Showing posts with label ஆருத்ரா தரிசனம். Show all posts
Showing posts with label ஆருத்ரா தரிசனம். Show all posts

Thursday, April 7, 2016

ஆருத்ரா தரிசனம்(2016) - 3

திருமயிலை கபாலீஸ்வரம் 


ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியான எம்பெருமான் ஓருருவம் ஓர் நாமம் இல்லாதவர் ஆனால் நாமோ அவருக்கு ஆயிரம் நாமம் இட்டு அழைத்தும், பல்வேறு மூர்த்தங்களாக அமைத்தும் வழிபடுகின்றோம். மேலும் மானிட இயல்பினால் அந்த எல்லையில்லாத பரம்பொருளை இரவு பள்ளியறைக்கு எழுந்தருளப் பண்ணியும், காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பியும் மகிழ்ச்சி கொள்கின்றோம். அவ்வாறே அவருக்கு ஒரு நட்சத்திரத்தையும் உரியதாக்கினோம். ஆம் இறைவன் சிவன் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்றும் அழைத்தும் அந்த திருவாதிரையன்று, ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடவும் செய்கின்றோம், திருவோணத்தை திருமாலுக்கு உரியதாகவும் ஆக்கினோம். எம்பெருமான் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்தார் என்பது புராணம். ஆனால் இன்றும் தனுசு இராசியின் நட்சத்திர தொகுதியே மன்மதன். கீழ் வானத்தில் ஆருத்ரா நட்சத்திரம் எழுந்தால் மேற்கே தனுசு நட்சத்திரம் மறைவது இதைத்தான் உணர்த்துகின்றதோ?



பௌர்ணமியன்று அதிகாலை
ஆருத்ரா தரிசனம்



பின்னழகு

சிவானந்த வல்லி

திருவாதிரை அன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் எல்லா சிவத்தலங்களிலும் உண்டு, அது போலவே எம்பெருமான் உருவமாக எழுந்தருளியுள்ள எல்லா தலங்களிலும் அபிஷேகம் உண்டு ( சப்த விடங்க தலங்கள், அஷ்ட வீரட்டத்தலங்கள், தொண்டை மண்டல தியாகத் தலங்கள்). திருவாரூரில் இடது பாத தரிசனம், உத்திரகோச மங்கையில் மரகத நடராஜர் அபிஷேகம் மற்றும் நிஜ தரிசனம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

*************

திருமயிலை வெள்ளீஸ்வரம் 



பௌர்ணமியன்று அதிகாலை
ஆருத்ரா தரிசனம்



மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும் அவர்கள் செய்கின்ற ஆறு கால பூசையே அம்பலவாணருக்கு வருடத்தில் நடைபெறுகின்ற ஆறு திருமுழுக்குகள் ஆகும். தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான, மாதங்களில் சிறந்ததான மார்கழியின் மதி நிறைந்த நன்னாளம் பௌர்ணமியும் திருவாதிரையும் சேர்ந்து வரும் இந்த நாளில் வரும் திருவாதிரை தினம் தான் நடராசப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களூம் அலங்காரங்களும் திருவிழாக்களும் நடைபெறும் தினமாகும். அன்று தான் சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண விரும்பிய பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து நடராஜ பெருமானாக தனது ஆனந்த தாண்டவத்தை காட்டியருளினார் என்பது ஐதீகம். எனவே திருவாதிரையன்று அம்பல வாணாருக்கு எனவே இந்த திருவாதிரை நாள் அவர்களின் உஷத் கால பூஜையாகும்.



பின்னழகு




சிவகாமசுந்தரி


  

தரிசனம் தொடரும் .  .   .  .  .  .

Tuesday, April 5, 2016

ஆருத்ரா தரிசனம்(2016) - 2

இந்த வருட பௌர்ணமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் அடுத்தடுத்த நாளில் வந்ததால் இரண்டு நாட்கள் நடராஜப்பெருமானின் தரிசனம் கிட்டியது. 


பௌர்ணமி இரவில் அபிஷேகம் கண்டருள அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளும் நடராஜப்பெருமான்.






சிவானந்தவல்லியும் மாணிக்கவாசகரும்



நள்ளிரவு திருமஞ்சனம் கண்டருளி அதிகாலையில் ஆருத்ரா தரிசனம் தந்தருளுகின்றார் எம்பெருமான். அந்த தரிசனத்தை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.


தரிசனம் தொடரும் .  .   .  .  .  .

Thursday, December 19, 2013

அம்பல கூத்தனின் ஆனந்த ஆருத்ரா தரிசனம் -2

மானச கந்தர்வ மாணிக்க விமானம் 

திருமணக்  கோலத்தில் சிவகாமி அம்பாள் 


ஐயனுக்கு நான்கு கோண விமானம் ஆனால் அம்மைக்கோ எண்கோண விமானம். பதினாறு வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் கூரையைத் தாங்குகின்றன.  கோபுரத்தில் அம்மைக்கும் மூன்று கலசங்கள் ஒன்று நடுவிலும் மற்ற இரண்டும் தனியாக, கோபுரத்தில் கிளிகள் கொஞ்சுகின்றன. வளைவுகளிலே அழகிய சிற்பம் , நடுவில் பூவேலைப்பாடு. கோபுரத்தை யாழிகள் தாங்க  கந்தர்விகளும், கின்னரிகளும், கையில் கிளியுடன் முத்து மாலை ஏந்தி விமானத்திற்கு அழகு சேர்க்கின்றனர். பிரம்ம சக்தி, சிவ சக்தி, பராசக்தி, நாகம், வராஹி, மகேஸ்வரி, விஷ்ணு சக்தி, வீர சக்தி என்னும் தன் எட்டு ரூபங்கள் விமானத்தை சுற்றி அருட்காட்சி தரஇறக்கையை விரித்த கந்தர்விகள் முன்புறமும் பின்புறமும் வீணை இசை மீட்ட தாமரைப் பூக்களால் அமைந்த பீடத்தில் மணிகள் ஒலிக்க   எழிலாக பவனி வருகின்றாள் அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிசக்திகளின் ஆடை ஆபரணங்கள் அப்படியே அற்புதம்.

 விமானத்தின் பக்கவாட்டுத் தோற்றம் 



அம்பாளுக்கு முத்து மாலை ஏந்தி சேவை செய்யும் கந்தர்விகள் 

விமானத்தில் 



 விமானத்தின் பின்னழகு 

விமானத்தை சிம்மங்கள் மற்றும் நாகங்கள் தாங்குகின்றன. பீடத்தில் பூ வேலைப்பாடுகள் அற்புதம். ஐயனின் விமானம் ஒரு வித அழகு என்றால் அம்மனின் விமானத்தின் அழகு மற்றொரு விதம். ஒவ்வொரு வருடமும் அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரமும் ஒவ்வொரு வகை. ஒரு தடவை நின்ற கோலம் .மறு வருடம் அமர்ந்த கோலம், அதற்கடுத்த வருடம் யோகக் கோலம் என்று காணக் கண் கோடி வேண்டும். விமானத்தில் அன்பே சிவம் விஷ்ணு சக்தி மயம், இரையைத் தேடுவதோடு இறைவனையும் தேடு, தாய் தவக்கோலமே சேய்க்கடிமை ஞாலமே,  வாணி வேணி பூமியில்லையேல் வையமில்லை, ஆலயம் தொழுவது சாலவும் நன்று  என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. 


வள்ளி தேவ சேனா சமேத முருகர், தங்க மயில் வாகனத்தில் பவனி வருகிறார், குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடி கொண்டிருக்கிறானல்லவா? எனவே முருகரது தங்க மயில் ஒரு குன்றின் மேல் நிற்பது போல் அமைக்கப்பட்டுள்ளதுகுன்றில் அனைத்து பறவைகள் மற்றும் மிருகங்களைக் காணலாம்.     எம்பெருமானுக்குரிய கைலாய வாகனத்தில் இது போல்தான் மிருகங்களும் பறவைகளும் காட்டப்பட்டிருக்கும், ஆனால் இங்கு குன்றிலேயே அனைத்து ஜீவராசிகளும் காட்டப்பட்டுள்ளனமயிலின் காலின் கீழ உள்ளது ஐந்து தலை நாகம். அலகில் இருப்பது மூன்று தலை நாகம். பீடத்திலும், திருவாசியிலும் அழகிய பூ வேலைப்பாடுகள்முருகரும் நான்கு புறமும் கந்தர்விகள் யாழ் மீட்ட பவனி வருகின்றார்





சண்டிகேஸ்வரருக்கு தங்க  சிறிய ரிஷப வாகனம். ரிஷபத்தின் அலங்காரங்கள் அனைத்தும் அற்புதம். வருடாவருடம் வினாயக, முருக, சண்டிகேஸ்வரர் அலங்காரமும் அம்மனின் கோலத்தை ஒட்டி  செயப்படுகின்றது


பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு


Wednesday, December 18, 2013

அம்பல கூத்தனின் ஆனந்த ஆருத்ரா தரிசனம் -1

ககன கந்தர்வ கனக விமான சேவை 

சென்னை கோடம்பாக்கம்  இரயிலடி, அருள்மிகு சவுந்தர வினாயகர் திருக்கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியின் அருட்காட்சிகள்  இப்பதிவில் இடம் பெறுகின்றன.  பஞ்ச மூர்த்திகளும் பவனி வரும் அழகை காண்பவர்கள் அது போன்று எங்கும் கண்டதில்லை என்று ஆச்சிரியப்படும் அளவில் அருமையான  பொன் முலாம் விமானத்தில் வலம் வருகின்றனர். காணக்கண் கோடி வேண்டும் என்பார்களே அது போல  ஒவ்வொரு வருடமும் தவறாது சென்று தரிசிக்க அழைக்கும் அற்புத தரிசனம் அது

இத்திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் மிகவும் சிறப்பாக இவ்வாறு நடைபெறுகின்றது. இரவு 7 மணி அளவில்  மஹாபிஷேகம். இரவு 10:30 மணி அளவில் வெள்ளை சார்த்தி புறப்பாடு. ஆருத்ரா தரிசனத்தன்று அருணோதய காலத்தில்  சிவகாம சுந்தரி உடன் ஸ்ரீ நடராஜ பெருமான் திருக்கல்யாண வைபவம். காலை ஆறு மணிக்கு கோபுர வாசலில் ஆருத்ரா தரிசனம். காலை 9 மணிக்கு பத்ம ஜோதி கலியுகக் கண்ணாடி விமானத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு. பகல் 1 மணிக்கு திருஊடல் உற்சவம்  என்று சகல உற்சவங்களுடன் வெகு சிறப்பாக நடைபெருகின்றது. சிதம்பரம் போல் பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது இத்திருக்கோவிலின் சிறப்பு.



 பொன் முலாம் மூஷிக வாகனத்தில் விநாயகர் 


முன்னழகு

வினாயகப்பெருமானுக்கு தங்க மூஞ்சூறு வாகனம்மூஞ்சூறுவின் மேல் இடப்பட்டுள்ள போர்வையின் அமைப்பு மிகவும் சிறப்பு. இவருக்கும் பீடத்தில் மற்றும் திருவாசியில் பூ  வேலைப்பாடுகள்.

பின்னழகு


ஆனந்த தாண்டவ நடராஜர் 

விமானத்தின்  மேற்பாதி  

பத்மஜோதி கலியுகக் கண்ணாடி என்று அழைக்கப்படும் நடராஜப்பெருமான் தரிசனம் தந்தருளும் ககன கந்தர்வ கனக விமானத்தின் அழகை முதலில் காண்போம். திருத்தேர் போன்ற அமைப்பு, அருணன் சாரதியாக இருந்து இரதத்தை செலுத்த ஆகாயம், காற்று, அக்னி, நீர், நிலம் என்னும்  ஐம்பூதங்களே ஐந்து  குதிரைகளாக ஐந்தொழில் புரியும் ஐயனின்  தேரை இழுக்கின்றன. சூரியனும் சந்திரன் மற்றும் அக்னியை மூன்று கண்களாகக் கொண்ட ஐயனுக்கு சூரிய சந்திரர்களே இறக்கைகள், ஐயனுக்கு நான்கு கோண விமானம். பன்னிரண்டு தூண்கள், தூண்களில் அற்புதமான வேலைப்பாடு. நான்கு திசைகளிலும் துவார பாலகர்கள்நான்கு பக்கமும் விசிறி வீசுபவர்கள் ரம்பா, ஊர்வசிமேனகை , திலோத்தமை என்னும் தேவ கன்னியர்கள்மேல் புரத்தில் கவரி வீசுபவர்கள் மற்றும் மாலை தாங்கி நிற்பவர்கள் தேவதைகள்.

விமானத்தின்கூரையில் மூன்று கலசங்கள் முன் புறம் ஜ்வாலா சக்கரத்தில் ஷட்கோணம்,   நாற்புறமும் தாமரை பீடத்தில் அதிகார நந்தி காவல் காக்க ,  கந்தர்வர்கள் எக்காளம் இசைக்கின்றனர்.விமானத்தில் முற்பக்கத்தில்  ஆதி சங்கரரும், தாயுமானவரும், இடப்பக்கத்தில் அகத்தியர் மற்றும் வசிஷ்டர் பின்புறத்தில் வியாசர் மற்றும்  கௌசிகர் வலப் பக்கத்தில் திருவள்ளுவர் சேக்கிழார்  ஆகியோர் தவகோலத்தில் அருட்காட்சி தருகின்றனர்நான்கு புறங்களிலும் ஆனந்த தாண்டவ, ஊர்த்துவ தாண்டவ, கால் மாறி ஆடிய தாண்டவம் மற்றும் தில்லைக் காளி நடனக் காட்சிகள்.

தில்லைக் காளி , அருணன் ,  அம்பலத்தாடுவான்  


 அருணன் சாரதியாக ஐம்பூதங்களே குதிரைகளாக 
ககன கந்தர்வ விமானத்தில் எழிலாக  பவனிவரும் நடராஜர்


 பத்ம ஜோதி கலியுகக் கண்ணாடி என வழங்கப்படும் 
ககன கந்தர்வ கனக விமானம் 


ஐயனுக்கு பேரியாழ் தேவி, சகோட யாழ் தேவி, மகர யாழ் தேவி, மற்றும்  செங்கோட்டி யாழ் தேவி நால்வரும் இசை கூட்டுகின்றனர். ஆனந்த நடராஜப் பெருமான் பத்ம பீடத்தில் ஆனந்தத் தாண்டவ தரிசனம்  தந்தருளுகின்றார். ஐயனின் திருவாசியில் அன்னப் பறவைகள் அழகு கூட்டுகின்றன. விமானம் முழுவதும் அழகான மர சிற்பங்கள். முன் பக்கத்தில் தில்லைக்காளி, மஹா விஷ்ணு, பிரம்மா எம்பெருமானை வணங்கி நிற்க நாரதரும் தும்புருவும்  ஐயன் புகழ்  பாடுகின்றனர்.




விமானத்தைத் தாங்கி நிற்பது நான்கு பக்கமும் யாழிகள். முன் பக்கத்து. பின் பக்கத்தில் வல, பின், இடபக்கங்களில் மூன்று வரிசையில் சிற்பங்கள். மேல் வரிசையில் சிறிய காமதேனு, அம்மை ஐயன் கண்ணை மூடும் சிற்பம், மற்றும் கம்பா நதிக்கரையில் சிவ பூஜை செய்யும் காட்சி. நடு வரிசையில் நின்ற கோலத்தில் தவ சீலர்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், வள்ளலார் சுவாமிகள் மற்றும் குதிரை வாகனாரூட  குபேரன். கீழ் வரிசையில் பத்ம பீடத்தில் சித்த புருஷர்கள் குதம்பை சித்தர், சட்டை முனி, திருமூலர், காலங்கி, கொங்கணர். ஜடாமுடியும், தாடியும், அணிந்துள்ள ருத்ராக்ஷமாலைகளும் அத்தனையும் அப்படியே தத்ரூபம். சூரிய இறக்கை அப்படியே ஜடாயுவின் இறக்கை எனலாம்,  


வலப்பக்கம் சூரிய  இறக்கை 





பின்புற சித்தர்கள்,  நால்வர்  காரைக்காலம்மையர்

மார்க்கண்டேயர், தத்தாத்ரேயர், மஹிஷாசுர மர்த்தினி

அடுத்து பின் பக்கம் விமானத்தில் வியாசர், வால்மீகீ. முதல் வரிசையில் மார்க்கண்டனுக்காக காலனை சம்ஹாரம் செய்யும் சிற்பம் எருமையின் மேல் எமனும், ரிஷப வாகனத்தில் அமர்ந்த கோலத்தில்   தத்தாத்ரேயர் நான்கு வேதங்களுமே நான்கு நாய்களாக சித்தரித்துள்ளனர், சிம்ம வாகனத்தில்  அஷ்ட புஜங்களுடன் மஹிஷாசுரமர்த்தனி சிற்பங்கள் அம்மையின் ஒரு கரத்தில் மஹிஷ தலை ஒரு புதுமை. ஐயனின் திருவாசியின் அழகே அழகு  அற்புதமான வேலைப்பாடுகள் அன்னப்பறவைகள் மெருகூட்டுகின்றன. இரண்டாவது வரிசையில்  சமயக்குரவர் நால்வர் மற்றும் ஐயனின் தாளடி நீழலில் அமர்ந்து பாடிப் பரவிக்கொண்டிருக்கும் காரைக்கால் அம்மையார்  . கீழ் வரிசையில் சித்தர்கள் மச்சமுனி, கோரக்கர், கருவூரர், பாம்பாட்டி சித்தர்,   புலிப்பாணி சித்தர் மற்றும் போகர்.


விமானத்தின் பின்னழகு 




 திருவாசியில் அன்னங்கள் அழகூட்டுகின்றன




இனி இடப்புறம் மேல் வரிசையில் காமதேனு, கண்ணப்பர் கண்ணை அப்பும் சிற்பம், மாணிக்கவாசகருக்கு குருந்த மரத்தடியில்  குருவாக சிவபெருமான் உபதேசம் செய்யும் சிற்பம். நடு வரிசையில் மூன்று கால்களூடன் பிருங்கி முனிவர் , ஏனாதி நாயனார், நித்யானந்தர், கரும்பு தாங்கிய பட்டினத்தார், வள்ளலார். கீழ் வரிசையில் மற்ற ஆறு சித்தர்கள் அகத்திய முனி. கமல முனி, நந்தி தேவர், தன்வந்திரி முதலியோர் தாடி  மற்றும் ஆடைகள் அப்படியே தத்ரூபம்.. இப்பக்கம் சந்திர இறக்கை. விமானத்தை அஷ்டதிக கஜங்களும், மஹா நாகமும் தாங்குகின்றது. இந்த விமானங்கள் 1939ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றுவரை மெருகு குலையாமல் பராமரித்து வருகின்றனர். 


இடப்பக்கம் சந்திர இறக்கை



இவ்வாறு ஆதிசேஷன், அஷ்ட திக் கஜங்கள், அஷ்ட பாலகர்கள் விமானத்தை தாங்க, யாழ் தேவிகள், நாரதர், தும்புரு இசை கூட்ட, தேவதைகள் சாமரம்,  விசிறி வீச மாலை கொண்டு  காத்திருக்க , கோபுரத்தில் அதிகார நந்திகள் சேவைக்காக காத்திருக்க , நான்கு பக்கமும் துவார பாலகர்கள் காவல் காக்கயோகிகள், முனிவர்கள் ஓங்காரம் ஓத , சித்தர்கள் சிவாய நம சிந்தித்திருக்க, நால்வரும் தேவார திருவாசகம் பாட , காரைகாலம்மையார்  ஐயன் அடிக்கீழ் இருந்து தாளம் போடமணிகள் கல கல என்று ஒலிக்க ஆனந்த தாண்டவமாடி எம்பெருமான் வரும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த விமானத்தை உருவாக்கியது அந்த மயனாகத்தான் இருக்க வேண்டும்.

தங்க நிறத்தில் காலை இளம் வெயிலில் மின்ன வரும் விமானத்தில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன், சகல அகிலத்திற்கும் ராஜாவாக ,நடராஜாவாக  பவனி வரும் அழகைதரிசனம் செய்வோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயமில்லை. ஆதி அந்தம் இல்லாத அந்த அருட்பெருஞ்சோதிதான் அகில பிரம்மாண்டத்தையும் ஆக்கியும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் ஐந்தொழில் புரிகின்றார் என்பதை         தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றது இந்த ககன கந்தர்வ கனக விமானம் 70 வருடங்களுக்கும் மேலாக வெகு சிறப்பாக இந்த ஆருத்ரா தரிசன காட்சி அற்புதமாக நடந்து வருகின்றது.

அம்பாளின் மானச கந்தர்வ விமானத்தின் அழகை அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே.