Saturday, December 21, 2013

திருவெம்பாவை # 12


திருசிற்றம்பலம்


ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்! நற்தில்லை சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்! இவ்வானுங் குவலயுமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வலைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவந் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்!............(12)
பொருள்:
அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலத்தில் பொன்னின் செய் மண்டபத்துள்ளே தனது இடக் கரத்திலே அனலை ஏந்தி சிவானந்த வல்லியுடன் நாம் எல்லாரும் உய்ய ஆனந்த தாண்டவம் ஆடுகின்றான் எம்பெருமான், நமக்கு ஆனந்த நடராசனாக சிவகாமியம்மையுடன் அருட்காட்சி தருகின்றார்.

 நமது பிறவிப் பிணி தீருவதற்கு நாம் சென்று சாரும் பெருமான், நாம் துள்ளி ஆடுதற்குரிய (மொய்யார்) தடம் பொய்கை என்ற தீர்த்த வடிவமாகவும் அவர் விளங்குகின்றார்.

இந்நிலவுலகத்தையும், விண்ணுலகத்தையும், மற்றும் சகல பிரம்மாண்டத்தையும் எல்லோரையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் திருவிளையாடல் புரிகின்றான் ஐயன். (ஐந்தொழிலும் ஐயனின் விளையாட்டே).

அந்தப் பெருமானின் புகழைப் பாடிக் கொண்டு, கைகளில் உள்ள வளையல்கள் ஒலிக்கவும், இடையில் உள்ள மேகலை ஒலி துள்ளவும், மலர்கள் சூடிய கூந்தலில் மேல் வண்டுகள் ஒலிக்கவும், தாமரை பூத்த இப்பொய்கை நீரைக் குடைந்து நம்மை உரிமையுடைய தலைவனது பொன் போன்ற திருவடிகளை துதித்து பெரிய சுணை நீரிலும் நாம் மார்கழி நீராடுவோமாக! (இறைவனின் பொற் திருவடிகளை அடைவோமாக)

திருசிற்றம்பலம்

No comments: