Showing posts with label சரணாகதி பதிகம். Show all posts
Showing posts with label சரணாகதி பதிகம். Show all posts

Wednesday, December 25, 2013

திருவெம்பாவை # 19

 
திருசிற்றம்பலம் 



உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான்! உனக்கொன் றுரைப்போம்கேள்!
எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க;
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க;
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க;
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு? எமக்கேலோர் எம்பாவாய்!..........(19)



பொருள்: எங்கள் பெருமானே! "உன் கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம்" என்ற சொல் பழமையானது. அதை புதுப்பித்து கூற வேண்டிய அச்சம் எங்களுக்கு தோன்றியுள்ளது. ( இம்மண்ணில் பிறந்த யாவரும் இறுதியில் எம்பெருமானின் திருவடிக்கமலங்களில் தான் சென்று சேர்கின்றனர், அதுவல்லாமல் மீண்டும் பிறவி வேண்டாம் என்பதை இவ்வாறு கூறுகின்றனர்)

குழந்தைகளின் துன்பத்தை நீக்கி இன்பத்தை கொடுப்பவள் தாய் தான். நாங்கள் குழந்தைகள் நீயே தாய். எங்கள் விருப்பத்தை நீதான் நிறைவேற்ற வேண்டும். அந்த விண்ணப்பத்தை கேட்டு அருள்!

எங்கள் கொங்கைகள் உன் அன்பர் அல்லாதார்கள் தோளைத் தழுவாதொழிக. எங்கள் கைகள் உனக்கு அல்லாமல் வேறு எந்த பணிகளையும் செய்யாதொழிக. எங்கள் கண்கள் இரவும் பகலும் உன்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக.

எங்கள் தலைவனாகிய தாங்கள் அடிமைகளாகிய எங்களுக்கு இந்த வண்ணம் அருள் புரிந்தாயானால், கதிரவன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்கென்ன குறை?


( மனம், காயம், வாக்கு ஆகியவற்றால் செய்யும்   எல்லா செயல்களும் அந்த சிவபெருமானுக்கே அர்ப்பணம் என்னும் சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் பதிகம்)

(பாவை நோன்பின் நோக்கமான நல்ல கணவனை அடைய வேண்டும் என்பதைக் கூறும் பாடல் என்பாருமுண்டு. )


மாணிக்க வாசகப்பெருமானின் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விளக்கவுரையையும் பாடல்களையும் கேட்டு நலம் பெற  http://www.shaivam.org/gallery/audio/markazi_murali.htm  இங்கு செல்லவும்.