Tuesday, December 24, 2013

திருவெம்பாவை #18

 

திருசிற்றம்பலம் 



அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கி தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாகி அலியாய் பிறங்கொளி சேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே! இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(18)


பொருள்: பெண்ணே! திருவண்ணாமலையில் எம்பெருமான் மாலும் அயனும் அரிய ஒண்ணா அருள் மலையாய், அருட்சோதிப்பிழம்பாய், எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அவர் திருவடியில் விழுந்து வணங்கும் தேவர்களின் மகுடங்களில் உள்ள பல்வேறு இரத்தினங்களின் ஒளியானது எம்பெருமானின் திருவடி பேரொளியின் முன் வீறற்று விடுகின்றன, அவை போல கதிரவன் எழுந்ததும் விண் மீன்கள் தங்கள் ஒளி இழந்து மறைந்து விட்டன, பொழுதும் விடிந்து விட்டது.

எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி மூன்றுமானவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்த பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக.

அண்ணாமலையார் மகிமை காண செல்லுங்கள் முதல் பதிகம்  http://thiruvempavai.blogspot.in/2007/12/1.html

No comments: