Monday, May 11, 2009

திருக்காரணி திருமுலைப்பால் விழா

விநாயகப்பெருமான்

ஆளுடையப்பிள்ளை அம்மையின் ஞானப்பால் உண்ட
திருஞானசம்பந்தர்

பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்

சிரம்தழுவு சைவநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க

அரந்தைகெடப் புகலியர்ககோன் அமுதுசெயத் திருமுலைப்பால்

சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி


காரணீஸ்வரத்தில் எட்டாம் நாள் காலையிலிருந்தே கோலாகலம்தான். சமணமும், பௌத்தமும் தலை தூக்கி சைவம் நசிந்த காலத்தில் மேன்மை கொள் சைவ நீதி மேலோங்க சிவபெருமான் திருவுளம் கொண்டதால் சீர்காழியில் திருஞான சம்பந்தர் திருஅவதாரம் செய்தார்.

மூன்றாம் வயதிலே சம்பந்தரின் தந்தை சீர்காழி குளக்கரையில் குழந்தையான சம்பந்தரை விட்டு விட்டு குளத்தில் குளிக்க செல்ல அம்மையப்பரை பார்த்து குழந்தை அழ , அம்மை திரிபுர சுந்தரி, உமையம்மை, பார்வதி தானே வந்து சிவஞானப்பால் ஊட்டியருளினாள். குளித்து விட்டு திரும்பிவந்த சிவபாதஹ்ருதயர் குழந்தையின் வாயில் பாலைக் கண்டு யார் கொடுத்த பாலை குடித்தாய் என்று அதட்டிக் கேட்க சம்பந்தர் கோயில் கோபுரத்தை காட்டி அம்மையின் கருணையை

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதிசூடி
காடுடைய சுடலைப்பொடி பூசி என்னுள்ளங் கவர்கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே.
என்று பதிகம் பாடி தந்தைக்கு உண்மையை உணர்த்துகின்றார். சம்பந்தருடைய பதிகம்தான் தேவாரத்தின்( திருமுறைகளின்) முதல் பதிகம் ஓம் என்னும் பிரணவத்துடன் தொடங்குகின்றது.

இந்திர தீர்த்தத்தில் உள்ள கோபுரம் அம்மை திருஞான சம்பந்தருக்கு பால் ஊட்டுதலும் சிவபாதஹ்ருதயர் மிரட்ட குழந்தை சம்பந்தர் தோடுடைய செவியர் அம்மையப்பர் சிவபெருமானை தந்தைக்கு காட்டுதலும்.

காலையில் சம்பந்தரும் தந்தையாரும் இந்திரன் சிவபெருமானை வழிபட உருவாக்கிய இந்திர தீர்த்தத்திற்கு எழுந்தருளுகின்றனர். திருக்கோவிலில் ஆதி சோமாஸ்கந்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. பின் சிறப்பு அலங்காரத்துடன் சிவபாதஹ்ருதயருக்கு அருட்காட்சி தர ரிஷப வாகனத்தில் புறப்படுகின்றார் எம்பருமான்.



புராதான சோமாஸ்கந்தர்


ஆதி சோமாஸ்கந்தர் ரிஷப வாகனத்தில்
சிவபாத ஹ்ருதயருக்கு சேவை சாதித்தல்

32 வருட காலம் வாழ்ந்து சமணர்களை தோற்கடித்து சைவத்தின் பெருமையை நிலை நாட்டினார் சம்பந்த பெருமான். அன்னை சம்பந்தருக்கு திருமுலைப்பால ஊட்டிய திருவிழா மதியம் நடைபெறுகின்றது. ரிஷப வாகனத்தில் புராதன சோமாஸ்கந்தர் குளக்கரைக்கு எழுந்தருளுகின்றார். குளக்கரையில் சம்பந்தருக்கும் சிவபாதஹ்ருதயருக்கும் அபிஷேகம் நடைபெறுகின்றது. பின் பல்லக்கில் சம்பந்தப்பெருமானும், விமானத்தில் சிவபாதஹ்ருதயரும் எழுந்தருள அம்மையப்பர் ரிஷப வாகானத்தில் திருக்காட்சி கொடுக்க திருமுலைப்பால் வைபவம் சிறப்பாக நடைபெறுகின்றது. பதிகம் பாடி அருளுகின்றார் சம்பந்தர். பிரசாதமாக பால் அனைவருக்கும் வழங்கப்படுகின்றது.
இத்திருத்தலத்தின் ஆதி சோமாஸ்கந்தர் இன்று ஒரு நாள் மட்டுமே திருக்கோவிலை விட்டு வெளியே வருகின்றார் என்பது ஒரு சிறப்பு.

அடுத்த பதிவு அறுபத்து மூவர் திருவிழா.......

No comments: