Friday, October 14, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 18

குலசேகரபுரம்- திருவஞ்சிக்களம்

 ( குலசேகராழ்வார் அவதாரத்தலம் )


பன்னிரு ஆழ்வார்களிலே பெருமாள் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் குலசேகராழ்வார். பெருமாள் என்று வைணவ சமயத்தில் குறிக்கப்படும் இராமபிரானின்பால் உணர்ச்சி உந்திய அன்புப்பேராறு  பூண்டமையின் இவரை "குலசேகரப்பெருமாள்" என்று சிறப்பாக வழங்கலாயினர். இவர் இயற்றிய பாசுரங்கள் "பெருமாள் திருமொழி" என்றே அழைக்கப்படுகின்றன. பெருமாளின் கௌஸ்துபத்தின் அம்சமாக அவதரித்தவர். தனது மகளான சேரகுலவல்லியை அரங்கனுக்கு மணம் முடித்து கொடுத்ததனால்  பெரியாழ்வார் போல இவரும் பெருமாளுக்கு மாமனார் முறை ஆகிறார். 

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா! நின் கோவில் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!

என்று ஏங்கியதால் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கர்ப்பகிரகத்தின் வாசற்படி குலசேகராழ்வார் படி என்றே  இன்றும் அழைக்கப்படுகின்றது

இராமனிடத்தில் மிகுந்த பக்தி கொண்ட குலசேகராழ்வார் தன்னை கோசலையாக பாவித்து தாலாட்டு பாடியவர். திருவரங்கத்தில் தொண்டர்களின் பாததூளி தன் சென்னியில் மேல் விளங்கட்டும் என்று வேண்டியவர்  சேர அரசராக இருந்தும் இராம பக்தியில் அதிகம் திளைத்து இராமாயண காவியம் கேட்டுக்கொண்டு அரச காரியங்களில் அதிக நாட்டம் கொள்ளாமல் இருந்த அரசரை மாற்ற, மந்திரிகள்  திருவைணவர்கள் பெருமாளின் நகைகளை திருடி விட்டனர்  என்று  கூற, “திருமாலடியார்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்“ என்று நிரூபிக்க விஷப்பாம்பு உள்ள குடத்தில் கை விட்டு நிரூபித்தவர்.

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே!
தென்னிலங்கைக்கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்
கன்னிநன்மாமதிள்சூழ் கணபுரத்தென்கருமணியே!
என்னுடையவின்னமுதே! இராகவனே! தாலேலோ! 

என்று சக்கரவர்த்தித் திருமகனுக்கு தாலாட்டுப் பாடியவர். ஸ்ரீராமாயண சுருக்கத்தை ஒரு பாசுரத்தில் பாடியவர்.மலை நாட்டு திவ்ய தேசமான திருவித்துவக்கோட்டை மங்களாசாசனம் செய்தவர். வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் மேல் தீராக்காதல் கொண்ட நோயாளன் போல் நீ எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் உனதடியை விடமாட்டேன், ”உன் சரணல்லால் வேறு சரணில்லை” என்று வாழ்ந்தவர். திருவண்பரிசாரத்தில் திருப்பணிகள் செய்து அங்கு பரமபதித்தவர். 


இராஜகோபுரம்

இவரின் அவதார தலமான திருவஞ்சிக்களத்தில் இவருக்கு ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. கல்யாண ஸ்ரீநிவாசரும், மஹாலக்ஷ்மித்தாயாரும் இத்தலத்தில் அருள் பாலிக்கின்றனர். கேரளாவில் வித்தியாசமாக நமது திராவிடபாணி முன் இராஜ கோபுரம்  மற்றும் விமானத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. சுதர்சனர், நரசிம்மர், ஆழ்வார் ஆச்சாரியார்கள்  சன்னதிகளும் உள்ளன. குலசேகராழ்வாரின் சன்னதியில் அவர் ஆராதனை செய்த சீதா, இராம பெருமான் விக்கிரகத்தை திவ்யமாக  சேவித்தோம். திருவல்லிக்கேணியின் ஒரு பட்டர்தான் இங்கு ஆராதனை செய்து கொண்டிருந்தார். அர்ச்சனை செய்து, பாசுரங்கள், வாழி திருநாமங்கள் கூறி, திவ்யமாக கற்பூர ஆரத்தி காண்பித்து, தீர்த்தம், சடாரி, துளசி கற்கண்டு பிரசாதம் அளித்து அருமையாக சேவை செய்து வைத்தார். அருமையாக கீதோபதேச காட்சியை சுதை சிற்பமாக அமைத்துள்ளனர்


ஆழ்வார் விமானம் 

மாசி புனர்பூசத்தில் இவர் திருவவதாரம் செய்ததால்,  மாதம் தோறும்  புனர்பூசத்தன்று குலசேகராழ்வாருக்கு சிறப்பு ஆராதனை செய்யப்படுகின்றது. வேளுக்குடி .வே கிருஷ்ணன் சுவாமிகள் இவ்வாலயம் கட்ட பெருமுயற்சிகள் எடுத்துக் கொண்டார் என்று திருமலை சுவாமிகள் கூறினார்.


கீதோபதேசக் காட்சி

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரையின் முதல் நாள் இரவு திருமூழிக்களம் லக்ஷ்மணப்பெருமாள் மற்றும்   திருக்காட்கரையப்பனை சேவித்த பின் சோட்டாணிக்கரை வந்தடைந்தோம். அடியோங்கள் இரவு சோட்டாணிக்கரை ஆலயம் சென்ற போது  மேல் பகவதிக் காவு திருக்கதவம் அடைக்கப்பட்டிருந்தது. கீழ்பகவதிக்காவில் குருதி பூஜை நடந்து கொண்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் தூரத்தில் இருந்தே தரிசித்து விட்டு கோவிலுக்கு அருகிலேயே உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறைகள் எடுத்து தங்கினோம். அதிகாலை 4 மணிக்கே நடை திறந்து விடும் பகவதியை தரிசித்து விட்டு வந்து விடுங்கள் 5 மணிக்கு கிளம்பினால்தான்  மறு நாள்  காலை தரிசிக்க வேண்டிய திவ்வியதேசங்களை எல்லாம் தரிசிக்க இயலும் என்று சுவாமிகள் கூறினார். எனவே அடியோங்கள் உறங்கச் சென்றோம். அடுத்தபதிவில் சோட்டாணிக்கரை பகவதியை சேவிக்கலாம். 
 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்          

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

No comments: