Tuesday, April 15, 2008

சித்திரைப் பெருந்திருவிழா பரத்வாஜேஸ்வரம் - 5

விருஷப வாகன மாபெரும் திருக்காட்சி
தமிழகத்தின் அனைத்து மண்டலங்களின் சிவாலயங்களிலும் ஐந்தாம் நாள் இரவு பசு ஏறும் எங்கள் பரமன் விருஷப வாகன சேவை தந்தருளுகின்றார். எப்போதும் ஐயனை தாங்கும் நந்தியெம்பெருமானில் சிறப்பு அலங்காரத்துடனும், சிறப்பு மேள தாளங்களுடனும், கரக ஆட்டம், வாண வேடிக்கை என்று எத்தனை சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டோ அத்தனையுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் சிவ பெருமான்.
விஷ்ணுவாலயங்களில் கருட சேவையின் நாளும் சமயமும் மாறி வருகின்றன, ஆனால் சிவாலயங்களில் பெருவிழாவின் ஐந்தாம் நாள் இரவுதான் விடைக் காட்சி . அதுவும் சிறப்பு அலங்காரம் பஞச மூர்த்திகளுக்கும் செய்யப்படுவதாலும், எல்லா வாகனங்களிலும் பெரிய வாகனமாக ரிஷப வாகனம் விளங்குவதாலும் அதற்கேற்றார்ப் போல அலங்காரம் செய்யப்படுவதாலும். ஏறு சேவை புறப்படும் போது நள்ளிரவுக்கு மேல் ஆகி விடுகின்றது. இன்றைய தினம் மட்டும் இறைவனை எழுந்தருளப் பண்ணும் போது வண்டிகளில் எழுந்தருளச் செய்வதில்லை பக்தர்கள் அனைவரும் தங்கள் தோள்களில் ஏந்தியே எம்பெருமானை திருவீதி வலம் செய்கின்றனர். ஆகவே உலா முடியும் போது அதிகாலைப் பொழுது ஆகி விடுகின்றது.

இனி தமிழகத்தின் பல்வேறு மண்டலங்களில் சிவனாரை என்றக்கும் சுமக்கும் நந்தி வாகன சேவை எவ்வாறு நடைபெறுகின்றது தெரியமா?

தொண்டை மண்டலத்தில் விடைப் பெருங்காட்சி, மலர் அலங்காரத்துடன் பெரிய வெள்ளி, தங்க ரிஷப வாகனம்.


தஞ்சை மண்டலத்தில் சகோபுர தரிசனம். அலங்காரம் கோபுரம் போலவே செய்யப்படுகின்றது. பார்க்கும் போது ஆலயமே நகர்ந்து வருவது போல இருக்கும்.





நடு நாட்டு மண்டலத்தில் தெருவடைச்சான் சப்பரம். தெருவை உண்மையாக அடைத்துக்கொண்டு எம்பெருமானின் புறப்பாடு நடைபெறுகின்றது.

பரத்வாஜேஸ்வரத்தில் இவ்விழா விருஷப வாகன மாபெரும் திருக்காட்சியாகப் கொண்டாடப்படுகின்றது. பஞ்ச மூர்த்திகளின் அலங்காரத்தை ஒரு தடவை கண்டபின் மறுபடியும் மறுபடியும் அவர்களை தரிசிக்க செல்லாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள். இப்பதிவினைக் காண வந்த தாங்களும் பேறு பெற்றவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


ஐந்தாம் நாள் காலை உற்சவம் சந்திரசேகரர் தொட்டி உற்சவம்.








ஒயிலாக அமர்ந்த கோலத்தில் கணபதி



கண நாயகர் மூஷிக வாகன சேவை



ரிஷப வாகன சேவைக்காக


புறப்படும் பரத்வாஜேஸ்வரர்




ஐயனுக்கு செய்யப்பட்டிருக்கும் திராட்சை பந்தல்தான் என்ன அழகு. பச்சை நிற மல்ர் ஐயன் எப்போதும் அணியும் வன்னியால் ஆனது.



சென்ற வருடம் ரிஷப சேவையின் போது த்ரிபுவன சக்ரவர்த்தி திரிபுர சுந்தரியுடனும் மற்றும் தனது மற்ற குடும்பத்தினருடனும் இசை கேட்டு மகிழ்ந்தார். சுமார் இரண்டு மணி நேரம் என்ன என்ன வாத்தியங்கள் இருக்கின்றனவோ அத்தனையும் அம்மையப்பர் முன்பு வாசிக்கப்பட்தது. அந்த காலத்து முரசு, கொம்பு, முதலிய வாத்தியங்கள், இன்றைய ஹார்மோனியம், வயலின், வீணை, ருத்ர வீணை, மோர்சிங், நாதஸ்வரம், தவில், செண்டை மேளம், ட்ரம்ஸ், பேண்டு, ப்யூகில், புல்லாங்குழல், மோர்சிங், கிடார், பிரம்ம தாளம் என்று அனைத்து வாத்தியங்களும் வாசிக்கப்பட்டன.



திருக்கயிலை நாதரின் தங்க முலாம் விருஷப வாகனம் 10 அடி உயரம். அதன் மேல் பரத்வாஜேஸ்வரர் பூரண மலர் அலங்காரத்துடன் அமர்ந்திருக்க மலர் அலங்காரம் திருவாசி போல 10 அடி உயரத்திற்கு மேல் பறவைகள், ஓம், திரி புண்டரம் என்று எழிலாக ஐயன் பவனி வந்த அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.




மஹா த்ரிபுர சுந்தரி

சொர்ணாம்பிகையின்

எழிற்க் கோலம்

கையில் கிளியை ஏந்தி நின்ற கோலத்தில் த்ரி பாங்கியாக , மதுரை மீனாக்ஷியாக

அன்னை தரும் அருட்காட்சியைக்கண்டு களியுங்கள்.




முருகருக்கு வெள்ளை மலர்களால் அலங்காரம்


தங்க மயில் வாகனம்



ரிஷபாரூடராக சண்டிகேஸ்வரர்



அனைத்து தெய்வங்களுக்கும் பூரண நகை அலங்காரமும், வெண் பட்டு உடையுமாக செய்திருக்கும் அலங்காரத்தைக் காண உண்மையிலேயே கண்ணாயிரம் வேண்டும்.


No comments: