Saturday, April 12, 2008

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் - 2

திருக்காரணி
சொர்ணாம்பிகை நவரத்ன மாலை


முத்து


பணிகொள் கற்றைப் புனற் குழலாய்
பசுவேன் போற்றும் பாங்குடையாய்
படரும் ஞானத் திருநீற்றால்
பாசந் தொடராப் பார்ப்பதியே

பிணி கொள் வாழ்வைத் துறப்போரின்
பிறப்பைப் போக்கும் பிஞ்சகியே
பிறையை சூடும் பெருமாட்டி
பீடத்தமரும் பூங்கொடியே

மணிகொள் கண்டன் அணைகின்ற
மயிலே முத்தே மாமையளே
மடங்கொள் அனமே மலைச் செல்வி
மட்டில் முகிழ்த்தாய் முரலுற்றே

அணிகொள் தில்லைச் சிவகாமி
அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி
அன்னாய் சிவசொர் ணாம்பிகையே.




பெருவிழாவின் இரண்டாம் நாள் காலை காரணீஸ்வரப் பெருமான் சூரிய விருத்தத்தில் திருவீதி உலா வருகின்றார். சிவபெருமானுக்கு மூன்று கண்கள் , சூரிய சந்திர அக்னிகளே ஐயனின் மூன்று கண்கள் என்பது ஐதீகம்.




பகலில் கோடி சூரிய லாவண்ய பவள வண்ண எம்பெருமான் தனது வலது கண்ணான சூரிய விருத்த்தில் எழுந்தருளி , சூரியன் எல்லா ஜீவராசிகளையும் வாழ வைப்பதை உணர்த்தும் வகையில் உலா வந்து அருளுகின்றார்.




மாலை சந்திரப்பிறையில் எழுந்தருகின்றார் காரணீஸ்வரர். தன் மனைவியருள் ரோகிணியிடம் மற்றும் அன்பு கொண்டு மற்றவர்களை புறக்கணித்ததால் கோபம் கொண்டு தட்சன் அளித்த சாபத்தினால் சந்திரன் தன் கலைகளை எல்லாம் இழந்து குட்ட நோய் பீடித்து நின்றான். பின் சோம வார விரதம் இருந்து சிவ பெருமானை வேண்டிட , கருணா மூர்த்தி சாபத்தை மாற்றி நாள் ஒன்றுக்கு ஒரு கலையாக இழந்து மாதத்தில் ஒரு நாள் அமாவசையன்று கலைகள் இல்லாமல் இருக்குமாறும் பின்னர் கலைகள் வளர்ந்து பௌர்ணமியன்று 16 கலைகளுடன் பூரண சந்திரனாக விளங்கும் வரம் அளித்தார். மேலும் இளம் பிறையை தமது ஜடாமுடியில் சூடி சந்திர சேகரராக விளங்குகின்றார்.




ஐயனின் ஜடாமுடியை அலங்கரிக்கும் சந்திரன் பெருவிழாவின் இரண்டாம் நாள் இரவு, ஐயனை தாங்கி வரும் எழிற்கோலம்.




Second Day night


Karaneeswarar on Moon mount







பெரும்பாலான திருக்கோவில்களில் பூரண சந்திரனின் மத்தியில் ஐயன் இருக்கும் வண்ணம் அலங்காரம் செய்வர், இத்தலத்தில் இளம் பிறையில் ஐயன் வலம் வரும் அழகே அழகு.












முத்தாய் ஒளிரும் அன்னை சிவ சொர்ணாம்பிகை





அதிகார நந்தியில் காரணீஸ்வரப் பெருமான்







காமதேனு வாகனத்தில் சொர்ணாம்பாள்





மயில் வாகனத்தில் முருகர்





ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்


No comments: