Saturday, December 26, 2020

அத்யயனோற்சவம் - 14

                                  இராப்பத்து - மூன்றாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    13    15    16    17    18    19   20   21   22     

             


திருவாய்மொழித்திருநாளின் மூன்றாம் நாள் நம்பெருமாள்  சாய் முத்துக்கிரீடம், இரத்தின அபய ஹஸ்தம், இரத்தின காது காப்பு, பவள மாலை மற்றும் விமான பதக்கமணிந்து சேவை சாதிக்கும் கோலம்.



                                              இரவு மூலஸ்தானம் திரும்பும் போது 


6. ஒரு ஜீவாத்மா பரமபதத்தை அடையும் பொழுது பலவிதமான இசைக்கருவிகள் முழக்கி வரவேற்பார்கள்.

நம்பெருமாள் பரமபத வாசலை கடக்கும் பொழுது பலவிதமான வாத்தியங்கள் வாசிக்கப்படுவதை நாம் இன்றும் அனுபவிக்கலாம். எக்காளம், சங்கு, திருச்சின்னம் போன்ற பலவிதமான வாத்தியங்கள் இசைப்பது இந்த பாசுரத்திற்காகவே.

வேளியுள் மடுத்தலும் விறைகமழ் நறும்புகை
காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர்.

திரு அத்யயன உத்சவத்தில் பல வகையான இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன. உடல், வீரவண்டி, சேமங்கலம், வெள்ளி எக்காளம், டோலக், மிருதங்கம், நாதஸ்வரம், சங்கு,தக்கை, சுத்தமத்தளம், தவளை மத்தளம் உள்ளிட்ட 17 இசைக்கருவிகள் வாசிக்கப்படும்.

பெருமாள் புறப்பாடு நடப்பதற்கு முன் இசைக்கப்படும் வாத்தியங்கள் – வீரவண்டி,  சேமங்கலம். பெருமாள் மேற்கு படி வந்தவுடன் இசைக்கப்படும் வாத்தியம் – எக்காளம்,  திருசின்னம். பெருமாள் 2ஆம் பிரகாரத்தில் வரும்போது இசைக்கப்படும் 8வாத்தியம் – மத்தளம்,  தக்கை. 

7வைகுந்தத்தை அடையும்   ஜீவாத்மாவை அழகிய கண்களை உடைய மகளிர் வாழ்த்தினர்.
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று 
 வாளொண்கண்  மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே 

இங்கே மடந்தையர் என்பது  பெண்களை குறிப்பிடவில்லை. அனைத்து ஜீவாத்மாக்களும் பரமாத்மாவுக்கு பத்னி என்ற பாவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து வெளியே வரும்பொழுது தேவதாசிகள் ஆரத்தி எடுத்து வரவேற்கும் வழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கம் தேவதாசி ஒழிப்புச் சட்டத்துக்கு பிறகு நிறுத்தப்பட்டுவிட்டது. 

8. அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லும் ஜீவாத்மாவை வழியில் வரும் லோகத்தில் இருப்பவர்கள்,  தங்கள் இடத்தில் தங்க வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

 எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் 

கதிரவரவரவர் கைந்நிரை காட்டினர்

அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லும் ஜீவாத்மாவை வழியில் வரும் லோகத்தில் இருப்பவர்கள், திருமால் அடியாரை தங்கள் இடத்தில் தங்க வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

பெருமாள் செல்லும் பொழுது வழிநடை உபயங்கள் கண்ட அருள்வார். இங்கே சில நிமிடங்கள் மட்டுமே இருந்து பானகம் மற்றும் பருப்பு அமுது செய்து பரமபதம் செல்லும் ஜீவாத்மாவை போல் உடனே கிளம்பி சென்று விடுவார். இந்த உபயங்கள் ஏற்பட்டது இந்த பாசுரத்திற்காக.

9.வைகுண்டத்திற்கு செல்லும் ஜீவாத்மாவிற்கு  இதுதான் வைகுண்டத்திற்கான  வழி என்று எதிரே வந்து முனிவர்கள் வழிகாட்டுகின்றனர்.

ஜீவாத்மா: நம்பெருமாள்,  முனிவர்: நம்மாழ்வார்

நம்பெருமாள் மணல்வெயில் எழுந்தருள்வதற்கு முன்னர் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர் ஆகியோர் பெருமாளை வரவேற்க காத்திருப்பார்கள். பெருமாள் பூச்சாற்று மண்டபத்தை கடந்தவுடன் நம்மாழ்வார் மட்டும் முன்னே சென்று நடையில் வரும் பெருமாளை எதிர்கொண்டு அழைத்து வருவார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கான காரணம் பரமபதம் செல்லும் ஜீவாத்மாவான நம்பெருமாளுக்கு, இதுதான் வைகுந்திற்கு வழி என்று காட்டுவதற்காக – “வழியிது வைகுந்தற் கென்று வந்தெதிரே”.

எழுமினென்று இருமருங்கிசைத்தனர் முனிவர்கள்

வழியிது வைகுந்தற்கு  என்று வந்தெதிரே 

10.தேவர்கள் தோத்திரம் சொல்லிக்கொண்டு ஜீவாத்மாவை வரவேற்கின்றனர்.

நம்பெருமாள் மணல்வெயில் எழுந்தருள்வதற்கு முன்னர் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர் ஆகியோர் முன்னர் பராசர பட்டர் அருளிய ஶ்ரீரங்கராஜஸ்தவம் சேவிப்பார்கள்.

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் .
 
11.மாமணி மண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோடிருத்தல்.

ஸ்ரீவைகுந்தத்தில் உள்ளது போலவே திருவரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவில் இருப்பது திருமாமணி மண்டபம். அந்த திருமாமணி மண்டபத்தில் அமர்ந்து, ஆழ்வார்  மற்றும் ஆச்சார்யர்கள் நடுவில் அரையர்களின் திருவாய்மொழி விண்ணப்பத்தை தினமும் கேட்டு அனுபவிப்பார். 
வந்தவரெதிர் கொள்ள மாமணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை.

********



திருவாய்மொழித் திருநாளின் மூன்றாம் இரவு பெருமாள் திருமுன் நம்மாழ்வாரின் திருவாய் மொழியின் மூன்றாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இந்த மூன்றாம் பத்தில் எம்பெருமானது பரவியிருத்தல் (வ்யாபகம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

புயல் கருநிறத்தன், அடலாழியம்மான், உருளும் சகடம் உதைத்த பெருமானார், கோலக் கூத்தன், தேனும் பாலும் கன்னலும் அமுதுமொத்த பிரான் என்றெல்லாம் பெருமாளை பாடிப்ப்ரவிய நம்மாழ்வார் அமர்ந்திருந்த புளிய மரத்தடிக்கே பெருமாள் பெரிய பிராட்டியுடன், வினதை சிறுவன் மேலாப்பின் மேலே இருந்து சேவை சாதித்தார். மேலும் பல திவ்ய தேசங்களில் அர்ச்சையாக கோயில் கொண்டவாரும் காட்சி தந்தருளினார். பெருமாளின் அருள் மழையில் நனைந்த ஆழ்வார் பெரு மகிழ்ச்சியின் போக்கு வீடாகவே நான்கு வேதங்களுக்கொப்பாக நான்கு பிரபந்தங்களை திருவாய் மலர்ந்தருளினார்.

குன்றமேந்தி குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலமளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
என்றுமே தொழ நம்விணையோயுமே

என்று பெருமாளின் பெருமையைப் பாடிப்பரவிய ஒப்புயர்வற்ற பராங்குசர் எம்பருமானது திருவடிகளாகவே கருதப்படுவதால் திருக்கோயில்களில் திருமாலின் பாதுகைகள் ’ஸ்ரீ சடகோபம்’ என்றோ ’ஸ்ரீ சடாரி’ என்று வடமொழியிலோ வழங்கப்படுகின்றது. தீர்த்த பிரசாதம் வழங்கிய பின் ஜாதி மத பேதமில்லாமல் அனைவருக்கும் சடகோபம் சார்த்தப்படுகின்றது. துளசி பிரசாதம் வழங்கப்படுகின்றது.

குலந்தாங்கு சாதிகள் நாலிலுங் கீழிழிந்து எத்தனை

நலந் தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்

வலந் தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்காளென்று உன்

கலந் தார் அடியார் தம் அடியார் எம்மடிகளே! 

என்று எம்பெருமாளின் அடியார்களின் பெருமையை இந்த பத்தின் ஒரு பாசுரத்தால் விளக்குகிறார் வகுளாபரணர்.

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்யவேண்டும்நாம்
தெழிகுரலருவித் திருவேங்கடத்து
எழில்கொள்சோதி எந்தைதந்தைதந்தைக்கே - என்று  திருவேங்கடமுடையான் திருவடிகளில்  காலமெல்லாம் வழுவிலாவடிமை செய்ய பாரிக்கின்றார் ஆழ்வார்.  அதையே நாமும் அவரிடம் வேண்டுமாக. 

No comments: