Monday, May 11, 2009

திருக்காரணி தேரோட்டம்

ஏழாம் நாள் காலை திருத்தேரோட்டம்

அச்சது பொடி செய்த அதிதீரன் திருத்தேர்

பெருவிழாக்களில் திருத்தேரோட்டம் ஒரு முக்கியமான உற்சவம். பெரும்பாலான தலங்களில் தேரோட்டம் ஏழாம் நாள் பகலில் நடைபெறுகின்றது.

யாவராலும் அழிக்க முடியாத தங்க வெள்ளி இரும்பு பறக்கும் கோட்டைகளை அமைத்து கொண்து அனைவரையும் மிரட்டிக் கொண்டு இருந்த திரிபுர அசுரர்களை எந்த ஆயுதமும் இல்லாமல் தன் சிரிப்பினாலேயே எரித்து கொன்ற திருபுராரி, காரணீஸ்வரப் பெருமான் அச்சது பொடி செய்த அதி தீரன் விநாயகருடனும், அன்னை சொர்ணாம்பிகையுடனும், எழில் முருகனுடனும், சண்டிகேஸ்வரருடன் மாட வீதிகளில் உலா வரும் அழகைக் காணுங்கள்


கையில் பினாகம் என்னும் வில்லை ஏந்தி திரிபுர அசுரர்களை அழிக்க காரணீஸ்வரப்பெருமான் செல்லும் அற்புதக் காட்சி

தேர்த்திருவிழாவானது ஐயனின் ஐந்தொழில்களில் அழித்தல் தொழிலை குறிக்கின்றது. அசுரர்களை அழித்து தேவர்களையும் மற்ற ஜீவராசிகளையும் காப்பதைக் குறிக்கின்றது. ஆகவே தான் திருத்தேரில் எழுந்தருளி திரு உலா வரும் போது கையில் பினாகம் என்னும் அவருடைய வில்லை ஏந்தியவராக அலங்காரம் செய்வது மரபு.




காரணீஸ்வரப் பெருமான் திருத்தேர் முன்னழகு


விநாயகர் இரதம் முன் செல்ல அவர் பின்னர் காரணீஸ்வரரரின் பெரிய தேர் பின்னர் சொர்ணாம்பிகையின் திருத்தேர் பின்னர் முத்துகுமரன் தேர் அதற்குப்பின் சண்டிகேஸ்வரர் தேர் என பஞ்ச மூர்த்திகளும் தேரோட்டம் கண்டருளுகின்றனர்.


தேரோட்டம் ஆகம விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி நடைபெறுகின்றது. பொதுவாக இரதாரோகணம் சூரிய உதயத்திற்கு முன் நல்ல மூகூர்த்தத்தில் நடைபெறுகின்றது. இரதங்களை நவரத்னங்கள், வஸ்த்ரங்கள் ,முத்துகள். மணம் மிகுந்த மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன. இரதத்தின் மேற் பகுதி மண்டபம் போல் மூன்று அடுக்குகளாவது கொண்டு அமைக்கப்பதட வேண்டும், சிம்மம், யாளி, அல்லது யானைகள் இரதத்தை நான்கு மூலைகளிலும் தாங்க வேண்டும் என்று மரீசி தமது விமனார்சன கல்பத்தில் கூறுகின்றார்.


மாட வீதியில் ஊர் கூடி தேரிழுக்க அருமையாக

பவனி வரும் காரணீஸ்வரர்


இரதம் ஆலயத்தின் ஒரு சிறு வடிவம், இரதத்தை இழுக்க பயன்படும் கயிறு வாசுகி என்னும் நாகம், முன்பக்க சக்கரங்கள் சூரியன், பின்பக்க சக்கரங்கள் சந்திரன்.

இராஜகோபுரத்தின் முன்னர் திருத்தேர்

(கோபுர தரிசனம் கோடி புண்ணீயம்)


எம்பெருமானுடைய தசதின பெருவிழாவில் 7ம் திருநாளன்று காலையில் விமானத்திற்க்கு ஒப்பான பலவிதமான இரத்தின, பவழ, முத்து, மரகத மணிகளினாலும், நாநாவித வஸ்தரங்களாலும், மணம் நிறைந்த மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் ஊஞ்சலில் ப்ரியாவிடை அமபாள் ஸஹிதமாய் எழுந்தருளியிருக்கும் நீலகண்டர், சந்திரசேகரர்., தியாகராஜர் , திரிபுராரி, த்ரியம்பகேஸ்வரர் சிவபெருமானையும் மற்ற மூர்த்திகளையும் ஸேவிப்பவர்களுக்கு மறு பிறவி கிடையாது.



இரதத்தை யார் வேண்டுமானாலும் இழுக்கலாம், ஜாதி மத, வேறுபாடுகள், இறைவனின் முன் அனைவரும் சமம் என்பதை இரதோற்சவம் உணர்த்துகின்றது. மேலும் ஊர் கூடித் தான் தேர் இழுக்க வேண்டும் என்பது ஒற்றுமையை வலியுறுத்துகின்றது.



திருத்தேரின் பின்னழகு

நமது உடலே இரதம், ஜீவாத்மாவாகிய நாம் தான் தேரை நடத்துபவர், புத்தி இரத சாரதி, மனமே ரதத்தை செலுத்தும் கடிவாளம். ஞானம் பெற்ற ஜீவாத்மா புலன்களை அடக்கி இரதத்தை நல்வழியில் செலுத்தி மோட்சத்தை அடைகிறான் என்னும் உபநிஷத்துகளில் சொல்லப்பட்டுள்ள இரகசியத்தை இரதோற்சவம் உணர்த்துகின்றது


சொர்ணாம்பாள் இரதம்

எழில் குமரன் தன் தேவியருடன்

முத்துக்குமரன் இரதம்

சண்டிகேஸ்வரர் இரதம்

இரவில் மின் விளக்கு ஒளியில் மின்னும் திருத்தேர்

No comments: