உ
திருசிற்றம்பலம்

மாலறியா நான்முகனும் அறியா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடை திறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்!
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்! ...........(5)
பொருள்: மாலும் அயனும் அறிய முடியா அருட்பெரும் மலை நமது திருவண்ணாமலையார், அந்த பரமேஸ்வரனை நாம் அறிந்து விட முடியும் என்பது போல் மற்றவர்கள் நம்பும்படியாக பொய்யை பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே! வந்து கதவைத் திற!
இறைவன் எம்பெருமான் விண்ணுலகினராலும், மண்ணுலகினராலும், மற்றும் உள்ள உலகினராலும் யாராலும் காணுதற்கு அருமையானவன். அந்த பெருமான் எளி வந்த கருணையினால் அவர் தம்முடைய திருக்கோலத்தையும் காட்டி, எளியவர்களான நம்மை ஆட்கொண்டு அருளி சீராட்டுகின்ற திறத்தையும் பாடுகின்றோம்! சிவனே! சிவனே! என்று உள்ளுருகி உரக்கப் பாடுகின்றோம்! அந்த ஒலி கேட்டும் நீ உணர்ந்தாயில்லை! உணர்ந்து விழித்தாயில்லை! மணம் பொருந்திய கூந்தலை உடையவளே! இதுவோ உனது தன்மை போலும்.
எம்பெருமான் அக்னி ஸ்தம்பமாக அண்ணாமலையாராக நின்ற போது அகந்தை கொண்ட மாலும் நான்முகனும் அவரது திருமுடியையும், திருவடியையும் காண முடியாமல் நின்றதையும் அதே சமயம் எளி வந்த கருணையினால் அவர் தனது பக்தர்களுக்கு அருளுபவர் என்பதை மாலறியா நான்முகனும் அறியா மலையினை நாம் போலறிவோம் என்பதன் மூலம் மாணிக்க வாசக சுவாமிகள் விளக்குகின்றார்.

No comments:
Post a Comment