும் கற்பூர நீராஜனத்தை ஏற்றுக் கொள்ளலாமே!
*********************
அபிராமி அம்மை பதிகம்
நீடுலகங்களுக்கு ஆதாரமாய் நின்று
நித்தமும் மூர்த்தி வடிவாய்
நியமமுடன் முப்பத்திரண்டு அறம் வளர்க்கின்ற
நீ மனைவியாய் இருந்தும்
வீடு வீடுகள் தோறும் ஓடிப்புகுந்து கால்
வேஸற்று இலச்சையும் போய்
வெண்துகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண
வேடமும் கொண்டு கைக்கோர்
ஓடு ஏந்தி நாடெங்கும் உள்ளம் தளர்ந்து நின்று
உன்மத்தன் ஆகி அம்மா
உன் கணவன் எங்கெங்கும் ஐயம் புகுந்து ஏங்கி
உழல்கின்றது ஏது சொல்லாய்?
ஆடு கொடி மாடமிசை மாதர் விளையாடி வரும்
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (7)
பொருள்: அன்னை அபிராமியே அனைத்து உலங்களுக்கும் ஆதாரமாக இருப்பவள். அவளே பல ஸ்தலங்களில் பல் வேறு வடிவங்களில் அன்பர்களுக்கு அருள் புரிகின்றாள். சிவபெருமான் அளித்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பதிரண்டு அறங்களையும் முறையாக செய்த தர்ம ஸம்வர்த்தினியும் அவளே . இவ்வளவு சிறப்புக்களையும் நீ பெற்ற இருந்தும் உன் கணவனாகிய சிவபெருமான், வீடு தோறும் சென்று, கால் நோக வெட்கத்தையும் விட்டு, இதையில் அணிய ஆடையும் இல்லாமல் திகம்பரராக கையில் ஓடு ஏந்தி மனம் தளர்ந்து பித்தனாகி பிச்சைக் கேட்டு அலைவது ஏன்? என்று கொடிகள் ஆடி அசைகின்ற மாடங்களில் பெண்கள் விளையாடுகின்ற பெருமை வாய்ந்த திருக்கடவூரின் வாழ்வை ! அமிர்த கடேஸ்வரரின் இடப்பாகம் அகலாத அன்னையை ! கிளியை திருக்கரத்தில் ஏந்தியவளை! அனைவருக்கும் அருள்புரிபவளை! அபிராமி அன்னையை உரிமையுடன் வினவுகின்றார் அபிராமி பட்டர்.
ஞானம் தழைத்து உன் சொரூபத்தை அறிகின்ற
நல்லோர் இடத்தினில் போய்
நடுவினில் இருந்து உவந்து அடிமையும் பூண்டு அவர்
நவிற்றும் உபதேசம் உட்கொண்டு
ஈனம்தன்னைத் தள்ளிஎனது நான் எனும் மானம்
இல்லாமலே துரத்தி
இந்திரிய வாயில்களை இறுகப்புதைத்து நெஞ்சு
இருள் அற விளக்கு ஏற்றியே
வான் அந்தம் ஆனவிழி அன்னமே உன்னை என்
மனத் தாமரைப் போதிலே
வைத்து வேறே கவலை அற்றுமேல் உற்றுபர
வசமாகி அழியாதது ஓர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்றது என்று காண்?
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே! (8)
பொருள்: இப்பாடலில் பல அரிய கருத்துக்களை அபிராமிபட்டர் கூறியுள்ளார். சத்சங்கத்தின் மேன்மையும். ஐம்புலன்களையும் அடக்கி, ஆணவத்தை வென்று மனத்தாமரையில் அன்னையை அமரச்செய்வதே ஒரு ஆத்மசாதகன் முக்தி அடைய செய்ய வேண்டும் என்பதை அருமையாக காட்டுகின்றார் அபிராமி பட்டர்.
(அபிராமி அம்மன் பதிகப் பாடல்களுக்கு இன்னும் விரிவான உரையை காண அபிராமிதாசன் மீனாட்சி சுந்தரம் மோகன் அவர்களின் "அபிராமி அம்மனின் பதிகங்கள்" புத்தகத்தைக் காணலாம்)
*************************
அம்மன் அருள் தொடரும். . . . .. ...