பகல் பத்து - முதல் நாள்
நம்பெருமாள்
ஸ்ரீநம்பெருமாள் நீள்முடி கிரீடம், வைர அபய ஹஸ்தம், திருமார்பில் லட்சுமி பதக்கம், கர்ண பூஷணம், பவள மாலை, அடுக்கு பதக்கம், சூரிய பதக்கம் அலங்காரத்தில் சேவை சாதிக்கும் அழகு.
ஆசன பத்மத்திலே அழுந்திய திருவடி நிலைகள்
திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களுடனும் அஞ்சல் என்ற கையும் , கவித்த முடியும், பிரசன்ன முகமும், முறுவலும், ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலை..
சென்னை - அசோக்நகர்
கருமாரி ஆலயம்
ஸ்ரீநிவாசர் காளிய மர்த்தனர் திருக்கோலம்
வைணவர்களுக்கு கோவில் என்றளவிலே அறியப்படுகின்ற திருவரங்கத்தில் பகல் பத்து உற்சவம் எவ்வாறு நடை பெறுகின்றது என்று காண்போம். திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களுடனும் அஞ்சல் என்ற கையும் , கவித்த முடியும், பிரசன்ன முகமும், முறுவலும், ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையிலே அருட் காட்சி தருகின்ற நம் பெருமாள் கருவறையிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சிம்மகதி கண்டருளி துலுக்க நாச்சியார் படி ஏற்றத்துடன் மணிக்கு அர்ச்சுன மண்டபம் எழுந்தருளுகின்றார். அங்கே ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் எழுந்தருளியிருக்க, நாதமுனி வழி வந்த அரையர்கள், தீந்தமிழ் பிரபந்தங்களை தாளத்துடனும், இசையுடனும் ஆழ்வார்கள் முன்னிலையில் அரங்கன் திருமுன்பே அத்யயனம் செய்கின்றனர். சில முக்கிய பாசுரங்கள் வியாக்கியானம் செய்யப்படுகின்றன. அபிநயமும் உண்டு. இயல், இசை, நாடகம் மூன்றும் கலந்த சேவைதான் அரையர் சேவை.
தமிழுக்கு தகமை சேர்க்கும் இந்த உற்சவத்தின் போது தற்சமயம் மூன்று திவ்ய தேசங்களில் மட்டும் தான் அரையர் சேவை தற்போது நடை பெறுகின்றது. அவையாவன:
வண்டினமுரலும்சோலை மயிலினமாலும் சோலை
கொண்டல்மீதணவும்சோலை குயிலினம்கூவும் சோலை
அண்டர்கோ212பானமரும்சோலை அணிதிருவரங்கம் என்று தொண்டரடிப் பொடியாழ்வார் மங்களாசாசனம் செய்த திருவரங்கம்.
மென்னடையன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்த ஸ்ரீ வில்லிபுத்தூர்.
குன்னார்கழனி சூழ் கண்ணன்குறுங்குடி என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்குறுங்குடி. ஆகியவையே இந்த மூன்று திவ்ய தேசங்கள். மற்ற தலங்களில் நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவிக்கப்படுகின்றது.
அரையர் சேவையுடன் பொதுஜன சேவையும் நடைபெறுகின்றது. மதியம் அலங்காரம், பாவாடை கோஷ்டி, அமுது கண்டருளுகிறார் பெருமாள். மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை பின் பொதுஜன சேவை. மாலை 6.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து கிளம்பி இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகின்றார் அழகிய மணவாளர். பகல் பத்து நாட்கள் அனைத்திலும் இவ்வாறே சேவை சாதிக்கின்றார் நம் பெருமாள்.
இன்று பகல் பத்தின் முதல் நாள் பெரியாழ்வார் திருமொழியின் முதல் இரண்டு பத்துக்கள் (212 பாசுரங்கள்) சேவிக்கப்படுகின்றன. பெரியாழ்வாரின் வைபவம் சிறிது பார்ப்போமா? . ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வட பத்ர சாயிக்கு நந்தவனம் அமைத்து பூமாலை கட்டித்தரும் புஷ்ப சேவை செய்து கொண்டிருந்தார் கருடனின் அம்சமாக அவதரித்த விஷ்ணு சித்தர். ஸ்ரீமந் நாராயணே முழுமுதற் பரம்பொருள் என்று நிரூபித்து பொற்கிழி வென்று பட்டர் பிரான் யானை மீது ஊர்வலமாக வரும் போது வானில் பெரிய பிராட்டியுடன் பெரிய திருவடியில் ஸ்ரீமந் நாராயணன் தோன்ற அவருக்கு கண்ணேறு பட்டு விடுமோ என்று பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார். ஆண்டாளின் தந்தை அரங்கருக்கு மாமனார் அவரது பாசுரம் தான் இந்த முதல் நாள் சேவிக்கப்படுகின்றது.
தன்னை யசோதையாக பாவித்து கண்ணனின் லீலைகளை பாடுகின்றார் பெரியாழ்வார். கண்ணன் கேச்வன் நம்பி பிறந்ததைப் பாடி, ஆச்சியரை குழந்தையை வந்து காண் அழைத்து, தாலேலோப் பாடி, சந்திரனை அழைத்து, செங்கீரை ஆடுதலைப் பாடி, சப்பாணி கொட்டச் சொல்லி, தளர் நடையைப் பாடி, பூச்சி காட்டி விளையாடி, முலையுண்ண அழைத்து, காது குத்த, பூச்சூட்ட, நீராட அழைத்து, காக்கையை அழைத்து குழல் வாரக் கூறி, கோல் கொண்டுவர சொல்லி, திருவந்திக்காப்பிட அழைத்து , கண்ணனின் பால லீலைகளைப் பாடியிருக்கின்ற தீந்தமிழ் பாசுரங்களை இன்று சேவிக்கின்றோம்.
திருவரங்கத்தில் திருப்பல்லாண்டின் முதற்பாசுரமான
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக்காப்பு - என்னும் பாசுரத்தை அபிநயத்துடன் சேவைக்கும் அரையர் பின்னர் வியாக்கியானத்தையும் அருளுகின்றார்.
மற்ற தலங்களில் 3 மணியளவில் பெருமாள் விஷேச அலங்காரத்தில் சேவை சாதிக்க ஆழ்வார்கள் ஆச்சாரியர்களுக்கு அருளப்பாடு ஆகி பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழி சேவிக்கப்படுகின்றது.
சிம்ம கதி மற்றும் சர்ப்ப கதி:
நம்பெருமாள் பகல் பத்து 10 நாட்களும் காலை புறப்பாட்டின்போது மூலஸ்தானத்திலிருந்து வெளியே வரும்போது ஒரு சிங்கத்தைப்போல் பாய்ந்து கொண்டு வெளியில் வருவார், இதற்கு சிம்ம கதி எனப்பெயர். அதேபோல் இரவு மூலஸ்தானத்திற்கு செல்லும்போது லேசாக ஒரு பாம்பைப் போல் வளைந்து நெளிந்து உள்ளே செல்வார் அதற்கு சர்ப்ப கதி எனப்பெயர்.
நம்பெருமாள் பகல் பத்து 10 நாட்களும் காலை புறப்பாட்டின்போது மூலஸ்தானத்திலிருந்து வெளியே வரும்போது ஒரு சிங்கத்தைப்போல் பாய்ந்து கொண்டு வெளியில் வருவார், இதற்கு சிம்ம கதி எனப்பெயர். அதேபோல் இரவு மூலஸ்தானத்திற்கு செல்லும்போது லேசாக ஒரு பாம்பைப் போல் வளைந்து நெளிந்து உள்ளே செல்வார் அதற்கு சர்ப்ப கதி எனப்பெயர்.
No comments:
Post a Comment