இத்தொடரின் மற்ற பதிவுகள்
நவதுவாரகைகள் எவை என்று கூகுளில் அடியேன் தேடிய போது மூலதுவாரகை
கொடினாரின் அருகில் உள்ள அம்புஜா சிமெண்ட் தொழிற்சாலையின் அருகில் உள்ளது என்று படித்தேன். முன்னரே கூறியது போல குஜராத்தில் மூன்று தலங்கள் மூலதுவாரகை என்று போற்றப்படுகின்றன. துவாரகையில் இருந்து சோமநாத்
வரும் வழியில் விசாவாடாவில் அடியோங்கள் ஒரு முக்தி துவாரகையை தரிசித்தோம்.
குழுவினர் திரு.படேல் அவர்களுடன்
திரு.M.R படேல் அவர்களின் இளைய மகன் மற்றும் மருமகள், இந்த கொடினார் மூல துவாரகைக்கு அருகில் உள்ள அம்புஜா சிமென்ட்
ஆலையில்தான் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுடைய தொலைப்பேசி எண்ணை அளித்திருந்தார்
எனவே அவரை அழைத்து பேசினோம். அவர் எங்களை ஆலைக்கு அருகில் வந்தவுடன்
அழையுங்கள் நானே உங்களை
மூல துவாரகைக்கு அழைத்துச் செல்கின்றேன் என்று கூறினார்.
தற்போது அடியோங்கள் பயணம் செய்த பாதை மாநில நெடுஞ்சாலைதான், எனவே அதிக போக்குவரத்து இருக்கவில்லை. வழியில் பல
பறவைக் கூட்டங்களை கண்ணுற்றோம். இப்பகுதியில் அதிகம் மயில்களை
கண்டோம். பிராச்சியில் இருந்து கொடினார் சுமார்
25 கி.மீ தூரத்தில் உள்ளது. எனவே ஒரு மணி நேரத்தில் கொடினாரின்
அம்புஜா சிமென்ட் ஆலையை அடைந்தோம்.
திரு.படேல் அவர்களின் புதல்வர் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். ஆலைக்கு எதிரே கடற்கரையில் சுமார் எட்டு கி.மீ தூரத்தில்
இவ்வாலயம் அமைந்துள்ளது. இவர்களின் கப்பல் தளம் இவ்வாலயம் அருகில் அமைந்துள்ளதால் இவர்களின் தனிப் பாதை வழியாக
இவர் அடியோங்களை அழைத்துச் சென்றார். பொதுவாக 8 சக்கரங்கள் கொண்ட பெரிய
சரக்கு லாரிகள் சிமென்ட் ஏற்றிக் கொண்டு சென்று
கொண்டும் வந்து கொண்டும் இருக்குமாம். எனவே பொது மக்களுக்கு இப்பாதையில் செல்ல அனுமதி
இல்லை சுற்றுப்பாதையில் செல்லவேண்டும் தூரம் சற்று அதிகம் என்றார். இவர் முன்னரே இவ்வாறு செல்லப்போகிறோம்
என்று கூறியிருந்ததால் பாதையில் போக்குவரத்தை சிறிது நேரம் குறைத்திருந்தனர்.
ஆகவே அடியோங்கள் விரைவாக மூலதுவாரகையை அடைந்தோம்.
ஸ்ரீ கிருஷ்ணர் நீராடிய குளம் மாலைப்பொழுதில்
மூலத்துவாரகையில் தற்போது கர்ப்பகிரகம் மட்டுமே, அதுவும் பாழடைந்த நிலையில்
எஞ்சியுள்ளது. விமானம் முற்றிலுமாக சிதைந்து விட்டது. சுற்றுப்பாதையும்
சரியாக இல்லை. சபா மண்டபம் இருந்ததற்கான சின்னங்கள் உள்ளன. ஒரு பூசாரி இருக்கின்றார்.
அவர் தரிசனம் செய்து வைத்தார். கர்ப்பகிரகத்தின் உள்ளேயே செல்ல அனுமதி அளித்தார். உள்ளே
சென்று சிறிது நேரம்
அமர்ந்து தியானம் செய்தோம். மனதில் அப்படியொரு அமைதி.
சதுர்புஜங்களில் கதை, சக்கரம், சங்கு, அட்ச மாலை தாங்கி எழிலாக கரு நீல வண்ணன், காயா மலர் வண்ணன், கார் முகில் போல் வண்ணன், கருங்கடல் முந்நீர் வண்ணன், கடல் வண்ணன், நீல முகில் வண்ணன், நீரார் முகில் வண்ணன் என்று
பலவாறெல்லாம் ஆழ்வார்கள் அனுபவித்து பாடியபடி நீல வண்ணத்தில்
நின்ற கோலத்தில் சேவை
சாதிக்கும்
பல்லவம் திகழ் பூங்கடம்பேறி
அக்காளியன் பணவரங்கில்
ஒல்லை வந்திறப்பாய்ந்து அருநடஞ்செய்த
உம்பர் கோனை அருமையாக சேவித்தோம். மலர் மாலைகள் எதுவும்
சூடியிருக்கவில்லை ஆனால் பட்டு பீதாம்பரத்தில் சேவை கிட்டியது. அடியோங்கள் எடுத்துச் சென்றிருந்த உலர் பழங்களை படைத்தோம். பூசாரி அவர்கள் எம்பெருமான் எந்தவித மாற்றமும் செய்ய
வேண்டாம் என்று பணித்த்தால் அப்படியே பராமரித்துக்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.
மதுராவில் இருந்து துவாரகை நோக்கி வந்த
போது ஸ்ரீகிருஷ்ணர் இங்கு தங்கினாராம்.
அதற்கு பிறகு கடல் வழியாக துவாரகைக்கு சென்றார் எனவே இத்தலம் மூலதுவாரகை ஆனது என்றார்.
ஸ்ரீகிருஷ்ணர் இங்கு தங்கிய போது குளித்த
இடம் அர்த்த சந்திர வடிவில் கிருஷ்ண குண்ட் என்று அழைக்கப்படுகின்றது என்று காண்பித்தார். ஆலயத்திற்கு பின் பக்கம் கடல் அவ்வாறே இருந்தது
அருகில் உள்ள கடற்பகுதியில் அலைகள் ஆர்பரிக்க இக்குளப் பகுதியில் மட்டும் அலைகள் குறைவாக
இருந்தது அந்தி சூரியன் மறையும் வேளை என்பதால் சூரியக் கதிர்கள் பொன் போல மின்ன அக்குளப்பகுதி
பொன் குளம் போல காட்சி தந்தது. அன்று ஸ்ரீகிருஷ்ணன்
நீராடிய போது இவ்வாறுதான் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து
பார்த்துக்கொண்டோம். அருகில் ஒரு பாழடைந்த
வட்ட வடிவ கட்டிடம் உள்ளது. ஒரு காலத்தில் கலங்கரை விளக்கமாக
இருந்திருக்கலாம். கடலுக்கடியில் அகழ்வாராய்ச்சிகள்
பழைய கல் நங்கூரம் கிட்டியுள்ளது. அங்குள்ள
பூசாரிக்கு அம்புஜா நிறுவனத்தினரே சம்பளம்
வழங்குகின்றனர். அவர் வசிப்பதற்கு ஒரு இல்லமும் கட்டிக்கொடுத்துள்ளனர்.
திரும்பி வரும் போது திரு. படேல் அவர்கள் பொதுவாக யாரும் இத்துவாரகைக்கு
வருவதில்லை, அதுவும் தமிழர்களாகிய அடியோங்கள் இங்கு வந்தது ஆச்சரியமளிக்கின்றது என்றார். இவர் தென்காசியில் பள்ளிப்
பாடம் பயின்றவர் என்பதால் தமிழிலேயே உரையாடினார். மற்ற பக்தர்கள் சுற்று வழியாக வந்து
செல்கின்றனர். அருகில் உள்ள மீனவ கிராமத்தில் சில ஆலயங்கள் புதுப்பொலிவுடன்
விளங்கின. செல்லும் வழியில் பல் வேறு விதமான பறவைக் கூட்டங்களைக் கண்ணுற்றோம். காலை வேளையில் கிராமத்தில் மீன் சந்தை
சமயத்தில் இன்னும் அதிக அளவில் பறவைகளைக் காணலாம் என்றார்.
இவர்கள் ஆலையில் உற்பத்தி ஆகின்ற சிமென்ட் அப்படியே லாரிகளில்
கொண்டு வரப்பட்டு கப்பல்களில் இங்கு நிரப்பப்படுகின்றன.
பின்னர் அக்கப்பல்கள் பெரிய துறைமுகங்களான கொச்சி, ஸ்ரீலங்கா, சூரத், கொல்கத்தா ஆகிய
இடங்களுக்கு செல்கின்றன. அங்கு
பின்னர் பைகளில் அடைக்கப்பட்டு பல் வேறு ஊர்களுக்கு சிமென்ட் மூட்டைகளாக அனுப்பப்படுகின்றது
என்று கூறினார்.
மூலதுவாரகையில் குன்றால் மாரி தடுத்து
உகந்த காளையை, கானார் கரி கொம்பது ஒசித்த களிற்றை, கோலால் நிரை மேய்த்த எங்கோவலர் கோவை திவ்யமாக தரிசித்த பின் அம்புஜா சிமென்ட் ஆலைக்கு
திரும்பி வந்தோம் அடியோங்களை தன் இல்லம்
அழைத்துச் சென்று குஜராத்தின் பாஃடா என்னும்
காரவகை மற்றும் தேநீரும் கொடுத்து உபசரித்தார். ஆலையின்
குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இராதா கிருஷ்ணர் ஆலயத்திற்கு
அழைத்துச்சென்றார். அருமையான அமைதியான சுழலில் ஆலயம் அமைந்திருந்த்து. குழலூதும் கண்ணன் இராதையுடன் மந்தகாச
புன்னகையுடன் அருமையாக சேவை அளித்தான். அம்பாள் சன்னதியும் உள்ளது. ஆலயத்தை சுற்றிலும்
மரங்கள், ஆரத்து சேவித்தோம், பிரசாதம் சுவீகரித்துக் கொண்டு அவருக்கு
அருமையாக தரிசனம் செய்து வைத்ததற்கு நன்றி கூறி புறப்பட்டோம்.
இவ்வாறு குஜராத் மாநிலத்தில் உள்ள எட்டு
துவாரைகள், இரு ஜோதிர் லிங்கங்களை அவனருளால் மூன்று நாட்களில் சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அடுத்து இராஜஸ்தான்
மாநிலத்தில் உள்ள நாத்வாரா துவாரகை செல்ல
அகமதாபாத் புறப்பட்டோம். வழியில் அன்றைய இரவு நமது பாரதத் திருநாட்டின் ஒரு தனித்தன்மை வாய்ந்த இடத்தில் தங்கினோம். அவ்விடம் என்னவென்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? தொடர்ந்து
வாருங்கள் அன்பர்களே.
நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . .
2 comments:
இந்த மூல துவாரகைக்கு பெரும்பாலும் யாரும் செல்வதில்லை... உண்மை. கோவிலின் தற்போதைய நிலை வருத்தம் தருகிறது.
இக்கோவிலை அடைவதே சிறிது சிரமம்தான். அதுவமல்லாமல் ஆலையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் யாரும் சுலபமாக செல்ல முடிவதில்லை என்றும் எண்ணுகிறேன்.
Post a Comment