Friday, December 25, 2020

அத்யயனோற்சவம் - 10

                                            பகல் பத்து - ஒன்பதாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    11    12    13    14    15    16    17    18    19   20   21   22     

             







இன்றைய தினம் நம்பெருமாள் அணிந்த ஆபரணங்கள் அனைத்துமே முத்தால் ஆனவை. முத்து சாய் கிரீடம், முத்து சரம், முத்து அபய ஹஸ்தம், முத்து திருவடிகள்.

முதல் அரையர் சேவையில் பெரிய திருமொழி 200 பாசுரங்கள் சேவிக்கப்படும். தெள்ளியீர் பாசுரம் அபிநயம் மற்றும் வியாக்கியானம்

இரண்டாவது அரையர் சேவையில் பரகால நாயகியாக (திருமங்கை ஆழ்வார்) சரணாகதி அடைந்த திருநெடுந்தாண்டகத்தை கொண்டு நடக்கும் முத்துக்குறி நடப்பது மேலும் ஒரு சிறப்பு.

திருநெடுந்தாண்டகம் மூலம் திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் தான் வெளிப்படுத்திய பெருமாளின் மீதான அன்பை ஆழ்வாரின் தாயார் கூறுவது சிறப்பு நிகழ்ச்சியாக இரண்டாம் அரையர் சேவையின் நடைபெறும் முத்துக்குறி.

நம்பெருமாள் இன்று முத்து முடி, முத்தங்கி, முத்து அபயஹஸ்தம் ( விஜயரங்க சொக்கநாதர் சமர்ப்பித்தது) சாற்றிக்கொண்டு முத்துக்குறி கேட்க அர்ஜுனன் மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார்.

திருநெடுந்தாண்டகம் முதல் பாசுரம் அபிநயம் மற்றும் வியாக்கியானம் “மின்னுருவாய்” கூறி அரையர் முத்துக்குறியை தொடங்குவார்.  என்று  ஆழ்வார் நாயகியாக துடித்துக் கொண்டிருக்கிறார், அதனை போக்க ஆழ்வாரின் தாயார் "பட்டுடுக்கும் அயர்த்திரங்கும் பாவை பேணாள் பனி நெடுங்கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள் ......." என்று தன் பெண்ணின் நிலைமையை கட்டுவிச்சி என்கிற குறத்தியின் மூலம் முத்துக்களை பரப்பி குறி கேட்கும் வைபவம். இதற்கு முத்துக்குறி என்று பெயர்.

ஆழ்வாரின் தாயார் தன் மகள் ஏன் இப்படி இருக்கிறாள்? என கட்டுவிச்சியிடம் கேட்க! அதற்கு முத்துக்களை பரப்பி கட்டுவிச்சி சொல்லும் குறி- திருமால் மேல் மால் கொண்ட  நாயகியாக இருக்கும் ஆழ்வாரை பெருமான் முன்னர் கொண்டு நிறுத்துவது மட்டுமே இந்த துடிப்புக்கு மருந்து.

அரையர் ஆழ்வாரின் தாயாராகவும் குறி சொல்லும் கட்டுவிச்சியாகவும் தன் குரலை மாற்றி நம்பெருமாள் முன்னர் விண்ணப்பம் செய்வார். கடைசியாக அரையர் சற்று முன்னே சென்று நாயகியான திருமங்கையாழ்வாரை நம்பெருமாள் முன்னர் நிறுத்துவதாக முத்துக்குறி வைபவத்தை நிறைவு செய்வார். இதன்மூலம் திருமங்கையாழ்வார் சரணாகதி அனுஷ்டித்ததாக ஒரு கூற்று.

அரையர் குறி சொல்லி ஆழ்வாரை நம்பெருமாளிடம் அடைய வைத்ததற்காக தீர்த்தம் மற்றும் ஸ்ரீசடகோபம் பெற்று அதன்பின்னர் அனைவருக்கும் இன்று சடகோபம் சாதிப்பார். 


 
திருவாய்மொழித் திருநாளின் ஒன்பதாம் நாள்  பெரிய திருமொழியின் மூன்று பத்துக்கள் சேவிக்கப்படுகின்றன. ஏழாம், எட்டாம், மற்றும் ஒன்பதாம் பத்துக்கள் சேவிக்கப்படுகின்றன.


முதன் முதலாக திருமங்கையாழ்வார் திருவரங்கனின் அநுமதியோடு திருக்குருகூரில் நம்மாழ்வாரின் அருச்சையிலுள்ள மூர்த்தியைத் திருவரங்கத்துக்கெழுந்தருளச் செய்து வேதங்களுக்கிணையாக நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களின் அருளிச் செயல்களை அரங்கனின் திருமுன்பேயிசைத்து அத்யயனத் திருவிழாவை நடத்தியருளினார்.

கலிகாலத்தின் கொடுமையை அடியார்க்கடிமையாலொழித்தவரென்பது பற்றி திருமங்கையாழ்வார் 'கலிகன்றி' என்று பெயர் பெற்றார்.

திருநறையூர் நம்பியிடம் திருவாழி திருச்சங்கிலச்சினையும் , திருகண்ணபுரத்தம்மானிடம் திருமந்திரோபதேசம் பெற்ற மங்கை மன்னர் திருநறையூர் நம்பியையும், திருகண்ணபுரத்தன்னானையும் நூறு நூறு பாசுரங்களினால், மங்களாசாசனம் செய்துள்ளார். இன்றைய தினம் இந்த இரண்டு திவ்ய தேசங்களின் பாசுரங்களும், மற்றும் திருச்சேறை, திருவழுந்தூர், திருச்சிறுபுலியூர், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி,திருநாகை ஆகிய சோழ நாட்டுத்திருப்பதிகள், திருப்புலாணி, திருக்குறுங்குடி, திருவல்லவாழ், திருமாலிருசோலை, திருக்கோட்டியூர் ஆகிய பாண்டிய நாட்டுத் திருப்பதிகளின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.


No comments: