மானச கந்தர்வ மாணிக்க விமானம்
திருமணக் கோலத்தில் சிவகாமி அம்பாள்
ஐயனுக்கு நான்கு கோண விமானம் ஆனால் அம்மைக்கோ எண்கோண விமானம். பதினாறு வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் கூரையைத் தாங்குகின்றன. கோபுரத்தில் அம்மைக்கும் மூன்று கலசங்கள் ஒன்று நடுவிலும் மற்ற இரண்டும் தனியாக, கோபுரத்தில் கிளிகள் கொஞ்சுகின்றன. வளைவுகளிலே அழகிய சிற்பம் , நடுவில் பூவேலைப்பாடு. கோபுரத்தை யாழிகள் தாங்க கந்தர்விகளும், கின்னரிகளும், கையில் கிளியுடன் முத்து மாலை ஏந்தி விமானத்திற்கு அழகு சேர்க்கின்றனர். பிரம்ம சக்தி, சிவ சக்தி, பராசக்தி, நாகம், வராஹி, மகேஸ்வரி, விஷ்ணு சக்தி, வீர சக்தி என்னும் தன் எட்டு ரூபங்கள் விமானத்தை சுற்றி அருட்காட்சி தர, இறக்கையை விரித்த கந்தர்விகள் முன்புறமும் பின்புறமும் வீணை இசை மீட்ட தாமரைப் பூக்களால் அமைந்த பீடத்தில் மணிகள் ஒலிக்க எழிலாக பவனி வருகின்றாள் அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. சக்திகளின் ஆடை ஆபரணங்கள் அப்படியே அற்புதம்.
விமானத்தின் பக்கவாட்டுத் தோற்றம்
அம்பாளுக்கு முத்து மாலை ஏந்தி சேவை செய்யும் கந்தர்விகள்
விமானத்தில்
விமானத்தின் பின்னழகு
விமானத்தை சிம்மங்கள் மற்றும் நாகங்கள் தாங்குகின்றன. பீடத்தில் பூ வேலைப்பாடுகள் அற்புதம். ஐயனின் விமானம் ஒரு வித அழகு என்றால் அம்மனின் விமானத்தின் அழகு மற்றொரு விதம். ஒவ்வொரு வருடமும் அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரமும் ஒவ்வொரு வகை. ஒரு தடவை நின்ற கோலம் .மறு வருடம் அமர்ந்த கோலம், அதற்கடுத்த வருடம் யோகக் கோலம் என்று காணக் கண் கோடி வேண்டும். விமானத்தில் அன்பே சிவம் விஷ்ணு சக்தி மயம், இரையைத் தேடுவதோடு இறைவனையும் தேடு, தாய் தவக்கோலமே சேய்க்கடிமை ஞாலமே, வாணி வேணி பூமியில்லையேல் வையமில்லை, ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
வள்ளி தேவ சேனா சமேத முருகர், தங்க மயில் வாகனத்தில் பவனி வருகிறார், குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடி கொண்டிருக்கிறானல்லவா? எனவே முருகரது தங்க மயில் ஒரு குன்றின் மேல் நிற்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. குன்றில் அனைத்து பறவைகள் மற்றும் மிருகங்களைக் காணலாம். எம்பெருமானுக்குரிய கைலாய வாகனத்தில் இது போல்தான் மிருகங்களும் பறவைகளும் காட்டப்பட்டிருக்கும், ஆனால் இங்கு குன்றிலேயே அனைத்து ஜீவராசிகளும் காட்டப்பட்டுள்ளன. மயிலின் காலின் கீழ உள்ளது ஐந்து தலை நாகம். அலகில் இருப்பது மூன்று தலை நாகம். பீடத்திலும், திருவாசியிலும் அழகிய பூ வேலைப்பாடுகள். முருகரும் நான்கு புறமும் கந்தர்விகள் யாழ் மீட்ட பவனி வருகின்றார்.
சண்டிகேஸ்வரருக்கு தங்க சிறிய ரிஷப வாகனம். ரிஷபத்தின் அலங்காரங்கள் அனைத்தும் அற்புதம். வருடாவருடம் வினாயக, முருக, சண்டிகேஸ்வரர் அலங்காரமும் அம்மனின் கோலத்தை ஒட்டி செயப்படுகின்றது.
பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு