உ
திருசிற்றம்பலம்
திருசிற்றம்பலம்

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்;
அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்;
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோ மேலோர் எம்பாவாய்! .....(9)
பொருள்: ( பெண்கள் எல்லோரும் சேர்ந்து பாடுகின்றனர். )
இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் எம்பெருமானே, நீவிர் முன்னரே தோன்றிய பழமையான எல்லா பொருட்களுக்கும் முற்பட்ட பழம் பொருள். அவ்வாறே பின்னே தோன்றிய புதுமைப் பொருட்களுக்கெல்லாம் புதுமையாக தோன்றும் தன்மையன்.
உன்னை இறைவனாக பெற்ற நாங்கள்; உன் சிறந்த அடியார்களாவோம். ஆதலால் உன்னுடைய அடியார்களது திருவடிகளை வணங்குவோம். அங்ஙனமே அவர்களுக்கே உரிமையுடையவர்களாவோம், அந்த சிவனடியார்களே எங்களது கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பி கூறும் முறையிலே அடிமைப் பணி செய்வோம்.
எங்கள் அரசே! இந்த வகையான வாழ்க்கையை எங்களுக்கு நீங்கள் அருளுவீர்களானால் எந்த குறையும் இல்லாதவர்களாவோம்! ஓம் நமசிவாய!
பாவை நோன்பின் ஒரு நோக்கமான பெண்கள் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் பாடல்.
திருசிற்றம்பலம்
No comments:
Post a Comment