Sunday, April 27, 2008

சித்திரை சதய அபூர்வ நிர்மால்ய தரிசனம் - 1

உன் வாளால் வெட்டுப்பட்டாலும் நான் மாசிலாமணியே

திருமுல்லைவாயில்
கொடியிடை நாயகி (லலிதா) சமேத மாசிலாம்ணீஸ்வரர் நித்ய சொரூபத்தில்



சந்தன வேருங் காரகிற் குறடுந் தண்மயிற் பீலியுங்



கரியின் தந்தமுந் தரளக் குவைகளும் பவளக் கொடிகளுஞ் சுமந்து கொண் டுந்தி



வந்திழி பாலி வடகரை முல்லை வாயிலாய் மாசிலா மணியே



பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே - சுந்தரர்






ஆதியும் அந்தமுமில்லாத அந்த சிவபரம்பொருள் நாம் அனைவரும் உய்யும் பொருட்டு தானே சுயம்புவாய் எழுந்தருளிய தலங்கள் அனேகம். அவற்றுள்ளும் தென்னாடுடைய சிவனே என்று போற்றப்படும் எம்பெருமான் தொண்டை மண்டலத்திலே கோவில் கொண்ட தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 32. அத்தகைய புராணப் பெருமையும் புராதனமும் நிறைந்த தலம் தான் சென்னை - ஆவடி சாலையில் அமைந்துள்ள திருமுல்லை வாயில் தலம். வட திருமுல்லைவாயில், சண்பகவனம் என்று அறியப்படும் இத்தலத்திலே சுயம்புவாக எம்பெருமான் தொண்டைமான் மன்னனுக்காக எழுந்தருளி அவன் வாளால் வெட்டும் பட்டு, ஆயினும் தான் மாசிலாமணி என்று திருநாமமும் கொண்டருளினார்.

ஐயன், அம்மை, நந்தி மூவரும் கிழக்கு நோக்கி அமைந்த சிறப்புடைய தலம். திருமால், கிருஷ்ணன், இராம லட்சுமணர், பிரம்மா, முருகப்பெருமான், லவ குசன், இந்திராணி,சந்திரன், சூரியன், துர்வாசர், காமதேனு, வசிஷ்டர், நைமிசாரண்ய முனிவர்கள், அர்ச்சுனன், தொண்டைமான், ஐராவதம், தேவமித்ரன், சித்திரவர்மன். நட்சித்திரங்கள் ஆகியோர் பூசித்த தலம். தொண்டை மண்டல மூன்று மகா சக்தி தலங்களுள் இத்தலம் "கிரியா சக்தி தலம்" ஆகும். சுந்தர மூர்த்தி சுவாமிகள் பதிகம் பாடிய தலம். அருணகிரியாரின் திருப்புகழ் பெற்ற தலம். இனி இத்தலத்தின் இச்சிறப்புகளை விரிவாக காணலாம்.

ர்க்கலாம்.பழம்பெருமை வாய்ந்த இத்தலத்தில் இறைவனை வழிபட்டு அருள் பெற்றோர் பலர், வட திருமுல்லைவாயில் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளன. வட திருமுல்லைவாயில் தல புராணம் 1458 பாடல் கொண்ட 23 படலங்கள் கொண்டது. நைமிசாரண்யத்தில் தவம் புரிந்திடும் முனிவர்களுக்கு சூத புராணிகர் இத்தலத்து பெருமைகளை உரைப்பதாக உள்ளது.. அம்பிகைக்கு ஐயன் திருமுன்பு காண்பித்த தலம். அம்பிகைக்கு நடராச கோலம் காட்டிய தலம். பிரம்மன் வழிபட்டதால் பிரம்மநாதேஸ்வரர் எனப்படுகிறார் எம்பெருமான் , பிரம்மாவே எம்பெருமானுக்கு திருவிழாவும் நடத்தினார். மஹா விஷ்ணுவும், லக்ஷ்மியும் வழிபட்ட நிர்மலமணிஸ்வரர். வள்ளி தெய்வானையுடன் குமாரக் கடவுள் பூஜித்த தலம். பிருகு முனிவருக்கு ரத்தின மழை பொழியச் செய்த அகளங்க ரத்னேஸ்வரர், வசிஷ்டர் பூஜித்து காமதேனுவைப் பெற்ற வில்வேஸ்வரர். சந்திரன் பூஜித்த சம்பகேஸ்வரர். உஷா, பிரதியுஷாவுடன் சூரியன் பூஜித்த பாசுபதேஸ்வரர், இராமர், ஸ“தா, லக்ஷ்மணன் பூஜித்த முல்லையழகர், லவ குசர்கள் பூஜித்த குசலபுரீஸ்வரர். இந்திரன் இந்திராணி பூஜித்த அகளங்க ரத்னேஸ்வரர். ஐராவதம் பூஜித்த ஐராவதேஸ்வரர். கிருஷ்ணனும் அர்ச்சுனனும் பூஜித்த மாலதீஸ்வரர். இந்திரன் திருவிழா நடத்திய யதிகாபுரீஸ்வரர். தேவ மித்ரன் பூஜித்து சிவகதி பெற்ற தலம். ஐயனை மட்டுமல்ல அம்மையையும் பலர் பூஜித்து அருள் பெற்றுள்ளனர். கிருத்திகா, ரோகிணி நட்சத்திரங்கள் பூஜித்த சித்திர மத்ய நாயகி, இந்திராணி பூஜித்த மனோ பிரம்ம நாயகி . ஓர் நாமம் ஓர் உருவம் இல்லாத இறைவனுக்கும் இறைவிக்கும் தான் எத்தனை திரு நாமங்கள் இத்தலத்தில். இனி இத்தலத்தில் சித்திரை சதய நாளன்று எம் ஐயன் அளிக்கும் நிர்மால்ய தரிசனத்திற்க்கான திருவிளையாடலை பா



சித்திரை சதய நாளன்று எம்பெருமான் தரிசனம்






காஞ்சி மண்டலத்தை அப்போது சிவ பக்தனான தொண்டைமான் ஆண்டு கொண்டிருந்த சமயம், ஓணன், காந்தன் என்ற இரு அசுரர்கள் புழல் கோட்டையில் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். தொண்டைமான் திக்விஜயம் செய்ய புறப்பட்டான். படைகளோடு அவன் கோழம்பேடு என்னும் கிராமத்தில் தண்டு இறங்கியிருந்தான். அப்போது இறையருளால் இரவிலே அவனுக்கு மணியோசை கேட்டது. இயல்பிலேயே பக்திமானான தொண்டைமான் பக்கத்தில் ஏதோ ஆலயம் இருக்க வேண்டும் நாளை அந்தக் கோவிலிலே சென்று இறைவனை தரிசிப்போம் என்று தீர்மானித்துக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தான். மறு நாள் காலை படைகள் இல்லாமல் தனியாக பட்டத்து யானை மீது ஏறி கோவிலைத் தேடி புறப்பட்டான். அவன் தனியாக வருவதை அறிந்த குறு நில மன்னன் தனது படையோடு கிளம்பி தொண்டைமானை வீழ்த்த வந்தான். படை பலம் இல்லாமல் தனியாக அவர்களிடம் சிக்கிக் கொண்டால் ஆபத்து என்பதை உணர்ந்த மன்னன் சேனைகளை துணைக்கு கொள்ள யானையை விரட்டிக் கொண்டு பின்வாங்கினான். அப்போது முல்லைக் கொடிகள் அடர்ந்திருந்த ஒரு பகுதியில் யானையின் கால்களை கொடிகள் சுற்றிக் கொண்டன. உடனே யானை மீது அமர்ந்தபடியே தனது நீண்ட வாளினால் அந்த முல்லைக் கொடிகளை வெட்டித் தள்ள ஆரம்பித்தான். அவ்வாறு அவன் வெட்டிய போது முல்லை கொடிகளிலே மறைந்திருந்த இறைவனின் இலிங்கத் திருமேனியிலே மன்னன் வாள் பட்டு குருதிப் பெருகத் தொடங்கியது. அதைக் கண்டு மனம் பதைத்த மன்னன் உடனே கீழே குதித்து முல்லைக் கொடிகளை கைகளால் விலக்கிப் பார்த்தான். அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அங்கே எம்பெருமான் நீலகண்டர், உமாபதி, ஜடதாரர் , கங்காதீஸ்வரர், சிவலிங்க திருமேனியாய் எழுந்தருளியிருப்பதையும் வாள் பட்டு அவர் பாணத்திலிருந்து இரத்தம் பெருகுவதையும் கண்டான். தான் செய்த சிவஅபசாரத்திற்க்காக தன்னையே மாய்த்துக் கொள்ள முயன்றான். அப்போது பவளம் போன்ற மேனியில் பால் வெண்ணிற்றுடனும் பவளக்கொடியாம் உமையம்மனுடனும், அறமாம் வெள்ளை விடையில் கோடி சூரியப் பிரகாசத்துடன் காட்சியளித்த அந்த கருணாமூர்த்தி, தொண்டைமானே கலங்க வேண்டாம் உன் மூலமாக நான் வெளிப்பட நான் ஆடிய திருவிளையாடல் இது. உனக்கு மணியோசையை உணர்த்தியது நான் தான். "அஞ்சாதே வெட்டுப்பட்டாலும் நான் மாசு இல்லாதா மணியே! எனது முதற் தொண்டனான நந்தி தேவரை உன்னுடன் நான் அனுப்புகிறேன் உன்னை வெல்ல யாராலும் முடியாது. நீ திக்விஜயத்தில் வெற்றி கண்டு புகழ் பெறுவாயாக" என்று வாழ்த்தி மறைந்தருளினார். இறைவன் தாமே தனக்கு " மாசிலாமணி " என்று பெயர் சூட்டிக் கொண்டதால் இன்றும் அவர் இன்றும் அத்திருநாமத்துடனே நமக்கு அருள்பாலிக்கின்றார். முல்லைக் கொடியை வாயிலாகக்கொண்டு எம்பெருமான் வெளிப்பட்டதால் இத்தலம் முல்லை வாயில் எனப்பட்டது.






திசை மாறிய நந்தியெம்பெருமான்


இறையருளாலும் நந்தியெம்பெருமானின் உதவியாலும் ஓணன், காந்தன் மற்றும் தனது பகைவர்கள் அனைவரையும் வெற்றி கொண்ட தொண்டைமான் அவர்கள் அரண்மனையில் இருந்த இரு எருக்கம் து‘ண்களை ஜயஸ்தம்பமாக கொணர்ந்து மாசிலாமணிஸ்வருக்கு திருக்கோவில அமைத்த போது அர்த்த மண்டபத்தில் நாட்டினான். இன்றும் இத்து‘ண்களை இத்திருக்கோவிலில் நாம் காணலாம். எனவே தொண்டைமாணுக்கு உதவச் சென்ற நந்தி இறைவனைப் பார்க்காமல் எதிரே கோவில் கோபுரத்தை நோக்கி அமைந்துள்ளது இக்கோவிலின் ஒரு தனி சிறப்பு. இந்நந்தியை வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணங்கள் எல்லாவித தடைகளும் நீங்கப் பெற்று நடந்தேறும் எம்பது ஐதீகம்.






இவ்வரலாற்றை எம்பிரான் தோழராம் சுந்தர மூர்த்தி நாயனார் தம் பதிகத்திலே இவ்வாறு பாடுகின்றார்.






சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ் கொடி முல்லையாற் கட்டிட யெல்லையில் இன்பம் அவன் பெற வெளிப்பட் டருளிய



இறைவனே என்றும்






நல்லவர் பரவுஞ் திருமுல்லை வாயில் நாதனே நரைவிடை ஏறீ பல்கலை பொருளே படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே!



தன் வாளால் வெட்டுப்பட்டதால் இறைவனின் திருமேனி எரியுமே என்ற கவலையினால் நல்ல மணம் கமழும் சந்தனத்தை அரைத்து இறைவன் திருமேனியெங்கும் காப்பிட்டான் தொண்டைமான். எனவே இன்றும் வருடம் முழுவதும் சந்தனக் காப்புடனே தரிசனம் தருகின்றார் மாசிலமணிஸ்வரர். ஒவ்வொரு வருடமும் இறைவன் தானே வெளிப்பட்ட அந்த சித்திரை சதய நாளன்று அவருக்கு புது சந்தன காப்பிடப்படுகின்றது.


எனவே அதற்கு இரு நாள் முன் பழைய சந்தனக் காப்பு நீக்கப்படுகின்றது. அப்போது நமக்கு கிடைக்கின்றது வெட்டுக் காயத்தின் தழும்புடன் எம் ஐயனின் "அபூர்வ நிர்மால்ய தரிசனம்". இறைவனை நிஜ ரூபத்தில் இந்த இரண்டு நாட்கள் நாம் கண்டு உய்யலாம்.



சித்திரை சதய நாளன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்று மீண்டும் மூலவருக்கு புதிதாக சந்தனம் அரைத்து சாத்துகின்றனர். அன்று திருகோவிலில் சந்தனம் அரைத்து பேறு பெறுவோர் அநேகர்.

இன்று காலை தொடங்கி நிர்மால்ய தரிசனம். 30-05-08 அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு சென்று தர்சனம் பெறுங்கள்.
தொடரும்.....................

2 comments:

jeevagv said...

மாசிலா மணியவன் கதைகேட்டு

தூசிலா வழிதன்னை நாடியதில்

ஓம்காரமாய் ஒலிக்கும் மணியதன்

ஓசையெல்லாம் ஒடுங்குமாமே.
மிக்க நன்றிகள்.

S.Muruganandam said...

ஆட்டுவிப்பவன் அவன்
நாமெல்லோரும் ஆடுகின்றோம்.
அவன் பாதமே கதி


மிக்க நன்றிகள் என் வாசகம் படைக்கும் அன்பரே.