Showing posts with label பகல் பத்து. Show all posts
Showing posts with label பகல் பத்து. Show all posts

Friday, December 25, 2020

அத்யயனோற்சவம் - 11(நாச்சியார் திருக்கோலம் )

                                       பகல் பத்து - பத்தாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    12    13    14    15    16    17    18    19   20   21   22     

             

பவள மாலை, திருமாங்கல்யம் மிளிர  கையில் கிளி ஏந்தி  சர்வாபரண பூஷிதையாக அமர்ந்த கோலத்தில் நாச்சியாராக சேவை சாதிக்கின்றார் நம்பெருமாள்.



பின்னழகு

ஏலக்காய் பட்டை ஜடையுடன்

கிளி மாலையுடன் 


ஸ்ரீநிவாசர் நாச்சியார் திருக்கோலம்



பகற்பத்தின் நிறை நாள் சகல விஷ்ணுவாலயங்களிலும் நாச்சியார் திருக்கோலம் என்னும் மோகினி அவதாரத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். திருமங்கையாழ்வாரின் ஒன்பது, பத்தாம் பத்துக்களும்,  இரு தாண்டகங்களும் இன்று சேவிக்கப்படுகின்றன.

எம்பெருமான் யோக நித்திரையிலிருந்த போது முரன் என்னும் அசுரன் அவரை அழிக்க வந்தான் அப்போது எம்பெருமான் மேனியிலிருந்து ஒரு சக்தி தோன்றி அசுரனை அழித்தது. அசுரனை அழிக்க எம்பெருமான் எடுத்த அவதாரமே மோகினி அவதாரம்.

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை மத்தாகவும் கடைந்த போது பெருமாள் கூர்மாவதாரம் எடுத்து அந்த மலையை தாங்கி அமுதம் வர உதவினார். அமிர்தத்தை அசுரர்கள் பருகாமல் இருக்க தந்திரம் செய்ய பெருமாள் எடுத்த அவதாரமே மோகினி அவதாரம்.

மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க அரங்கன் எழுந்தருளும் அந்த அழகை வர்ணிக்க அந்த ஆதி சேஷனானலும் முடியாது. முன்னழகும் பின்னழகும் கண்ணை விட்டு நீங்காத காட்சி. வெண் பட்டு உடுத்தி, கையிலே கிளி ஏந்தி, கால்களை மடித்த நிலையில் கிளி மாலையில், நம் பெருமாளின் அந்த அலங்காரம் பாருங்களேன் எத்தனை அற்புதம். முன்னழகிலும் பின்னழகு என்ற படு ஏலக்காய் ஜடையுடன் பின்னழகும் அவ்வளவு நேர்த்தி.

இரண்டாம் அரையர் சேவையில் இராவண வதம் முடிந்து திருமொழித் திருநாள் சாற்றுமுறை நடைபெறும்.

அதன்பின்னர் ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்கள் கருட மண்டபத்தில் எழுந்தருளி இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அருளப்பாடு நடந்து பரிவட்டம் சந்தனம் மற்றும் ஸ்ரீ சடகோபன் சாதிப்பார். ஆழ்வார்கள் அனைவரும் இன்று மட்டும் நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளி நம்மாழ்வாரின் சடாரியை பெற்றுக்கொண்டு தங்களது சன்னதிகளுக்கு சென்று சேருவர்.


மாயை என்னும் மண், பொன், பெண் ஆசையை விட்டு நாளை நான் தரும் பரமபதம் அடைய என்னை சரணடைந்து மாயையிலிருந்து விடுபட்டு வைகுந்த பதம் அடைவீர் என்று உணர்த்துவதாய் பட்டர் விளக்குகின்றார் இவ்வலங்காரத்தை.

அரங்கன் தாம் பூண்ட இத்திருக்கோலம் கண்டு மிக்க பூரிப்பு..! பராசர பட்டர் வருகின்றார்..! தாயாரின் மூக்குத்தி,..! தாண்டா வைத்து பின்னிய கூந்தலங்காரம்..! திருமார்பினில் பவழ மாலை, இரட்டை முத்துச்சரம், திருமாங்கல்யம்..! எல்லாம் பொலிவுடன் மிளிர நாச்சியார் திருக்கோலத்தில் பரிமளிக்கின்றார்.!

”பட்டரே..! எப்படி இருக்கின்றேன்.? ” – அரங்கன் வினவுகின்றார்..!

தாயார் கோலத்தில் அரங்கனைக் கண்ட பட்டர் கண்குளிர நமஸ்கரிக்கின்றார்..!

“நாயன்தே..! அற்புதம் அடியேன்..! ஆனாலும் ஒரு சிறு குறை..!” என்கிறார்..!

எனன குறை கண்டாய் பட்டரே..?

”எவ்வளவுதான் கனகச்சிதமாக இத்திருக்கோலம் அமைந்தாலும், தாயாரின் திருக்கண்களில் காணப்படும் காருண்யம், வாத்ஸல்யம் இல்லையே ப்ரபோ..!” என்கிறார் அனுதினமும் தாயாரை போற்றி, தம் சிந்தையில் ஏற்றி வழிப்பட்ட பட்டர்..!

இந்த திருநாள் முழுவதுமே அரங்கன், ஆழ்வார்களின் அன்பு மற்றும் அனுபவ பெருக்காகிய தீந்தமிழ் பாசுரங்களைக் கேட்ட வண்ணம் இருப்பான்..! ஆழ்வார்கள் மீதும், அவர்கள் வழி வந்து வணங்கும் அவர்களது அடியார்கள் மீதும் அவனது கருணை ஒரு தாயின் பரிவோடு பெருக்கெடுத்து ஓடும் தருணமிது..!  அவன் இன்று “அரங்கத்தம்மா…!” ஆகின்றான்..! ஆம்..! ஓப்பில்லா நாச்சியார் திருக்கோலம் ஆகின்றான்..! ஆயர் குலத் தலைவனாம் இந்த அரங்கத்தம்மாவின் சரண் புகுவோம்…! உய்வடைவோம்…!

திருவாய்மொழியின் நிறை நாள் திருமங்கையாழ்வாரின் பத்தாம் பத்து மற்றும் பதினொன்றாம் பத்தில் அருளிய பல திருப்பதிகளைப் பற்றிய பாசுரங்கள், இராமவதாரம், கிருஷ்ணாவரத்தைப் பற்றிய பாசுரங்கள், மற்றும் பரகால நாயகியாகவும், அவரது தாயாகவும் பாடிய பாசுரங்கள், திருகுறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவை சேவிக்கப்படுகின்றது.  இவ்வாறு பகல் பத்து நாட்களில் முதல் இரண்டு ஆயிரங்கள் சேவிக்கப்படுகின்றன.

மாயையே மோகினி அந்த மாயையிலிருந்து மனிதன் விடுபட்டு எம்பெருமான் திருவடிகளில் பூரண சரணாகதி அடைந்தால்தான் வைகுண்டம் என்பதை நாச்சியார் திருக்கோலமும் அடுத்த நாள் சொர்க்க வாசல் சேவையும் உணர்த்துகின்றன. 

Thursday, December 24, 2020

அத்யயனோற்சவம் - 8

                                            பகல் பத்து - ஏழாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    9    10    11    12    13    14    15    16    17    18    19   20   21   22     

             

        

பகல்பத்தின் ஏழாம் நாள் நம்பெருமாள் முத்துக்கிரீடம், புஜ கீர்த்தி, மகர கண்டிகை, இரத்தின அபய ஹஸ்தம், மார்பில் லட்சுமி பதக்கம், காசு மாலை, அர்த்த  சந்திரன் ஆகிய ஆபரணங்களை அழகு செய்தவாறு சேவை சாதித்து அருளுகின்றார்.

                     


ஸ்ரீநிவாசர் கோவர்த்தன கிரிதாரி கோலம்



திருமொழித் திருநாளின் ஏழாம் நாள் அன்றும் திருமங்கை மன்னனின் மூன்றாம் பத்து மற்றும் நான்காம் பத்து சேவிக்கப்படுகின்றது.


பரகாலர் வட மொழி வேதங்கள் நான்குக்கொப்பாக நம்மாழ்வாரின் அருளிச் செயல்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை,சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்விய நூல்களையருளித் திருமங்கையாழ்வார் என்று திருநாமம் பெற்றார். இவற்றுள் பெரிய திருமொழிப் பாடல்களியற்றும் போது எம்பெருமான் சேவை சாதிக்கும் திருப்பதிக்ளுக்கு தானே சென்று வணங்கி திருப்பிருதி முதல் திருக்கோட்டியூர் நிறைவாக பாசுரம் பாடியுள்ளார்.

இன்று திருவயிந்திபுரம், திருசித்ரகூடம் சோழ நாட்டுத் திருப்பதிகளான திருக்காழிசீராம விண்ணகரம், திருவாலி, திருநாங்கூர் திருப்பதிகள் பதினொன்று (1. திருமணி மாடக் கோவில்: 2.திருவைகுந்த விண்ணகரம் : 3.திரு அரிமேய விண்ணகரம் 4.திருத் தேவனார் தொகை 5.திருவண் புருடோத்தமம் 6.திருச்செம்பொன்செய்கோவில் 7.திருத்தெற்றியம்பலம் 8.திருமணிக்கூடம் 9.திருக்காவளம்பாடி. 10.திருவெள்ளக்குளம்(அண்ணன் கோவில்): 11. திருப்பார்த்தன் பள்ளி ), மற்றும், திருவிந்தளுர், திருவெள்ளியங்குடி ஆகிய திவ்ய தேசங்களின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. 

இன்று இரண்டாம் அரையர் சேவை: வாமனாவதாரம்

Monday, December 21, 2020

அத்யயனோற்சவம் - 4

பகல் பத்து -   மூன்றாம் நாள்


1    2    3      5    6    7     8    9    10    11    12    13    14    15    16    17    18    19   20   21   22     

           

                          

பகல் பத்து உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று திருவரங்கத்தில் நம்பெருமாள் முத்து கிரீடம், இரத்தின அபய ஹஸ்தம், நெற்றியில் கலிங்க தோளா, முத்துச் சரம், அண்ட பேரண்ட பட்சி பதக்கம், இரத்தின பாதங்களுடன் எழிலாக சேவை சாதிக்கின்றார்.

                                 


ஸ்ரீநிவாசர் ஏணிக் கண்ணன் கோலம் 



பகல் பத்தின் மூன்றாம் நாள் "சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்" , ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் சேவிக்கப்படுகின்றது.


         

பூமாதேவியாரே ஆண்டாளாக அவதரித்து சரணாகதி தத்துவத்தை நமக்கு போதித்தார்.

தனனை கோபிகையாக பாவித்து கண்ணனை கணவனாக அடையவும், நல்ல மழை பொழிந்து எங்கும் வளம் பெருகவும், ஸ்ரீ வில்லிபுத்தூரையே கோகுலமாகவும், வட பத்ர சாயியையே கண்ணனாகவும் கொண்டு பாவை நோன்பிற்காக ஆண்டாள் பாடிய முப்பது பாசுரங்களே திருப்பாவை. சரணாகதி தத்துவத்தை அருமையாக காட்டுகின்றாள் பிராட்டி இந்த பாசுரத்தில்

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.


இப்பிறவியில் மட்டுமல்ல ஏழேழு ஜன்மங்களிலும் உனக்கு சேவை செய்து கொண்டு உன் காலடியில் கிடக்க வேண்டும் மற்ற எண்ணங்கள் வந்தாலும் அதை நீ மாற்று என்று பாடுகிறார் ஆண்டாள்.


திருப்பாவை, "ஆன்ம நேயத்தை" போதிக்கின்றது. ஒரு ஆன்மா பிற ஆன்மாக்கள் மீது நேயம் கொண்டு தன்னோடு அவை அனைத்தும் இறைவனை அடையுமாறு செய்யும் நோக்கில் பாடப்பட்ட பாடல்களே இவை. "வஸுதைவ குடும்பகம்" என்று வட மொழியில் உலகம் எல்லாம் ஒரே குடும்பம் என்றும் நமது தமிழில் "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் " என்பதும் இந்நெறிதானன்றோ?


நாச்சியார் திருமொழியில் கண்ணனைத்தவிர வேறு யாருக்கும் தான் வாழ்க்கைப் பட மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதை தெளிவாக பாடுகின்றார் ஆண்டாள், மன்மதனை, குயிலை, பூக்களை, மேகங்களை தூதாக அன்ய்ப்புகின்றாள், கூடலிழைத்து பார்க்கின்றாள், கண்ணனுடன் திருமணம் நடைபெறுவதாக கனவு காண்கிறாள். இறுதியில் விருந்தாவனத்தில் பரந்தாமனைக் கண்டதைப் பாடுகின்றாள். இந்த மூன்றாம் நாள் நாமும் அந்த எம்பெருமானிடம் சரணாகதி அடைந்து உய்வோமாக. 


Sunday, December 20, 2020

அத்யயனோற்சவம் - 3

                                    பகல் பத்து - இரண்டாம் நாள்


1    2    4     5    6    7     8    9    10    11    12    13    14    15    16    17    18    19   20   21   22     

                                         

ஸ்ரீநம்பெருமாள் பகல்பத்தின் இரண்டாம் நாள்  முத்து சாய் கொண்டை, வைர அபய ஹஸ்தம், தங்கக்கிளி, பவள மாலை,  பஞ்சாயுத பதக்கம் அலங்காரத்தில் சேவை சாதிக்கும் அற்புத காட்சி 



ஸ்ரீநிவாசப்பெருமாள் இராமர் கோலம்
                                           

                                                                                 


பகல் பத்தின் இரண்டாம் நாள் பெரியாழ்வாரின் மற்ற பத்துக்கள் (3,4,5) சேவிக்கப்படுகின்றன. பெரியாழ்வாரின் அருளிச் செயல்கள் ’திருப்பல்லாண்டும்’, பாகவதஸாரமாகிய ’பெரியாழ்வார் திருமொழி’யும் ஆகும். கிருஷ்ணாவதாரத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட பெரியாழ்வார் பாசுரங்கள் பிள்ளைத் தமிழுக்கு ஒரு முன்னோடி.

திருவரங்கத்தில் பகல்பத்தின் மூன்றாம் நாள்  அரையர் அபிநயம் மற்றும் வியாக்கியான பாசுரங்கள்:

ஆற்றிலிருந்து  விளையாடுவோங்களை 
      சேற்றாலெறிந்து வளைதுகில் கைக்கொண்டு .....

தன்னோராயிரம் பிள்ளைகளோடு 
       தளர்நடையிட்டு வருவான் ......     ஆகிய பாசுரங்கள் ஆகும்.

இன்றைக்கு சேவிக்கப்படும் பெரியாழ்வாரின் 240  பாசுரங்களில் கண்ணனுக்கு முலை கொடுக்க அஞ்சுதல், கன்றின் பின் போக்கியதைக் குறித்து வருந்துதல், கண்ணன் காலிகள் பின் வருவதைக் க்ண்டு மகிழ்தல், கோவர்த்தன மலையை குடையாக எடுத்து ஆயர்கள், ஆநிரை காத்ததை சிறப்பித்தல், கண்ணின் வேய்ங்குழல் ஒசை சிறப்பை பாடுதல், கிருஷ்ணாவதார இராமாவதார சிறப்புகள், சிறிய திருவடி மாருதி அசோக வனத்தில் சீதாப் பிராட்டியாரிடம் கணையாழி அளித்தல் முதலியவற்றைப் பாடி, திருமாலிருஞ்சோலை, திருக்கோட்டியூர், தேவப்ரயாகை, திருவரங்கம்,திருவேங்கடம் ஆகிய திவ்ய தேசங்களின் சிறப்பையும் பாடுகின்றார்.

வடதிசை மதுரை சாளக்கிராமம் 
வைகுந்தம் துவரையயோத்தி
இடமுதைவதரியிடவகையுடைய
எம்புருடோத்தமனிருக்கை என்று வட நாட்டு திவ்ய தேசங்களையும் மங்களாசாசனம் செய்திருக்கின்றார் பெரியாழ்வார். 

மானிட சாதியில் தோன்றிற்று ஓர்மானிட சாதியை
மானிடசாதியின் பேரிட்டால் மறுமைக்கில்லை
வானுடை மாதவா! கோவிந்தா! என்றழைத்தக்கால்
நலமுடைநாரணன் தம்மன்னை நரகம்புகாள். என்று மானிடர்களுக்கு அறிவுரை வழங்கிய பெரியாழ்வாரின் திருமொழிகளை இந்த பகல் பத்தின் இரண்டாம் நாள் சேவித்து நன்மையடைவோமாக. 

     

அத்யயனோற்சவம் - 2

 பகல் பத்து - முதல் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    3    4     5    6    7     8    9    10    11    12    13    14    15    16    17    18    19   20   21   22     


நம்பெருமாள் 

ஸ்ரீநம்பெருமாள் நீள்முடி கிரீடம், வைர அபய ஹஸ்தம், திருமார்பில் லட்சுமி பதக்கம், கர்ண பூஷணம்,  பவள மாலை,  அடுக்கு பதக்கம்,  சூரிய பதக்கம் அலங்காரத்தில் சேவை சாதிக்கும் அழகு.


ஆசன பத்மத்திலே அழுந்திய திருவடி நிலைகள்



திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களுடனும் அஞ்சல் என்ற கையும் , கவித்த முடியும், பிரசன்ன முகமும், முறுவலும், ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலை..



சென்னை - அசோக்நகர் 
கருமாரி ஆலயம்

ஸ்ரீநிவாசர் காளிய மர்த்தனர் திருக்கோலம்




வைணவர்களுக்கு கோவில் என்றளவிலே  அறியப்படுகின்ற திருவரங்கத்தில் பகல் பத்து உற்சவம் எவ்வாறு நடை பெறுகின்றது என்று காண்போம்.  திருக்கையிலே பிடித்த திவ்யாயுதங்களுடனும் அஞ்சல் என்ற கையும் , கவித்த முடியும், பிரசன்ன முகமும், முறுவலும், ஆசன பத்மத்திலே அழுத்தின திருவடிகளுமாய் நிற்கிற நிலையிலே அருட் காட்சி தருகின்ற நம் பெருமாள் கருவறையிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சிம்மகதி கண்டருளி துலுக்க நாச்சியார் படி ஏற்றத்துடன் மணிக்கு அர்ச்சுன மண்டபம் எழுந்தருளுகின்றார். அங்கே ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் எழுந்தருளியிருக்க,  நாதமுனி வழி வந்த அரையர்கள், தீந்தமிழ் பிரபந்தங்களை தாளத்துடனும், இசையுடனும் ஆழ்வார்கள் முன்னிலையில் அரங்கன் திருமுன்பே அத்யயனம் செய்கின்றனர். சில முக்கிய பாசுரங்கள் வியாக்கியானம் செய்யப்படுகின்றன. அபிநயமும் உண்டு. இயல், இசை, நாடகம் மூன்றும் கலந்த சேவைதான் அரையர் சேவை.

தமிழுக்கு தகமை சேர்க்கும் இந்த உற்சவத்தின் போது தற்சமயம் மூன்று திவ்ய தேசங்களில் மட்டும் தான் அரையர் சேவை தற்போது  நடை பெறுகின்றது. அவையாவன:

வண்டினமுரலும்சோலை மயிலினமாலும் சோலை
கொண்டல்மீதணவும்சோலை குயிலினம்கூவும் சோலை
அண்டர்கோ212பானமரும்சோலை அணிதிருவரங்கம் என்று தொண்டரடிப் பொடியாழ்வார் மங்களாசாசனம் செய்த திருவரங்கம்.


மென்னடையன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்த ஸ்ரீ வில்லிபுத்தூர்.


குன்னார்கழனி சூழ் கண்ணன்குறுங்குடி என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்குறுங்குடி. ஆகியவையே இந்த மூன்று திவ்ய தேசங்கள். மற்ற தலங்களில் நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவிக்கப்படுகின்றது. 


 
அரையர் சேவையுடன் பொதுஜன சேவையும் நடைபெறுகின்றது. மதியம் அலங்காரம், பாவாடை கோஷ்டி, அமுது கண்டருளுகிறார் பெருமாள். மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை பின் பொதுஜன சேவை. மாலை 6.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து கிளம்பி இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகின்றார் அழகிய மணவாளர். பகல் பத்து நாட்கள் அனைத்திலும் இவ்வாறே சேவை சாதிக்கின்றார் நம் பெருமாள்.

                                        

இன்று பகல் பத்தின் முதல் நாள் பெரியாழ்வார் திருமொழியின் முதல் இரண்டு பத்துக்கள் (212 பாசுரங்கள்) சேவிக்கப்படுகின்றன. பெரியாழ்வாரின் வைபவம் சிறிது பார்ப்போமா? . ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வட பத்ர சாயிக்கு நந்தவனம் அமைத்து பூமாலை கட்டித்தரும் புஷ்ப சேவை செய்து கொண்டிருந்தார் கருடனின் அம்சமாக அவதரித்த விஷ்ணு சித்தர். ஸ்ரீமந் நாராயணே முழுமுதற் பரம்பொருள் என்று நிரூபித்து பொற்கிழி வென்று பட்டர் பிரான் யானை மீது ஊர்வலமாக வரும் போது வானில் பெரிய பிராட்டியுடன் பெரிய திருவடியில் ஸ்ரீமந் நாராயணன் தோன்ற அவருக்கு கண்ணேறு பட்டு விடுமோ என்று பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார். ஆண்டாளின் தந்தை அரங்கருக்கு மாமனார் அவரது பாசுரம் தான் இந்த முதல் நாள் சேவிக்கப்படுகின்றது.



தன்னை யசோதையாக பாவித்து கண்ணனின் லீலைகளை பாடுகின்றார் பெரியாழ்வார். கண்ணன் கேச்வன் நம்பி பிறந்ததைப் பாடி, ஆச்சியரை குழந்தையை வந்து காண் அழைத்து, தாலேலோப் பாடி, சந்திரனை அழைத்து, செங்கீரை ஆடுதலைப் பாடி, சப்பாணி கொட்டச் சொல்லி, தளர் நடையைப் பாடி, பூச்சி காட்டி விளையாடி, முலையுண்ண அழைத்து, காது குத்த, பூச்சூட்ட, நீராட அழைத்து, காக்கையை அழைத்து குழல் வாரக் கூறி, கோல் கொண்டுவர சொல்லி, திருவந்திக்காப்பிட அழைத்து , கண்ணனின் பால லீலைகளைப் பாடியிருக்கின்ற தீந்தமிழ் பாசுரங்களை இன்று சேவிக்கின்றோம்.

 திருவரங்கத்தில்    திருப்பல்லாண்டின் முதற்பாசுரமான 

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன் 
செவ்வடி செவ்விதிருக்காப்பு - என்னும் பாசுரத்தை  அபிநயத்துடன் சேவைக்கும் அரையர் பின்னர் வியாக்கியானத்தையும் அருளுகின்றார்.

மற்ற தலங்களில் 3 மணியளவில் பெருமாள் விஷேச அலங்காரத்தில் சேவை சாதிக்க ஆழ்வார்கள் ஆச்சாரியர்களுக்கு அருளப்பாடு ஆகி  பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழி  சேவிக்கப்படுகின்றது.


சிம்ம கதி மற்றும் சர்ப்ப கதி:
நம்பெருமாள் பகல் பத்து 10 நாட்களும் காலை புறப்பாட்டின்போது மூலஸ்தானத்திலிருந்து வெளியே வரும்போது ஒரு சிங்கத்தைப்போல் பாய்ந்து கொண்டு வெளியில் வருவார், இதற்கு சிம்ம கதி எனப்பெயர். அதேபோல் இரவு மூலஸ்தானத்திற்கு செல்லும்போது லேசாக ஒரு பாம்பைப் போல் வளைந்து நெளிந்து உள்ளே செல்வார் அதற்கு சர்ப்ப கதி எனப்பெயர்.