Showing posts with label இராப்பத்து. Show all posts
Showing posts with label இராப்பத்து. Show all posts

Sunday, January 3, 2021

அத்யயனோற்சவம் - 21 (தீர்த்தவாரி - நம்மாழ்வார் மோட்சம்)

                             இராப்பத்து -  பத்தாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    13    14    15    16    17    18   19   20   2    







சின்ன பெருமாள்(தீர்த்த பேரர்)


இராப்பத்தின் பத்தாம் நாளான இன்று  திருவரங்கத்தில் இன்று காலை   நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்கபல்லக்கில் புறப்பட்டு பரமபதவாசல் வழியாக, சந்திரபுஷ்கரணி குளத்தை வந்தடைந்தார்.  அங்கு  நம்பெருமாள்  தீர்த்தவாரி கண்டருளினார்.  பின்னர் திருமாமணி மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இரவு திருவாய்மொழியின்  பத்தாம் பத்தும், திருவாய்மொழியின் சாற்றுமுறையும் நடைபெறுகின்றது. நம்பெருமாள் இன்று ஒரு நாள் மட்டும் அதிகாலை நம்மாழ்வார் மோட்ச வைபவத்திற்காக திருமாமணி மண்டபத்தில் தங்குகிறார்.  

மற்ற ஆலயங்கள் அனைத்திலும் இன்றே நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதன் விவரத்தை இங்கே காணலாம். 

இராப்பத்தின் நிறை நாள் பத்தாம் நாள் நம்மாழ்வார் மோட்சம். பத்து நாட்களாக சொர்க்க வாசலில் நின்று இறைவன் தாளடி அடைய வேண்டும் என்று கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்று ஒன்றுமோராயிரம் உள்ளுவார்ர்க்கு உம்பரூரே என்று இன் தமிழ் ஆயிரம் பாடிய நம்மாழ்வாருக்கு அந்த வைகுந்தப் பேற்றை எம்பெருமான் வழங்குகின்றார்.

இராப்பத்தின் ஒவ்வொருநாளும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளும் நம்மாழ்வார் சரணாகதியின் மூலம் எம்பெருமான் திருவடி அடைகின்றார். பின் உலகில் உள்ளோர் எல்லோரும் தாங்கள் உய்ய ஆழ்வாரை இந்த நானிலத்திற்கு தந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய அவ்வாறே பெருமாள் அனுகிரகிக்க ஆழ்வாரை திருப்பி தருவதாக ஐதீகம்.

இன்றைய தினம் மையார்கருங்கண்ணி கமலமலர்மேல் செய்யாள் திருமார்வினில்சேர் திருமாலே வெய்யார்சுடராழி சுரிசங்கமேந்தும் கையர் திருமுன் நிறை பத்தான பத்தாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இப்பத்தால் எம்பெருமானின் களைகண் களைதல்      (ஆர்த்திஹரத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.

இராப்பத்தில் தினமும் நடைபெறுவது போல பெருமாள் புறப்பாடு கண்டருளி, சொர்க்க வாசல் சேவை தந்தருளி இராஜ நடை, சிம்ம நடை, நாக நடை, காவடி சிந்து கண்டருளி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுகின்றார். ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கு அருளப்பாடு ஆகி, சாற்று முறை துவங்குகின்றது.

அடைந்தார்க்குத் தானே துணையாகின்ற திருமோகூர்க் காளமேகப் பெருமாளைச் சரணமடைந்து ஆழ்வார் தாம் பிறவித்துயரொழிந்து வீடுபெறக் கருதியதை அருளிச் செய்த

தாள் தாமரைத் தடமணிவயல்திருமோகூர்
நாளும்மேவிநன்கமர்ந்துநின்று அசுரரைத்தகர்க்கும்
தோளும்நான்குடைச் சுரிகுழல்கமலக்கண்கனிவாய்
காளமேகத்தையன்றி மற்றின்றிலம் கதியே 
என்னும் பாசுரத்துடன் சாற்று முறை துவங்குகின்றது.

பணி நெஞ்சே! நாளும் பயமபரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கொடுத்தருளும்
மணிநின்றசோதி மதுசூதனன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழியானே

கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே
 என்று எம்பெருமானிடம் பக்தியுடையவர்கள் செய்ய வேண்டிய செயல்களை கூறிய பாசுரங்கள் சேவித்து எட்டாம் திருவாய் மொழி வரை சேவித்து நிறுத்துகின்றனர்,

நம்மாழ்வாரை ஆட்கொள்ள எம்பருமான் திருவுள்ளம் கொண்டபடியால் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் திறக்கின்றன, அதை உணர்த்தும் வகையில் இதுவரை ஆஸ்தானத்தில் எழுந்தருளி இருந்த ஆழ்வாரை எம்பெருமானின் திருமுன்னே ஏழப்பண்ணுகின்றனர் பட்டர்கள் குழந்தையைப் போல கைத்தல சேவையினால்.


நனிசிறந்த அறிவுபெற்ற ஆழ்வார் திருநாட்டுக்குச் சென்ற போது

                                           சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின 

ஆழ்கடலலைதிரை கையெடுத்தாடின

பூரணபொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்

கீதங்கள் பாடினர் கின்னரர்கெருடர்கள்

கணங்கள்வலம்புரி கலந்தெங்கிமிசைத்தனர்


வைகுந்தம் புகுதலும் வாசலில்வானவர்
வைகுந்தன்தமர்எமர் எமதிடம்புகுதென்று
வைகுந்த்தமரரும் முனிவரும்வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்னவர் விதியே

விதிவகைபுகுந்தனரென்று நல்வேதியர்
பதியினில்பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும்நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும்
மதிமுகமடந்தையர் ஏந்தினர் வந்தே.

இந்த பாசுரங்கள் எல்லாம் வெகு மெதுவாக சேவிக்கப்படுகின்றது. பத்தாம் திருவாய்மொழி துவங்குகின்றது.

முனியே! நான்முகனே! முக்கண்ணப்பா! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண்கருமாணிக்கமே என் கள்வா!
த்னியேனாரியிரே! என்தலைமிசையாய் வந்திட்டு
இனிநான் போகலொட்டேன் ஒன்றும்மாயஞ்செய்யேலென்னையே

என்று மூவருள் முதல்வராகிய மூர்த்தியாகிய கருமாணிக்கத்தின் பொற் பாத்ங்களை பற்றிக் கொண்டு ஒன்றும் மாயம் செய்யாதே மணிவண்ணா என்று சேவிக்கின்றார். இத்திருவாய்மொழியின் எட்டு பாசுரங்கள் சேவித்த பின் நம்மாழ்வார் திருவடி தொழல் மற்றும் நம்மாழ்வார் மோட்சம் துவங்குகின்றது. பட்டர்கள் ஆழ்வாரை பெருமாளை கையில் தாங்கிச் சென்று பெருமாளை சுற்றி வந்து ஆழ்வாரை பெருமாளின் திருப்பாத கமலங்களிலே சேர்ப்பித்து சிறிது சிறிதாக திருத்துழாயினால் ஆழ்வார் முழுதும் மறையும் வண்ணம் சூடுகிறனர். சாம்பிராணி புகையால் பெருமாளும் ஆழ்வாரும் மறைக்கப்படுகின்றார்.


நம்மாழ்வார் மோட்சம் ( திருத்துழாயால் மூடப்பட்டிருக்கிறார் ஆழ்வார்)





சூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவில்பெரும்பாழேயோ?
சூழ்ந்ததனில்பெரிய பரநன்மலர்சோதீயோ!
சூழ்ந்ததனில்பெரிய சுடர்ஞானவின்பமேயோ!
சூழ்ந்ததனில்பெரிய என்னவாவறச்சூழ்ந்தாயே

அவாவறச்சூழ் அரியை அயனையரனையலற்றி
அவாவற்றுவீடுபெற்ற குருகூர்ச்சடகோபன்சொன்ன
அவாவிலந்தாதிகள் இவையாயிரமும் முடிந்த
அவாவிலந்தாதியிப்பத்தறிந்தார் பிறந்தார்உயர்ந்தே
 என்னும் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. ஆசைகளை விட்டு எம்பெருமானிடம் சரணாகதி செய்து நம்மாழ்வார் திருநாட்டிற்கு ஏகி விட்டார்.

ஆனால் இப்பூவுலகில் மானிடர்களை நல் வழிப்படுத்த ஆழ்வாரை திருப்பித்தர பட்டர் பெருமான் விண்ணப்பம் செய்கின்றார். பட்டரின் விண்ணப்பத்தை ஏற்று பெருமாளும் நீங்கள் உய்ய ஆழ்வாரைத் திருப்பித் தந்தோம் ! தந்தோம்! தந்தோம்! என்று திருவாய் மலர்ந்தருளுகின்றார். பின் திருத்துழாய் நீக்கப்பட்டு நம்மாழ்வார் மீண்டும் ஆஸ்தானத்தில் எழுந்தருளுகின்றார். பின் பெருமாளுக்கும் ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கும் தீபாராதணை, பின் தீர்த்த பிரசாத விநியோகம், திருத்துழாய் பிரசாதம் வினியோகிக்கப் படுகின்றது. எல்லா வைணவத்தலங்களிலும் இன்று ஆழ்வார் திருவடி தொழல் உற்சவம் நடைபெறுகின்றது.

Tuesday, December 29, 2020

அத்யயனோற்சவம் - 16

                                         இராப்பத்து - ஐந்தாம் நாள்

                                  இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    13    14    15    17    18    19   20   21   22    

 



திருவாய்மொழித்திருநாள் ஐந்தாம் திருநாளன்று நம்பெருமாள் வைரமுடி, வைர அபயஹஸ்தம் மற்றும் திருஆபரணங்கள் அணிந்து சேவை சாதிக்கும் அழகு.






திருவாய்மொழித் திருநாளின் ஐந்தாம் இரவு மாதர் மண் மடந்தை பொருட்டு ஏனமாய் அகலிடங்கீண்ட பெருமாள் திருமுன் எங்கும் எதிலும் கண்ணன் என்று மாலும் குருகூர் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் " ஐந்தாம் பத்து சேவிக்கப்படுகின்றது. இந்த பத்தில் எம்பெருமானது அருளுடைமை                        (காருணித்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.


நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்

எங்ஙனே சொல்லுகேன்? யான் பெற்ற ஏழையை

சங்கென்னும் சக்கரமென்னும் துழாயென்னும்

இங்ஙனே சொல்லும் இராப்பகலென் செய்கேன்



என்று பராங்குச நாயகியாய் உருகும் நம்மாழ்வார்


                                               ஸ்ரீநிவாசர் குருவாயூரப்பன் கோலம்


போற்றிக் கைகளாற் தொழுது சொல் 

மாலைகள் ஏற்று நோற்பவர்களுக்கு எந்த

குறைவுமில்லை எழு பிறப்பும்  - என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.


சடகோபரின் சிறப்பைக் காண விழைந்த திருமாலடியார்களான நித்திய சூரிகள் முதலியோரைக் கண்டு

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்

நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை

கலியுங் கெடுங் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்

மலியப் புகுந்திசை பாடி ஆடியுழி தரக் கண்டோம். -  என்று வாழ்த்தினார். பின்பு வைணவம் தழைக்க இராமானுஜர் தோன்றவிருப்பதை பொசிந்து காட்டுவதலென்கிற முறையில் அறிவுறுத்தியதாகவும் இவ்வாழ்த்தை பெரியோர் கொள்வர்.


கவியரசரான கம்பர் தமது இராம காதையை திருவரங்கத்தில் நம் பெருமாள் முன்பு அரங்கேற்றப் புக, " நம் சடகோபனைப் பாடினையோ?" என்று பெயர் பெற்று இப்பெயரையே புகழ் பெற்ற பெயராக கொண்டுள்ளார்


உறங்குவான் போலும் யோகு செய்த பெருமானை


ஆராவமுதே!


ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர் கைம்


மாறொன்றிலேன் எனதாவியும் உனதே..... என்று சிரீவரமங்கல நாயக தெய்வ நாயகரிடம் பூரண சரணாகதி அடைந்த நம்மாழ்வார்.

Monday, December 28, 2020

அத்யயனோற்சவம் - 15

இராப்பத்து - நான்காம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    13    14    16    17    18    19   20   21   22     

             



திருவடி சேவை 


               பின்னழகு 

இராப்பத்தின் நான்காம் நாள் நம்பெருமாள் வெண் பட்டு, முத்து ஒட்டியாணம், இரத்தின அபய ஹஸ்தம், நீல பதக்கம் அணிந்து  திருமாமணி மண்டபத்தில்  சேவை சாதிக்கின்றார்.

 



 திருவாய்மொழித் திருநாளின் நான்காம் இரவு பெருமாள் திருமுன் "கேடில் விழுப்புகழ் கேசவனைப் குருகூர் சடகோபன் சொன்ன ஆயிரத்துள்" நான்காம் பத்து சேவிக்கப்படுகின்றது. இந்த நான்காம் பத்தில் எம்பெருமானது செய்வித்தல் (நியந்த்ருத்வம்) தன்மை கூறப்படுகின்றது என்பது பெரியோர்களின் அருளிச் செயல்.



பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்

மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே

தாள் பரப்பி மண் தாவிய ஈசனே

எந்நாள் யானுன்னை வந்து கூடுவனோ?


நின் மலர்த் தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ? என்று சொர்க்க வாசலின் முன் நின்றிருக்கும் நம்மாழ்வார்


பிறந்தவுடன் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் பெற்றோர் இவருக்கு மாறன் பெயரிட்டு அழைத்தனர்.


திருக்குருகூரில் கோயில் கொண்டுள்ள பொலிந்து நின்ற பிரான் மாறனார்க்கு பரிசாக மகிழ மலர் மாலையணிவித்தது குறித்து ஆழ்வாருக்கு ’வகுளாபரணர்’ என்னும் திருநாமம் ஏற்பட்டது.

பிற மதங்களாகிய யானைகளுக்கு சடகோபரின் நூலில் காணும் கொள்கைகள் மாவெட்டி போன்றுள்ளதால் ஆழ்வார் ’பராங்குசர்’ என்றழைக்கப்பட்டார்.

                              ஸ்ரீநிவாசர் வெண்ணெய்க் கண்ணன் சாத்துபடி




ஏழ்மை பிறப்புக்கும் சேமம் இந்நோய்க்கும் ஈதே மருந்து
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமினுன்னித்தே. என்று நம்முடைய எல்லா வினைகளுக்கும் மருந்து அந்த கண்ணன் நாமமே என்று அறுதியிட்டு கூறுகின்றார் நம்மாழ்வார்.


Saturday, December 26, 2020

அத்யயனோற்சவம் - 13

                                இராப்பத்து - இரண்டாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    12    14    15    16    17    18    19   20   21   22     

             



திருவடி சேவை



பின்னழகு



திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாள்



இரவு சல்லா துணி அணிந்து நம்பெருமாள்
 மூலஸ்தானம்  திரும்பும் கோலம்




ஸ்ரீநிவாசர் திருமலையப்பனாக சேவை



பூலோக வைகுண்டமான திருவரங்கத்தில் நடைபெறும் ஒவ்வொரு விழாவிற்கும் அதன்பின்னர் சாஸ்திர, சம்பிரதாய காரணங்கள் பொதிந்துள்ளன.

ஒரு ஜீவாத்மா பரமபதம் அடைவதற்கு அர்ச்சிராதி மார்க்கமாக செல்வார். பரமபதத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் வீற்றிருக்கும் பரமபதநாதனின் நித்ய கைங்கரியத்தில் ஈடுபடுவார். அர்ச்சிராதி மார்கம் எப்படி இருக்கும்?

  1. மரணமானால் தானே வைகுந்தம் அடையமுடியும்!
  2. வைகுண்டம் அடைந்தவர் யாரும் திரும்பி வருவது இல்லையே!
  3. இவ்வழியில்தான் வைகுண்டம் சென்றேன் என்று நமக்கு சொல்ல யாரால் முடியும், என நமக்குத் தோன்றலாம்!

இக்கேள்விகள் அனைத்திற்கும் ஒரே விடை, ஸ்ரீமன் நாராயணன் பூவுலகிலேயே நம்மாழ்வாருக்கு இதனை காட்ட,   ஆழ்வார் அதை தமது திருவாய்மொழியில்  நமக்கு கூறி அருளியுள்ளார்.

பெருமாள் நம்மாழ்வாரிடம் ஆழ்வீர் நீர் பரமபதம் கிளம்பும் நேரம் வந்துவிட்டது (திருவாய்மொழி 10-8 பத்து முடிந்தவுடன்). உம்மை இவ்வழியில் அழைத்துச்  சென்று என் நித்ய கைங்கர்யதில் ஈடுபடுத்துவேன் என்று நம்மாழ்வாருக்கு காட்டியருளினார்.

அதை கண்ட ஆழ்வார் தன்னைப் போல் சரணாகதி செய்யும் அனைவருக்கும் வைகுந்தம் கிடைக்கும் என்பது நாம் அறிவதற்காக சூழ்விசும் பணிமுகில் என்ற பதிகத்தைப் (திருவாய்மொழி 10-9) பாடியுள்ளார்.

அர்ச்சிராதி மார்க்கத்தில் யார் யார் வந்தனர், எப்படி அடியார்களை பலர் புகழ்கின்றனர், பெருமான் வைகுந்த வாசலில் வந்து எப்படி தன்னை கைபிடித்து அழைத்து சென்றார் என்ற அனுபவங்களை பாசுரங்களாக பாடியுள்ளார்.

ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வாரின் திருவாய்மொழி பெருமையை நாம் அறிவதற்காக, திவ்ய தேசங்களில் முதன்மையானதான  திருவரங்கத்தில் ஸ்வாமி இராமானுசர் இராப்பத்து உற்சவத்தில் சில ஜதீகங்களை சேர்த்தார்.

சூழ்விசும் பணிமுகில் பதிககித்தில் சொல்லப்பட்ட காட்சிகளை உடையவர் (இராமானுசர்) உலகோர் அறிய, ஒரு நாடகம் போல் அமைத்துள்ளார். அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லும் ஜீவாத்மாவாக இங்கே நமக்கு நடித்து காட்டுபவர் "நம்பெருமாள்".

இராப்பத்து உற்சவத்தில் நம்பெருமாள் தினமும் மதியம் புறப்பாடு கண்டருளி பரமபத வாசலை கடந்து திருமாமணி மண்டபத்தை (ஆயிரம்கால் மண்டபம்) அடைவார்.

1. ஸ்தூல சரீரத்துடன் அர்ச்சிராதி மார்க்கமாக வைகுந்தம் செல்லும் ஜீவாத்மா

சூழ்விசும்பணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடலலை திரை கையெடுத்தாடின
ஏழ்பொழிலும் வளமேந்திய என்னப்பன் 
வாழ்புகழ்நாரணன் தமரைக் கண்டுகந்தே
.- என்று நம்மாழ்வார் பாடியபடி

நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து  புறப்படும் பொழுது எப்போதும் போல் இல்லாமல் ஒரு போர்வை சார்த்திக்கொண்டு ஆபரணங்கள் வெளியே தெரியாமல் சேவை சாதிப்பார். அதாவது ஒரு ஜீவாத்மா ஸ்தூல சரீரத்துடன் அர்ச்சிராதி மார்கமாக வைகுண்டம் அடைய செல்வதாக ஐதீகம்.  

2.பரமபதம் செல்லும் ஜீவாத்மாவை தேவர்களும் முனிவர்களும் வணங்குகின்றனர். 

திருவரங்கம் கோயில் ஸ்தலத்தார்கள் அனைவரும் சந்தன மண்டபத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து வெளியே வந்தவுடன் கீழே விழுந்து வணங்குவர். 

தொழுதனர் உலகர்கள் தூபநல்மலர்மழை
பொழிவனர் பூமியன்றளந்தவன் தமர்முன்னே
எழுமினென்று இருமருங்கிசைத்தனர் முனிவர்கள் 
வழியிது வைகுந்தற்கு என்று வந்தெதிரே.

3.வைகுந்தம் செல்லும் ஜீவாத்மாவை - வழிநெடுகிலும் உலகத்தில் இருப்பவர்கள் தோரணங்கள் கட்டி தொழுததாக பாசுரம்

நாரணன் தமரைக்கண்டுகந்து நல்நீர்முகில்
பூரணப்பொற்குடம் பூரித்தது உயர்விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுரனருலகே. 
5நvaiம்பெருமாள் புறப்பாட்டில் தங்கக் குடை, சாமரம், மற்றும் ஆலவட்டம் ஆகியவை  பெருமாளுக்கு சாதிப்பார்கள். இக்கைங்கரியங்கள் ஜீவாத்மாவை வரவேற்கும் நிகழ்வாக ஏற்படுத்தபட்டுள்ளன.

4. அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லும் ஜீவாத்மாவை நான்கு வேதங்களும் நன்கு அறிந்தவர்கள் வேதத்தை ஓதி வரவேற்பதாக பாசுரம்.

பரமபதம் அடைவதற்கு விரஜா நதியை கடக்க வேண்டும். திருவரங்கத்திலும் வைகுண்ட வாசலுக்கு முன்னர் விரஜா நதி மண்டபம் உண்டு. இங்கு பெருமாள் வந்தவுடன் வேத விண்ணப்பம் நடைபெறும். வேதவியாசர்/ பராசர பட்டர்   வேதம் ஓதுவர்.  நான்கு வேதங்களில் உள்ள பல சாகைகள் இங்கு ஒதப்படுகிறது.

மாதவன் தமரென்று வாசலில்வானவர்
போதுமின்எமதிடம் புகுதுகவென்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர்கள் கெருடர்கள்
வேதநல்வாயவர் வேள்வியுள் மடுத்தே. 

 5. வைகுந்தம் நுழைய ஜீவாத்மா ஸ்தூல சரீரம் விடுத்து சூக்ஷ்ம சரீரம் பெறுதல்.

இவ்விஷயம் இப்பத்தில் நேராக எப்பாசுரத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் சாஸ்திரத்திலும், வேதத்திலும் இவ்விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஜீவாத்மா விரஜா நதியை கடந்து வைகுண்டம் அடையும்போது  அதற்கு ஒரு புது சரீரம் கிடைக்கும்.

இதை நடத்தி காட்டவே நம்பெருமாள் பரமபதவாசல் நுழைவதற்கு முன் திரையிட்டு பெருமாள் மேல் மூடியிருக்கும் போர்வை விலக்கப்படும். அனைத்து ஆபரணங்களுடன் பெருமாள் சேவை சாதித்த படி வைகுண்ட வாசல் கடந்து வெளியே வருவார்.  (மேலும்  அடுத்த பதிவில் தொடரும்)

வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் நம்மாழ்வாருக்காக பரமபத வாசல் சேவை சாதிக்கின்றார். அடுத்த பத்து நாட்கள் ஆழ்வார் ஒவ்வொரு பத்தாக பாசுரம் சேவித்து பின் பத்தாம் நாள் மோட்சம் அடைவதாக ஐதீகம்.

காரியாருக்கும் உடைய நங்கையாருக்கும் திருமகவாக வைகாசி திங்கள், விசாக நட்சத்திரம் பௌர்ணமி கூடிய நன்னாளில் ஆழ்வார் திருநகரி இன்று அழைக்கப்படும் திருக்குருகூரில் திருஅவதாரம் செய்தார் ஆழ்வார். திருக்குறுங்குடி நம்பியே அவதாரம் செய்ததாக ஐதீகம்.

திருமாலது அம்சமும் அவரது கௌஸ்துபத்தின் அம்சமும், விஷ்வஷேனரது அம்சமும் பொருந்திய ஆவார், பிறந்த குழந்தையைப் போலல்லாது உலக இயற்கைக்கு மாறாக அழுதல், பாலுண்ணல் முதலிய செயல்கள் இல்லாமல் இருந்தார். கருப்பையில் அறியாமை தீண்டாத கருவை சடமென்ற வாயு தீண்டி அறியாமைக்குள்ளாக்கி அழுதல், அரற்றுதல் முதலிய செய்கைகளை தூண்டுகின்றது என்பர். அந்த சடம் என்ற வாயுவை ஹும் என்று ஒறுத்ததால் ஆழ்வார் ’சடகோபர்’ என்னும் திருநாமம் பெற்றார்.

கழிமின் தொண்டீர்காள்! கழித்து
தொழுமின் அவனைத் தொழுதால்
வழிநின்ற வில்விணை மாள்வித்து
அழிவின்றி யாக்கம் தருமே. என்று சரணாகதி தத்துவத்தை அருளிய காரி மாறப் பிரான் நான் மறைகளுக் கொப்பாக திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்னும் நான்கு பிரபந்தங்களை திருவாய் மலர்ந்தருளினார். தமது சீடர் மதுரகவியாழ்வாருக்கும் உபதேசித்தருளினார்.

திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களும் அந்தாதியாக அமைத்துப் பாடியுள்ளார்.
ஆடி ஆடி அகங்கரைந்து இசை
பாடிப் பாடிகண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா! என்று 
வாடி வாளும் இவ்வாணுதலே என்று தன்னையே பராங்குச நாயகியாக பாவித்து பாசுரம் பாடிய நம்மாழ்வாரின் வைகுண்ட ஏகாதசியன்று சேவிக்கப்படும் முதல் பத்தால் எம்பிரானது மேன்மையையும்(பரத்வம்), திருவாய் மொழித் திருநாளின் இரண்டாம் நாளான இன்று சேவிக்கப்படும் இரண்டாம் பத்தால் எம்பெருமானது படைத்தலும்(காரணத்வம்) கூறப்படுகின்றது என்று பெரியோர்கள் அருளிச் செய்வர்.

ஏகாதசி விரதம் இருந்தவர்கள் முதல் அதிகாலை சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை சேவித்து விரதத்தை தொடங்கி நாள் முழுவதும் உபவாசம் இருக்கின்றனர். வெறும் துளசி தீர்த்தம் மட்டும் பருகி( முடியாதவ்ர்கள் சிறிது அவல் உட்கொண்டு) , எப்பொழுதும் ஓம் நமோ நாராயணா என்னும் நாமம் ஓதி , இரவு முழுவதும் உறங்காதிருந்து பின் துவாதசி காலையில் துளசி தீர்த்தம் பருகி பாரணையுடன் விரதத்தை முடிக்கின்றனர். இவ்வாறு வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த அம்பரீஷ இராஜாவை துர்வாசர் சாபத்திலிருந்து பெருமாள் தமது சுதர்சன சக்கரத்தை அனுப்பிய கதையும் உண்டு.

முக்கோடி துவாதசியான  இன்று காரைக்காலில் நித்ய கல்யாணப் பெருமாள் கம்பளி அங்கியில் சேவை சாதிக்கின்றார்.  திருப்பதி திருமலையில் இன்று சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது. நாச்சியார் கோயிலில் இன்று முக்கோடி துவாதசி தெப்போற்சவம் நடைபெறுகின்றது.

அத்யயனோற்சவம் - 12 (வைகுண்ட ஏகாதசி)

இராப்பத்து - முதல் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    11    13    14    15    16    17    18    19   20   21   22     

             

  

 

                       

இரத்ன அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை தரித்து நம்பெருமாள் சேவை சாதிக்கும் அழகு.

                                           

பின்னழகு 




உபய நாச்சியார்களுடன் ஸ்ரீநிவாசர் 



மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. அன்று அதிகாலை 4 மணி அளவில் பரம பத வாசல் திறப்பு, அன்று நம் பெருமாள் சிவப்பு நிற ரத்ன அங்கியில் சேவை சாதிக்கின்றார். கஸ்தூரி திலகத்துடன், இரத்னங்கியிலே சிவப்பு, வெள்ளை, பச்சை, முத்து , பவளம் என்று எல்லா நிற மணிகளும் மின்ன, மெல்லிய சல்லாத் துணி இடையினில் உடுத்தி, கிளி மாலையுடன் , கோல விளக்கே , கொடியே, விதானமே என்று ஆண்டாள் பாடியபடி அழகாக எம்பெருமான் தங்க தோளுக்கினியாளில் எழுந்தருளி விடியற்காலையில் அரங்கன் பட்டர் வம்சத்தினரின் வேத விண்ணப்பம் கண்டருளி அரையர்கள் திருவாய்மொழி தொடங்க இரத்தின அங்கியில் சிம்ம கதியில் நமக்கு வைகுண்ட பேற்றை வழங்க ரங்கா, ரங்கா என்ற கோஷத்துடனே எழுந்தருளுகின்றார். அலைகடலென பக்தர்களின் பக்தி அலை நடுவே பரமபத வாயிலை அடைந்து  விரஜா நதி மண்டபத்தில் வேத முழக்கம் கேட்டருளி பரமபத வாசல் திறக்க பரமபத நாதனாய் சேவை சாதித்து திருமாமணி மண்டபம் என்னும் ஆயிரங்கால் மண்டபம் சேர்ந்து நாள் முழுதும் சேவை சாதிக்கின்றார். பொது ஜன சேவையும், அரையர் சேவையும் நடைபெறுகின்றது. இரவு 9 மணிக்கு குளிருக்காக தலையில் ஒரு குல்லாவை அணிந்து, ஒரு சல்லாத்துணியினால் மேனியை மறைத்துக்கொண்டு  திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் அதிகாலை மூலஸ்தானத்தை அடைகின்றார் நம் பெருமாள்.


மூலவர் அரங்கநாதர் முத்தங்கி சேவை தருகின்றார் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முத்தங்கியில் மூலவரை சேவிக்கலாம்.

அனைத்து வைணவ தலங்களிலும் மூலவர் மற்றும் உற்சவர் வைர அங்கி, ரத்ன அங்கி, முத்தங்கி, புஷ்ப அங்கி அல்லது சிறப்பு அலங்காரத்தில் இன்று சேவை சாதிக்கின்றனர். பரமபதவாசல் திறக்கப்படுகிறது அதன் வழியே சென்று பெருமாளை தரிசிக்கின்றனர் பக்தர்கள்.

காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை விஞ்சிய தெய்வம் இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமும் இல்லை என்பது முன்னோர் வாக்கு. தீட்டுக்காலத்தில் கூட ஏகாதசி விரதம் மேற்கொண்டால் பயன் உண்டு. 

ஏகாதசி பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியில்( பக்ஷம்) பதினொன்றாவது நாளாகும். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினோரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் ‘நம் வினைகள் எல்லாம் அழிந்துவிடுவது உறுதி என்பர் முன்னோர். 

ஏகாதசி திதியின் உரிய தேவதை தர்ம தேவதை ஆகும். ஆகவே தர்ம திதியாகிய ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடித்தால் தர்மத்திற்கு வளர்ச்சி ஏற்படும். தர்மத்தைக் காப்பாற்ற யுகம் யுகமாக அவதாரம் செய்யும் இறைவனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.

வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும் அதிசயமாக சில வருடம் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. ஒவ்வோரு ஏகாதசிகளுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு, விரதத்திற்கு ஒரு பலன் உண்டு. எல்லா ஏகாதசிகளுக்கும் சிறந்தது மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசியாகும்.  இது வைகுண்ட ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் மோக்ஷ ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றது. இது மூன்று கோடி ஏகாதசிகளுக்கு சமம் என்பதால் முக்கோடி ஏகாதசி. இராவணனுடைய கொடுமையிலிருந்து தப்பிக்க பெருமாளிடம் முப்பத்து முக்கோடிதேவர்களும் சரணடைந்ததால், இந்த ஏகாதசி. முக்கோடி ஏகாதசி என்றழைக்கப்படுகின்றது.

திருமால் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று முரன் என்னும் அரக்கனை அழிக்க சென்றார். பல வருடங்கள் அவனுடன் போரிட்டும் அவனை எளிதாக அழிக்க முடியவில்லை எனவே பெருமாள் பத்ரிகாச்ரமம் சென்று அங்கு ஒரு குகையில் படுத்துக் கொண்டார். திருமாலைத் தேடி வந்த அசுரன் அவர் நித்திரையில் இருப்பதை கண்டு அவரை தாக்கத் தொடங்கினார். அப்போது பெருமாளின் திருமேனியிலிருந்து ஒரு மகத்தான சக்தி ( தேவி ஸ்வரூபம்) தோன்றி அந்த அசுரனை மாய்த்தது.

இதனால் மகிழ்ந்த எம்பெருமான் அவள் வேண்டிய வண்ணம் அவளுக்கு ஏகாதசி என்னும் நாமம் விளங்கும் என்றும். ஏகாதசி அன்று விரதமிருந்து பெருமாளை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இம்மையிலும், மறுமையிலும் நல்லவனற்றையே அருளுவதாக வரம் கொடுத்தார்.

ஏகாதசி விரதம், இம்மையில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை அளிப்பதோடு மறுமையில் பேரின்பத்தையும் அருளும் என்பது உறுதி.

இந்த மகத்தான விரதத்தை பின்பற்ற சில இன்றியமையாத விதிமுறைகளை முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவை தவம், தானம், புலனடக்கம் என்று மூன்று வகைப்படும். புலனடக்கத்தின் அடிப்படையாக இருப்பது உணவுக்கட்டுப்பாடு, எனவேதான் ஏகாதசி நன்னாளில் முழுமையான உண்ணாவிரதத்தை முக்கியமாகக் கொண்டனர்.

ஆகவே அமைதியாக தியானத்தில் அமர்ந்து எப்போதும் இறைவன் திருநாமத்தை ஸ்மரணம் செய்து கொண்டிருக்கலாம். இதனால் உடலும் உள்ளமும் தூய்மை அடைந்து பக்குவபப்டுகின்றது. எனவே இவ்விரதத்தை கடைப்பிடிப்பவர் தவம் செய்ய தகுதி உடையவர் ஆகின்றார்.

அல்லும் பகலும் அனவரதமும் இறைவனைப் பற்றி நினைத்தல், அவரின் இனிமையான திருநாமங்களை நா இனிக்கக் கூறுதல், அவர் எழுந்தருளி அருள் பாலிக்கும் கோவில்களிலோ அல்லது தங்கள் தங்கள் இல்லங்களிலேயோ ஆடி ஆடி அகம் கரைந்து, இசைப் பாடி பாடி கண்ணீர் மல்கி அவரிடம் நம் மனம், மொழி, மெய்களை ஈடுபடுத்தவே விரதம் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஏகாதசி விரதம் இருந்த பின், இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை உண்பதற்கு முன் அதை தகுந்த பெரியோர்களுக்கு முதலில் வழங்கி உண்ணச் செய்யும் துவாதசி பாரணையில் தானம் என்ற உயர்ந்த பண்பு விளங்குகின்றது.

இனி ஏகாதசி விரத மகிமையைப் பற்றிக்காண்போமா? திருமாலின் அவதாரமான ஸ்ரீராமனே பங்குனி மாதத்தின் விஜயா என்னும் ஏகாதசி விரதம் இருந்து பின் கடலைக் கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையை வென்றார் என்று புராணம் கூறுகின்றது. இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் சீதா தேவியின் அருளைப் பெறலாம்.

ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹாராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியாதவாறு திருமாலில் சுதர்சன சக்கரம் காத்தது என்று பாகவத புராணம் கூறுகின்றது.

திருக்குறுங்குடி என்ற தலத்தில் பாணர் குலத்தைச் சார்ந்த நம்பாடுவான் ஏகாதசி அன்று எம்பெருமானைப் பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்க வந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப விமோசனம் அளித்ததை கைசிக புராணம் கூறுகின்றது.

ருக்மாங்கதன் என்ற மாமன்னன் இந்த விரதத்தை தானும் கடைப்பிடித்து தன் நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் கூறுகின்றது.

பீமன் ஒர் ஆண்டு முழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா என்ற விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுப்பயனையும் பெற்றதாக பத்மபுராணம் கூறுகின்றது.

பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதம் கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திரப் போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்நாள்தான்.

வைகுண்ட ஏகாதசி எல்லா விஷ்ணுவாலயங்களிலும் கொண்டாடப்பெற்றாலும், இதன் பெருமை மிகுதியாக விளங்குவது சோழ நாட்டு திருவரங்கத்தில்தான். ஏகாதசியின் முரு றுழுப்பயனையும் அடையும் வாய்ப்பு திருவரங்கத்தில் அமைந்திருந்தாலும் அதே அமைப்பை நம் முன்னோர்கள் நாம் எல்லோரும் உய்ய அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் அமைத்தனர்.

எம்பெருமானுடன் போராடித் தோற்று அவர் அருள் பெற்ற அரக்கர்கள் இருவர் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை , உலகில் உள்ள எல்லாரும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் எம்பெருமானை நோக்கி வைகுண்ட ஏகாதசியன்று திருவரங்க வடக்கு வாசல் வழியாகத் தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளி வரும் போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் எத்தனை கொடியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அருள வேண்டும் என்றும் வேண்டினார்கள். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் வழியாக எம்பெருமான் பவனி வரும் பெருநிகழ்ச்சி ஏற்பட்டது.

பல வடிவங்களில் எம்பெருமான் அவதரித்து பலரையும் காத்தது போல, அர்ச்சாவதாரத்தில் தானே முக்தியடையும் ஒருவனாக நடித்து அவ்வாறு அடைபவன் தன் முக்தி பயணத்தில் என்னென்ன மாற்றங்களையும், வரவேற்புகளையும் பேரின்பத்தையும் பெறுவானோ, அவைகளை நிகழ்த்தி காட்டும் முறையில் பெருமாளின் வைகுண்ட ஏகாதசி புறப்பாடும் திருவுலாவும் விளங்குகின்றன.

அத்யயன உற்சவத்தில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியை பெருமாள் செவி மடுக்கும் இராப்பத்து இந்த வைகுந்த ஏகாதசியன்று முதல் தொடங்குகின்றது. நம்மாழ்வார் பாசுரங்கள் இரவில் சேவிக்கப்படுவதால் இராப்பத்து என்று அழைக்கப்படுகின்றது. தினமும் ஒரு பத்து அதாவது நூறு பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.