Showing posts with label ஏற்றுயர் கொடி. Show all posts
Showing posts with label ஏற்றுயர் கொடி. Show all posts

Thursday, December 26, 2013

எருதுக்கொடியையும் எம்மையும் உடையவனே பள்ளி எழுந்தருள்

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 1




இறைவன் எங்கும் நிறைந்தவன், எல்லா பொருட்களிலும் அந்தர்யாமியாக எழுந்தருளி இருப்பவன், சகல வல்லமை கொண்டவன். அவர் உறங்குவதும் இல்லை விழிப்பதும் இல்லை, ஆனால் மானிட இயல்பினால் நாம் அந்த இறைவனை இரவு திருப்பள்ளிப்படுத்துகின்றோம், அவர் உறங்குவதாக பாவித்து, பிறகு காலையில் அவரை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புகின்றோம். ஓர் நாமம் ஓர் உருவம் இல்லாத அந்த பரம்பொருளுக்கு நாம் ஆயிரம் நாமம் பாடி வணங்குவதைப் போன்றதே இதுவும்.

திருப்பள்ளியெழுச்சி என்பது இவ்வாறு இறைவனை துயில் எழுப்புவதாகவும் கொள்ளலாம், நம்மில் ஆன்மிக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி பரம கருணா  மூர்த்தி இறைவனின் கருணையை உணரச்செய்வதாகவும் கொள்ளலாம். "சுப்ரபாதம்" என்பது இதன் இணையான சமஸ்கிருத சொல்.

 அப்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை,  குருவாக வந்து தானே வந்து ஆட்கொண்ட வள்ளலை எழுப்பி அனைத்து வளங்களையும் நலங்களையும் வழங்க பிரார்த்திப்பது போல் அமைந்த பாடல்கள் திருப்பள்ளுயெழுச்சிப் பாடல்கள்.  மாணிக்க வாசக சுவாமிகள் பாடிய பதிகங்கள் இவை.

எம்பெருமானே எங்களுக்கு சகல மங்களங்களையும் தந்து அருள்வீர்களாக என்று வேண்டும் வண்ணம் அமைந்தவையே இந்த திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள். மார்கழி மாதம் திருவெம்பாவையுடன் இப்பதிகங்களும் திருக்கோவில்களில் பாராயணம் செய்யப்படுகின்றன.




திருசிற்றம்பலம்


மாணிக்கவாசக சுவாமிகள்
திருப்பெருந்துறையில் அருளியது
(திரோதன சுத்தி)


போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே!
புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர் கொண்டு
ஏற்றி நின் திருமுகத்தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றி தழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ்
திருப்பெருந்துறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எம்மை உடையாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.........(1)





பொருள்:போற்றி! என் வாழ்விற்கு மூலப்பொருளே! சேற்றில் செந்தாமரைகள் இதழ் விரிக்கும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் எம்பெருமானே! உயர்த்திய எருது கொடி உடையவனே! சிவபெருமானே போற்றி!

பொழுந்து விடிந்தது, உனது அழகிய மலர் போன்ற திருவடிகள் இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று ஒத்த மலர்கள் கொண்டு தூவினோம்; எங்களுக்கு அருள் புரியும் பொருட்டு உன் திருமுகத்தில் மலரும் அழகிய புன்னகையை எங்கள் உள்ளத்தில் நிறுத்தி உன் திருவடிகளை வணங்குகிறோம். எம்மை தொண்டனாக ஆட்கொண்ட எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க.

மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற  http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm  இங்கு செல்லவும்.