Showing posts with label திருப்பெருந்துறை மன்னா. Show all posts
Showing posts with label திருப்பெருந்துறை மன்னா. Show all posts

Saturday, December 28, 2013

திருப்பெருந்துறை மன்னா பள்ளியெழுந்தருள்


திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 5




"பூதங்கள் தோறுநின் றாய்" எனின் அல்லால்
"போக்கிலன் வரவிலன்" எனநினைப் புலவோர்
கீதங்கள்பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரி யாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்; பள்ளி எழுந்தருளாயே! ............(5)







பொருள்: குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அரசே! எண்ணத்திற்க்கும் எட்டாதவனே!

உன்னை ஞானியர்கள் நிலம், நீர், நெருப்பு,காற்று, வானம் என்னும் ஐந்து பூதங்களில் கலந்து நிற்கின்றாய் என்கின்றனர். உனக்கு தோற்றமுமில்லை, அழிவும் இல்லை என்று புலவர்கள் உன்னை புகழ்ந்து ஆடிப்பாடுகின்றனர். ஆனால் உன்னைக் நேராகக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் காதாலும் கேட்டு அறிந்திலோம்.

சிவபெருமானே! எங்கள் கண் முன்னே வந்து உனது திருக்காட்சியை வழங்கி எங்கள் குற்றங்களையெல்லாம் நீக்கி, எங்களை அடிமையாக ஏற்று அருள் செய்கின்ற எம்பெருமானே! பள்ளி எழுந்து அருள்வாயாக!