புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! .........(6)
பொருள்: பெண்ணே பறவைகள் கூவத்தொடங்கிவிட்டன, பறவைகளுக்கு அரசனான கருடனுக்கு இறைவன் நம் பெருமாள் எழுந்தருளியுள்ள திருக்கோவிலிலிருந்து வெண்சங்கு முழங்கும் ஓசை உன் காதில் விழவில்லையா?
நம் கண்ணன் வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையில் தடவிய நஞ்சை உண்ட மாயவன். கஞ்சன் அனுப்பிய சகடாசுரனை எட்டி உதைத்து மாள வைத்த திருவடிகளையுடையவன். பாற்கடல் அலை மேலே பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமன், உலகுக்கெல்லாம் வித்தானவன்.
அந்த பரமனை உள்ளத்தே கொண்டு முனிவர்களும், யோகிகளும் மெள்ள எழுந்து "ஹரி"," ஹரி" என்று ஓதுகின்றனரே அந்த பேரொலி உள்ளம் புகுந்து எங்களை குளிரவைக்கின்றது, உன்னை குளிர வைக்கவில்லையா? சிறு பிள்ளையாய் இருக்கின்றாயே! எழுந்து வா.
அதிகாலை பிரம்மமுகூர்தத காலத்தை அருமையாக காட்டும் பாடல். முதல் ஐந்து பாசுரங்களில் எம்பெருமானின் பெருமைகளையும் பாவை நோன்பின் சிறப்புகளை கூறி வந்த ஆண்டாள் நாச்சியார் ஒரு ஜீவாத்மா மற்றொரு ஜீவாத்மாவை எழுப்பி மாயையை விடுத்து எம்பெருமானின் திருவடியில் சரணடைவோம் வாருங்கள் என்று அழைப்பதைப் போல் தன்னை ஒரு இடைச்சியாக பாவித்து மற்ற பெண்களையும் எழுப்பும் பாசுரங்கள் அடுத்த பத்துப்பாசுரங்கள்.
பேய் முலை நஞ்சுண்டவன்:
கண்ணை கொல்ல கஞ்சன் முதலில் அனுப்பிய அரக்கி பூதனை. அவள் ஒரு இளம் பெண் வடிவம் எடுத்து கோகுலம் வந்து குழந்தையாக இருந்த கண்ணனை நஞ்சுப்பால் கொடுத்து கொல்ல வந்தாள். அவள் நஞ்சுப் பால் கொடுக்கும் போது கண்ணன் பாலோடு சேர்த்து அப்படியே அவளது உயிரையும் சேர்த்து உறிஞ்சினார், அவள் சுய ரூபம் பெற்று அலறி வீழ்ந்து மாண்டாள். இவ்வாறு வஞ்சனையால் வந்த பேய்ச்சி கொடுத்த நஞ்சை அவளுக்கே நஞ்சாக்கினார் எம்பெருமான். இதை பட்டர் பிரான் கோதை "பேய் முலை நஞ்சுண்டு" என்று பாடுகிறார்.
கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சியவன்:
பூதனை மாண்டபின் கண்ணனைக் கொல்ல மற்றொரு அசுரனை அனுப்பினான் கஞ்சன். அவனும் சகட உருவம் எடுத்து உருண்டோடி வந்தான் சகடாசுரன் கண்ணனைக் கொல்ல. ஆனால் பால கிருஷ்ணனோ தனது பிஞ்சுக் கால்களால் அந்த சகடத்தை உதைத்து அவனையும் வதம் செய்தார். இதை ஆண்டாள் நாச்சியார் "கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி" என்று பாடுகிறார்.
***********
உ
திருசிற்றம்பலம்
திருவெம்பாவை # 6
மானே! நீ நென்னலை நாளை வந்துங்களைநானே எழுப்புவன் என்றலும் நாணாமேபோன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோவானே நிலனே பிறனே அறிவரியான்தானே வந்தெம்மை தலையளித்தாட் கொண்டருளும்வான் வார் கழல் பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய்ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோ ரெம்பாவாய்!
பொருள் : மான் போன்ற மருட்சியுடைய விழிகளையுடைய காரிகையே! " நாளை நானே வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன்" என்று நேற்று சொல்லிய நீ வெட்கமில்லாமல் இன்னும் தூங்குகின்றாயே? அந்த சொல் எந்த திசையில் போயிற்று என்பதை சொல்? இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?
தேவர்களும், மனிதர்களும் மற்றுமுள்ள சகல ஜீவராசிகளும் அறிதற்கரியவனான எம்பெருமானின் மேலான திருவடிகள் எளியவர்களான நமக்கு தானாகவே வந்து காத்து ஆட்கொள்வன. அந்த வீரக் கழலணிந்த திருவடிகளை
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்கபுறத்தார்க்கு சேயோன் தன் பூங்கழல்கள் வெல்ககரங்குவுவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்கசிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்கள் வெல்க என்று மனமுருகிப் பாடி வந்த எங்களிடம் வாய் திறந்து பேசினாயில்லை! உடல் உருகவில்லை உனக்குத் தான் இந்நிலை பொருந்தும். நம் அனைவரின் தலைவனாகிய சிவபெருமானை பாட எழுந்து வா கண்ணே!