கரூவூர் ஆநிலை தரிசனம் - 1
கொங்கேழ் தலங்களின்
முதல் தலமான கரூரை அடைந்த போது மாலை ஆறு மணி ஆகி விட்டிருந்தது எனவே ஆலயம் திறந்திருந்தது
அருமையான தரிசனமும் கிட்டியது. இத்தலம் காவிரியாற்றின் துணை ஆறான அமராவதி ஆற்றின் கரையில்
அமைந்துள்ளது. எனவே அந்த ஆற்றின் சிறப்புகள் என்ன என்று காண்போம். அடுத்து கரூர் நகருக்கே
சில சிறப்புகள் உள்ளன அவையென்ன என்று பார்த்துவிட்டு பின்னை ஆநிலையப்பரை தரிசிக்கலாம்
அன்பர்களே.
அமராவதி ஆற்றின் சிறப்புகள்: அமராவதி ஆறு காவிரியில் சேரும்
நீளமான துணை ஆறு ஆகும். தற்போதைய கரூர் மாவட்டம்
மற்றும் திருப்பூர் மாவட்டம் இரண்டையும் வளப்படுத்துகின்றது. தேவாறு ஆகியவை சங்கமிக்கின்றன.
இவ்வாறு அமராவதி அணை மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில்
அமைந்துள்ள பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலை மலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது.
இவ்விடம் அடியேனது பிறந்த ஊரான உடுமலைக்கு அருகில் உள்ளது. இதனுடன்
பாம்பாறு, சின்னாறு மற்றும் தேவாறு சங்கமமாகிறன. இவ்வாறு அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு அமராவதி
நீர்த்தேக்கம் தோன்றுகிறது. அங்கிருந்து வடகிழக்காக செல்லுகையில் கொழுமம் அருகில்
குதிரை ஆறு இணைந்த பின் கொமரலிங்கம், தாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து 282
கி.மீ., தொலைவுக்கு நீண்டு, வழிந்தோடி, கருர் அருகே காவிரியுடன் கலக்கிறது.
மற்ற உபநதிகள் சண்முகா நதி, குடகனாறு, உப்பாறு ஆகியவை.
சங்க காலத்தில் ஆன்பொருநை என்ற பெயரும் அமராவதி ஆறுக்கு வழங்கியது. ஆவினங்கள் மேய்ந்து திகழுமாறு பாயும் ஆறு என்ற பொருளில் அமைந்தது
ஆன்பொருநை. சங்ககாலத்திற்குப் பின் இந்த ஆற்றுக்கு ஆம்ரபி என பெயர் வழங்கி
வந்துள்ளது. அக்காலத்தில் இந்த ஆறு பாண்டிய
நாடு மற்றும் சேர நாட்டின் எல்லையாக இருந்தது. இன்றும் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் எல்லையாக விளங்குகிறது.
மடத்துக்குளம் ஊரில் கட்டப்ப்ட்டுள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் பாண்டியர்களின் சின்னமான
மீனும் மறுபுறம் சேரர்களின் சின்னமான யானையும் அமைந்துள்ளது.
காரத்தொழுவு என்ற கிராமத்தில் இந்த அமராவதி ஆற்றங்கரையில்தான் அடியேனது குலதெய்வமான
அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் மஹாசிவராத்திரி உற்சவத்தின் போது
அம்மன் அமராவதி ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுவாளர். அடியேனும் இவ்வாற்றின்
தீர்த்தத்தை அம்மனின் மஹாபிஷேகத்திற்கு எடுத்து செல்வேன். திருமணம் ஆன நாளிலிருந்து
இன்றுவரை இந்த சேவை செய்யும் பாக்கியம் அடியேனுக்கு அம்மன் அருளால் கிடைத்துள்ளது. சோழர்கள் காலத்து பல சிவாலயங்கள் அமராவதி ஆற்றங்கரையில்
உள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் தேதி அன்று, அமராவதி நதிக்
கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத
கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப
நலனுக்காக அமராவதி நதித் தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி,
சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள்
கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு,
பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, அமராவதி நதித் தாய்க்குப் படைத்து பண்டிகையாகக்
கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார்
செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.
கரூர் நகரின் சிறப்பு: 2000 ஆண்டுகள் பழமைமிக்கது கரூர். காலப்போக்கில் சேர, சோழ, பாண்டிய, கங்க மன்னர்கள், விஜய நகர நாயக்கர்கள், மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.
கரூர், பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே, 'வஞ்சி மாநகர்' அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன், வஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே, 'கருவூர்' என்றழைக்கப்பட்டு, 'கரூர்' என
தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.
“மன்னிய அநபாயன் சீர் மரபின் நகராகும் தொல் நெடுங் கருவூர் என்னும் சுடர்மணி வீதி மூதூர்” என்று சேக்கிழார் பெருமான் இந்நகரை புகழ்ந்து பாடியுள்ளார்.
கரூர் சோழர்களின் தலைநகரமாகவும் விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கருவூலம்
வைத்து செயல்பட்டிருக்கின்றனர். முற்கால சோழர் காலத்தில் கருவூர் தலை நகராக இருந்துள்ளது.
தற்போது ஒரு மாவட்டத்தின் தலைநகராகவும், மாநகராட்சியாகவும் இவ்வூர் விளங்குகிறது. வாருங்கள் இனி ஆநிலையப்பரை தரிசிக்கலாம்.
கரூர் நகரின்
மையத்தில் பிரம்மாண்டமான இவ்வாலயம் அமைந்துள்ளது. கொங்கு நாட்டு ஏழு தலங்களில் முதன்மையானது.
500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது கல்யாண பசுபதீசுவரர் ஆலயம். நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம், கருவூரார், அருணகிரிநாதர்
போன்றோரால் புகழப்பட்ட கோயில். புகழ்ச்சோழ நாயனாரால் கட்டப்பட்டது. புகழ்ச்சோழர் அரங்கமும்
உள்ளது. புகழ்ச்சோழ நாயனார், எறிபத்தநாயனார், சிவகாமியாண்டார் வழிபட்ட திருத்தலம்.
கந்த புராண காலத்து முசுகுந்த சக்ரவர்த்தியால்
புனரமைப்பு செய்யப்பட்ட கோயில் என்றொரு நம்பிக்கையும் உள்ளது. இவ்வாலயத்தில் முசுகுந்த
சக்கரவர்த்தியின் சிலையை தரிசிக்கலாம்.திருக்கயிலை மலையில் ஒரு குரங்காக இருந்து இறைவனையும்
இறைவியையும் வில்வ தளங்களால் அர்சித்ததின் பலனாக முசுகுந்த சக்கரவர்த்தியாக பூவுலகில்
பிறந்தார். வலன் என்ற அசுரனை அழிக்க இந்திரனுக்கு உதவி அதன் பிறகு அவன் பூசித்து வந்த
தியாகராஜப் பெருமான் பூவுலகில் திருவாரூருக்கு வர காரணமாக இருந்தவர் இவர். மாசி மாதத்தில்
மூன்று நாட்கள் சூரியன் தன் கதிர்க
ளால் தழுவி வழிபடுகின்றான்.
நீதியார் நினைந்தாய நான்மறை
ஓதியாரொடுங் கூடலார் குழைக்
காதினார் கருவூருளானிலை
ஆதியாரடியார் தமன்பரே – என்று அம்மையின் ஞானப்பாலுண்ட ஆளுடையப்பிள்ளை பாடிய இத்தலத்தின்
இறைவன் – கல்யாண பசுபதீஸ்வரர், பசுபதி நாதர், ஆநிலையப்பர்.
இறைவி – அலங்காரவல்லி,
சௌந்தர்யவல்லி.
தீர்த்தம் - ஆம்பிரவதி (அமராவதி) நதி.
புராணப்பெயர்
– கருவூர், ஆநிலை.
தலவிருட்சம்
– வஞ்சி
பாடியோர் : திருஞானசம்பந்தர், கருவூரார், அருணகிரிநாதர்.
தலவரலாறு : படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக
சிவன் நடத்திய திருவிளையாடலால் உண்டான தலம் ஆகும். சிவனை அடைய விருப்பம்
கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்தில் உள்ள வஞ்சிவனத்தில் தவம்
செய்தால் அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர்
சென்று அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து திருமஞ்சனம்
செய்து வழிபட, மகிழ்ச்சி அடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப்
படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார்.
காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால்
அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து சிவனிடம் போய் தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை
மன்னித்து படைப்புத் தொழிலை அவருக்கேத் திரும்ப அளித்து காமதேனுவை இந்திரனிடம்
அனுப்பி வைத்தார். பிரம்ம தேவர் வழிபட்டு உலகைப் படைக்கும் ஆற்றல் பெற்று கருவை
தோற்றுவித்த காரணத்தால் கருவூர் என்பது தற்போது கரூராக மருவியுள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள
அற்புத தலம். காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன் பசுபதீஸ்வரர் என்றும்
ஆநிலையப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். காமதேனுவின் குளம்படி பட்ட தழும்பு
இறைவனின் திருமேனியில் உள்ளது.
பசுக்களாகிய நம் அனைவருக்கும் பதியாக சிவபெருமான் விளங்குகின்றார். பதியாகிய பெருமான் அணுக பசுவின் மும்மலங்களாகிய பாசம் விலகும் என்று
திருமந்திரத்தில் திருமூலர் இவ்வாறு பாடுகின்றார்.
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே
அறுபத்து
மூன்று நாயன்மார்களுள் இரண்டு நாயன்மார்கள்
இத்தலத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் புகழ்சோழர் மற்றும் எறிபத்தர் ஆவர். “பொழிற்
கருவூர்த் துஞ்சிய புகழ்சோழர்க்கு அடியேன்” என்று எம்பிரான் தோழர்
திருத்தொண்ட தொகையில் பாடிய புகழ்சோழரின் சரிதத்தைப் பற்றி முதலில் காணலாம்.
சோழ நாட்டில் உறையூரில் புகழ்ச்சோழர் என்பவர் அறநெறி தவறாமல் அரசாண்டு
வந்தார். வீரத்திலும், பிறருக்கு ஈவதிலும் சிறந்தவராக புகழ்பெற்ற இவர் எம்பெருமானிடத்தும்
பக்தியும் அன்பும் பூண்டு தொழுது வந்தார்.
சிவனடியார்களை வணங்கி அவர்களுக்கு சிவத்தொண்டு புரிந்தால் சிவனுக்கே செய்த
பெரும் தொண்டு என்பதை உணர்ந்தவர். சிவனடியார்களிடம் அன்பும் பக்தியும்
கொண்டிருந்ததோடு சிவாலயங்களுக்கு திருப்பணிகள் செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
இவருடைய ஆட்சியில் சைவம் தழைத்தோங்கியது.
புகழ்ச்சோழர் அரசர் மற்ற அரசர்கள் கப்பம் கட்டுவதற்கு வசதியாக தம்முடைய
தலைநகரை மலைநாட்டு பக்கமுள்ள கருவூருக்கு மாற்றி கொண்டார். அங்கு
பசுபதீஸ்வரரை இடையறாது வணங்கி வந்தார் அவர். தம் மீது புகழ்சோழர் கொண்ட பக்தியை
உலகறியச் செய்ய வேண்டும் என்னும் திருவுளம் கொண்டார் இறைவன். கப்பம் கட்டும்
அரசர்கள் குதிரைகள், யானைகள், பொற்குவியல்கள், விலை மதிக்கத்தக்க கற்கள்
போன்றவற்றைச் செலுத்தி வந்தார்கள். ஒருமுறை அதிகன் என்னும் அரசன் மட்டும்
மன்னர்க்கு கப்பம் கட்டாமல் இருந்தான். செய்தி புகழ்ச்சோழர் காதுக்கு சென் றது.
கப்பம் கட்டாமல் இருக்கும் அதிகனை வென்று வர அமைச்சர்களிடம் ஆணையிட்டார்.
மன்னனின் கட்டளைக்கிணங்க அமைச்சர்கள் படைகள் சூழ சென்று அதிகனை வென்று அங்கிருந்த
பொருள் செல்வங்கள், படைகள் கொண்டு வந்ததோடு போரில் மாண்ட யானை, குதிரை, பெண்கள்
தலைகள், வீரர்கள் தலைகளையும் எடுத்து வந்தனர். தமது படையின் வீரம் கண்டு
மகிழ்ந்திருந்த மன்னன் ஒரு தலையில் மட்டும் சடைமுடி இருப்பதைப் பார்த்தார்.
அதைக் கண்டதும் புகழ்ச்சோழ நாயனார் உள்ளம் பதைத்தது. கண்களில் நீர்
நிறைந்தது. பெரும் பிழை செய்துவிட்டோமே என்று அஞ்சினார். அடியார்களுக்கு
தீங்கிழைக்க செய்யும்படி ஆனதே என்று அழுது அரற்றியவர் அமைச்சரிடம் என் ஆட்சியில்
சைவ நெறிக்கு பாதுகாப்பில்லாமல் போய்விட்டதே. திருமுடியில் சடைமுடி ஏந்திய அடியாரை
நானே கொன்றுவிட காரணமாகி விட்டேனே. எம்பெருமானுக்கு எத்தகைய துன்பத்தைக்
கொடுத்துவிட்டேன்.
சைவ நெறியை காப்பாற்ற வேண்டிய நான் அரசனல்லவே. கொடுங்கோலனாக அல்லவா
இருந்துவிட்டேன். இனி மக்களைக் காப்பாற்ற எனக்கு எவ்வித தகுதியுமில்லை என்று
கூறியவர் தன்னுடைய புதல்வனை அரசுக் கட்டிலில் அமர்த்தினார். பிறகு திருசடை
கொண்ட தலையை ஓர் பொற்தட்டில் வைத்து ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் தியானித்தவாறே
நெருப்புக்குண்டலத்தை வலம் வந்தார் மன்னர். பிறகு பொற்றாமரைக் குளத்தில் இறங்குவது
போல் நெருப்புக்குண்டலத்தில் இறங்கினார்.
சுற்றியிருந்தவர்கள் மன்னனின் பக்தியைக் கண்டு உருகினார்கள். மன்னர்
மன்னராக மட்டுமல்ல மகானாக வாழ்ந்திருக்கிறார் என்றார்கள். புகழ்ச் சோழர் நாயனாரை
எம்பெருமான் தம் திருவடி நிழலில் அணைத்துக்கொண்டார். அங்கணார் அடியார் தம்மை
செய்தயிவ் அபராதத்திற்கு இங்கு இது தன்னால்
போதாது என்னையும் கொல்ல
வேண்டும் என்று செங்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்த
புகழ் சோழர் இத்தலத்தின் தீபஸ்தம்பத்தில் அடியவர்
தலையை ஒரு தட்டில் ஏந்தி நெருப்பு குண்டத்தில் இறங்கும் கோலத்தில் சிற்பமாக விளங்குகின்றார்.
“இருள்கடு ஒடுங்கும் கண்டத்து இறையவருக்கு
உரிமை பூண்டார்க்கு அருள்பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார்” என்று
சேக்கிழார் பெருமானும் “இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு
அடியேன்” என்று சுந்தரரும் போற்றிய எறிபத்தர் கருவூரிலுள்ள ஆநிலை என்னும் திருக்கோயிலில்
எழுந்தருளிய பெருமானை வழிபட்டுச் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்து வந்தார்.
இவர் சிவனடியார்களுக்கு ஓர் இடர் வந்து உற்றவிடத்து உதவும் இயல்பினை உடையவர்; அடியார்களுக்கு
இடையூறு வந்த காலத்து அங்கு விரைந்து சென்று அடியார்களுக்குத் தீங்கு புரிந்தோரைப்
பரசு என்னும் மழுப்படையால் எறிந்து தண்டிப்பார். அதன் பொருட்டு அவர் கையிலே எப்பொழுதும்
மழுப்படை இருக்கும்.
அண்ணலார் ஆனிலைக்கு
திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமியாண்டார் என்னும் புண்னிய முனிவர் இறைவனுக்கு பள்ளித்தாமப்
பணி செய்து வந்தார். அவர் ஒருநாள் வைகறையில் துயிலெழுந்து
நீராடித் தூய்மை உடையவராய், வாயைத் துணியாற் கட்டித் திருநந்தவனஞ் சென்றார். அங்கு
மலர் கொய்து பூக்கூடையில் நிறைத்து, பூக்கூடையைத் தண்டில் மேல் வைத்து உயரத் தாங்கிக்
கொண்டு திருக்கோயிலை நோக்கி விரைந்து வந்தார். அன்று மகாந்வமியின் முதல் நாள்.
அந்நகரில் அரசு வீற்றிருக்கும் புகழ்சோழரது பட்டத்து யானை பட்டத்து யானை,
ஆற்றில் நீராடி, அலங்கரிக்கப் பெற்று மதச் செருக்குடன் பாகர்க்கு அடங்காது விரைந்து
வந்தது. அது சிவகாமியாண்டரைப் பின்தொடர்ந்து ஓடி அவர் தம் கையிலுள்ள பூக்கூடையைப் பறித்துச்
சிதறியது. யானை மேல் உள்ள பாகர்கள் யானையை விரைந்து செலுத்திச் சென்றனர். சிவகாமியாண்டவராகிய
அடியவர், இறைவர்க்கு சாத்தும் திருப்பள்ளித் தாமத்தைச் சிதறிய யானையின் செயல் கண்டு
வெகுண்டு, அதனைத் தண்டு கொண்டு அடிப்பதற்கு விரைந்து ஓடினார். ஆனால் முதுமை காரணமாக
இடறிவிழுந்து நிலத்திலே கைகளை மோதி அழுதார்.
சடாமுடியில் ஏறும் மலரை யானை சிந்துவதோ எனப் புலம்பினார். ‘சிவதா,
சிவதா’ எனும் அடியாரது ஓலத்தைக் கேட்டு விரைந்து அங்கு வந்த எறிபத்தர், யானையின்
செய்கை அறிந்து வெகுண்டார். சிவகாமியாண்டாரைக் கண்டு வணங்கி, “உமக்கிந்த
நிலைமையைச் செய்த யானை எங்கே போய்விட்டது?” என்று கேட்டார். சாமிக்குச் சாத்தக்
கொண்டு வந்த பூவைச் சிதறிவிட்டு, இத்தெருவழியேதான் போகிறதெனக் கூறினார். ‘இந்த
யானை பிழைப்பதெப்படி’ என யானையைப் பின்தொடர்ந்து சென்று யானையின் துதிக்கையை
மழுவினால் துணித்தார்; அதற்கு முன்னும் இருமருங்கும் சென்ற குத்துக்கோற்காரர்
மூவரையும் யானை மேலிருந்த பாகர் இருவரையும் மழுவினால் வெட்டி வீழ்த்தி நின்றார்.
தமது பட்டத்து யானையும், பாகர் ஐவரும் பட்டு வீழ்ந்த
செய்தியைக் கேட்ட புகழ் சோழர் வெகுண்டார். ‘இது பகைவர் செயலாகும்’ என எண்ணி,
நால்வகைச் சேனைகளுடன் அவ்விடத்தை அடைந்தார்; யானையும், பாகரும் வெட்டப்பட்டிருந்த
அவ்விடத்தில் பகைவர் எவரையும் காணாதவராய் இரு கை யானைபோல் தனித்து நிற்கும்
எறிபத்தராகிய சிவனடியாரைக் கண்டார். தம் யானையையும் பாகர்களையும் கொன்றவர் அங்கு
நிற்கும் அடியவரே என அருகிலுள்ளார்கள் கூறக் கேட்டறிந்த வேந்தர், சிவபெருமானுக்கு அன்பராம்
பண்புடைய இச்சிவனடியார் பிழைகண்டாலல்லது இவ்வாறு கொலைத் தண்டம் செய்யமாட்டார்.
எனவே என்னுடைய யானையும், பாகர்களும் பிழை செய்திருக்கவேண்டும் எனத் தம்முள்ளே
எண்ணியவராய், தம்முடன் வந்த சேனைகளைப் பின்னே நிறுத்தி விட்டு, குதிரையினின்று இறங்கி,
‘மலைபோலும் யானையை இவ்வடியார் நெருங்கிய நிலையில், அந்த யானையால் இவர்க்கு எத்தகைய
தீங்கும் நேராது விட்ட தவப்பேறுடையேன், அம்பலவாணரடியார் இவ்வளவு வெகுளியை
(கோபத்தை) அடைவதற்கு நேர்ந்த குற்றம் யாதோ? என்று அஞ்சி, எறிபத்தரை வணங்கினார்.
எறிபத்தர், யானையின் சிவபாதகச் செயலையும், பாகர் விலகாதிருந்ததனையும்
எடுத்துரைத்தார். அதனை உணர்ந்த புகழ்ச்சோழர், ‘சிவனடியார்க்குச் செய்த இப்பெருங்
குற்றத்திற்கு இத்தண்டனை போதாது; இக் குற்றத்திற்குக் காரணமாகிய என்னையும்
கொல்லுதல் வேண்டும்; ஆனால் மங்கலம் பொருந்திய மழுப்படையால் கொல்வது மரபன்று.
வாட்படையாகிய இதுவே என்னைக் கொல்லுவதற்கு ஏற்ற கருவியாம் என்று தமது உடைவாளை
ஏற்றுக் கொள்ளும்படி எறிபத்தரிடம் நீட்டினார்.
அதுகண்ட எறிபத்தர், ‘கெட்டேன், எல்லையற்ற புகழனாராகிய வேந்தர்
பெருமான் சிவனடியார்பால் வைத்த அன்பிற்கு அளவில்லாமையை உணர்ந்தேன்’ என்று எண்ணி,
மன்னார் தந்த வாட்படையை வாங்கமாட்டதவராய்த் தாம் வாங்காது விட்டால் மன்னர் அதனைக்
கொண்டு தம்முயிரைத் துறந்துவிடுவார் என்று அஞ்சித் தீங்கு நேராதபடி அதனை வாங்கிக்
கொண்டார். உடைவாள் கொடுத்த அரசர், அடியாரை வணங்கி ‘இவ்வடியார் வாளினால் என் குற்றத்தைத்
தீர்க்கும் பேறு பெற்றேன்’ என உவந்து நின்றார். அதுகண்ட எறிபத்தர் தமது பட்டத்து
யானையும், பாகரும் என் மழுப்படையால் மடிந்தொழியவும், உடைவாளும் தந்து, ‘எனது
குற்றத்தைப் போக்க என்னைக் கொல்லும், என்று வேண்டும் பேரன்புடைய இவர்க்கு யான்
தீங்கு இழைத்தேனே என மனம் வருந்தி, இவ்வாளினால் எனது உயிரை முடிப்பதே இனிச்
செய்யத்தக்கது’ என்று எண்ணி வாட்படையினை தம் கழுத்திற்பூட்டி அரிதற்கு
முற்பட்டார். அந்நிலையில் புகழ்ச்சோழர், ‘பெரியோர் செய்கை இருந்தவாறு இது
கெட்டேன்’ என்று எதிரே விரைந்து சென்று வாளையும் கையையும் பிடித்துக் கொண்டார்.
அப்பொழுது சிவபெருமான் திருவருளால், ‘யாவராலும் தொழத்தகும்
பேரன்புடையவர்களே! உங்கள் திருத்தொண்டின் பெருமையினை உலகத்தார்க்குப்
புலப்படுத்தும் பொருட்டு, இன்று வெகுளி மிக்க யானை பூக்கூடையினை சிதறும்படி,
இறைவனருளால் நிகழ்ந்தது” என்று ஓர் அருள்வாக்கு எழுந்தது. அதனுடனே பாகர்களோடு
யானையும் உயிர் பெற்றெழுந்தது. எறிபத்தர் வாட்படையை நெகிழவிட்டுப் புகழ்சோழர்
திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். வேந்தரும் வாட்படையைக் கீழே எறிந்து விட்டு,
எறிபத்தர் திருவடிகளைப் போற்றி நிலமிசை வீழ்ந்து இறைஞ்சினார். இருவரும் இறைவன்
அருள்மொழியினை வியந்து போற்றினர்.
இறைவர் திருவருளால்
சிவகாமியாண்டாரது பூக்கூடையில் முன்புபோல தூய நறுமலர்கள் வந்து நிரம்பின. பாகர்கள்
யானை நடத்திக் கொண்டு மன்னரை அணுகினர். எறிபத்தர் புகழ்ச்சோழரை வணங்கி, அடியேன்
உளங்களிப்ப இப்பட்டத்து யானை மேல்= எழுந்தருளுதல் வேண்டும்’ என்று வேண்டிக்
கொண்டார். புகழ்ச்சோழர் எறிபத்தரை வணங்கி, யானைமேலமர்ந்து சேனைகள் சூழ அரண்மனையை
அடைந்தார்.
சிவகாமியாண்டார் திருப்பூக்கூடையைக் கொண்டு இறைவர்க்குத் திருமாலை
தொடுத்தணித்தல் வேண்டித் திருக்கோயிலை அடைந்தார். எறிபத்த நாயனார் இவ்வாறு
அடியார்களுக்கு இடர் நேரிடும் போதெல்லாம் முற்பட்டுச் சென்று, தமது அன்பின் மிக்க
ஆண்மைத் திறத்தால் இடையூறகற்றித் திருக்கயிலையை அடைந்து சிவகணத்தார்க்கு, தலைவராக
அமர்ந்தார்.
மாநவமி திருவிழா என்று திருத்தொண்டர் புராணத்தில் புகழப்படும்
பூக்குடலைத் திருவிழா இத்தலத்திலசிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்பர்கள் அவசியம் தரிசிக்க
வேண்டிய ஒன்று.
இவ்வாலயத்தில் கருவூர் சித்தருக்கு தனி சன்னதி வெளிப்பிரகாரத்தில்
அமைந்துள்ளது. இத்தலத்தில் பிறந்ததனால் இவருக்கு இப்பெயர். போகரின் சீடர். இராஜராஜ
சோழனின் குரு, தஞ்சை பெரிய கோவிலில் பிரகதீஸ்வரரை பிரதி்ஷ்டை செய்யும் போது
அஷ்டபந்தன மருந்து இறுகாமல் இளகிய போது, போகரின் ஆணைப்படி அங்கு சென்று இலிங்கத்தை
நிலை நிறுத்தியவர். ஒரு சமயம் நெல்லையப்பர்
சந்நிதியில் நின்று `நெல்லையப்பா` என்றழைக்க, அப்பொழுது பெருமான் இவரது பெருமையைப்
பலரும் அறியும் பொருட்டு வாளா இருக்க ``இங்குக் கடவுள் இல்லைபோலும்`` என்று இவர் சினந்து
கூற அவ்வாலயம் பாழாகியது என்றும், பின்னர் அவ்வூர் மக்கள் நெல்லையப்பரை வேண்ட அப்பெருமான்
கருவூர்த்தேவரை நெல்லையம்பதிக்கு அழைத்து வந்து காட்சியளிக்க, மீண்டும் அவ்வாலயம் செழித்தது
என்றும் கூறுவர்.திருவரங்கத்தில் இவர் மூலம் தனது நவரத்தின மாலையை அபரஞ்சி என்ற
தாசிக்கு கொடுத்து அதன் முலம் இவர்கள் இருவரின் பெருமையையும் உலகறிய செய்தார்
அரங்கர் என்றொரு வரலாறும் உள்ளது. இறுதியில் கருவூரில் ஆநிலையப்பரை வணங்கி வந்த
இவரை சில பொறாமைக்காரர்கள், பித்தர், வாம மார்க்கத்தை கடைப்பிடிப்பவர் என்று
துன்புறுத்த, ஒரு தைப்பூச நாளில் ஆநிலையப்பரில் கலந்தார்.
கருவூர்த்
தேவரின் திருவுருவச்சிலை கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும்
விளங்குகிறது. இவர், கோயில், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம்,
திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி,
தஞ்சை, திருவிடைமருதூர் என்ற பத்து சிவத்தலங்கட்கு ஒவ்வொரு பதிகங்கள் வீதம் பத்துத்
திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் பாடியுள்ளார். திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையில்
தொகுக்கப்பட்டுள்ளது. அவரது ஒரு பாடல்
பவளமே மகுடம்!
பவளமே திருவாய்!
பவளமே திருவுடம்பு! அதனில்
தவளமே களபம்!
தவளமே புரிநூல்!
தவளமே மூறுவல் ஆடு அரவம்!
துவளுமே கலையும்!
துகிலுமே ஒருபால்!
துடியிடை இடமருங்கு ஒருத்தி!
அவளுமே ஆகில்,
அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே!
பொருள்:
ஐயனின் ஜடாமுடி, திருவாய், திருமேனி மூன்றும் பவள நிறம். அவரது திருமேனியில் பூசியுள்ள
திருநீர், முப்புரிநூல், அவரின் ஆபரணம் நாகம் மூன்றும் வெண்மை. இவ்வாறு சிவப்பும் வெளுப்புமாக
வலப்பக்கத்தில் இறைவன் மிளிர, இடப்பக்கம் மேகலை,
துகில், துவளும் இடையுடன் முக்கண்னி நிற்கின்றாள்
இவ்வாறு
அன்பர்க்கு அருள அம்மையும் அப்பனும் ஒன்றாக திருக்களந்தை ஆதிதேச்சரத்தில்
அருளுகின்றனர்.
வாருங்கள்
இனி பிரம்மாண்டமான இவ்வாலயத்தை சுற்றி வலம் வந்து தரிசிக்கலாம்.