பகல் பத்து - பத்தாம் நாள்
இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்
பவள மாலை, திருமாங்கல்யம் மிளிர கையில் கிளி ஏந்தி சர்வாபரண பூஷிதையாக அமர்ந்த கோலத்தில் நாச்சியாராக சேவை சாதிக்கின்றார் நம்பெருமாள்.
பின்னழகு
ஏலக்காய் பட்டை ஜடையுடன்
கிளி மாலையுடன்
ஸ்ரீநிவாசர் நாச்சியார் திருக்கோலம்
பகற்பத்தின் நிறை நாள் சகல விஷ்ணுவாலயங்களிலும் நாச்சியார் திருக்கோலம் என்னும் மோகினி அவதாரத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். திருமங்கையாழ்வாரின் ஒன்பது, பத்தாம் பத்துக்களும், இரு தாண்டகங்களும் இன்று சேவிக்கப்படுகின்றன.
எம்பெருமான் யோக நித்திரையிலிருந்த போது முரன் என்னும் அசுரன் அவரை அழிக்க வந்தான் அப்போது எம்பெருமான் மேனியிலிருந்து ஒரு சக்தி தோன்றி அசுரனை அழித்தது. அசுரனை அழிக்க எம்பெருமான் எடுத்த அவதாரமே மோகினி அவதாரம்.
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை மத்தாகவும் கடைந்த போது பெருமாள் கூர்மாவதாரம் எடுத்து அந்த மலையை தாங்கி அமுதம் வர உதவினார். அமிர்தத்தை அசுரர்கள் பருகாமல் இருக்க தந்திரம் செய்ய பெருமாள் எடுத்த அவதாரமே மோகினி அவதாரம்.
மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க அரங்கன் எழுந்தருளும் அந்த அழகை வர்ணிக்க அந்த ஆதி சேஷனானலும் முடியாது. முன்னழகும் பின்னழகும் கண்ணை விட்டு நீங்காத காட்சி. வெண் பட்டு உடுத்தி, கையிலே கிளி ஏந்தி, கால்களை மடித்த நிலையில் கிளி மாலையில், நம் பெருமாளின் அந்த அலங்காரம் பாருங்களேன் எத்தனை அற்புதம். முன்னழகிலும் பின்னழகு என்ற படு ஏலக்காய் ஜடையுடன் பின்னழகும் அவ்வளவு நேர்த்தி.
இரண்டாம் அரையர் சேவையில் இராவண வதம் முடிந்து திருமொழித் திருநாள் சாற்றுமுறை நடைபெறும்.
அதன்பின்னர் ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்கள் கருட மண்டபத்தில் எழுந்தருளி இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அருளப்பாடு நடந்து பரிவட்டம் சந்தனம் மற்றும் ஸ்ரீ சடகோபன் சாதிப்பார். ஆழ்வார்கள் அனைவரும் இன்று மட்டும் நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளி நம்மாழ்வாரின் சடாரியை பெற்றுக்கொண்டு தங்களது சன்னதிகளுக்கு சென்று சேருவர்.
மாயை என்னும் மண், பொன், பெண் ஆசையை விட்டு நாளை நான் தரும் பரமபதம் அடைய என்னை சரணடைந்து மாயையிலிருந்து விடுபட்டு வைகுந்த பதம் அடைவீர் என்று உணர்த்துவதாய் பட்டர் விளக்குகின்றார் இவ்வலங்காரத்தை.
அரங்கன் தாம் பூண்ட இத்திருக்கோலம் கண்டு மிக்க பூரிப்பு..! பராசர பட்டர் வருகின்றார்..! தாயாரின் மூக்குத்தி,..! தாண்டா வைத்து பின்னிய கூந்தலங்காரம்..! திருமார்பினில் பவழ மாலை, இரட்டை முத்துச்சரம், திருமாங்கல்யம்..! எல்லாம் பொலிவுடன் மிளிர நாச்சியார் திருக்கோலத்தில் பரிமளிக்கின்றார்.!
”பட்டரே..! எப்படி இருக்கின்றேன்.? ” – அரங்கன் வினவுகின்றார்..!
தாயார் கோலத்தில் அரங்கனைக் கண்ட பட்டர் கண்குளிர நமஸ்கரிக்கின்றார்..!
“நாயன்தே..! அற்புதம் அடியேன்..! ஆனாலும் ஒரு சிறு குறை..!” என்கிறார்..!
எனன குறை கண்டாய் பட்டரே..?
”எவ்வளவுதான் கனகச்சிதமாக இத்திருக்கோலம் அமைந்தாலும், தாயாரின் திருக்கண்களில் காணப்படும் காருண்யம், வாத்ஸல்யம் இல்லையே ப்ரபோ..!” என்கிறார் அனுதினமும் தாயாரை போற்றி, தம் சிந்தையில் ஏற்றி வழிப்பட்ட பட்டர்..!
இந்த திருநாள் முழுவதுமே அரங்கன், ஆழ்வார்களின் அன்பு மற்றும் அனுபவ பெருக்காகிய தீந்தமிழ் பாசுரங்களைக் கேட்ட வண்ணம் இருப்பான்..! ஆழ்வார்கள் மீதும், அவர்கள் வழி வந்து வணங்கும் அவர்களது அடியார்கள் மீதும் அவனது கருணை ஒரு தாயின் பரிவோடு பெருக்கெடுத்து ஓடும் தருணமிது..! அவன் இன்று “அரங்கத்தம்மா…!” ஆகின்றான்..! ஆம்..! ஓப்பில்லா நாச்சியார் திருக்கோலம் ஆகின்றான்..! ஆயர் குலத் தலைவனாம் இந்த அரங்கத்தம்மாவின் சரண் புகுவோம்…! உய்வடைவோம்…!
திருவாய்மொழியின் நிறை நாள் திருமங்கையாழ்வாரின் பத்தாம் பத்து மற்றும் பதினொன்றாம் பத்தில் அருளிய பல திருப்பதிகளைப் பற்றிய பாசுரங்கள், இராமவதாரம், கிருஷ்ணாவரத்தைப் பற்றிய பாசுரங்கள், மற்றும் பரகால நாயகியாகவும், அவரது தாயாகவும் பாடிய பாசுரங்கள், திருகுறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவை சேவிக்கப்படுகின்றது. இவ்வாறு பகல் பத்து நாட்களில் முதல் இரண்டு ஆயிரங்கள் சேவிக்கப்படுகின்றன.
மாயையே மோகினி அந்த மாயையிலிருந்து மனிதன் விடுபட்டு எம்பெருமான் திருவடிகளில் பூரண சரணாகதி அடைந்தால்தான் வைகுண்டம் என்பதை நாச்சியார் திருக்கோலமும் அடுத்த நாள் சொர்க்க வாசல் சேவையும் உணர்த்துகின்றன.
No comments:
Post a Comment