Saturday, December 26, 2020

அத்யயனோற்சவம் - 13

                                இராப்பத்து - இரண்டாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    14    15    16    17    18    19   20   21   22     

             



திருவடி சேவை



பின்னழகு



திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாள்



இரவு சல்லா துணி அணிந்து நம்பெருமாள்
 மூலஸ்தானம்  திரும்பும் கோலம்




ஸ்ரீநிவாசர் திருமலையப்பனாக சேவை



பூலோக வைகுண்டமான திருவரங்கத்தில் நடைபெறும் ஒவ்வொரு விழாவிற்கும் அதன்பின்னர் சாஸ்திர, சம்பிரதாய காரணங்கள் பொதிந்துள்ளன.

ஒரு ஜீவாத்மா பரமபதம் அடைவதற்கு அர்ச்சிராதி மார்க்கமாக செல்வார். பரமபதத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் வீற்றிருக்கும் பரமபதநாதனின் நித்ய கைங்கரியத்தில் ஈடுபடுவார். அர்ச்சிராதி மார்கம் எப்படி இருக்கும்?

  1. மரணமானால் தானே வைகுந்தம் அடையமுடியும்!
  2. வைகுண்டம் அடைந்தவர் யாரும் திரும்பி வருவது இல்லையே!
  3. இவ்வழியில்தான் வைகுண்டம் சென்றேன் என்று நமக்கு சொல்ல யாரால் முடியும், என நமக்குத் தோன்றலாம்!

இக்கேள்விகள் அனைத்திற்கும் ஒரே விடை, ஸ்ரீமன் நாராயணன் பூவுலகிலேயே நம்மாழ்வாருக்கு இதனை காட்ட,   ஆழ்வார் அதை தமது திருவாய்மொழியில்  நமக்கு கூறி அருளியுள்ளார்.

பெருமாள் நம்மாழ்வாரிடம் ஆழ்வீர் நீர் பரமபதம் கிளம்பும் நேரம் வந்துவிட்டது (திருவாய்மொழி 10-8 பத்து முடிந்தவுடன்). உம்மை இவ்வழியில் அழைத்துச்  சென்று என் நித்ய கைங்கர்யதில் ஈடுபடுத்துவேன் என்று நம்மாழ்வாருக்கு காட்டியருளினார்.

அதை கண்ட ஆழ்வார் தன்னைப் போல் சரணாகதி செய்யும் அனைவருக்கும் வைகுந்தம் கிடைக்கும் என்பது நாம் அறிவதற்காக சூழ்விசும் பணிமுகில் என்ற பதிகத்தைப் (திருவாய்மொழி 10-9) பாடியுள்ளார்.

அர்ச்சிராதி மார்க்கத்தில் யார் யார் வந்தனர், எப்படி அடியார்களை பலர் புகழ்கின்றனர், பெருமான் வைகுந்த வாசலில் வந்து எப்படி தன்னை கைபிடித்து அழைத்து சென்றார் என்ற அனுபவங்களை பாசுரங்களாக பாடியுள்ளார்.

ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வாரின் திருவாய்மொழி பெருமையை நாம் அறிவதற்காக, திவ்ய தேசங்களில் முதன்மையானதான  திருவரங்கத்தில் ஸ்வாமி இராமானுசர் இராப்பத்து உற்சவத்தில் சில ஜதீகங்களை சேர்த்தார்.

சூழ்விசும் பணிமுகில் பதிககித்தில் சொல்லப்பட்ட காட்சிகளை உடையவர் (இராமானுசர்) உலகோர் அறிய, ஒரு நாடகம் போல் அமைத்துள்ளார். அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லும் ஜீவாத்மாவாக இங்கே நமக்கு நடித்து காட்டுபவர் "நம்பெருமாள்".

இராப்பத்து உற்சவத்தில் நம்பெருமாள் தினமும் மதியம் புறப்பாடு கண்டருளி பரமபத வாசலை கடந்து திருமாமணி மண்டபத்தை (ஆயிரம்கால் மண்டபம்) அடைவார்.

1. ஸ்தூல சரீரத்துடன் அர்ச்சிராதி மார்க்கமாக வைகுந்தம் செல்லும் ஜீவாத்மா

சூழ்விசும்பணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலை திரை கையெடுத்தாடின
ஏழ்பொழிலும் வளமேந்திய என்னப்பன் 
வாழ்புகழ்நாரணன் தமரைக் கண்டுகந்தே
.- என்று நம்மாழ்வார் பாடியபடி

நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து  புறப்படும் பொழுது எப்போதும் போல் இல்லாமல் ஒரு போர்வை சார்த்திக்கொண்டு ஆபரணங்கள் வெளியே தெரியாமல் சேவை சாதிப்பார். அதாவது ஒரு ஜீவாத்மா ஸ்தூல சரீரத்துடன் அர்ச்சிராதி மார்கமாக வைகுண்டம் அடைய செல்வதாக ஐதீகம்.  

2.பரமபதம் செல்லும் ஜீவாத்மாவை தேவர்களும் முனிவர்களும் வணங்குகின்றனர். 

திருவரங்கம் கோயில் ஸ்தலத்தார்கள் அனைவரும் சந்தன மண்டபத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து வெளியே வந்தவுடன் கீழே விழுந்து வணங்குவர். 

தொழுதனர் உலகர்கள் தூபநல்மலர்மழை
பொழிவனர் பூமியன்றளந்தவன் தமர்முன்னே
எழுமினென்று இருமருங்கிசைத்தனர் முனிவர்கள் 
வழியிது வைகுந்தற்கு என்று வந்தெதிரே.

3.வைகுந்தம் செல்லும் ஜீவாத்மாவை - வழிநெடுகிலும் உலகத்தில் இருப்பவர்கள் தோரணங்கள் கட்டி தொழுததாக பாசுரம்

நாரணன் தமரைக்கண்டுகந்து நல்நீர்முகில்
பூரணப்பொற்குடம் பூரித்தது உயர்விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுரனருலகே. 
5நvaiம்பெருமாள் புறப்பாட்டில் தங்கக் குடை, சாமரம், மற்றும் ஆலவட்டம் ஆகியவை  பெருமாளுக்கு சாதிப்பார்கள். இக்கைங்கரியங்கள் ஜீவாத்மாவை வரவேற்கும் நிகழ்வாக ஏற்படுத்தபட்டுள்ளன.

4. அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லும் ஜீவாத்மாவை நான்கு வேதங்களும் நன்கு அறிந்தவர்கள் வேதத்தை ஓதி வரவேற்பதாக பாசுரம்.

பரமபதம் அடைவதற்கு விரஜா நதியை கடக்க வேண்டும். திருவரங்கத்திலும் வைகுண்ட வாசலுக்கு முன்னர் விரஜா நதி மண்டபம் உண்டு. இங்கு பெருமாள் வந்தவுடன் வேத விண்ணப்பம் நடைபெறும். வேதவியாசர்/ பராசர பட்டர்   வேதம் ஓதுவர்.  நான்கு வேதங்களில் உள்ள பல சாகைகள் இங்கு ஒதப்படுகிறது.

மாதவன் தமரென்று வாசலில்வானவர்
போதுமின்எமதிடம் புகுதுகவென்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர்கள் கெருடர்கள்
வேதநல்வாயவர் வேள்வியுள் மடுத்தே. 

 5. வைகுந்தம் நுழைய ஜீவாத்மா ஸ்தூல சரீரம் விடுத்து சூக்ஷ்ம சரீரம் பெறுதல்.

இவ்விஷயம் இப்பத்தில் நேராக எப்பாசுரத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் சாஸ்திரத்திலும், வேதத்திலும் இவ்விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஜீவாத்மா விரஜா நதியை கடந்து வைகுண்டம் அடையும்போது  அதற்கு ஒரு புது சரீரம் கிடைக்கும்.

இதை நடத்தி காட்டவே நம்பெருமாள் பரமபதவாசல் நுழைவதற்கு முன் திரையிட்டு பெருமாள் மேல் மூடியிருக்கும் போர்வை விலக்கப்படும். அனைத்து ஆபரணங்களுடன் பெருமாள் சேவை சாதித்த படி வைகுண்ட வாசல் கடந்து வெளியே வருவார்.  (மேலும்  அடுத்த பதிவில் தொடரும்)

வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் நம்மாழ்வாருக்காக பரமபத வாசல் சேவை சாதிக்கின்றார். அடுத்த பத்து நாட்கள் ஆழ்வார் ஒவ்வொரு பத்தாக பாசுரம் சேவித்து பின் பத்தாம் நாள் மோட்சம் அடைவதாக ஐதீகம்.

காரியாருக்கும் உடைய நங்கையாருக்கும் திருமகவாக வைகாசி திங்கள், விசாக நட்சத்திரம் பௌர்ணமி கூடிய நன்னாளில் ஆழ்வார் திருநகரி இன்று அழைக்கப்படும் திருக்குருகூரில் திருஅவதாரம் செய்தார் ஆழ்வார். திருக்குறுங்குடி நம்பியே அவதாரம் செய்ததாக ஐதீகம்.

திருமாலது அம்சமும் அவரது கௌஸ்துபத்தின் அம்சமும், விஷ்வஷேனரது அம்சமும் பொருந்திய ஆவார், பிறந்த குழந்தையைப் போலல்லாது உலக இயற்கைக்கு மாறாக அழுதல், பாலுண்ணல் முதலிய செயல்கள் இல்லாமல் இருந்தார். கருப்பையில் அறியாமை தீண்டாத கருவை சடமென்ற வாயு தீண்டி அறியாமைக்குள்ளாக்கி அழுதல், அரற்றுதல் முதலிய செய்கைகளை தூண்டுகின்றது என்பர். அந்த சடம் என்ற வாயுவை ஹும் என்று ஒறுத்ததால் ஆழ்வார் ’சடகோபர்’ என்னும் திருநாமம் பெற்றார்.

கழிமின் தொண்டீர்காள்! கழித்து
தொழுமின் அவனைத் தொழுதால்
வழிநின்ற வில்விணை மாள்வித்து
அழிவின்றி யாக்கம் தருமே. என்று சரணாகதி தத்துவத்தை அருளிய காரி மாறப் பிரான் நான் மறைகளுக் கொப்பாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை திருவாய் மலர்ந்தருளினார். தமது சீடர் மதுரகவியாழ்வாருக்கும் உபதேசித்தருளினார்.

திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களும் அந்தாதியாக அமைத்துப் பாடியுள்ளார்.
ஆடி ஆடி அகங்கரைந்து இசை
பாடிப் பாடிகண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா! என்று 
வாடி வாளும் இவ்வாணுதலே என்று தன்னையே பராங்குச நாயகியாக பாவித்து பாசுரம் பாடிய நம்மாழ்வாரின் வைகுண்ட ஏகாதசியன்று சேவிக்கப்படும் முதல் பத்தால் எம்பிரானது மேன்மையையும்(பரத்வம்), திருவாய் மொழித் திருநாளின் இரண்டாம் நாளான இன்று சேவிக்கப்படும் இரண்டாம் பத்தால் எம்பெருமானது படைத்தலும்(காரணத்வம்) கூறப்படுகின்றது என்று பெரியோர்கள் அருளிச் செய்வர்.

ஏகாதசி விரதம் இருந்தவர்கள் முதல் அதிகாலை சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை சேவித்து விரதத்தை தொடங்கி நாள் முழுவதும் உபவாசம் இருக்கின்றனர். வெறும் துளசி தீர்த்தம் மட்டும் பருகி( முடியாதவ்ர்கள் சிறிது அவல் உட்கொண்டு) , எப்பொழுதும் ஓம் நமோ நாராயணா என்னும் நாமம் ஓதி , இரவு முழுவதும் உறங்காதிருந்து பின் துவாதசி காலையில் துளசி தீர்த்தம் பருகி பாரணையுடன் விரதத்தை முடிக்கின்றனர். இவ்வாறு வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த அம்பரீஷ இராஜாவை துர்வாசர் சாபத்திலிருந்து பெருமாள் தமது சுதர்சன சக்கரத்தை அனுப்பிய கதையும் உண்டு.

முக்கோடி துவாதசியான  இன்று காரைக்காலில் நித்ய கல்யாணப் பெருமாள் கம்பளி அங்கியில் சேவை சாதிக்கின்றார்.  திருப்பதி திருமலையில் இன்று சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது. நாச்சியார் கோயிலில் இன்று முக்கோடி துவாதசி தெப்போற்சவம் நடைபெறுகின்றது.

No comments: