Tuesday, May 19, 2009

திருமுறை உற்சவம்

பன்னிரு திருமுறைகள் உற்சவம்

திருமுறையே சைவநெறிக் கருவூலம் தென் தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின்கண் சிவபெருமான் செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம்வருந்த எழுதிய அருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய் மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்

வெள்ளை யாணையில் பன்னிரு திருமுறைகள் பவனி

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலா கலை ஞானம் பெற்ற ஞானாசிரியர்களால் திருமுறைகள் அருளப்பெற்றன.

சைவ நெறி கருவூலம் மண்ணக உணர்வு குறைந்து விண்ணக உணர்வு பெருக முதலாசிரியர் அன்னையின் ஞானப்பால் உண்ட ஆளுடைய பிள்ளையாம் திருஞான சம்பந்தர் விண்ணிலே அம்மையப்பரைக் கண்டு தோடுடைய செவியன் என்று பாட ஆரம்பித்தது, முயலகனை தீர்த்து, குளிர் ஜுரம் தீர்த்து, பொற்கிழி பெற்று, அராவிடம் தீர்க்கப்பெற்றது, ஆலவாய் அண்ணல் அருளால் வெப்பு நோய் நீங்கியது, புனல் வாதம் , அனல் வாதம் செய்து வெற்றி பெற்று இறிதியில் எலும்பு பெண்ணாகியது.

அப்பர் பெருமானின் பதிகங்களினால் நஞ்சு அமுதானது, கொலையாணை பணிந்தது, கடலில் கல் தெப்பமானது, பாம்பு தீண்டியவன் உயிர் பெற்றது. திருவையாற்றில் செம்பொன்சோதியைக் கண்டு இன்புற்றார்.

வன்தொண்டர் சுந்தரர் திருத்தொண்டர் தொகை பாடி பசித்திருந்தபோது பொதி சோறு அளித்தது, நடுநிசியில் தொண்டர் நாதனை தூது அனுப்பியது, திருமுதுகுன்றத்தில் பொன் பெற்றது.

முதலையுண்ட பாலனை அழைப்பித்தது, நரி பரியாகி, வைகை பெருகி, பிட்டுக்கு மண் சுமந்து, புத்தரை வாதில் வென்று ஈழப் பெண்ணின் ஊமைப் பெண்ணை பேச வைத்த மாணிக்க வாசகர் முன் இறைவனே தோன்றி பஞ்சாட்சரத்தை முதலாக கொண்ட சிவபுராணம் பாட வைத்த பரமன் ஏடெழுத திருவாசகம் மலர்ந்தது.

பதினோராம் திருமுறையினைப் பாடி அருளியாதால் எம் ஐயனும் ஞானாசிரியரில் ஒருவரானார்.

சிவபாத சேகரன், இராஜராஜன், திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி மூலம் இத்திருமுறைகளை மீட்டு ஒதுவார்களைக் கொண்டு பாடச்செய்தான்.




இவ்வளவு சிறப்புக்கள் பெற்ற திருமுறைகள் உற்சவம் திருக்கரணியில் பன்னிரண்டாம் நாள் மாலை நடைபெறுகின்றது. பன்னிரு திருமுறைகள் வெள்ளை யானை மேல் அலங்காரம் செய்யப் பெற்று திருவிதி வலம் வருகின்றன. ஓதுவார் மூர்த்திகள் பன்னிரு திருமுறைகளைப் பாடியபடி உடன் வலம் வருகின்றனர். ஐயனின் அருளை, கருணையை, புகழைப் பாடும் பதிகங்களுக்கும் அவருக்கு செய்யும் சிறப்பு செய்யப்படுகின்றது.

மாலை ஆறு மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு உற்சவ சாந்தி சிறப்பு நவ கலச அபிஷேகம். ஆகம விதிப்படி இறை மூர்த்தங்கள் திருக்கோவிலை விட்டு வெளியே சென்று விட்டு வரும் போது சாந்தி அபிஷேகம் செய்ய வேண்டுமென்பது மரபு.
சோமாஸ்கந்த மூர்த்தத்தில் மூன்று மூர்த்தங்கள், முருகர் வள்ளி தேய்வானையுடன், விநாயகர், சொர்ணாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வர் என்று ஒன்பது மூர்த்தங்களுக்கு தனித் தனியாக கலசம் ஸ்தாபித்து யாகத்தினால் மந்திரப் பூர்வமாக சுத்திகரித்து நதியாய்ப் பாயும் திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகின்றது.

உற்சவ சாந்தி நவகலச அபிஷேக யாகம்

சாந்தி அபிஷேகம் முடிந்த பின்
பஞ்ச மூர்த்திகள் அருட்காட்சி


பின்னர் உற்சவ சாந்தி தேவார இன்னிசைக் கேட்டருளி யதாஸ்தானம் திரும்புகின்றனர் பஞ்ச மூர்த்திகள். இத்துடன் இத் தொடர்பதிவு நிறைவடைகின்றது. விநாயகர் உற்சவம் தொடங்கி சாந்தி அபிஷேகம் வரை அனைத்து உற்சவங்களையும் தரிசனம் செய்ய அருள் புரிந்தார்கள் அம்மையப்பர்கள், அவ்வருட்காட்சிகளையே அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொண்டேன். வந்து தரிசனம் பெற்ற அனைவருக்கும் நன்றி.

Monday, May 18, 2009

திருக்காரணி புஷ்பப் பல்லக்கு

பதினோராம் திருநாள் மாலை புஷ்ப பல்லக்கு


அதிகாலையில் சிவ சொரூபமே அனைத்து ஜீவராசிகளும் என்று உணர்த்திய ஆதி தம்பதிகள் மாலை புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.


புஷ்ப பல்லக்கிற்க்கு எழுந்தருளும்
காரணீஸ்வரப்பெருமான்




குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.

ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்தி

மலர்களினாலே எவ்வளவு தத்ரூபமாக எம் ஆடல் வல்லானை அமைத்திருக்கின்றனர் பாருங்கள்.


புஷ்பப் பல்லகில் அம்மையப்பர்


அன்னை சிவசொர்ணாம்பிகை

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
புராந்தகி திரியம்பகி, எழிற்
புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ் ரதள
புட்பமிசை வீற்றிருக்கும்

நாரணி மறைதீத நாயகி குணாதீத
நாதாந்தச் சக்தி், என்று உன்
நாமமே உச்சரித்திருக்கும் அடியர் நாமமே
நான் உச்சரிக்க வசமோ?

ஆரணிச் சடைக் கடவுள் ஆரணி எனப்புகழ்
அகிலாண்ட கோடி ஈன்ற
அன்னையே! பின்னையும் கன்னி என்று மறை பேசும்
ஆனந்த ரூப மயிலே!

வாரணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கைபுகழ்
வளமருவு தேவையரசே!
வரை ராசனுக்கு இருகண்மணியாய் உதித்த மலை
வளர் காதலிப் பெண் உமையே!



சிவ சுப்பிரமணிய சுவாமி

பூப் பூவா பறந்து போகும் பட்டாம் பூச்சி

குமரன் ஐயா அவர்கள் அடியேனையும் ஒரு பொருட்டாக மதித்து பட்டாம்பூச்சி விருது கொடுத்து கௌரவித்துள்ளார்கள்

குமரன்

அவருக்கு முதல் கண் ஆயிரம் நன்றிகள்

அடியேனுடன் அவர் விருது வழங்கிய

மதுரையம்பதி

கௌசிகர் தி.ர.ச

உஷா

ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

வண்ணப்படங்கள் கைலாஷி என்று விருது கொடுத்ததால் இப்பதிவில் படங்கள் இல்லாமல் இருந்தால் எனவே திருவான்மியூரில் அருள் பாலிக்கும் தியாகராஜப்பெருமானின் அருட்காட்சியை கண்டு மகிழுங்கள்.

நாகங்கள் தவழும் ஐயனின் திருமேனியில் கிளிகள், மைனாக்கள், பட்டாம் பூச்சிகள் விளையாடும் அழகு தான் என்னே. ( பட்டாம் பூச்சி விருது என்பதால் பட்டாம் பூச்சி தரிக்கும் ஐயனின் இப்படம்)





இருந்தாடும் அழகர்
தொண்டை மண்டல தியாகர்




திரிபுரசுந்தரி அம்பாள்

பட்டாம் பூச்சி விருதின் விதிமுறைப்படி பட்டாம் பூச்சியைப் பறக்கவிடவேண்டியது அவசியம். எனவே அடியேன் இவ்விருதினை கீழ்க்கண்டவர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.


என்னும் ஜீவா வெங்கட்ராமன் இசையும் ஆன்மீகமும் இவரது இருகண்கள். தமிழிசையையும் அதிகமாக நேசிக்கும் இவர் தொண்டு சிறக்க வாழ்த்துகின்றேன்.


கட்டுமானத்துரையைப்பற்றிய பல அரிய தகவல்களை தனது வலைப்பூவில் பதியும் இவர் சேவை இன்னும் தொடர வாழ்த்துக்கள்.


கவிதாயினி கவிநயா, அருமையாக கவிதைகளை பதைக்கின்றார் இவர். அதுவும் அம்மன் மேல் இவர் இயற்றும் பாடல்கள் அருமை. இன்னும் பல்லாயிரம் பாடல்கள் படைக்க வாழ்த்துகின்றேன்.


என்னும் தஞ்சை சுப்பு இரத்தினம் ஐயா. ஆன்மீகச் செம்மல் இவர். இவருக்கும் இசையிலும் ஆர்வம் உண்டு, சிறிது கவிதையும் வரும். ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்.

தங்கள் அனைவரின் தொண்டு சிறக்க அந்தக் கயிலை நாதரை வேண்டிக்கொள்கிறேன்.

தாங்கள் அனைவரும் இனி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.

பட்டாம் பூச்சி பறக்கும் முறை:



1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

***

தாங்களும் தங்களை கவர்ந்தவர்களுக்கு பட்டாம் பூச்சி விருது அளித்து கவுரவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

Saturday, May 16, 2009

சிவசொரூபக் காட்சி

பெருவிழாக்களில் பத்தாம் திருநாள் இரவு திருக்கல்யாணம். அடுத்த நாள் காலை சிவ சொரூப காட்சி உற்சவம். சில தலங்களில் இந்த உற்சவத்தை உமாமஹேஸ்வர தரிசனம் என்றும் அழைக்கின்றனர். இந்த உற்சவத்தின் தாத்பர்யத்தை அறிந்து கொள்ள கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

என்னங்க மற்ற பதிவுகளில் எல்லாம் நிறைய படங்கள் இருக்கும் இப்பதிவிலோ ஒரே ஒரு படம் அதுவும் நேற்றைய படம் போல உள்ளதே என்றால் நீங்கள் சரி.

அலங்காரம் நேற்றைய திருக்கல்யாண அலங்காரம்தான். ஆனால் தத்துவ விளக்கம் தான் அருமையோ அருமை. சகல புவனத்தையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் வி்ளையாடும் ஆதி தம்பதியினரின் ஐக்கியமே சிவ சொரூபக் காட்சி. திருக்கல்யாணம் முடிந்த பின் அடுத்த நாள் காலை அம்மையப்பர் ஐக்கியமாக நமக்கு வழங்குகின்ற காட்சி. ஸ்ரீ சக்ரத்தில் நடுவில் உள்ள பிந்து சிவ சக்தி ஐக்கியத்தை குறிக்கின்றது. அந்த ஸ்ரீ சக்கரத்தை பிரம்மாண்டமாக் கொண்டால் அனைத்து பிரம்மாண்டமும் சிவசக்தி ஐக்கியத்தில் இருந்து ஒன்றாகத் தொடங்கி பிரம்மாண்டமாக பலவாறாக விரிந்து காட்சி தருகின்றது, பின் பிரளய காலத்தில் அனைத்து பிரம்மாண்டமும் அழிந்து அனைத்தும் சிவ சக்தி ஐக்கியத்தில் முடிகின்றன. எல்லாம் எங்கிருந்து தொடங்கியதோ அங்கேயே ஐக்கியம். அதாவது அனைவரும் சிவசொரூபமே என்னும் அரிய உண்மையை உணர்த்துவதே இந்த சிவசொரூபக் காட்சியின் உண்மை தாத்பர்யம். இதை நாம் உணர்ந்தால் நம்முள் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை என்றும் நாம் உணரலால். நம்முடைய ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களை விடுத்து அந்த பதியுடன் இணையலாம்.

பதினோறாம் காலை ஆதி தம்பதியினர் நமக்கு அருட்காட்சி தருகின்ரனர். முதலில் கோ பூஜை பின் கற்பூர நீராஞ்சனம், பின் பத்து நாட்களும் பெருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைத்து கைங்கரியம் செய்த அனைவருக்கும் அம்மையப்பருக்கு இரவு படைக்கப்பட்ட நைவேத்யம் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

Thursday, May 14, 2009

திருக்காரணி திருக்கல்யாணம்

சிவ சொர்ணாம்பாளின் நட்சத்திரம் சித்திரை எனவே சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. இன்று இத்திருக்கல்யாணத்தை தரிசனம் செய்பவர்களுக்கு அன்னை இம்மையில் எல்லா நலங்களையும் அளித்து மறுமையில் முக்தி பேறும் வழங்குகின்றாள்.

திருக்கல்யாண கோலத்தில் சொர்ணாம்பாள் காரணீஸ்வரர்

பாகம் பிரியா அம்மையுடன் காரணீஸ்வரப் பெருமான்

சைவத்தலங்களில் பெருவிழாக்கள் அனைத்தும் அம்மையப்பரின் திருக்கல்யாணத்துடன் நிறைவடைகின்றன. பத்தாம் நாள் இரவு திருக்கலயாணம் நடைபெறுகின்றது. பொதுவாக திருக்கல்யாணம் என்பது ஜீவாதமா மற்றும் பரமாத்மாவின் ஐக்கியத்தை குறிக்கின்றது. பாசத்தால் சூழப்பட்டிருக்கின்ற பசுவானது அந்த பாசம், ஆணவம் முதலிய மலங்கள் நீங்கி பதியுடன் சேருவதைக் குறிக்கின்றது. ஆகவேதான் சிவபெருமான் பசுபதி என்று அழைக்கப்படுகின்றார்.



மணக்கோலத்தில் சிவசொர்ணாம்பிகை அம்பாள்

கன்னியா குமரியருள் காந்திமதி மீனாட்சி
கருணைப ருவதவர்த்தினி

கமலை பராசக்தி சிவகாம சுந்தரி

காழியுமை பிரமவித்தை


தன்னிகரி லாஞான அபயவர தாம்பிகை

தையல் அபிராமி மங்கை

தந்த அகிலாண்டநா யகி அறம் வளர்த்தவள்
தண்ணருள் செய் காமாட்சி யிலங்கு

என்னையாள் கௌரி ஜ்வாலாமுகி உண்ணாமுலை
இலங்கு நீலாயதாட்சி
எழிற் பிரமராம்பிகை யிலங்கு பார்வதி ஆதி

எண்ணிலா நாம ரூப

அன்னை யாய்க் காசி முதலாகிய தலத்து விளை

யாடிடும் விசாலாட்சியாம்
அண்டகோடிகள் பணி அகண்ட பூரணி என்னும்
அன்னபூரணி ( சிவ சொர்ணாம்பிகை) அன்னையே.
உன் தாள் சரணம்.

சிவ சுப்பிரமணியசாமி தன் தேவியருடன்


திருக்கைலாய வாகனத்தில் அம்மையப்பர்

திருக்கலயாணம் முடிந்த பின்பு அம்மையப்பர் திருக்கயிலாய வாகனத்தில் சேவை சாதிக்கின்றார், ஐயனும் அம்மையும் உறையும் தம் திருக்கயிலாயம். சகல புவனங்களையும் படைத்தும் காத்தும், அழித்தும், அருளியும் மறைத்தும் ஐந்தொழில் புரியும் ஐயனும் அவரின் பாதி சக்தி அம்மையும் யோகத்தில் அமர்ந்து சகல புவனத்தையும் பரிபாலிக்கின்றனர். எனவே திருக்கயிலாய வாகனம் சிவபெருமானுக்கே உரியது பூதம், ரிஷபம், அதிகார நந்தி போல. அடாத செயல் செய்த இராவணனின் ஆணவத்தை ஐயம் தன்து இடது பெரு விரலால் லேசாக அழுத்தி அடக்கியதை உனர்த்தும் வகையில் கைலாய வாகனத்தின் முன் ஆணவ இராவணனின் சிலை இருக்கும். ஒன்றை கவனித்தீர்கள் என்றால் ஒரு உண்மை புலப்படும் இராவணனின் தலைகள் ஒன்பதுதான் உள்ளன, பத்தாவது எங்கே சென்றது. சரியாகப்பாருங்கள் அவன் சாம கீதம் மீட்டும் வீணையில் ஒரு தலை சிறிதாக உள்ளதே.






கோபுர தரிசனம் கோடி புண்ணியம்



திருக்கயிலாய வாகனத்தின் பின்னழகு
திருவிதி உலா முடிந்து பஞ்ச மூர்த்திகள் திருக்கோவில் திரும்பியதும் கொடியிறக்கம். இதுவரை தேவ லோகத்தை விட்டு பிரம்மோற்சவத்தை காண வந்த சகல தேவர்களையும் தங்கள் தங்கள் யதாஸ்தானம் செல்லுமாறு வேண்டப்பட்டு பெருவிழாவின் நிறைவை குறிக்கும் வகையில் கொடியிறக்கப்படுகின்றது. பின் சண்டிகேஸ்வரர் உற்சவம்.