Monday, May 11, 2009

திருக்காரணி ஏழாம் நாள் இரவு உற்சவம்

ழாம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்துடன் திருத்தேரிலிருந்து திருக்கோவில் திரும்புதல்
விக்னங்களை நீக்கும் விக்னேஸ்வரர்


ஏழாம் நாள் சூரிய உதயத்திற்கு முன் திருத்தேருக்கு எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகள் பின் மாட வீதி வலம் வந்து அருளி தேர் நிலை அடைகின்றனர். திருக்காரணியில் சுமார் 11 மணிக்கு தேர் நிலை அடைகின்றது. ஐயன் மாலை சுமார் 5 மணி வரை திருத்தேரிலேயே தரிசனம் தருகின்றார். நாம் தேர் உள்ளே சென்று மிக அருகில் பினாகாபாணியை தரிசனம் செய்ய முடியும்.

திருக்கோவிலுக்கு திரும்பி செல்ல புறப்படும் அம்மையப்பர்

அதற்குப்பின் தேரிலிருந்து அம்மையப்பர் வெளியே வந்து சிறப்பு அலங்காரம் செய்து கொள்கின்றனர். எவ்வளவு அருமையான அலங்காரம் பாருங்கள் சோமாஸ்கந்த மூர்த்தத்தில் உள்ளது போலவே ஐயன் வீராசனத்திலும், அம்மை கையில் கொஞ்சும் கிளி தாங்கி சுகாசனத்திலும் அருட் காட்சி தருகின்றர் நாம் எல்லோரும் உய்ய.


சிறப்பு மலர் அலங்காரத்துடன் அருள் பாலிக்கும்
சிவசொர்ணாம்பிகை அம்மன்


ஏழாம் திருநாளான இன்று அகிலம் அனைத்தையும் காத்து அருள் பொழியும் அன்னையை நீலம் சூடும் நித்திலமாய் வழிபடுகின்றோம்.

நீலம்

உமிழ்ந்தாய் உலகம் பதினான்கை

உவக்கும் வண்ணம் ஒண்ணுதலே

உறவாந் தாய்நீ மகவேனின்

உள்ளம் உறையும் உட்பொருளே


இமிழ்ந்தார்த் தெழும்புங் கடல் நீலம்

இழையச் சூடும் நன்மணியே

இகங்கொள் வாழ்வின் இயல்பாகும்

இன்னல் கலைளயும் இன்னமுதே


தமிழ்ப்பா வளித்துத் தெளிவித்தாய்

தனயன் தேருந் தாயலவோ

தனஞ் சேர் தான்யம் தருகின்றாய்

தண்டாமரையே தாழ்குழலே


அமிழ்தக் கடவூர் அபிராமி

அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே

அடிமை கொண்டாய் அருள்வாமி

அன்னாய் சிவசொர் ணாம்பிகையே (7)இன்று ஏன் சிறப்பு அலங்காரம் என்று நினைக்கின்றீ்ர்களா? அதற்காக திரிபுர தஹன கதையைப்பற்றி பார்ப்போமா? தாரகன், விந்யுன்மாலி, கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பிரம்ம தேவரிடம் பல அரிய வரங்களைப் பெற்று மூன்று உலோகத்திலான பறக்கும் கோட்டைகளை அமைத்துக் கொண்டு சகல புவனங்களையும் ஆட்டிப் படைத்து வந்தனர். அவர்களின் கொடுமைக்கு முடிவு செய்ய தேவர்கள் அனைவரும் பரம கருணாமூர்த்தி சிவபெருமானிடம் சென்று வேண்டினர். அவரும் அசுரர்களை அழிக்க திருவுளம் பற்றி அருளினார்.

ஓங்குமலை பெருவிற் பாம்பு ஞாண்கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உதற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கரைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல

என்று புறநானூற்றில் பாடியுள்ள படி, இந்த உலகமே தேராக, வேதங்கள் குதிரைகள் ஆக, சூரிய சந்திரர்களே தேர் சக்கரங்களாக, பிரம்மன் தேரோட்ட, மேரு மலை வில்லாகவும், ஆதி சேஷன் நாணாகவும் விளங்க ஐயன் தேரின் மேல் ஏறச்சென்ற போது தன்னை வணங்கி இக்காரியத்தை தொடங்காததால் அந்த தேரின் அச்சை பொடி செய்தார் விக்னேஸ்வரன். ஆகவே இனி எல்லா காரியங்களிலும் முதலில் விக்னேஸ்வரரையே வணங்க வேண்டும் என்னும் வரம் கொடுத்தார் சிவபெருமான். பின் எல்லோரும் திகைத்து நிற்கும் போது திருமாலே வெள்ளை ரிஷபமாகி எம்பெருமானை தாங்கினார். இதை மாணிக்கவாசகர்

தடமதில்கள் அவைமூன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபம் அதாய்த் தாங்கினான் திருமால் காண்; சாழலோ!
என்று பாடுகின்றார்.

தேவர்கள் இவ்வளவு அருமையான தேரை நாம் உருவாக்கி விட்டோம் என்று கர்வம் கொண்டதால் தான் இவ்வாறு அச்சு முறிபட நேர்ந்தது. ஆயினும் ஐயன் தன் சிரிப்ப்பினாலேயே மூன்று கோட்டைகளையும் எரித்துஅழித்து அசுரர்களிம் கொடுமைக்கு ஒரு முடிவு கட்டினார். இவ்வாறு ஓரம்பாலே எரியும் படி செய்த சிவபெருமான் அதற்கு கைம்மாறாக வேள்வியில் அவிர்பாகத்தை பெறும் உரிமையை பெற்றார். இதை மாணிக்க வாசகர் இவ்வாறு பாடுகின்றார்.

வளைந்தது வில்லு; விளைந்தது பூசல்;
உளைந்தன முப்புரம் உந்தீபற !
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற!

ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்;
ஒர்அம்பே முப்புரம் உந்தீபற!
ஒன்றும் பெருமிகை உந்தீபற!

தச்சு விடுத்தலும் தாம்அடியிட்டலும்
அச்சு முறிந்தது என்று உ
ந்தீபற!

அழிந்தன முப்புரம் உந்தீபற!

உய்யவல் லார்ஒரு மூவரைக் காவல்கொண்டு
எய்யவல்லானுக்கே உந்தீபற!
இளமுலை பங்கன் என்று உந்தீபற!

இவ்வாறி முப்ப்புரங்களையும் அழித்து வெற்றி வீரராக ஐயன் திரும்புவதாலே அவருக்கு சிறப்பு மலர் அலங்காரம். இனி அந்த மலர் அலங்காரத்தை கண்டு களியுங்கள் அன்பர்களே.

என்ன அற்புத அலங்காரம் அம்மையப்பருக்கு

ஐயன் திருக்கோவிலுக்கு புறப்பாடு ஆகும் போது சிறப்பு வான வேடிக்கை நடைபெறுகின்றது. அரை மணி நேரத்திற்க்கும் மேலாக அற்புதமான வாண வேடிக்கை நடைபெறுகின்றது.மலர் அலங்காரத்தில் சிவ சுப்பிரமணிய சுவாமி

ஏழாம் நாள் திருவிழாவின் தாத்பரியம்: ஏழேழு பிறவியிலும் தொதரும் ஒரே உறவு ஆண்டவனுக்கும் நமக்கும் உள்ள உறவு தான். இந்த பந்தம் நிரந்தரமாக இருக்க வேண்டுமென்றால் நம் நல்வினை தீவினைக்கேற்ப நாம் எடுக்கும் தேவர். மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன், நீர் வாழ்வன, தாவரம் என்னும் ஏழு பிறவிகளையும் நீத்து , பிறவிப்பிணியிலிருந்து விடுவித்து உன் திருப்பாதங்களில் எப்போதும் சேவை செய்யும் வரம் அருள வேண்டும் என்று வேண்டுவதே இந்த ஏழாம் நாள் உற்சவத்தின் தாத்பர்யம்.


No comments: