Monday, December 30, 2013

பந்தணை விரலி பங்கா எழுந்தருள்

திருப்பள்ளியெழுச்சி # 8
 
திருசிற்றம்பலம் 






முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
பந்தணை விரலியும், நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெ
ருந்துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!..........(8)





பொருள்: அனைத்திற்கும் முற்பட்ட முதலும், நடுவும், பிரளய காலத்திற்கு பின்னும் நிற்கும் முடிவும் ஆனவனே! அயன்,அரி,அரன் என்னும் மூவராலும் உன் தன்மையை அறிய முடியவில்லை என்றால் வேறு யாரால் தான் அறிய முடியும்?


இத்தகைய அருமையுடைய நீ, பந்து வந்து அணைகின்ற காந்தள் விரல்களையுடைய உமையம்மையுடன் நீவீரும் வந்து உன் அடியார்களாகிய எங்கள் பழமையான குடிசைகள் தோறும் எழுந்தருளியிருக்கிறாய்! பரம் பொருளே! எம்பெருமானே! கருணை வள்ளலே!

நெருப்பைப் போன்ற உன் சிவந்த திருமேனியைகாட்சியையும் தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த கோயிலையும் காட்டி, என் குரு மூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, என்னை ஆட்கொண்ட அமுதம் போன்றவனே! பள்ளி எழுந்தருள்க!

(குருந்த மரத்தடியில் குருவாய் ,  எம்பெருமான் தானே வந்து மாணிக்கவாசகரை திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட எளிமையை இங்கே பாடுகின்றார் இப்பாடலில்)

No comments: