Wednesday, November 24, 2021

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 2

 

கொங்கேழ் தலங்களின் சிறப்புகள் 

கரூர்- காமதேனு வழிபட்டது

திருமுருகன் பூண்டி - முருகப் பெருமான் வழிபட்டது



முதலில் கொங்குமண்டலத்தை பற்றிய ஒரு சிறு முன்னுரை. சுற்றிலும் மலைகளால் சூழ்ந்த பகுதி. காவிரி மற்றும் அதன் துணையாறுகள் பாய்ந்து வளமாக்கும் பகுதி. பொலிவு மிகுந்த கொங்குநாடு செழித்தால் இப்புவியெங்கும் சுகம் அடையும் என்ற பழமொழிக்கேற்ப மாடு, கன்றுகள் விருத்தி கொண்ட பகுதி. முருக வேள் ஆலயங்கள், சிவாலயங்கள், அம்மன் ஆலயங்கள், திருமால் ஆலயங்கள் நிறைந்த பகுதி. பல்வேறு கலைஞர்கள், நாவலர்கள் நிறைந்த 24 நாடுகள் கொண்ட பகுதி என்று கொங்குநாடு சதகம் என்ற பாடல் இம்மண்டலத்தின் சிறப்பை எடுத்தியம்புகிறது.

சிவனடியே சிந்திக்கும் மூவர் பெருமக்களும், மாணிக்கவாசகர் மற்றும் மற்றும் பல அன்பர்களும் பாடிய திருமுறைத்தலங்கள் மொத்தம் – 274. பொதுவாக இவை தேவாரத்தலங்கள் என்றும் பாடல் பெற்ற தலங்கள் என்றும் போற்றப்படுகின்றன.  அவற்றுள்  காவரி வடக்கரைத்தலங்கள் - 127, தென்கரைத்தலங்கள் - 63, தொண்டைநாட்டுத்தலங்கள் - 32,  நடு நாட்டுத்தலங்கள் - 22, பாண்டிநாட்டுத்தலங்கள் - 14, கொங்குநாட்டுத்தலங்கள் 7, வடநாட்டுத்தலங்கள் 5, ஈழ நாட்டுத்தலங்கள் 2,  துளு நாடு மற்றும் மலைநாட்டுத்தலங்கள் 1.

 

அவற்றுள் கொங்கு நாட்டில் அமைந்துள்ள தலங்களையும் மற்றும் அவை செல்லும் வழியில் உள்ள சிறப்பு மிக்க கோவில்களையும் தரிசிக்க சென்ற யாத்திரை இது. முதலில் கொங்கேழ் தலங்கள் யாவை என்று  காணலாமா அன்பர்களே?.

ஆதி கருவூர் அதிவெஞ்ச மாக்கூடல்
நீதிமிகு கறைசை நீள்நணா – மேதினியில்
நாதன் அவிநாசி நன்முருகன் பூண்டித்திருச்
சோதிச்செங்கோடெனவே சொல்
– என்ற பழம் பாடல் கொங்கேழ் தலங்களை பட்டியலிடுகிறது.

கொங்கு நாட்டிற்குரிய ஏழு தலங்களில், மேல்கரையரைய  நாட்டில் உள்ள கொடுமுடியும் ஒன்று. மற்றவை கருவூரா நிலை (கரூர்), வெஞ்சமாங்கூடல், திருநணா (பவானி), அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) என்பனவாம்.

இத்தலங்கள் அனைத்தும் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் என்பது முதல் சிறப்பு. மும்மூர்த்திகளும் அருள் பாலிக்கும் தலம் பாண்டிக்கொடுமுடி. இத்தலத்தை தேவார மூவரும் பாடியுள்ளனர், அதில் சுந்தரரின் ஒரு பதிகம் நமச்சிவாயப் பதிகம் ஆகும். பவானி, திருச்செங்கோடு, மற்றும் கருவூர் மூன்றும் ஆளுடையப் பிள்ளையாரின் பாடல் பெற்ற பெற்றவை. மற்ற மூன்று தலங்களான அவிநாசி, திருமுருகன்பூண்டி, மற்றும் வெஞ்சமாக்கூடல் சுந்தரரால் பாடப்பெற்றவை. இம்மூன்று தலங்களிலும் சிவபெருமான் தன் தோழரான சுந்தரரிடம் திருவிளையாடல் புரிந்து பதிகம் பெற்றார். 

முதலை உண்ட பாலனை பதிகம் பாடி இறைவனருளால் உயிர்ப்பித்த அற்புதம் நடந்த தலம் அவிநாசி. 

இறைவனே பூதகணங்களை அனுப்பி சுந்தரரின் பொருட்களை கவர்ந்து திருவிளையாடல் புரிந்து சுந்தரரின் பாடல் பெற்று பொருளை அவருக்கு திருப்பியளித்த தலம் திருமுருகன் பூண்டி. 

எம்பெருமான் தன் பிள்ளைகளை ஈடாக வைத்து பொன் பெற்று, அதை  சுந்தரருக்கு வழங்கிய தலம் வெஞ்சமாக்கூடல். இத்தலம் அமராவதி மற்றும் சிற்றாறு  கூடும் கூடலில் அமைந்துள்ளது. 

பவானித்தலம் மூன்று ஆறுகள் கூடும் முக்கூடலில் அமைந்துள்ளது. 

கொடுமுடி, பவானி, திருச்செங்கோடு ஆகிய மூன்று தலங்கள் சைவ வைணவ ஒற்றுமையை விளக்கும் தலங்கள். பெருமாளுக்கு இத்தலங்களில் தனி சன்னதி அமைந்துள்ளது இவை மூன்று என்ற எண்ணுக்கும் இத்தலங்களுக்கும் உள்ள தொடர்புகள் சில.


                              

அவிநாசி - முதலை உண்ட பாலனை உயிருடன் வரச் செய்த அற்புதம்

கொடுமுடி - பிரம்மன் வழிபட்டது

அனைத்து தலங்களும் திருப்புகழ் பாடல் பெற்றவை. கொடுமுடி மற்றும் திருச்செங்கோடு தலங்கள் இரண்டும் வாயு தேவனுக்கும் மேரு மலைக்கும் நடைபெற்ற போட்டியுடன் தொடர்புடையத் தலங்கள்.

அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமான் அருள் பாலிக்கும் திருச்செங்கோடு மலை மேல் அமைந்த ஒரு தலம். திருச்செங்கோட்டில் ஆளுடையப்பிள்ளையார் பதிகம் பாடி இறையருளால் அன்பர்களின் விஷ ஜுரம் போக்கினார். இப்பதிகம் இன்றைய கொரோனா காலத்தில் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம் ஆகும்.

மற்ற ஆறு தலங்களும் காவிரி மற்றும் அதன் உப நதிகளின் கரையில் அமைந்துள்ளன.  

அவிநாசி மற்றும் திருச்செங்கோடு தலங்கள் உயரமான தேரைக் கொண்டவை எனவே இத்தலங்களின் தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தேவார பாடலாசிரியர் கருவூரர் மற்றும் நாயன்மார்களுள் ஒருவரான  புகழ் சோழ நாயனார் மற்றும் எறிபத்த நாயனார்  கருவூர் ஆலயத்தில் வழிபட்டவர்கள்.

இத்தலங்கள் அனைத்திலும் அம்பாளின் திருமூர்த்தம் கல் திருவாசியுடன் அமைந்திருப்பது ஒரு பொது தனி சிறப்பு.திருச்செங்கோட்டில் அம்மையும் அப்பனும் அர்த்தநாரீஸ்வரராக ஏக உருவிலும் மற்ற தலங்களில் அம்மையும் அப்பனும் தனி சன்னதிகளில் ஒரே திசை நோக்கி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கொடுமுடியில் அம்பாள் சுவாமிக்கு வலப்புறத்தில் சன்னதி கொண்டுள்ளதால் அது கல்யாணக்கோலம் என்றழைக்கப்படுகிறது. கொடுமுடி மற்றும் அவிநாசியில் அம்பாளுக்கு எதிரே இராஜ கோபுரம் அமைந்துள்ள

வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட ஆலயம், பக்தர்களின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட தலம் வெஞ்சமாக்கூடல். இவ்வாலயத்தின் கருவறை கதவில் கொங்கேழ் தலங்களின் இறைவர்களையும் ஒன்றாக தரிசிக்கலாம்.


அவிநாசி விளக்குத்தூண்(மண்டபத்துடன்)

கொங்கு நாட்டுத் தலங்களின் மற்றொரு தனி சிறப்பு, கொடி மரம் மட்டுமல்ல சிறப்பாக தனி கல் விளக்குத் தூண் (தீப ஸ்தம்பம்) அமைந்திருப்பது. பல ஆலயங்களில் தீப ஸ்தம்பம் தனித் தூணாக இல்லாமல் பல் வேறு கற்சிற்பங்களுடன் கூடிய  நான்கு   கால்  மண்டபத்தில் சிறப்பாக விளங்குகின்றன. இத்தூண்களின் கீழ்ப்பகுதியில் உள்ள செவ்வகப்பகுதியில் அத்தலத்தின் வரலாறு சம்பந்தமான கற்சிற்பங்கள் நான்கு திசைகளிலும் இடம் பெற்றுள்ளன. எடுத்துக் காட்டாக அவிநாசி தலத்தில் முதலை உண்ட பாலனை உயிருடன் மீட்ட வரலாறு சிற்பத்தை விளக்குத் தூ்ணில் காணலாம். கார்த்திகை தீபத்தன்று இத்தூணின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகின்றது.

ஒவ்வொரு ஆலயத்திலும் இறைவனின் கருணையினால் பல் வேறு திருவிளையாடல் நிகழ்ந்துள்ளன அவற்றையும் அத்திருக்கோவில்களின் வரலாற்றில் விரிவாகக் காணலாம்.

தற்போதைய கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய நான்கு மாவட்ட எல்லைகளுக்குள் இவ்வேழு தலங்களும் உள்ளன. ஒரே நாளில் இவ்வேழு தலங்களுக்கும் பயணித்துத் தரிசனம் செய்ய இயலும். சோமவாரங்களில் அதுவும் கார்த்திகை சோமவாரத்தில் தற்போது பக்தர்கள் இவ்வாறு தரிசிக்கின்றனர். 


Sunday, November 21, 2021

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 1

 

கருவூர் அலங்காரவல்லி சௌந்தர்யவல்லி உடனுறை ஆநிலையப்பர்

நீண்ட நாள் இடைவெளிக்குப்பிறகு  மீண்டும் பதிவிட வந்திருக்கின்றேன் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள். இனி தினமும் சிறிது சமயம் ஒதுக்க முடியும் என்பதால் மறுபடியும் தொடர்கின்றேன். எவ்வளவோ எழுத உள்ளது. இறைவன் அருளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதுகின்றேன். முன் போலவே அன்பர்கள் வந்து படித்து ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கொங்கு நாட்டு பாடல் பெற்ற தலங்களின் பக்தியுலா  சென்று வந்த அனுபவங்களை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே இப்பதிவுகள்.  அவனருளால் தானே அவன் தாள் வணங்கமுடியும், அடியோங்கள் சில முறை முயற்சி செய்தும் இந்த யாத்திரை சித்திக்கவில்லை ஏதாவது ஒரு காரணத்தினால் தள்ளிச் சென்றது. எனவே தனுஷ்கோடி அவர்கள் இவ்வருடம் பிப்ரவரி மாதம் இந்த யாத்திரை செல்லலாம் என்று முதலில் கூறிய போது கொரோனா காலம் அல்லவா? எதற்காக வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டும், வேண்டாம் என்றே கூறினார், அதற்கு அவர் எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் சில முறை முயற்சித்து விட்டோம் வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை எடுத்துக்கொள்வோம் என்றார். அரை மனதுடன் ஒத்துக்கொண்டேன். அதற்கு முந்திய வாரம் சிவராத்திரிக்காக குல தெய்வ ஆலயம் செல்ல வேண்டிய கடமையும் இருந்ததால் அதற்கு சென்று விட்டு வந்து பின்னர் முடிவு செய்யலாம் என்றேன் ஒத்துக்கொண்டார்.

 

ஈங்கோய்மலை 

ஒரு வாரம் கழித்து கரோனாவிற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாததால்  திரு.தனுஷ்கோடியுடன் பணி புரியும் திரு.இந்துகுமார் அவர்களின் வாகனத்தில் மொத்தம் ஏழு அன்பர்கள் ஒரு  வெள்ளிக்கிழமை காலை சென்னையிலிருந்து  கிளம்பினோம். 

முதல் நாள் காவிரிக்கரை தலங்களான கடம்பந்துறை, ஈங்கோய்மலை, ஐயர் மலை தரிசித்து பின்  கொங்குநாட்டின் சிந்தலவாடி, தான்தோன்றிமலை,  கரூர், கொடுமுடி ஆகிய தலங்களை தரிசிக்க திருவருள் கிட்டியது. அன்றைய தினம் திட்டமிட்டபடி வெஞ்சமாக்கூடல் மற்றும் சிவன்மலை செல்ல இயலவில்லை. அன்றிரவு திருப்பூரில் தங்கினோம்.

 

மறு நாள் திருமுருகன்பூண்டி, அவிநாசி, பண்ணாரி மாரியம்மன், சத்யமங்கலம் வேணுகோபால சுவாமி, பவானி, சென்னி மலை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. முதலில் ஈரோட்டில் தங்கலாம் என்றிருந்தோம் திட்டத்தை மாறி திருச்செங்கோடு சென்று அங்கு தங்கினோம்.

 

திருச்செங்கோடு மாதொருபாகன்

மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மாதொரு பாகரையும் செங்கோட்டு வேலவரையும் தரிசனம் செய்தபின் நாமக்கல் வந்து ஆஞ்சநேயரையும், நரசிம்மரையும் சேவித்து பிறகு சேலம் வந்து தாரமங்கலம் கைலாசநாதர் மற்றும் அயோத்தியாபட்டிணம் பட்டாபிஷேக ராமரையும் தரிசித்து பகலிலேயே பயணம் செய்து இரவில் சென்னை வந்து நலமாக சேர்ந்தோம்.

 

யாத்திரை செய்த அன்பர்கள்

தரிசிக்க நினைத்த தலங்களில் வெஞ்சமாக்கூடல் மற்றும் சிவன்மலை மட்டுமே தரிசிக்க முடியாமல் போனது. மேலும் பவானியில் மட்டுமே சுவாமியை தரிசிக்க காத்திருக்க வேண்டி வந்தது  மற்ற அனைத்து தலங்களிலும் சென்றவுடன் தரிசனம் கிட்டியதும் அவனருளே. தேர்தல் சமயமாக இருந்தபோதும் எங்கும் எந்த சிக்கலில்லாமல் திரும்ப வந்து சேர்ந்தோம். யாருக்கும் எந்த துன்பமும் பின்னர் வரவில்லை என்பதும் அந்த இறைவனின் கருணையே. வாருங்கள் அன்பர்களே ஒவ்வொரு ஆலயமாக தரிசிக்கலாம்.


தரிசனம் தொடரும் . . . . . 

Monday, January 4, 2021

அத்யயனோற்சவம் - 22 ( நம்மாழ்வார் மோட்சம் - இயற்பா சாற்றுமுறை )

                      இராப்பத்து -  பதினொன்றாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    13    14    15    16    17    18   19   20   21    







வைகுண்டம்  செல்லும் நம்மாழ்வார்


வைகுந்தத்தின் வாசலில் ஆழ்வார்


நம்பெருமாளின் திருவடியில் நம்மாழ்வார்

                                                             நம்மாழ்வார் மோட்சம்


திருவாய்மொழித் திருநாள் என்றழைக்கப்படும் இராப்பத்தின் பதினொன்றாம் நாள் அதிகாலை திருவரங்கத்தில் நம்மாழ்வார் மோட்சம் மீண்டும் நடத்திக்காட்டப்பட்டது. 

இன்றிரவு மூலஸ்தானத்தில் இயற்பா சாற்றுமுறை தொடக்கம். இரவு முழுவதும் தொடர்கிறது. பின்னர் அதிகாலை தீர்த்தப்பிரசாதம் வழங்கப்படுகிறது. இவ்வாறு பெருந்திருவிழா என்றும் வைகுண்ட ஏகாதசி திருவிழா என்றழைக்கபடும் அத்யயன உற்சவம் வெகு சிறப்பாக நிறைவடைகின்றது.

தமிழ் வேதத்தை தனி முதல்வன் முன் சேவிக்கும் அத்யயனோற்சவத்தின் நிறை நாள் முதலாழ்வார்களின் இயற்பா எம்பெருமான் திருமுன் சேவிக்கப்படுகின்றது. முதலாழ்வார்களின் வைபவத்தை இன்று பார்ப்போம். ஒரு நாள் முதலாவார்களாகிய பூதத்தாழ்வார், பேயாழ்வார் மற்றும் பொய்கையாழ்வார் மூவரும் தனித் தனியே சென்று திருக்கோவலூரில் உள்ள ஓங்கி உலகளந்த உத்தமனை சேவித்தனர். இருள் சூழ்ந்த நேரத்தில் வானம் இருட்டிக் கொண்டு மழை பொழிய, முதலில் பொய்கையார் ம்ருகண்டு மகரிஷியின் ஆசிரமத்தின் இடைக்கழியிலே வந்து சேர்ந்தார், பொய்கையார் மட்டுமே கைகால்களை நீட்டிப் படுக்கக் கூடிய மிகக் குறுகலான இடம் அந்த இடைக்கழி. பொய்கையார், கைகால்களை நீட்டிப் படுத்துக் கொண்டார்.

அப்பொழுது, பூதத்தார் மழையில் நனைந்து கொண்டே அந்த வீட்டில் ஒதுங்கினார். உடனே, பொய்கையார் எழுந்து உட்கார்ந்தபடியே 'ஒருவர் படுக்க- இருவர் இருக்கலாம்' என்று பூதத்தாருக்கு இடம் அளித்தார். அப்பொழுது, பேயாழ்வாரும் மழையில் நனைந்து கொண்டே அதே வீட்டில் ஒதுங்கினார். உடனே பொய்கையார் எழுந்து நின்றபடியே ' ஒருவர் படுக்க-இருவர் இருக்க-மூவர் நிற்கலாம் என்று எழுந்து நின்று பேயாழ்வார் நிற்க இடம் தந்தார். பூதத்தாரும் எழுந்து நின்றார். ஒரே இருள் ! கடுமையான மழை! மூவரும் ஒருவரோடு ஒருவர் அறிமுகம் ஆனார்கள். அன்பைக்காட்டினார்கள். நட்பை விதைத்துக் கொண்டார்கள்.

எம்பெருமானின் புகழை, அவரவர்களின் பக்தி சுகங்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது முவருக்குள்ளும் நான்காவது ஒருவர் நுழைந்து கொண்டு மூவரையும் நெருக்கிக் கொண்டிருப்பது மிக நன்றாக உடல் உரசலாலும் புரிந்தது. உயிர் உணர்ச்சிகளின் தழுவலாலும் புரிந்தது. அந்த மூவுலகையும் மூன்றே அடிகளில் அளந்த மாயவன் இவ்வளவு உலகங்களையும் விட்டு விட்டு , தன் திருக்கோவிலையும் விட்டு விட்டு அந்த பயங்கரமான இருட்டில், கொட்டும் மழையில் தன் அடியார்களின் சங்கமத்தில் தானும் இருக்க வேண்டி, ஆழ்வார்களின் ஸ்பரிசமே தனக்கு மிகவும் பிரியமானது என்று அவர்களிடையே வந்து தோன்றினான். அந்த கும்மிருட்டிலும் நான்காவதாக வந்த எம்பெருமானை பக்தி கண்களால் கண்ட மூவரும் மெய் சிலிர்த்து ஜ“வன் நெகிழ நின்றார்கள். அடியார்களுடன் கூடி நெருக்குப்பட்டதால் எம்பெருமான் "புலவ்ர் நெருக்குகந்த பெருமான் " என்று கொண்டாடப்படுகின்றான். இடைக்கழியிலே சேவை சாதித்ததால் " தேஹளீசன்" என்றும் வழங்கப்படுகின்றான்.

எம்பெருமானின் ஸ்பரிசம் பட்டவுடன் பொய்கையாழ்வார், " இவ்வுலகமே அகல் விளக்கு! ஆழ்கடலெல்லாம் அதில் நெய்! கதிரவனே விளக்கின் திரி! உலக மக்களின் துன்பக்கடல் ஒழியட்டும்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே!



என்று ஆழி வல்லானுக்கு சொல்லால் மாலை சூட்டி எம்பெருமானை அடையும் ஒரு மார்க்கமாகிய தத்துவ விளக்கேற்றினார் . உடனே சிறு ஒளி மட்டும் பிறந்தது. பின் எம்பெருமான் மீது அந்தாதியாக நூறு பாசுரங்கள் பாடியருளினார் பொய்கையார்.

பூதத்தாழ்வார் பக்தியில் மேலும் ஒரு படி சென்று பக்தர்களின் அன்பே அகல் விளக்கு, விருப்பமாகிய ஆசையே நெய், உலகமெல்லாம் இன்பத்தில் திளைக்கட்டும் என்ற சமரச நினைப்பே திரி என்று ஞானத்தமிழால்

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புரு சிந்தை இடுதிரியா - நன் புகழ் சேர்

ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்.

என்று ஞானச்சுடர் விளக்கேற்றினார் பூதத்தார் . உடனே ஒளி பெருகியது. இவரும் நூறு பாசுரங்கள் அந்தாதியாக பாடியருளினார். அங்கே அவர்கள் கண்ட திவ்ய தரிசனத்தை பேயாழ்வார் இவ்வாறு பாடுகின்றார்.

திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணி நிறமும் கண்டேந் செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கண்டேண்

என்னாழி வண்ணன்பால் இன்று.




என்று தாம் கண்ட எம்பெருமானின் திவ்ய தரிசனத்தை எல்லோரும் அறிந்து இன்புற பாசுரமாக பாடியருளினார் பேயாழ்வார். இவரும் 100 பாசுரங்களை அழகுற அந்தாதியாக பாடியருளினார்.

மூன்று ஆழ்வார்களும் நமக்கு அறிவுறுத்தும் உண்மையாவது தத்துவத்தாலும், ஞானத்தாலும் நாம் எம்பெருமாளை சரணாகதி அடைந்தால் நாம் அந்த ஆழி வல்லானை பெரிய தாயாருடனும், சுடராழியுடனும், திரி சங்கத்துடனும் திவ்ய தரிசனம் பெறலாம் என்பதுதான்.

Sunday, January 3, 2021

அத்யயனோற்சவம் - 21 (தீர்த்தவாரி - நம்மாழ்வார் மோட்சம்)

                             இராப்பத்து -  பத்தாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    13    14    15    16    17    18   19   20   2    







சின்ன பெருமாள்(தீர்த்த பேரர்)


இராப்பத்தின் பத்தாம் நாளான இன்று  திருவரங்கத்தில் இன்று காலை   நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்கபல்லக்கில் புறப்பட்டு பரமபதவாசல் வழியாக, சந்திரபுஷ்கரணி குளத்தை வந்தடைந்தார்.  அங்கு  நம்பெருமாள்  தீர்த்தவாரி கண்டருளினார்.  பின்னர் திருமாமணி மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இரவு திருவாய்மொழியின்  பத்தாம் பத்தும், திருவாய்மொழியின் சாற்றுமுறையும் நடைபெறுகின்றது. நம்பெருமாள் இன்று ஒரு நாள் மட்டும் அதிகாலை நம்மாழ்வார் மோட்ச வைபவத்திற்காக திருமாமணி மண்டபத்தில் தங்குகிறார்.  

மற்ற ஆலயங்கள் அனைத்திலும் இன்றே நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதன் விவரத்தை இங்கே காணலாம். 

இராப்பத்தின் நிறை நாள் பத்தாம் நாள் நம்மாழ்வார் மோட்சம். பத்து நாட்களாக சொர்க்க வாசலில் நின்று இறைவன் தாளடி அடைய வேண்டும் என்று கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்று ஒன்றுமோராயிரம் உள்ளுவார்ர்க்கு உம்பரூரே என்று இன் தமிழ் ஆயிரம் பாடிய நம்மாழ்வாருக்கு அந்த வைகுந்தப் பேற்றை எம்பெருமான் வழங்குகின்றார்.

இராப்பத்தின் ஒவ்வொருநாளும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் நம்மாழ்வார் சரணாகதியின் மூலம் எம்பெருமான் திருவடி அடைகின்றார். பின் உலகில் உள்ளோர் எல்லோரும் தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அவ்வாறே பெருமாள் அனுகிரகிக்க ஆழ்வாரை திருப்பி தருவதாக ஐதீகம்.

இன்றைய தினம் மையார்கருங்கண்ணி கமலமலர்மேல் செய்யாள் திருமார்வினில்சேர் திருமாலே வெய்யார்சுடராழி சுரிசங்கமேந்தும் கையர் திருமுன் நிறை பத்தான பத்தாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இப்பத்தால் எம்பெருமானின் களைகண் களைதல்      (ஆர்த்திஹரத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

இராப்பத்தில் தினமும் நடைபெறுவது போல பெருமாள் புறப்பாடு கண்டருளி, சொர்க்க வாசல் சேவை தந்தருளி இராஜ நடை, சிம்ம நடை, நாக நடை, காவடி சிந்து கண்டருளி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுகின்றார். ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கு அருளப்பாடு ஆகி, சாற்று முறை துவங்குகின்றது.

அடைந்தார்க்குத் தானே துணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமாளைச் சரணமடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச் செய்த

தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும்நான்குடைச் சுரிகுழல்கமலக்கண்கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே 
என்னும் பாசுரத்துடன் சாற்று முறை துவங்குகின்றது.

பணி நெஞ்சே! நாளும் பயமபரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கொடுத்தருளும்
மணிநின்றசோதி மதுசூதனன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழியானே

கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே
 என்று எம்பெருமானிடம் பக்தியுடையவர்கள் செய்ய வேண்டிய செயல்களை கூறிய பாசுரங்கள் சேவித்து எட்டாம் திருவாய் மொழி வரை சேவித்து நிறுத்துகின்றனர்,

நம்மாழ்வாரை ஆட்கொள்ள எம்பருமான் திருவுள்ளம் கொண்டபடியால் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் திறக்கின்றன, அதை உணர்த்தும் வகையில் இதுவரை ஆஸ்தானத்தில் எழுந்தருளி இருந்த ஆழ்வாரை எம்பெருமானின் திருமுன்னே ஏழப்பண்ணுகின்றனர் பட்டர்கள் குழந்தையைப் போல கைத்தல சேவையினால்.


நனிசிறந்த அறிவுபெற்ற ஆழ்வார் திருநாட்டுக்குச் சென்ற போது

                                           சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின 

ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின

பூரணபொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்

கீதங்கள் பாடினர் கின்னரர்கெருடர்கள்

கணங்கள்வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்


வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்
வைகுந்தன்தமர்எமர் எமதிடம்புகுதென்று
வைகுந்த்தமரரும் முனிவரும்வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே

விதிவகைபுகுந்தனரென்று நல்வேதியர்
பதியினில்பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும்நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும்
மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே.

இந்த பாசுரங்கள் எல்லாம் வெகு மெதுவாக சேவிக்கப்படுகின்றது. பத்தாம் திருவாய்மொழி துவங்குகின்றது.

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
த்னியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே

என்று மூவருள் முதல்வராகிய மூர்த்தியாகிய கருமாணிக்கத்தின் பொற் பாத்ங்களை பற்றிக் கொண்டு ஒன்றும் மாயம் செய்யாதே மணிவண்ணா என்று சேவிக்கின்றார். இத்திருவாய்மொழியின் எட்டு பாசுரங்கள் சேவித்த பின் நம்மாழ்வார் திருவடி தொழல் மற்றும் நம்மாழ்வார் மோட்சம் துவங்குகின்றது. பட்டர்கள் ஆழ்வாரை பெருமாளை கையில் தாங்கிச் சென்று பெருமாளை சுற்றி வந்து ஆழ்வாரை பெருமாளின் திருப்பாத கமலங்களிலே சேர்ப்பித்து சிறிது சிறிதாக திருத்துழாயினால் ஆழ்வார் முழுதும் மறையும் வண்ணம் சூடுகிறனர். சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்படுகின்றார்.


நம்மாழ்வார் மோட்சம் ( திருத்துழாயால் மூடப்பட்டிருக்கிறார் ஆழ்வார்)





சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில்பெரும்பாழேயோ?
சூழ்ந்ததனில்பெரிய பரநன்மலர்சோதீயோ!
சூழ்ந்ததனில்பெரிய சுடர்ஞானவின்பமேயோ!
சூழ்ந்ததனில்பெரிய என்னவாவறச்சூழ்ந்தாயே

அவாவறச்சூழ் அரியை அயனையரனையலற்றி
அவாவற்றுவீடுபெற்ற குருகூர்ச்சடகோபன்சொன்ன
அவாவிலந்தாதிகள் இவையாயிரமும் முடிந்த
அவாவிலந்தாதியிப்பத்தறிந்தார் பிறந்தார்உயர்ந்தே
 என்னும் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஆசைகளை விட்டு எம்பெருமானிடம் சரணாகதி செய்து நம்மாழ்வார் திருநாட்டிற்கு ஏகி விட்டார்.

ஆனால் இப்பூவுலகில் மானிடர்களை நல் வழிப்படுத்த ஆழ்வாரை திருப்பித்தர பட்டர் பெருமான் விண்ணப்பம் செய்கின்றார். பட்டரின் விண்ணப்பத்தை ஏற்று பெருமாளும் நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம் ! தந்தோம்! தந்தோம்! என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார். பின் திருத்துழாய் நீக்கப்பட்டு நம்மாழ்வார் மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகின்றார். பின் பெருமாளுக்கும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் தீபாராதணை, பின் தீர்த்த பிரசாத விநியோகம், திருத்துழாய் பிரசாதம் வினியோகிக்கப் படுகின்றது. எல்லா வைணவத்தலங்களிலும் இன்று ஆழ்வார் திருவடி தொழல் உற்சவம் நடைபெறுகின்றது.

Saturday, January 2, 2021

அத்யயனோற்சவம் - 20

                                   இராப்பத்து -  ஒன்பதாம் நாள்


இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    13    14    15    16    17    18   19   21   22    






நம்பெருமாள் முத்துசாய் கொண்டையில் எழுந்தருளி நாழி கேட்டான் வாயில் வழியாக மணல் வெளி வந்து, ஆயிரம் கால் மண்டபம் திருமாமணி மண்டபத்தில் சேவை சாதிக்கின்றார்.


ஸ்ரீநிவாசர் பாண்டுரங்கன் திருக்கோலம்




திருவாய்மொழித் திருநாளின் ஒன்பதாம் சரணமாகும் தனதாளடைந்தார்க் கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரானடி மேல் சடகோபன் சொன்ன பண்ணார் தமிழ் ஆயிரத்துள் " ஒன்பதாம் பத்தின் நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. இந்த பத்தில் எம்பெருமானது உதவி (ஆபத்ஸ்கத்வம்) கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

உடலின் முடிவில்தான் வீடு எனவே உடலுறவினர்களை விட்டு உய்விக்கும் திருமால் அடி சேர வலியுறுத்துகின்றார் நம்மாழ்வார் இப்பத்தில்.

அறிந்தனரெல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்களறுக்கும் மருந்தே
இன்றிப் போக இருவிணையும் கெடுத்து
ஒன்றியாக்கை புகாமை உய்யக் கொள்வான்

 என்று எம்பெருமானுக்கு அடிமை செய்ய வைகுந்தம் தந்தருள்வான் என்று அறிவுறுத்துகின்றார் ஆழ்வார்.

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே!
வெய்யார் சுடராழி சுரி சங்கமேந்தும்
கையா! உன்னைக் காணக் கருதும் என் கண்ணே

என்று திருமாலின் அடி சேர மாலும் பராங்குசர் எம்பெருமான் தம்முள் கலந்த பின்
எவை கொல் அணுகப் பெருநாள்? என்று எப்போதும்
சுவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கழல்வன்
அந்தோ! அணுகல் பெறு நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கி
என்று
 வைகுந்தத்தின் வாசலில் நிற்கின்றார்.


அத்யயனோற்சவம் - 19 (வேடு பறி௮ உற்சவம்)

       இராப்பத்து -  எட்டாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    13    14    15    16    17    18   20   21   22    



                                                   





                            
ஆழ்வாராக மாறிய திருமங்கை மன்னன் 


தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்! துணைமலர்க்கண்களாயிரத்தாய்!
தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய் தமியேன் பெரியவப்பனே என்று நம்மாழ்வார் பாடிப் பரவிய அரங்க நகர் அப்பன் நம்பெருமாள் இன்று வேடு பறி உற்சவம் கண்டருளுகிறார். திருமங்கை மன்னனை திருத்தி திருமங்கையாழ்வாராக மாற்றுகிறார்.

நம் பெருமாள் இன்றைய தினம்  தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிகிறார்.

திருமங்கையாழ்வார் வைபவம்: திருமாலின் வில்லான சார்ங்கத்தின் அம்சமாக சோழ வள நாட்டில் திருமங்கையென்னும் பகுதியில் திருவாலி திருப்பதியினருகே திருக்குறையலூரில் கள்ளக்குடியில் பூர்ணிமை வியாழக்கிழமை, கிருத்திகை இவைகள் பொருந்திய நாளில் கார்த்திகை திங்களில் சோழ அரசனின் சேனை தலைவர் இல்லத்தில் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் நீலன். குடிப்பிறப்பிற்கேற்ப்ப போர்த்தேர்ச்சி பெற்று அரசனுக்காக பல போர்களில் வென்று திருமங்கை நாட்டின் மன்னனாக பகைவர்காலை வெல்லுவதில் வல்லவரானதால் பரகாலன் என்ற திருநாமத்துடன் முடி சூடப்பட்டார். சிற்றரசன் என்ற முறையில் சோழவரசனுக்கு கப்பம் செலுத்தி வந்தார்.

பூலோக மாயையில் உழன்று கொண்டிருக்கும் தன் அன்பனை திருத்திப் பணிகொள்ள விரும்பிய பெருமாள் தேவலோகத்திலிருந்து பூவுலகில் கண்ணார் கடல் போல் திருமேனிக்கரிய அண்ணனாய் எம்பெருமான் சேவை சாதிக்கும் திருவெள்ளைக்குளத்தில் நீராடவந்தப் பெண்னை மானிட உருக்கொண்டு இங்கேயே தங்க வைத்தார். குமுத மலர் பறித்து நின்ற அப்பெண்னை அவ்வழி வந்த ஒரு வைணவ மருத்துவன் கண்டு குமுதவல்லி என்னும் பெயரிட்டு வளர்த்து வந்தான். ஒற்றர்கள் மூலம் குமுதவல்லியின் அழகைப்பற்றி அறிந்த மங்கை மன்னன் வைத்தியனிடம் சென்று குமுதவல்லியை தனக்கு மணம் முடித்துத் தருமாறு வேண்டினார். குமுதவல்லியோ திருமணத்திற்க்கு நிபந்தனை விதித்தாள். சங்கு சக்கர இலச்சினை பெ'றித்தல், திரும்ண்காப்பு தரித்தல், தாஸ்ய நாமம் பெறுதல், திருவாராதனை செய்தல், திருமந்திரம் பெறுதல், என்னும் ஐவகை சிறப்புடைய வைணவருக்கேயன்றி வேறொருவருக்கு துணையாகேன் என்று மறுத்து விட்டாள். பரகாலனும் திருநறையூர் சென்று அவ்வூரில் கோவில் கொண்டுள்ள நம்பியிடமிருந்து திருவாழி திருச்சங்கிலச்சினை பெற்றும், திருகண்ணபுரத்தம்மானிடம் திருமந்திரரோபதேசம் பெற்றும் பன்னிரு திருமண்காப்புகளணிந்து குமுதவல்லியிடம் மீண்டும் சென்று மணம் புரிய வேண்டினார்.

அப்போது ஆயிரத்தெட்டு திருவைட்டணவர்களுக்கு நாடோறும் ஓராண்டு காலம் அமுது செய்வித்து அவர்கள் போனகம் செய்த சேடத்தையும், அவர்கள் திருவடிகளை விளக்கிய நீரையுமுட்கொண்டால் தான் மங்கை மன்னனை மணம் புரிய இசைவதாக குமுதவல்லி பணித்தாள். மங்கையாசையினால் ஆலி நாடனும் அதற்கிசைந்து வாக்களிக்க திருமணம் நிறைவேறியது. மங்கை மடத்தில் “ததியாராதனையை “ தொடங்கினார் மங்கை மன்னர். இதற்காக மிகவும் பொருள் வேண்டியிருந்தமையால் அரசனுக்கு சரியாக கப்பம் கட்டமுடியாமல் போயிற்று, மேலும் பொருள் வேண்டியிருந்ததால் தன் தோழர்களான நீர் மேல் நடப்பான், நிழலிலொதுங்குவான், தாளூதுவான், தோலாவழக்கன் என்ற நால்வரின் துணியோடு வழிப்பறி செய்து அடியார்களுக்கு ததியாராதனம் செய்ய முற்பட்டார். இவரை ஆட்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டதால் எம்பெருமான் பிரசன்ன வதனத்துடன், கமல நயனங்களுடன், பவழம் போன்ற சிவந்த செவ்வாயில் குமிண் சிரிப்புடன், வலம்புரி சங்கு போல் மிளிரும் கண்டத்துடன், நிர்மலமான பீதாம்பரங்களுடன், திவ்ய மங்கள ஆபரணங்களை பூண்டு பெரிய பிராட்டியாருடன் தன் தாமரைப் பாதங்களில் வீரக்கழல்களுடன் புது மணக் கோலத்தில் நடந்து வந்தார். அப்போது திருமணங்கொல்லை என்னும் இடத்தில் நாட்டியம் ஆட வல்லதான தனது " ஆடல்மா " என்னும் பஞ்சகல்யாணிக் குதிரையிலே வந்த மங்கை மன்னன் அவரை வாள் கொண்டு வெருட்டி நகைகளையெல்லாம் கழற்ற சொன்னார்.

ஏய் மணமகனே உன்னுடைய நகைகளையெல்லாம் கழற்றிக் கொடு

ஊஹூம் , மாட்டேன்

வாள் கொண்டு வெட்டுவேன், உடனடியாக கழற்று ( எம்பெருமான் தனது திவ்யாபரணங்களை கழற்ற்க் கொடுக்க அதை ஒரு துணியில் போட்டு)

உன் மனைவியின் நகைகளையும் வாங்கிக் கொடு

அதையும் வாங்கி மூட்டையாகக் கட்டிவைத்து பார்த்தால் காலிலே மெட்டி அவ்வாறே உள்ளது

வாள் வீசி, ஏய்! அந்த மெட்டியையும் கழற்று

என்னால் முடியவில்லை நீயே கழற்றிக் கொள்

மங்கை மன்னன் கையால் கழற்ற முயன்றும் முடியாமல் பல்லால் கடித்து கழற்ற

நீ கலியன்,

என்ன சொன்னாய்?

கலியன் என்றேன்.

பின் பரகாலன் நகை மூட்டையை தூக்க முயல அதை அவரால் தூக்க முடியவில்லை

மிகவும் வெகுண்டு வாள் வீசி ஏய் என்ன மந்திரம் போட்டாய்? என்று வெருட்ட

எம்பெருமானும் மந்தகாச புன் சிரிப்புடன் மந்திரம் தரத்தானே நான் வந்தேன் என்று

"ஓம் நமோ நாராயணா"

என்ற திருமந்திரத்தை, உண்மைப் பொருளை அவருக்கு உபதேசித்து அவரின் பூலோகக் கடைமையை உணர்த்தி மன்னனை திருத்தி ஆழ்வாராக்கினார். மந்திரத்தின் சக்தியாலும் எம்பெருமானின் பாதங்களில் அவர் முகம் பட்டதாலும், எம்பெருமானின் தரிசனம் பெற்றதாலும் மெய்ப்பொருளுணர்ந்த பரகாலர்

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடிக் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும் நாமம்


என்று தொடங்கி பாசுரங்கள் பாடத்தொடங்கி வடமொழி வேதங்கள் நான்குக்கொப்பான நம்மாழ்வாரின் அருளிச்செயல்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம், திடுநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்விய நூல்களை அருளி திருமங்கையாழ்வார் என்ற திருநாமம் பெற்றார். இத்திருவிளையாடலே வேடுபறி உற்சவம் என்று கொண்டாடப்படுகின்றது திருவரங்கத்தில் இன்று.




ஆண்டாளுக்கு ஸ்ரீகிருஷ்ணர் தலை வாரி விடும் கோலம் 




திருவாய்மொழித் திருநாளின் எட்டாம் இரவு, ஆவியே! அமுதே! அலை அலை கடல் கடைந்த அப்பனே! பெருநிலமெடுத்த பேராளா! மாயக் கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா என்று சடகோபன் நாமங்களாயிரமுடைய நம்பெருமானடி மேல் சொன்ன ஆயிரத்துள் " எட்டாம் பத்தின் நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. இந்த பத்தில் எம்பெருமானது மெய்யான விருப்பம் (சத்யகாமத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

 தம்மிடம் வந்து தாம் எண்ணியபடி எம்பெருமான் கலக்க அந்த பெருமான் தன்னுருவத்தின் நேர்த்தியைக் காட்ட ஆழ்வார் அதனை பேசும் பாசுரம் இன்று சேவிக்கப்படுகிறது.

கண்கள்சிவந்துபெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண்பலிலகுசுடரிலகுவிலகு மகரகுண்டலத்தன்
கொண்டல்வண்ணன்சுடர்முடியன் நான்குதோளன் குனிசார்ங்கன்
ஒண்சங்கதைவாளாழியான் ஒருவனடியேனுள்ளானே.


.

Friday, January 1, 2021

அத்யயனோற்சவம் - 18 (கைத்தல சேவை)

                                             இராப்பத்து -  ஏழாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    13    14    15    16    17    19   20   21   22    


நம்பெருமாள் கைத்தலசேவை





நம்மாழ்வார் நாச்சியார் கோலம்



நம்மாழ்வார் பின்னழகு



ஸ்ரீநிவாசர்  கோகுலம் செல்லும் கோலம்




திருவாய்மொழித் திருநாளின் ஏழாம் இரவு அலை கடலைக் கடைந்தவாரவமுதை, அமுதே! அப்பனே! என்னையாள்வானே! கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே! ஏற்றரும் வைகுந்தத்தை அருள்வானே! புக்கரியுருவாய் அவுணலுடலம் கீண்டுகந்த சக்கரச் செல்வனே! அல்லிதுழாயலங்கல் மார்ப! என்னச்சுதனே! என்று மாலும் வண் குருகூர் சடகோபன் நாமங்களாயிரமுடைய நம்பெருமானடி மேல் சொன்ன ஆயிரத்துள் " ஏழாம் பத்தின் நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. இந்த பத்தில் எம்பெருமானது திறன் (சக்தத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.


பகவானுக்கும்( பரமாத்விற்கும்) பாகவதனுக்கும் ( ஜீவாத்மாக்கும் ) உள்ள உறவு பல வகைப்படும். பெரியாழ்வார், குலசேகரப் பெருமாள் முதலியோர் பெருமாளை தன் மகனாக பாவித்து வாத்சல்ய பாவத்தில் பாடினர். தோழனாக விளங்கியவன் அருச்சுனன். பெருமாள் ஒருவரே நாயகன் மற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம் நாயகிகள் என்பதால் தன்னை நாயகியாக பாவித்து பாசுரம் பாடியவர்கள் திருமங்கையாழ்வாரும், நம்மாழ்வாரும் ஆவர். இதில் வகுளாபரணர் தனனை திருமாலை எண்ணி எண்ணி மாலும் பராங்குச நாயகியாய் யஜுர் வேதத்திற்க்கு இணையான திருவிருத்தமும், சாம வேதத்திற்க்கு இணையான திருவாய்மொழியும் இந்த நாயகன் நாயகி பாவத்திலான அகப் பாடல்களாகப் பாடியுள்ளார்.


ஆழியெழச் சங்கும் வில்லுமெழ திசை
வாழியெழத் தண்டும் வாளுமெழ அண்டம்
மோழையெழ முடிபாதமெழ அப்பன்
ஊழியெழ உலகம் கொண்டவாறே - 
என்று பாடிய நம்மாழ்வார்

ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் பிரானே! என்று கொல்? சேர்வதந்தோ நின் திருப்பாதத்தை யான் என்று இன்று பராங்குச நாயகியாய் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளுகின்றார்.

தன் அன்பன் இவ்வாறு ஏழுந்தருளும் போது நம் பெருமாளும் அந்த அழகை ரசிக்க சிறப்பாக எழுந்தருளுகின்றார். எவ்வாறு பெருமாள் இன்று வருகிறார் தெரியுமா? கைத்தாங்கலாக, பட்டர்கள் இன்று பெருமாளை தம் கைகளிலே ஏந்தி ஏழப் பண்ணுகின்றனர். இச்சேவை கைத்தல சேவை எனப்படுகிறது. நம் சடகோபனைப் பாடினையோ என்று வினவிய நம் பெருமாள் அந்த சடகோபனுக்காக கைத்தல சேவை சாதித்தருளுகின்றார்.