Tuesday, November 1, 2011

அற்புத நவராத்திரி அலங்காரம் 9

நவராத்திரி விழாவானது நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழ் நாட்டில் வீட்டில் கொலு, கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம். சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை என்றால் கர்நாடகத்தில் இதுவே அன்னை சாமுண்டீஸ்வரியின் தசரா விழா, குஜராத்தில் ஒன்பது நாட்களும் இரவில் கர்பா என்னும் நடனமாடி அன்னையை வழிபடுகின்றனர். வடநாட்டில் அம்மன் ஆலயங்களில் ஒன்பது நாட்களும் நவதுர்க்கை வழிபாடி மற்றும் இராமர் இராவணனை வென்ற ராம்லீலா, விஜய தசமியன்று, இராவணன், கும்பகர்ணன், மேகநாதன்( இந்திரஜித்) மூவரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன . இதுவே கிழக்குப் பகுதிகளான வங்காளம், அஸ்ஸாமில் துர்கா பூஜாவாக கொண்டாடப்படுகின்றது.

சஷ்டி நாள் தொடங்கி துர்கை அம்மனின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று நாட்கள் சிறப்பாக பூஜைகள் செய்யப்பட்டு விஜய தசமியன்று, அம்மன் சிலைகள் ஆற்றீல் கரைக்கப்படுகின்றன. மலைமகள் அன்னை பார்வதி திருக்கயிலாயம் விட்டு தனது பிறந்த வீடாண இமயமலைக்கு( பூலோகத்திற்கு) தனது குமாரர்களான கணேசன் மற்றும் கார்த்திகேயன், மகள்களான லக்ஷ்மி, சரஸ்வதியுடன் தாய் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். கல்யாணம் செய்து புக்ககம் சென்ற மகள் தாய் வீட்டிற்கு வந்தாள் எப்படி நாம் சீர் செய்வோமோ அதுபோல இங்கே துர்க்கைகு பூஜைகள் நடைபெறுகின்றது.

இப்படங்கள் எல்லாம் மும்பை மாநகரில் இந்த வருடம் நடைபெற்ற துர்காபூஜையின் படங்கள், இதை அனுப்பியவர் அடியேனுடன் பணிபுரியும் திரு. அலோக் குமார் ராய் கர்மாகர் அவர்கள். அன்னையின் அற்புத தரிசனம் கண்டு களியுங்கள்.


சாந்தாகுரூஸ்


லோகன்ட்வாலா


ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பந்தல் மற்றும் அன்னைக்கு சிறப்பு அலங்காரம் பாருங்கள்.


பூனம் நகர்இமயகிரிராச தனயை, பார்வதி, மலைமகள், வரை மகள், சைல சுதா, இமவான் புத்ரி, பர்வதவர்த்தினி, மலை வளர் காதலி உமை, கிரி கன்யா, கிரிஜா, பர்வதபுத்ரி, இமயத்தன்றும் பிறந்தவள் அன்னை துர்க்கைக்கு செய்திருக்கும் அலங்காரத்தின் பிரம்மாண்டத்தைப் பாருங்கள்.பொவாய்
அன்னைக்கு இமவான் வழங்கிய சிங்கம், மகிடனை சுற்றியுள்ள பாம்பு, அன்னையின் மகள்களான சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி ஆகியோரை சாந்தாகுரூஸ் பந்தலின் இப்படத்தில் தெளிவாக்க் காணலாம். வேண்டுமென்றால் பெரிதாக்கிப் பாருங்கள்.
உத்யான்கோகுல்தாம்

கணேசர், லக்ஷ்மி, துர்க்கா, சரஸ்வதி மற்றும் கார்த்திகேயன் மூஞ்சுறு, ஆந்தை, சிம்மம், அன்னம், மயில் வாகனங்களுடன்.
சிவாஜி பார்க் – தாதர்


அன்னை திருக்கயிலாயத்திலிருந்து வருவதால் சிவபெருமான் இங்கே சிறிதாக மேலே காட்டப்பட்டுள்ளார். பூர்ண கும்பத்தில் தேங்காயை அப்படியே உரிக்காமல் வைத்திருப்பதையும் கவனியுங்கள். கார்த்திகேயனின் (முருகன்) ஆயுதமாக வில், அம்பு ( வேல் அல்ல ) உள்ளதையும் கவனியுங்கள். வாழை மரமாக தாங்கள் பார்ப்பது கணேசனின் மனைவி அபராஜிதா, விஜயதசமியன்று அபராஜிதாவிற்கு சிறப்பு பூஜை நடைபெறும்.


அபிராமி பட்டர் அருளிய

அபிராமி பதிகம்

சகல செல்வங்களும் தரும் இமயகிரிராச
தனயை மாதேவி நின்னைச்

சத்தியமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்கு இரங்கி மிகவும்

அகில மதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகு புகழ் பெருமை இளமை

அறிவு சந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகு நல்லூழ் நுகர்ச்சி

தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ்வளிப்பாய்

சுகிர்த குணசாலி! பரிபாலி! அநுகூலி திரி
சூலி! மங்கள விசாலி!

மகவுநான் நீ தாய் அளிக்கொணாதோ? மகிமை
வளைதிருக் கடவூரில் வாழ்

வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமி மகிழ்
வாமி! அபிராமி! உமையே!
அம்மன் அருள் வளரும் .........

2 comments:

Sankar Gurusamy said...

சில வாரங்களுக்கு முன் இங்கு கொல்கத்தாவில் தரிசித்து மகிழ்ந்த அன்னையின் தரிசனம் மீண்டும் தங்கள் தளத்தில் கண்டது மகிழ்ச்சி..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

Kailashi said...

கல்கத்தாவில் இன்னும் பிரம்மாண்டமாகவும், அதிக அளவிலும் இருந்திருக்குமே. நீங்கள் கொதுத்து வைத்தவர்தான் ஐயா.