இனி இத்தலத்திற்க்கு காரணீஸ்வரம் என்னும் நாமம் வரக் காரணம் என்னவென்று பார்ப்போமா? தேவேந்திரன் வசிஷ்ட முனிவருக்கு அவருடைய தவத்திற்கு உதவி வேண்டி காமதேனுவை கொடுத்தான்.தவறாக நடந்து கொண்டதால் காமதேனுவை காட்டுப்பசுவாக போக சாபம் கொடுத்தார் வசிஷ்டர். காமதேனுவை திரும்பப்பெற இந்திரன் சிவ பூஜை செய்ய விரும்பினான். திருமயிலைக்கும் திருவான்மியூருக்கும் இடையில் உள்ள மாவனத்தில் லிங்க ஸ்தாபிதம் செய்து காமதேனுவை மீட்டு சென்ற தலம். தேவேந்திரன் பூஜை செய்த போது கார்மேகங்கள் சூழ்ந்து மழை பெய்து குளிரச் செய்ததால் பெருமானுக்கு காரணீஸ்வரர் என்று திருநாமம், எனவே இழந்த பொருளைப் பெற சிறந்த பிரார்த்தனை தலம். இந்திரன் சிவ பூஜை செய்ய உருவாக்கிய திருக்குளம் கோபதி குளம், இந்திர தீர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. இத்திருக்குளம் திருக்கோவிலின் வலப்பக்கம் அமைந்துள்ளது.
12 வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும் இடியும் மின்னலும் தோன்றும் சமயத்தில் கோவில் எழிலாக விளங்கும். இவ்வாறு பெருமான் தன் பெருமையை வெளிப்படுத்துவதால் காரணீ்ஸ்வரர். என்பது ஒரு ஐதீகம் எல்லா பொருட்களுக்கும் ஆதி காரண மூர்த்தி என்பதால் காரணீஸ்வரர் என்றும் கொள்ளலாம். அம்மை சொர்ணாம்பிகை. மேலும் வேதகிரீஸ்வரரும் திரிபுர சுந்தரி அம்பாளும், சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.
முழுமுதற்க் கடவுள் விநாயகர் வழிபாடு
பொதுவாக சிவாலயங்களின் பெருவிழாக்கள் கிராம காவல் தெய்வ வழிபாடு, விநாயகர் உற்சவம், கொடியேற்றம் தினமும் காலையும் மாலையும் பல் வேறு வாகனங்களில் புறப்பாடு, ரிஷப வாகன பெரு விழா, திருத்தேரோட்டம், சிறப்பு உற்சவம், பிக்ஷ்டாணர் உற்சவம், நடராஜர் உற்சவம், தீர்த்த வாரி , திருக்கல்யாணம் , கையிலங்கிரி வாகன புறப்பாடு, கொடியிறக்கம், சண்டிகேஸ்வரர் உற்சவம், புஷ்ப பல்லக்கு, பந்தம் பரி உற்சவம், பன்னிரு திருமுறைகள் விழா, உற்சவ சாந்தி அபிஷேகம், விடையாற்றி என்ற முறையில் நடைபெறும். இத்திருக்கோவிலும் சித்திரைத்திருவிழா இவ்வாறே மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. இனி வரும் பதிவுகளில் இக்காட்சி்களை படமாகவும், சலனப் படமாகவும் கண்டு களியுங்கள்.
திருக்கோவில்களில் திருவிழாக்கள் ஆகம விதிப்படி நடைபெறுகின்றன.
ஆகமம் என்றால் வருகை என்று பொருள் படும். உபதேச வழியாக வருபவை. ஆகத கத, மத என்ற மூன்று சொற்களின் சேர்க்கையால் ஆகமம் என்ற சொல் தோன்றியது. ஆன்மாக்கள் மோட்சம் அடைய மலநாசம் செய்விப்பது ஆகமம். ஆகமவிதிப்படி
அனுக்ஞை : விநாயகர், மூலமூர்த்தி முதலாக சண்டிகேஸ்வரர் ஈறாக சகல தெய்வங்களிடமும், குரு, பெரியோர், வயதானவர்கள் ஆகியோர்களிடமும் அனுமதி பெறுவது ஆக்ஞை எனப்படுகின்றது.
சங்கல்பம்: எடுத்துக் கொண்ட காரியத்தை குருவின் உதவியுடன் செய்து முடிப்பதாக உறுதி பூணுதல் சங்கல்பம்.
ரக்ஷா பந்தனம்: காப்புக்கட்டுதல் விழாவின் தொடக்கம் முதல் நிறைவு வரை, வெளி உலக உபாதைகள் ஒன்றும் தீண்டக்கூடாது என்பதற்காக காப்பு கட்டப்பதுகின்றது. மூல மூர்த்திக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் காப்பு கட்டப்படுகின்றது.
ம்ருத்ஸங்க்ரஹணம்: அங்குரார்ப்பணம் என்னும் முளைப்பாலிகைக்காக ஆற்றங்கரை, மலையடிவாரம், நந்தவனம் போன்ற பரிசுத்தமான இடத்திலிருந்து புது மண் எடுத்து வரும் நிகழ்ச்சியாகும்.
அங்குரார்ப்பணம்: என்பது முளை இடுதல்(பாலிகை) மஹோற்சவம். மங்கள முறைப்படி 40,24,16 (அல்லது வைதிக முறைப்படி 5 ) பாலிகைகளில் நன் முளையிட்டு காலை-மாலை பஞ்ச கவ்ய நீர் வார்த்து அவ்ற்றின் முளைகளை நன்கு கவனித்து பலன் கூறுதல் .
வாஸ்து சாந்தி: இடத்திற்க்கு தேவதையான வாஸ்து புருஷனையும் அவரது அதிதேவதையான பிரம்ம தேவரையும் சக்திகளையும் பூஜித்து , மற்ற தெய்வங்களையும் வழிபட்டு திருப்தி செய்வதே வாஸ்து சாந்தி. மகிழ்வித்த வாஸ்து புருஷனை ஹோமாக்னியால் எரியூட்டி, ஆலயம் முழுவதும் இழுத்து சென்று சுத்திகரித்து, இறுதியாக புண்யாஹவாசன கலச நீரினால் அவ்விடங்களை சுத்தி செய்வதே வாஸ்து சாந்தியின் நிறைவு.
இவற்றுள் இத்தலத்தில் ம்ருத்ஸங்க்ரஹணம் என்னும் புற்று மண் சேகரிக்கும் விழா மதியம் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேற்கு சைதாப்பேட்டையே விழாக் கோலம் பூணுகின்றது அன்று அனைவரும் உற்சாகத்துடன் திருவிழா துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். மதியம் அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகின்றது.
இரவு விநாயகர் உற்சவம். நாம் எந்த செயலையும் செய்வதற்க்கு முன் எந்த வித விக்னங்களும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக விநாயகரை வணங்க வேண்டும் என்பது மரபு. பெருவிழாக்களிலும் இவ்வாறே முதல் நாள் உற்சவம் விநாயகர் உற்சவம். மூஷிக வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் சர்வ புவன சக்ரவர்த்தியாக வலம் வருகின்றார் திரிபுர சம்ஹாரத்தின் போது அச்சது பொடி செய்த அதி தீரர். இத்தலத்தில் விநாயகர் திருக்கோவில் வலம் வருவது மட்டுமல்லாமல் மேற்கு சைதாப்பேட்டை காரணித் தோட்டம் வீதிகளிலும் எழுந்தருளி அருள் பாலிப்பது சிறப்பு.
2 comments:
நான் ஒரே ஒரு முறை தற்செயலாக சைதைக்குச் சென்ற போது இந்தத் திருக்கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கியிருக்கிறேன்.
அருமையாகவும் சுருக்கமாகவும் முதல் நாள் நிகழ்வுகளைச் சொன்னீர்கள் ஐயா. நன்றி.
அனைத்து நாள் திருவிழாக்களையும் கண்டு களித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் குமரன் ஐயா.
ஓம் நமசிவாய
Post a Comment