Friday, May 1, 2009

திருக்காரணி சித்திரைத் திருவிழா-2 (கொடியேற்றம்)

முதல் நாள் காலை கொடியேற்றம்

ஸ்ரீவிநாயகரும் இராஜ கோபுரமும்

கமவிதிப்படி ஐந்து நாட்களுக்கு மேற்பட்ட உற்சவங்கள் கொடியேற்றத்துடன் நடத்தப்படுகின்றன. எனவே பெருவிழாவின் முதல் நாள் சுபமுகூர்த்த வேளையில் கொடி மரத்திற்கருகில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுகின்றனர்.


கொடிமரத்திற்கருகில் பஞ்ச மூர்த்திகள்

முதலில் கொடி மரத்திற்கும் பலி பீடத்திற்கும் அபிஷேகம் நடைபெறுகின்றது. அஷ்ட திக் பாலகர்கள், சப்த ரிஷிகள், புண்ணிய நதிகள் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் பூஜை நடைபெறுகின்றது. பின்னர் கொடி மரம் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்படுகின்றது.

கொடிமரம்.

ஆயபதிதான் அருட்சிவலிங்கமாம்

ஆய பசுவும் அடலேறு என நிற்கும்ம்

ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்

ஆய வரனிலை ஆய்ந்து கொள்வார்க்கே.



துவஜஸ்தம்பம் (கொடி மரம்): மொத்தம் 33 கணுக்கள் இருக்கும். சந்தனம், தேவதாரு, சண்பகம், வில்வம், மகிழ மரங்களால் செய்யப்படும். கொடி மரம் சரீரத்தை குறிக்கின்றது, சரீரம் நேராக இருந்து இடை பிங்களை நாடிகளின் வழியே போய் வரும் பிராண வாயுவை ஸுஷிப்தி முனையின் நடுவில் நிறுத்தி சிறிதும் அசையாது தியானித்தால் பிராணவாயு நிற்கும், அது நிற்க மனசு நிற்கும், மனசு நிற்க ஐம்பொறிகளும் நிற்கும், அவை நின்றால் விஷயம் நிற்கும் அதனால் பரம சிவத்தின் தரிசனம் கிட்டும்.


சொர்ணாம்பாள் உடனுறை காரணீஸ்வரப் பெருமான்

சி - சிவபெருமான், வ - திருவருள் சக்தி, ய - கொடியில் உள்ள நந்தி தேவர், ந - கொடித்துணி (ஆத்மா,, ம - தருப்பைக் கயிறு (பாசம்,). மும்மலத்தின் வஸப்படும் ஆன்மா திருவருட்சக்தியால் பாசமற்று சிவஞான வடிவாகியப் பதியின் திருவடி அடைதலைக் குறிக்கின்றது கொடியேற்றம். கொடிமரத்தின் கீழே தர்ப்பை இருக்கும் அது பாசத்தை குறிக்கின்றது, அதை முறுக்கி கயிறாக மாற்றுவது பாசத்தை விடுதலை குறிக்கின்றது. பசு வான ஜீவாத்மா பாசம் விடுத்து பதியான பரமாத்வை அடைவதை கொடியேற்றம் உணர்த்துகின்றது.

கொடி மேலே ஏறிய பின் அது கம்பத்துடன் இனைந்து கிடக்கும். அதாவது ஜீவாத்மா பரமாத்வாவுடன் ஒன்றி இருக்கும். என்னதான் ஒன்றியிருந்தாலும் மனம் அலை பாய்வது இயல்பு, எங்கு சுற்றினாலும் பின்னும் மனம் இறைவனிடமே வந்து சேரும் இதையே கொடித்தடை என்பர். கொடி எறிய பிறகு ஊரை விட்டு செல்லக் கூடாது அவ்வாறு சென்றாலும் இரவுக்குள் திரும்பி விட வேண்டுமென்பது இவ்வாறு எங்கு சென்றாலும் இறுதியில் இறைவனிடம் வந்து சரணடைய வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

திருக்கயிலையிலே சொர்ணமயமான ஊஞ்சலிலே கமனீயமாய் அமர்ந்திருக்கும் பால் வெண்ணீறணிந்த பவள வண்ணர் சிவ பெருமானையும், பச்சைப் பசுங்கிளி மலையரசன் பொற்பாவை பார்வதி அம்மனையும் தன் மூச்சுக்காற்றால் குளிர்வித்துக் கொண்டிருப்பவர் நந்தியெம்பெருமான் இவரே சிவபெருமானது வாகனமும் கொடியும் ஆவார். ரிஷபம். நந்தி, ஏறு, விடை இடபம், காளை, பசு, இடை, மாடு என்றெல்லாம் அழைக்கப்படும் இவர் . ஐயனின் பூத கணங்களின் முதல் தொண்டர் ஆன இவரே ஐயனின் கொடியில் விளங்குகின்றார். எனவே சிவாலயங்களில் ரிஷபக்கொடியே ஏற்றப்படுகின்றது.

தர்ம தேவதையே தூய வெள்ளை ரிஷபமாக ஐயனை தாங்குகின்றார் என்பது ஒரு ஐதீகம். தட மதில்கள் தனையெரித்த அந்நாளில் இடபமதாய் திருமால் ஐயனை தாங்கினார் என்பது இன்னொரு ஐதீகம்.

ஆகவே மங்கள மஞ்சள் துணியில், இடபம், சூரிய சந்திரர்கள், மணி, விளக்கு ஆகியவை வரையப்பட்ட கொடிக்கு பூஜை நடைபெற்று கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு மங்கள் நேரத்தில் ஏற்றப்படுகின்றது. கொடி மரத்தின் அடிப்பாகம் தர்ப்பையால் அலங்கரிக்கப்படுகின்றது. பின் சகல தேவர்களையும் மந்திரப்பூர்வமாக அழைத்து கொடி மரத்தில் யதாஸ்தானம் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது. பெருவிழா முடியும் வரை அவர்கள் கொடி மரத்தில் தங்கியிருந்து பெருவிழாவை பார்த்து மகிழ்வதாக ஐதீகம்.


கொடியேற்றம் முடிந்து திருவீதி உலாவிற்க்காக

பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு


கொடிக்கவி பெற்ற வரலாறு: உண்மையான பக்தி ஒன்றைத்தான் நம்மிடம் இறைவன் எதிர்பார்க்கிறார் என்பதை உணர்த்திய வரலாறு இதோ. "நாம் அவர்களுள் ஒருவர்" என்று எம்பெருமனாலேயே திருவாய் மலர்ந்தருளப் பெற்ற தில்லை வாழ் அந்தணர்களுள் ஒருவராக பிறந்தார் உமாபதி சிவம். இவர் ஆரியமும் சீரிய தமிழும் பயின்று ஆனந்த கூத்தருக்கு நாள் தோறும் சித்சபையிலே முறையாக பூஜை செய்து வந்தார். திரு மறை ஞான சம்பந்த சிவாசிரிய சுவாமிகளை இவர் குருவாக ஏற்றுக் பூஜை கொண்டதால் மற்ற அந்தணர்கள் இவர் மேல் அசூயை கொண்டனர் எனவே இவரை சிற்றம்பலத்தில் பூஜை செய்ய அனுமதிக்கவில்லை. அவரும் சிதம்பரத்தை விட்டு விலகி கொற்றவன் குடிக்கு சென்று குடில் அமைத்து அங்கே எம்பெருமானுக்கு ஆத்மார்த்த பூசை செய்து வரலானார். மற்ற அந்தணர்களுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பிய மன்றில் ஆடுவார் திருவாதிரை நாளின் முதல் நாளான துவஜாரோகணத்தன்று அவர்கள் கொடி ஏற்றிய போது கொடி ஏறாமல் செய்தார். அவர்கள் எவ்வளவு முயன்றும் கொடி ஏறவில்லை. பின் அசரீரியாக சித்சபேசர் " நாம் கொற்றவன் குடியிலுள்ள எம் அடிமைத் தொண்டனாகிய உமாபதி சிவாச்சாரியாருடைய பூசை பெட்டகத்தே எழுந்தருளி அவரது பூசனைகளை ஏற்று வருகிறோம் அவரை அழைத்து வந்து துவஜாரோகணம் செய்யுங்கள் என்று கூறியருளினார். தங்களது தவற்றை உணர்ந்த அவர்கள் கொற்றவன்குடி சென்று உமாபதி சிவாச்சாரியாரை தக்க மரியாதையுடன் அழைத்து வந்தனர்.

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஒன்று மேல் இடில் ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள் அடராது உள் உயிர்க்கு உயிராய்த்
தெளிக்கும் அறிவு திகழ்ந்து உளதேனும் திரிமலத்தே
குளிக்கும் உயிர் அருள்கூடும் படாகொடி கட்டினனே


பொருளாம் பொருளேது போறேது கண்ணேது

இருளாம் வெளியேது இரவேது – அருளாளா

நீ புரவா வையமெலாம் நீ அறிய கட்டினேன்

கோபுர வாசற் கொடி

வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்

தாக்காது உணர்வரிய தன்மையனை – நோக்கி

பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே

குறிக்கும் அருள் நல்க கொடி.

அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும்

பிஞ்செழுத்தும் மேலை பெருவெழுத்தும் நெஞ்சமுத்தி

பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும்

கூசாமற் காட்டாக் கொடி.



என்று தொடங்கி அவர் வந்து கொடிக்கவி பாடியவுடன் கொடியும் ஏறியது தன் அன்பனின் உணமையான பக்தியையும் உலகுக்கு உணார்த்தினார் எம்பெருமான். எல்லா சிவஸ்தலங்களிலும் இதனால்தான் இன்றும் பெருவிழாவின் கொடியேற்றத்தின் போது கொடிக்கவி பாடப்படுகின்றது.பின்னர் பஞ்ச மூர்த்திகளுக்கும் கொடி மரத்திற்க்கும் தீபாரதனை நடைபெறுகின்றது. பின் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வந்து அலங்கார மண்டபம் திரும்புகின்றனர்.


அஸ்திர தேவர்

லாவுக்கு முன்னர் அஸ்திர தேவர் திருவீதி உலா வந்து பாதையை சுத்தம் செய்கின்றார். சிவபெருமானின் அஸ்திரம் திரிசூலம். அஸ்திர தேவர் வலம் வருவது அனைத்து ஜீவராசிகளுக்கும் அருள் புரிவதைக் குறிப்பிடுகின்றது. முதல் நாள் அஷ்டதிக் பாலகர்களும் அழைக்கப்பெற்று உலா வரும் பாதையில் யாதாஸ்தானம் கொள்ள வேண்டப்படுகின்றனர். தினமும் காலையும் மாலையும் அவர்களுக்கு பலி (உணவு) படைக்கப்படுகின்றது. பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுவத்ற்கு முன் அஸ்திர தேவர் எழுந்தரூளி அருள் பாலிக்கின்றார்.






அஸ்தமான கிரி விமானத்தில் பஞ்ச மூர்த்திகள்


ஸ்ரீ விநாயகர்


ஸ்ரீ சிவசக்தி

சோமாஸ்கந்த மூர்த்தமே பெருவிழாக்களில் சிவ பெருமானாக உலா வருகின்றது. இன்று ஒரு நாள் அம்மைக்கும் ஐயனுக்கும் இடையில் ஸ்கந்தனையும் தாங்கள் தரிசனம் செய்கின்றீர்கள். சிவபெருமான் - சத், அம்பாள் -சித், ஸ்கந்தர் - ஆனந்தம், ஆகவே சோமாஸ்கந்த மூர்த்தம் சச்சிதானந்தம். இறைவனை அம்மையுடனும், முருகனுடனும் தரிசிக்க பேரானந்தமே.


சிவ சொர்ணாம்பிகை



வள்ளி தெய்வாணையுடன் சிவ சுப்பிரமணிய சுவாமி


சண்டிகேஸ்வரர்



ஐயன் புரியும் ஐந்தொழிலையும் குறிப்பிடும் வண்ணமும் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது, முளைப்பாலிகை ஆக்கல் தொழிலையும், தேரோட்டம் சம்ஹாரத்தையும். ரிஷப வாகனம், திருக்கலயாணம் ஆகியவை அருளளையும் குறிக்கின்றன, ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்பதற்கிணங்க பல் வேறு தரப்பினரும் ஒன்று சேர்ந்து இணைந்து நடத்துவதே திருவிழாக்கள்.

இனி பஞ்ச மூர்த்திகள் உலாவின் சில சலனப் படங்கள்


No comments: