Wednesday, November 23, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -6


ஓம் நமசிவாய


பர்கோட்டிலிருந்து யமுனோத்ரி பயணம்



பர்கோட் GMVN சுற்றுலா விடுதி


பர்கோட் என்னும் இந்த சிறு நகரம் ஒரு சந்திப்பு ஆகும். ரிஷிகேசிலிருந்து யமுனோத்ரி செல்பவர்கள் இரு வழியாக இவ்விடத்தை அடையலாம். முதலாவது நாங்கள் பயணம் செய்த முசோரி, யமுனா பாலம், டம்டா, நௌகான் வழியாக 157 கி.மீ பயணம். இரண்டாவது வழி . நரேந்திரநகர், சம்பா, தெஹ்ரி, தாராசு, பிரம்மகால் வழியாக 175 கி.மீ பயணம்.

இந்த பாதை வழிகளின் விவரம்

புறப்படும் இடம்- செல்லும் இடம்- தூரம் கி.மீ - உயரம் மீ
ரிஷிகேஷ் - முசோரி- 36- 1921
முசோரி- கெம்ப்டி அருவி- 12- 1524
கெம்ப்டி அருவி- யமுனா பாலம்- 16- 772
யமுனா பாலம்- டம்டா- 25- 1372
டம்டா- நௌகான்- 28- 1524
நௌகான்- பர்கோட்- 11- 1828
பர்கோட்- சயானாசட்டி- 29 -1982
சயானாசட்டி- ஹனுமான்சட்டி- 5 -2134
ஹனுமான்சட்டி- பூல்சட்டி- 5- 2561
பூல்சட்டி- ஜானகிபாய் சட்டி- 3- 2576
ஜானகிபாய் சட்டி-யமுனோத்ரி- 5- 3323 (நடை)

இரண்டாவது வழி

ரிஷிகேஷ்- நரேந்திர நகர்- 16-1067
நரேந்திர நகர்-சம்பா- 46- 1524
சம்பா- தெஹ்ரி- 21- 770
தெஹ்ரி- தாராசு- 37- 1036
தாராசு- பிரம்மகால்- 15- 1158
பிரம்மகால்- பர்கோட்- 40- 1828
பர்கோட்டிலிருந்து மேலே சொன்ன வழிதான். இதில் தற்போது ஜானகிபாய் சட்டி வரையிலும் வண்டியில் செல்ல இயலும் அதற்கு மேல் நடை பயணம்தான். (சட்டி : என்றால் தங்கும் இடம் என்று பொருள்)

உயரத்தைப்பார்த்தால் நாம் எவ்வாறு , மலை மலையாக ஏறி இறங்கி பயணம் செய்கின்றோம் எனப்து விளங்கும்.

மேலும் இவ்வூரிலிருந்து கங்கோத்திரிக்கும் ஒரு பாதை செல்கின்றது இரண்டாவது வழியில் பர்க்கோட்டிலிருந்து தெஹ்ரி வரை சென்று பின்னர் உத்தரகாசி சென்று கங்கோத்ரியையும் அடையலாம். இப்பதிவில் நான்கு தலங்களுக்கு செல்லும் பாதை வரைபடமும்(Road Map) கொடுத்துள்ளேன்.


சார்தாம் பாதை வரைபடம்
(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)


பர்கோட் அருமையான இயற்கை சுழ்நிலையில் அமைந்துள்ளது. ஒரு பக்கம் ஓங்கி உலகளந்த உத்தமன் போல பச்சை மேனியுடன் நெடிதுயர்ந்த இமயமலை கீழே பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்நகரம். இங்கிருந்து பந்தர்ப்பூஞ்ச் மலையை பார்க்க முடியும். முதலிலேயே சொல்லிவிட்டதால் உணவு தயாராக இருந்தது, ஒன்றை மட்டும் இங்கே குறிப்பட விரும்புகிறேன். சாதத்திற்காகவும் இவர்கள் நாம் பிரியாணி செய்ய பயன்படுத்தும் பாஸ்மதி அரிசியைத்தான் பயன்படுத்துகின்றனர். சுவையானதாக இருந்தாலும் அதிகம் சாப்பிடமுடியாது. மேலும் குளிர்பிரதேசம் என்பதால் கோதுமை சப்பாத்தி சாப்பிடுவது நல்லது. எங்கள் குழுவில் சிலருக்கு இந்த உணவு சேரவில்லை. யமுனோத்ரி தரிசித்து விட்டு திரும்பி வரும் போது இங்கு ஒரு நாள் இரவு தங்க வேண்டும் என்று எங்கள் வழிகாட்டி கூறினார். பர்கோட் ஒரு சிறிய நகரம் யமுனோத்ரி செல்லும் வழியில் எதுவும் கிடைக்காது என்பதால் உங்களுக்கு வேண்டிய மருந்து மற்றும் அவசிய பொருட்களை இங்கேயே வாங்கிக்கொள்ளுங்கள்.

பர்கோட் GMVN சுற்றுலா விடுதி பூங்கா

தாங்கள் காண்கின்ற இந்த கட்டிடம்தான் பர்கோட்டில் உள்ள GMVN தங்கும் விடுதி. விடுதியின் வர்ணத்தைப் பாருங்கள் பச்சை நிறம். எங்கிருந்தாலும் நீங்கள் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ளலாம். அதே சமயம் மழை இவ்வாறு தாறுமாறாக பெய்வதற்கு உலக வெப்பமயமாதல் (Global Warming) ஒரு காரணம் அல்லவா? ஆகவே காடுகளை நாம் காக்க வேண்டும், மரங்களை வெட்டக்கூடாது, சுற்றுசூழலை மாசு படாமல் காக்க வேண்டும் என்பதையும் இது குறிப்படுகின்றது.

மதிய உணவிற்குப்பின் யமுனோத்திரிக்காக வண்டியில் கிளம்பினோம்.கிளம்பும் போதே ராணா சட்டி அருகில் ஒரு நிலச்சரிவு என்ற செய்தி கிடைத்தது. சிறிது தூரம் சென்றதும் பாதை இரண்டாகப் பிரிந்தது இடப்பக்கம் செல்லும் பாதை யமுனோத்திரிக்கும், வலப்பக்கம் செல்லும் பாதை கங்கோத்திரிக்கும் செல்கின்றது. இடப்புறம் செல்லும் பாதையில் திரும்பி சிறிது கீழே இறங்கி யமுனை நதியை கடந்து பயணம் தொடர்ந்தது. இதற்கப்புறம் பாதை ஒரே எற்றம் யமுனையும் மெலிந்து கொண்டே ஒடிக்கொண்டிருந்தாள் ஏனென்றால் உற்பத்தி ஸ்தானத்திற்கு அருகில் செல்கின்றோம் அல்லவா?


அஸ்னால் காட் சுற்றுலா விடுதி

உயரம் அதிகமாகிக்கொண்டே வந்ததால் மலைகள் செங்குத்தாகவும் மற்றும் குறுகலாகவும் ஆனது. மரங்கள் நெட்டையாகிக்கொண்டே வந்தன. வெறும் கூம்பு வடிவ பைன் மரங்களும், தேவதாரு மரங்களும் தான் மேலே உள்ளன. நடுநடுவே சிறு கிராமங்கள், பாலங்களில் பல இடங்களில் யமுனையை கடந்து இரு கரையிலுமாக பயணம் செய்தோம். மலைப் பிரதேசம் மாசு படாத சுத்தமான ஈரகாற்றை சுவாசித்து தெம்படைந்தோம். நம் நகரங்களில் வெறும் பெட்ரோலியம் புகையைத்தானே சுவாசிக்கின்றோம். பாதை மலை பெய்ததினாலோ என்னவோ? என்று நினைத்தோம் ஆனால் பாதை இரட்டிப்பு வேலை நடைபெறுவதால் பாதை தோண்டப்பட்டதாலும் மழை அதிகமாக பெய்ததாலும் பாதை இவ்வாறு இருப்பதாக வழிகாட்டி கூறினார் மிகவும் மோசமாக இருந்தது. தார் சாலையே இல்லை வெறும் சேறும் சக்தியுமாகத்தான் இருந்தது. வண்டி ஒட்டுனர் எறும்பு ஊர்வது போல வண்டியை உருட்டிகொண்டே சயானாசட்டியை கடந்து ராணாசட்டி அடைந்தார். நிலச்சரிவை சரி செய்திருந்தனர். அதற்கு மேல் வண்டியை ஓட்ட பயந்தார் ஏனென்றால் மறுபடியும் நிலச்சரிவு ஏற்பட்டால் திரும்பி பெரிய வண்டியில் வருவது கடினம் என்று. ஆகவே வழிகாட்டில் அங்குள்ள இரண்டு ஜீப்களில், அவர்கள் செலவில் எங்களை அஸ்னால் காட் என்னும் இடத்தில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றார் ஏனென்றால் ஜானகி பாய் சட்டியில் 13 பேர் தங்கும் வசதியில்லை.


காலையில் பனி மூட்டம்

யமுனோத்ரி கிளம்புகின்றோம்

இரவு குடும்பத்தினர் ஒரு அறையிலும் மற்றவர்கள் Dormitaryயிலும் தங்கினோம். இரவு வெகுநேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தது. சாப்பிடும் சமயம் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் ஜெனரேட்டரை போட்டனர். அப்போது எங்களுடைய கைப்பேசிகள், புகைப்படக் கருவிகளை சார்ஜ் செய்து கொண்டோம். எனவே இந்த யாத்திரையின் போது டார்ச் லைட் அல்லது மெழுகுவர்த்தி, தீப்பெட்டி வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். சிறிது நேரம் ரஜாய்க்குள் குளிருக்கு இதமாக பயண களைப்பு தீர ஒய்வு எடுத்துக் கொண்டு சுட சுட ரொட்டி (சப்பாத்தி) தயார் ஆனவுடன் சாப்பிட்டு விட்டி சிறிது நேரம், இந்த க்ஷேத்திரங்களின் புராணங்களைப் பற்றி விவாதித்து விட்டு படுக்க சென்றோம். நாம் எந்த ஸ்தலத்திற்கு சென்றாலும் அந்த தலத்தின் புராண வரலாற்றை அறிந்து கொண்டால், எதோ எம்புருஷனும் கச்சேரிக்குப் போறான் என்பது போல இல்லாமல் யாத்திரை மிகவும் பொருள் பொதிந்த்தாக இருக்கும் எனவே இப்பதிவுகளில் தங்களுக்கு இந்த ஸ்தலங்களைப் பற்றிய பல தகவல்கள் கிட்டும்.


ஜானகி சட்டி சுற்றுலா மாளிகை

இரவே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. காலையில் எழுந்து பார்த்தால் ஒரே பனி மூட்டம் எதிரே இருந்த மலை சிகரங்கள் கண்ணில் படவில்லை. உயர் மட்டங்களில் எவ்வளவு சீக்கிரம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விடுகின்றோமோ அவ்வளவு நல்லது. எனவே ஆறு மணிக்கெல்லாம் வெந்நீரிலே குளித்து அனைவரும் தயாராகி விட்டு மழை சிறிது குறைவதற்காக காத்திருந்தோம். மலையேறும் போது அதிக சாமான்களை எடுத்து செல்ல வேண்டாம். சுமார் ஏழு மணி அளவில் மழை கொஞ்சம் மட்டுப்பட்டது வெளிச்சமும் கூடியது ஜீப் மூலம் மழைக்கோட் அணிந்து கொண்டு ஜானகி சட்டி அடைந்தோம்.



ஜானகிபாய் சட்டி அடைவதற்கு முன் ஹனுமான் சட்டி என்ற இடம் உள்ளது. அஷ்ட சஞ்ஜீவிகளில் ஒருவரான அனுமன் இலங்கையை எரித்த பின் தனது வாலை இங்கு வந்து அணைத்ததாக ஐதீகம். மேலும் கங்கோத்ரியையும் யமுனோத்ரியையும் இணைக்கும் மலைத்தொடர் பார்ப்பதற்கு குரங்கின் வால் போல் உள்ளதால் இந்த மலை பந்தர்பூஞ்ச் ( பந்தர்= குரங்கு, பூஞ்ச் = வால்) என்றும் அழைக்கபப்டுகின்றது. இம்மலையிலிருந்து ஹனுமான் கங்கா நதி ஒடி யமுனையில் கலக்கின்றது. ஜானகி பாய் என்னும் மூதாட்டி யமுனா மய்யா ( யமுனை அன்னை )விடம் மிகவும் பக்தி கொண்டு அன்னையை வணங்கி வந்ததால் இந்த கிராமத்திற்கு அவர் ஞாபகார்த்தமாக ஜானகிபாய் சட்டி என்னும் பெயர் வந்தது. சட்டி என்றால் யாத்திரிகள் தங்கும் இடம் என்று முன்பே பார்த்தோமல்லவா? இங்கிருந்து இரண்டு கி.மீ தூரத்தில் கர்சாலி என்ற கிராமம் உள்ளது. யமுனை அன்னை குளிர் காலத்தில் இக்கிராமத்தில்தான் வந்து தங்குகின்றாள்.


ஜானகிபாய் சட்டி சுற்றுலா விடுதி



ஜானகி சட்டியில் காலை உணவை முடித்துக்கொண்டு யமுனோத்திரிக்கான நடைபயணத்தை துவங்கினோம். அகலமான பாதைதான் பல இடங்களில் படிகளும் உள்ளன. ஆனால் ஒரே ஏற்றம் சுற்றி சுற்றி மலையேற வேண்டும். நடக்க முடியாதவர்களுக்கு என்ன வசதிகள் உள்ளன என்ற எண்ணம் தோன்றுகிறதா? முதலில் போனிகள் எனப்படும் (கோவேறு) குதிரைகள் உள்ளன. குதிரையில் பயணம் செய்யும் போது ஜாக்கிரதையாகதான் பயணம் செய்யவேண்டும். இயல்பிலேயே இவை மலையை ஒட்டி செல்லுகின்றன. ஏற்றத்தில் முன்னால் குனிந்து கொண்டும், இறக்கத்தில் பின்னால் சய்ந்து கொண்டும் எப்போதும் கால்களை சேணத்தில் சரியாக வைத்துக்கொண்டும் பயணம் செய்வது நல்லது. முதலில் பயம் இருக்கக்கூடாது. மலையை ஒட்டி குதிரை செல்லும் போது மேலே உள்ள பாறைகளை கவனித்து தலையையும் உடலையும் வளைத்து நாம்தான் சமாளித்துக்கொள்ள வேண்டும். நாம் நம்முடைய போர்வை ஒன்று எடுத்து சென்றால் அதை நாம் சௌகரியமாக குதிரையின் மேல் அமர்வதற்கு பயன்படுத்திக்கொள்லலாம். குதிரையிலும் முடியாத வயோதிகர்கள் தண்டியில் பயணம் செய்யலாம். இது பல்லக்கு போன்றது.

தண்டியில் ஒரு மூதாட்டி

இதை நான்கு பேர் சுமந்து செல்கின்றனர். நான்கு பேரும் ஒருமித்து இராணுவ வீரர்கள் நடை போட்டு செல்வது போல செல்லும் அழகே ஒரு அழகு. அதுவும் அடங்காமல் குதிரைகள் இவர்கள் மேல் மோதுவது போல் வருவதைப் பார்க்கும் எவரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. இதல்லாமல் பிட்டு என்னும் கூடையில் சிறு குழந்தைகளை உட்கார வைத்து ஒருவர் தூக்கிச் செல்லும் வசதியும் உள்ளது. அதுவே பெரியவர்களாக இருந்தால் காலை தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்து செல்லலாம் இதற்கு கண்டி என்று பெயர். சாமான்களை எடுத்துச்செல்ல கூலிகள் கிட்டுவார்கள். இவர்கள் எல்லாரிடமும் அரசு வழங்கிய அடையாள் அட்டை இருக்கும் அதை வேண்டுமென்றால் வாங்கி பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வோரு ஆண்டும் உத்தராகாண்ட் அரசு இவற்றுக்கான கட்டணம் நிர்ணயம் செய்கின்றது அதிக கிராக்கி இருந்தால் கட்டணம் அதிகமாகும் என்பது போல் யாத்திரிகளின் கூட்டத்தை பொறுத்து விலை மாறுபடுகின்றது. சீசன் சமயத்தில் கட்டணம் அதிகமாக இருக்கும் அதே செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் கட்டணம் குறைவாக இருக்கும்.


20ரூபாய் மழைக்கோட்டில் இருவர்


அழகிய வெள்ளை செம்பருத்திப்பூ

நாங்கள் நடை பயணத்தை துவக்கும் போதும் மழை தூறிக்கொண்டு இருந்தது. இங்கு 20 ரூபாய்க்கு ஒரு தடவை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக மழைக் கோட்டுகள் கிடைக்கின்றன. மழைக்கோட்டு கொண்டு வராதவர்கள் அதை வாங்கிக்கொண்டனர். எங்களில் மூன்று பேர் குதிரையிலும் மற்றவர்கள் நடந்தும் யமுனோத்திரிக்கு கிளம்பினோம். செல்லும் வழியில் யமுனையைப் பற்றிய கதைகள் சிலவற்றை சொல்லுகிறேன். கேட்டுக்கொண்டே தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.


யாத்திரை இன்னும் தொடரும்.......

6 comments:

Test said...

//நாம் எந்த ஸ்தலத்திற்கு சென்றாலும் அந்த தலத்தின் புராண வரலாற்றை அறிந்து கொண்டால், எதோ எம்புருஷனும் கச்சேரிக்குப் போறான் என்பது போல இல்லாமல் யாத்திரை மிகவும் பொருள் பொதிந்த்தாக இருக்கும் எனவே இப்பதிவுகளில் தங்களுக்கு இந்த ஸ்தலங்களைப் பற்றிய பல தகவல்கள் கிட்டும்//

செல்லும் இடங்களில் முடிந்த வரை தெரிந்து கொள்வேன் ஐயா

//குதிரையில் பயணம் செய்யும் போது ஜாக்கிரதையாகதான் பயணம் செய்யவேண்டும். இயல்பிலேயே இவை மலையை ஒட்டி செல்லுகின்றன. ஏற்றத்தில் முன்னால் குனிந்து கொண்டும், இறக்கத்தில் பின்னால் சய்ந்து கொண்டும் எப்போதும் கால்களை சேணத்தில் சரியாக வைத்துக்கொண்டும் பயணம் செய்வது நல்லது. முதலில் பயம் இருக்கக்கூடாது. மலையை ஒட்டி குதிரை செல்லும் போது மேலே உள்ள பாறைகளை கவனித்து தலையையும் உடலையும் வளைத்து நாம்தான் சமாளித்துக்கொள்ள வேண்டும்.//

எப்போதும் பயன்படும் தகவல்.

வெள்ளை செம்பருத்திப்பூ புகைப்படத்தை வெளியிட்டத்திற்கு நன்றி

S.Muruganandam said...

//செல்லும் இடங்களில் முடிந்த வரை தெரிந்து கொள்வேன் ஐயா//

இந்த செய்தி ஒரு உபன்யாசத்தில் நான் கேட்டது. தாங்களும் அது போல செய்வது குறித்து மகிழ்ச்சி.

அடியேன் எழுதும் பதிவுகளில் உள்ள் செய்திகள் எல்லாமே எங்கேயோ படித்து, கேட்டு எழுதியவைதான். கற்பனை அல்ல. அதை படித்து யாராவது பலன் அடைந்தால் அதுவே ஒரு நல்ல பரிசு. வேறு எதையும் எதிர்பார்த்து இதை செய்யவில்லை.

S.Muruganandam said...

உங்கள் பின்னூட்டத்தை பார்க்கும் பொழுது ஒரி வரி விடாமல் முழுதும் படித்திருக்கின்றீர்கள் என்று தோன்றுகிறது. மிக்க நன்றி லோகநாதன் ஐயா. உங்களுக்காகவே இன்னும் பல பதிவுகள் இடுவேன்.

S.Muruganandam said...

//வெள்ளை செம்பருத்திப்பூ புகைப்படத்தை வெளியிட்டத்திற்கு நன்றி//

குளிர் காலத்தில் இமயமலை பிரதேசத்தில் பூக்கும் பூக்கள் மிகவும் அழகாக இருக்கும் முடிந்தவரை ஒவ்வொரு பதிவிலும் ஒரு மலரின் படத்தை இட முயற்சி செய்கின்றேன்.

Sankar Gurusamy said...

நிறைய தகவல்கள்.. புதிதாக செல்ல விரும்புபவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

//நாம் எந்த ஸ்தலத்திற்கு சென்றாலும் அந்த தலத்தின் புராண வரலாற்றை அறிந்து கொண்டால், எதோ எம்புருஷனும் கச்சேரிக்குப் போறான் என்பது போல இல்லாமல் யாத்திரை மிகவும் பொருள் பொதிந்த்தாக இருக்கும் எனவே இப்பதிவுகளில் தங்களுக்கு இந்த ஸ்தலங்களைப் பற்றிய பல தகவல்கள் கிட்டும்//

நல்ல கருத்து.. இது பலநேரங்களில் சாத்தியப்படுவதில்லை.

ஆனால் ஒரு காந்தத்தின் முன் ஒரு இரும்பு அதுபற்றி தெரிந்து சென்றாலும் தெரியாமல் சென்றாலும் ஈர்க்கப்படும். அதுபோலவே புண்ணிய தலங்களை தெரிந்தோ தெரியாமலோ தரிசித்தாலே அதன் பலன் கிடைக்கும் என்பது என் கருத்து..

மேலும் புண்ணியதலங்களை பலனுக்காக தரிசிப்பதைவிட ஆண்டனை அணுகுவதற்காக தரிசிப்பதே சால சிறப்பு என்பது என் எண்ணம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

S.Muruganandam said...

//மேலும் புண்ணியதலங்களை பலனுக்காக தரிசிப்பதைவிட ஆண்டனை அணுகுவதற்காக தரிசிப்பதே சால சிறப்பு என்பது என் எண்ணம்.//

தாங்கள் கூறுவது உண்மையே

அங்கு வரை செல்வதற்காகவே அவன் அருள் வேண்டுமல்லவா? பல முறை நாம் என்னதான் முயற்சி செய்தாலும் நமக்கு தரிசனம் கிடைக்காமல் போய் விடுகின்றதல்லவா?

ஆயினும் அடியேன் கூறவந்த கருத்து சக்கரை பந்தலில் தேன்மழை பொழிந்தது போல இருக்கும் அந்த க்ஷேத்திரத்தின் மகிமையும் அறிந்து தரிசித்தால் என்பதே.

சென்ற வாரம் ஒரு உபந்யாசம் கேட்டேன் அதில் இரசித்த ஒரு கருத்து. எடுத்துக்காட்டிற்காக பார்த்தசாரதி பெருமாளை சேவிக்கும் போது நமக்கு வேண்டியதை கேட்டும் சேவிக்கலாம். அவர் நாமம் சொல்லி நிஷ்காம்யமாகவும் சேவிக்கலாம். மூன்றாவதாக கால் தேய பாண்டவர்களுக்கு தூது சென்றாயே கண்ணா, கருணைக் கடலே தர்மத்தை நிலை நாட்ட பார்த்தனுக்கு தேர் ஊர்ந்த சாரதியே, பீஷ்மரின் அம்புகளை தங்கள் முகத்தில் தாங்கிக்கொண்ட வள்ளலே என்றும் பலவாறு போற்றியும் சேவிக்கலாம்.மூன்றாவது உத்தமமானது என்று உபன்யாசம் செய்தவர் கூறினார்.

இவ்வாறு வழிபட புராண தொடர்பு தெரிந்தால் நல்லது என்ற அர்த்த்தில் சொல்லபட்டதே அந்த கருத்து.

//மேலும் புண்ணியதலங்களை பலனுக்காக தரிசிப்பதைவிட ஆண்டனை அணுகுவதற்காக தரிசிப்பதே சால சிறப்பு என்பது என் எண்ணம்.//

உண்மையே. மற்றபடி இறைவன் தரிசனமே ஒருமாபெரும் பாக்கியம்தான் சங்கர் ஐயா.