Friday, December 25, 2020

அத்யயனோற்சவம் - 11(நாச்சியார் திருக்கோலம் )

                                       பகல் பத்து - பத்தாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    10    12    13    14    15    16    17    18    19   20   21   22     

             

பவள மாலை, திருமாங்கல்யம் மிளிர  கையில் கிளி ஏந்தி  சர்வாபரண பூஷிதையாக அமர்ந்த கோலத்தில் நாச்சியாராக சேவை சாதிக்கின்றார் நம்பெருமாள்.



பின்னழகு

ஏலக்காய் பட்டை ஜடையுடன்

கிளி மாலையுடன் 


ஸ்ரீநிவாசர் நாச்சியார் திருக்கோலம்



பகற்பத்தின் நிறை நாள் சகல விஷ்ணுவாலயங்களிலும் நாச்சியார் திருக்கோலம் என்னும் மோகினி அவதாரத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். திருமங்கையாழ்வாரின் ஒன்பது, பத்தாம் பத்துக்களும்,  இரு தாண்டகங்களும் இன்று சேவிக்கப்படுகின்றன.

எம்பெருமான் யோக நித்திரையிலிருந்த போது முரன் என்னும் அசுரன் அவரை அழிக்க வந்தான் அப்போது எம்பெருமான் மேனியிலிருந்து ஒரு சக்தி தோன்றி அசுரனை அழித்தது. அசுரனை அழிக்க எம்பெருமான் எடுத்த அவதாரமே மோகினி அவதாரம்.

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை மத்தாகவும் கடைந்த போது பெருமாள் கூர்மாவதாரம் எடுத்து அந்த மலையை தாங்கி அமுதம் வர உதவினார். அமிர்தத்தை அசுரர்கள் பருகாமல் இருக்க தந்திரம் செய்ய பெருமாள் எடுத்த அவதாரமே மோகினி அவதாரம்.

மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க அரங்கன் எழுந்தருளும் அந்த அழகை வர்ணிக்க அந்த ஆதி சேஷனானலும் முடியாது. முன்னழகும் பின்னழகும் கண்ணை விட்டு நீங்காத காட்சி. வெண் பட்டு உடுத்தி, கையிலே கிளி ஏந்தி, கால்களை மடித்த நிலையில் கிளி மாலையில், நம் பெருமாளின் அந்த அலங்காரம் பாருங்களேன் எத்தனை அற்புதம். முன்னழகிலும் பின்னழகு என்ற படு ஏலக்காய் ஜடையுடன் பின்னழகும் அவ்வளவு நேர்த்தி.

இரண்டாம் அரையர் சேவையில் இராவண வதம் முடிந்து திருமொழித் திருநாள் சாற்றுமுறை நடைபெறும்.

அதன்பின்னர் ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்கள் கருட மண்டபத்தில் எழுந்தருளி இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் அருளப்பாடு நடந்து பரிவட்டம் சந்தனம் மற்றும் ஸ்ரீ சடகோபன் சாதிப்பார். ஆழ்வார்கள் அனைவரும் இன்று மட்டும் நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளி நம்மாழ்வாரின் சடாரியை பெற்றுக்கொண்டு தங்களது சன்னதிகளுக்கு சென்று சேருவர்.


மாயை என்னும் மண், பொன், பெண் ஆசையை விட்டு நாளை நான் தரும் பரமபதம் அடைய என்னை சரணடைந்து மாயையிலிருந்து விடுபட்டு வைகுந்த பதம் அடைவீர் என்று உணர்த்துவதாய் பட்டர் விளக்குகின்றார் இவ்வலங்காரத்தை.

ரங்கன் தாம் பூண்ட இத்திருக்கோலம் கண்டு மிக்க பூரிப்பு..! பராசர பட்டர் வருகின்றார்..! தாயாரின் மூக்குத்தி,..! தாண்டா வைத்து பின்னிய கூந்தலங்காரம்..! திருமார்பினில் பவழ மாலை, இரட்டை முத்துச்சரம், திருமாங்கல்யம்..! எல்லாம் பொலிவுடன் மிளிர நாச்சியார் திருக்கோலத்தில் பரிமளிக்கின்றார்.!

”பட்டரே..! எப்படி இருக்கின்றேன்.? ” – அரங்கன் வினவுகின்றார்..!

தாயார் கோலத்தில் அரங்கனைக் கண்ட பட்டர் கண்குளிர நமஸ்கரிக்கின்றார்..!

“நாயன்தே..! அற்புதம் அடியேன்..! ஆனாலும் ஒரு சிறு குறை..!” என்கிறார்..!

எனன குறை கண்டாய் பட்டரே..?

”எவ்வளவுதான் கனகச்சிதமாக இத்திருக்கோலம் அமைந்தாலும், தாயாரின் திருக்கண்களில் காணப்படும் காருண்யம், வாத்ஸல்யம் இல்லையே ப்ரபோ..!” என்கிறார் அனுதினமும் தாயாரை போற்றி, தம் சிந்தையில் ஏற்றி வழிப்பட்ட பட்டர்..!

இந்த திருநாள் முழுவதுமே அரங்கன், ஆழ்வார்களின் அன்பு மற்றும் அனுபவ பெருக்காகிய தீந்தமிழ் பாசுரங்களைக் கேட்ட வண்ணம் இருப்பான்..! ஆழ்வார்கள் மீதும், அவர்கள் வழி வந்து வணங்கும் அவர்களது அடியார்கள் மீதும் அவனது கருணை ஒரு தாயின் பரிவோடு பெருக்கெடுத்து ஓடும் தருணமிது..!  அவன் இன்று “அரங்கத்தம்மா…!” ஆகின்றான்..! ஆம்..! ஓப்பில்லா நாச்சியார் திருக்கோலம் ஆகின்றான்..! ஆயர் குலத் தலைவனாம் இந்த அரங்கத்தம்மாவின் சரண் புகுவோம்…! உய்வடைவோம்…!

திருவாய்மொழியின் நிறை நாள் திருமங்கையாழ்வாரின் பத்தாம் பத்து மற்றும் பதினொன்றாம் பத்தில் அருளிய பல திருப்பதிகளைப் பற்றிய பாசுரங்கள், இராமவதாரம், கிருஷ்ணாவரத்தைப் பற்றிய பாசுரங்கள், மற்றும் பரகால நாயகியாகவும், அவரது தாயாகவும் பாடிய பாசுரங்கள், திருகுறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவை சேவிக்கப்படுகின்றது.  இவ்வாறு பகல் பத்து நாட்களில் முதல் இரண்டு ஆயிரங்கள் சேவிக்கப்படுகின்றன.

மாயையே மோகினி அந்த மாயையிலிருந்து மனிதன் விடுபட்டு எம்பெருமான் திருவடிகளில் பூரண சரணாகதி அடைந்தால்தான் வைகுண்டம் என்பதை நாச்சியார் திருக்கோலமும் அடுத்த நாள் சொர்க்க வாசல் சேவையும் உணர்த்துகின்றன. 

அத்யயனோற்சவம் - 10

                                            பகல் பத்து - ஒன்பதாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    9    11    12    13    14    15    16    17    18    19   20   21   22     

             







இன்றைய தினம் நம்பெருமாள் அணிந்த ஆபரணங்கள் அனைத்துமே முத்தால் ஆனவை. முத்து சாய் கிரீடம், முத்து சரம், முத்து அபய ஹஸ்தம், முத்து திருவடிகள்.

முதல் அரையர் சேவையில் பெரிய திருமொழி 200 பாசுரங்கள் சேவிக்கப்படும். தெள்ளியீர் பாசுரம் அபிநயம் மற்றும் வியாக்கியானம்

இரண்டாவது அரையர் சேவையில் பரகால நாயகியாக (திருமங்கை ஆழ்வார்) சரணாகதி அடைந்த திருநெடுந்தாண்டகத்தை கொண்டு நடக்கும் முத்துக்குறி நடப்பது மேலும் ஒரு சிறப்பு.

திருநெடுந்தாண்டகம் மூலம் திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் தான் வெளிப்படுத்திய பெருமாளின் மீதான அன்பை ஆழ்வாரின் தாயார் கூறுவது சிறப்பு நிகழ்ச்சியாக இரண்டாம் அரையர் சேவையின் நடைபெறும் முத்துக்குறி.

நம்பெருமாள் இன்று முத்து முடி, முத்தங்கி, முத்து அபயஹஸ்தம் ( விஜயரங்க சொக்கநாதர் சமர்ப்பித்தது) சாற்றிக்கொண்டு முத்துக்குறி கேட்க அர்ஜுனன் மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார்.

திருநெடுந்தாண்டகம் முதல் பாசுரம் அபிநயம் மற்றும் வியாக்கியானம் “மின்னுருவாய்” கூறி அரையர் முத்துக்குறியை தொடங்குவார்.  என்று  ஆழ்வார் நாயகியாக துடித்துக் கொண்டிருக்கிறார், அதனை போக்க ஆழ்வாரின் தாயார் "பட்டுடுக்கும் அயர்த்திரங்கும் பாவை பேணாள் பனி நெடுங்கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள் ......." என்று தன் பெண்ணின் நிலைமையை கட்டுவிச்சி என்கிற குறத்தியின் மூலம் முத்துக்களை பரப்பி குறி கேட்கும் வைபவம். இதற்கு முத்துக்குறி என்று பெயர்.

ஆழ்வாரின் தாயார் தன் மகள் ஏன் இப்படி இருக்கிறாள்? என கட்டுவிச்சியிடம் கேட்க! அதற்கு முத்துக்களை பரப்பி கட்டுவிச்சி சொல்லும் குறி- திருமால் மேல் மால் கொண்ட  நாயகியாக இருக்கும் ஆழ்வாரை பெருமான் முன்னர் கொண்டு நிறுத்துவது மட்டுமே இந்த துடிப்புக்கு மருந்து.

அரையர் ஆழ்வாரின் தாயாராகவும் குறி சொல்லும் கட்டுவிச்சியாகவும் தன் குரலை மாற்றி நம்பெருமாள் முன்னர் விண்ணப்பம் செய்வார். கடைசியாக அரையர் சற்று முன்னே சென்று நாயகியான திருமங்கையாழ்வாரை நம்பெருமாள் முன்னர் நிறுத்துவதாக முத்துக்குறி வைபவத்தை நிறைவு செய்வார். இதன்மூலம் திருமங்கையாழ்வார் சரணாகதி அனுஷ்டித்ததாக ஒரு கூற்று.

அரையர் குறி சொல்லி ஆழ்வாரை நம்பெருமாளிடம் அடைய வைத்ததற்காக தீர்த்தம் மற்றும் ஸ்ரீசடகோபம் பெற்று அதன்பின்னர் அனைவருக்கும் இன்று சடகோபம் சாதிப்பார். 


 
திருவாய்மொழித் திருநாளின் ஒன்பதாம் நாள்  பெரிய திருமொழியின் மூன்று பத்துக்கள் சேவிக்கப்படுகின்றன. ஏழாம், எட்டாம், மற்றும் ஒன்பதாம் பத்துக்கள் சேவிக்கப்படுகின்றன.


முதன் முதலாக திருமங்கையாழ்வார் திருவரங்கனின் அநுமதியோடு திருக்குருகூரில் நம்மாழ்வாரின் அருச்சையிலுள்ள மூர்த்தியைத் திருவரங்கத்துக்கெழுந்தருளச் செய்து வேதங்களுக்கிணையாக நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களின் அருளிச் செயல்களை அரங்கனின் திருமுன்பேயிசைத்து அத்யயனத் திருவிழாவை நடத்தியருளினார்.

கலிகாலத்தின் கொடுமையை அடியார்க்கடிமையாலொழித்தவரென்பது பற்றி திருமங்கையாழ்வார் 'கலிகன்றி' என்று பெயர் பெற்றார்.

திருநறையூர் நம்பியிடம் திருவாழி திருச்சங்கிலச்சினையும் , திருகண்ணபுரத்தம்மானிடம் திருமந்திரோபதேசம் பெற்ற மங்கை மன்னர் திருநறையூர் நம்பியையும், திருகண்ணபுரத்தன்னானையும் நூறு நூறு பாசுரங்களினால், மங்களாசாசனம் செய்துள்ளார். இன்றைய தினம் இந்த இரண்டு திவ்ய தேசங்களின் பாசுரங்களும், மற்றும் திருச்சேறை, திருவழுந்தூர், திருச்சிறுபுலியூர், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி,திருநாகை ஆகிய சோழ நாட்டுத்திருப்பதிகள், திருப்புலாணி, திருக்குறுங்குடி, திருவல்லவாழ், திருமாலிருசோலை, திருக்கோட்டியூர் ஆகிய பாண்டிய நாட்டுத் திருப்பதிகளின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.


Thursday, December 24, 2020

அத்யயனோற்சவம் - 9

                                          பகல் பத்து - எட்டாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    8    10    11    12    13    14    15    16    17    18    19   20   21   22     

             




                                  

அத்யயன உற்சவத்தில் பகல் பத்தின் எட்டாம் நாள்  நம்பெருமாள் சாய் சவுரி,  கொண்டை முத்துச் சரம், அரி நெல்லிக்காய் மாலை,  வைர அபய ஹஸ்தம், பவள மாலை, திருமார்பில் பெருமாள் தாயார் பதக்கம்,  வைர நெற்றிப் பட்டை, கீர்த்தி, மஹரி அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து  அர்ஜுன மண்டபம் எழுந்தருளி சேவை சாதித்தார்.

திருமொழித் திருநாள் எட்டாம் நாள் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியின் ஐந்து மற்றும் ஆறாம் பத்துகள் சேவிக்கப்படுகின்றன.

                                    

பரகாலர் ஆலிநாடன், அருள் மாரி, அரட்டமுக்கி, அடையார்சீயம், கொங்குமலர் குழலியர் வேள், மங்கை வேந்தன், கொற்றவேல் பரகாலன், கலியன் என்ற விருதுகள் கொண்ட பாயிரம் பாடிகொண்டார்.

திருவரங்கன் ஆணைப்படி அப்பெருமானுக்கு மண்டபம், கோபுரம், விமானம், பிரகாரம் முதலிய பணிகளை செய்தருளினார். திருமதில் கட்டும்போது தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை கட்டிவந்தவிடம் நேர்பட அதனையொதுக்கி கட்டிவித்தார்.

பகல் பத்தின் எட்டாம் நாள் திருபுள்ளபூதங்குடி, திருக்கூடலூர், திருவெள்ளறை, திருவரங்கம், திருப்பேர்நகர், திருநந்திபுர விண்ணகரம், திருவிண்ணகர், திருநறையூர் ஆகிய திருப்பதிகளின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.


திருவரங்கத்து ஒரு பாசுரம் அபிநயம் – *பண்டை நான்மறையும்*

இன்று இரண்டாம் அரையர் சேவை: அம்ருதமதனம் (கூர்ம அவதாரம்)

அத்யயனோற்சவம் - 8

                                            பகல் பத்து - ஏழாம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3     4    5    6     7    9    10    11    12    13    14    15    16    17    18    19   20   21   22     

             

        

பகல்பத்தின் ஏழாம் நாள் நம்பெருமாள் முத்துக்கிரீடம், புஜ கீர்த்தி, மகர கண்டிகை, இரத்தின அபய ஹஸ்தம், மார்பில் லட்சுமி பதக்கம், காசு மாலை, அர்த்த  சந்திரன் ஆகிய ஆபரணங்களை அழகு செய்தவாறு சேவை சாதித்து அருளுகின்றார்.

                     


ஸ்ரீநிவாசர் கோவர்த்தன கிரிதாரி கோலம்



திருமொழித் திருநாளின் ஏழாம் நாள் அன்றும் திருமங்கை மன்னனின் மூன்றாம் பத்து மற்றும் நான்காம் பத்து சேவிக்கப்படுகின்றது.


பரகாலர் வட மொழி வேதங்கள் நான்குக்கொப்பாக நம்மாழ்வாரின் அருளிச் செயல்களுக்கு ஆறு அங்கங்கள் போன்று பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை,சிறிய திருமடல், பெரிய திருமடல் என்னும் ஆறு திவ்விய நூல்களையருளித் திருமங்கையாழ்வார் என்று திருநாமம் பெற்றார். இவற்றுள் பெரிய திருமொழிப் பாடல்களியற்றும் போது எம்பெருமான் சேவை சாதிக்கும் திருப்பதிக்ளுக்கு தானே சென்று வணங்கி திருப்பிருதி முதல் திருக்கோட்டியூர் நிறைவாக பாசுரம் பாடியுள்ளார்.

இன்று திருவயிந்திபுரம், திருசித்ரகூடம் சோழ நாட்டுத் திருப்பதிகளான திருக்காழிசீராம விண்ணகரம், திருவாலி, திருநாங்கூர் திருப்பதிகள் பதினொன்று (1. திருமணி மாடக் கோவில்: 2.திருவைகுந்த விண்ணகரம் : 3.திரு அரிமேய விண்ணகரம் 4.திருத் தேவனார் தொகை 5.திருவண் புருடோத்தமம் 6.திருச்செம்பொன்செய்கோவில் 7.திருத்தெற்றியம்பலம் 8.திருமணிக்கூடம் 9.திருக்காவளம்பாடி. 10.திருவெள்ளக்குளம்(அண்ணன் கோவில்): 11. திருப்பார்த்தன் பள்ளி ), மற்றும், திருவிந்தளுர், திருவெள்ளியங்குடி ஆகிய திவ்ய தேசங்களின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. 

இன்று இரண்டாம் அரையர் சேவை: வாமனாவதாரம்

Wednesday, December 23, 2020

அத்யயனோற்சவம் - 7


                                          பகல் பத்து - ஆறாம் நாள்

1    2    3     4    5    6     8    9    10    11    12    13    14    15    16    17    18    19   20   21   22     

             

                      


                                  

திருமொழித்திருநாள் என்றழைக்கப்படும் பகல்பத்தின் ஆறாம் நாள் அரங்கநகரப்பன் பாண்டியன் கொண்டை, புஜ கீர்த்தி, வைர அபய ஹஸ்தம், இரத்தினக்கிளி, மார்பில் லக்ஷ்மி பதக்கம், காசு மாலை, அர்த்தசந்திரன் அணிந்து எழிலாக சேவை சாதிக்கும் அற்புத தரிசனம்.


                             



ஸ்ரீநிவாசர்  வேணு கோபாலன் திருக்கோலம்



ஆழ்வார்களின் திருமொழிகள் சேவிக்கப்படுவதால் "திருமொழித் திருநாள்" என்றும் அழைக்கப்படும் பகல் பத்து உற்சவத்தின் ஆறாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை திருமங்கையாழ்வாரின் 'பெரிய திருமொழி' சேவிக்கப்படுகின்றது. ஆழ்வார்களில் கடை குட்டி திருமங்கையாழ்வார். அதிகமான திவ்ய தேசங்களை மங்களா சாசனம் செய்தவரும் இவரே. இவருக்கு உள்ள தனி சிறப்பு பெருமாளே இவருக்கு அஷ்டாக்ஷ்ர மந்திரம் உபதேசம் செய்தது. ஆழ்வாருடைய அடியார்க்கடிமையைக் கண்ட இறைவன் இவருக்கு அருள் புரிய எண்ணி திருமணக் கோலத்தில் சிறந்த அணிகலன்களுடன் தானும் பெரிய பிராட்டியுமாக இவர் பதுங்கி இருக்கும் வழியில் வந்தார். திருமணங்கொல்லையில் திருவரசனடியில் பதுங்கியிருந்த பரகாலர் அவர்களை தன் துணைவர்களுடன் வழிப்பறி செய்தார். அப்போது மணமகன் காலிலிருந்த மோதிரம் கழற்ற முடியாமல் போகவே பல்லால் கடித்து வாங்க பெருமாள் இவரை நம் கலியன் என்று அழைத்தார். பறித்த பொருள்களை மூட்டையாகக் கட்டி தூக்க முயன்ற போது மூட்டை இடம் பெயராததால் பரகாலர் மணமகனை "என்ன மந்திரம் செய்தாய்?" என்று வாள் வீசி மிரட்டினார். 

                                       

மணமகனான எம்பெருமான் மந்திரத்தை கூறுவதாக அருகே அழைத்து பெரிய திரும்ந்திரம் எனப்படும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து பெரிய திருவடி மேல் பிராட்டியுடன் சேவை சாதித்தார். மெய்ப்பொருள் உணர்ந்த பரகாலர் "வாடினேன் வாடி வருந்தினேன் ..... கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்று பாடத் தொடங்கினார்.

6ம் நாள் முதல் இரண்டு பத்துக்கள் சேவிக்கப்படுகின்றன வட நாட்டுத்திருப்பதிகள் திருப்பிருதி, திருவதரி, திருவதரி ஆசிரமம், திருசாளக்கிரமம், நைமிசாரணியம், சிங்கவேள்குன்றம், திருவேங்கடம் மற்றும் தொண்டை நாட்டுத்திருப்பதிகள் திருவெள்ளூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருகடல்மல்லை, திருவிடவெந்தை, திருவட்டபுயகரம், திருபரமேச்சுர விண்ணகரம், நடு நாட்டுத் திருப்பதி திருக்கோவலூர் ஆகிய திவ்ய தேசங்களின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன. 

Tuesday, December 22, 2020

அத்யயனோற்சவம் - 6

     பகல் பத்து - ஐந்தாம் நாள்


1    2    3     4    5    7     8    9    10    11    12    13    14    15    16    17    18    19   20   21   22     

             




அழகிய மணவாளர்

(பெரிய பிராட்டியார், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், சேர குல வல்லி, துலுக்க நாச்சியார், உறையூர் வல்லி என்று ஏழு நாச்சிமார்கள் நம்பெருமாளுக்கு எனவே இத்திருநாமம்)


திருமொழித் திருமொழித் திருநாளின் ஐந்தாம் நாள் அன்று அழகிய மணவாளர் கவரிமான் தொப்பாரை கொண்டை, விமான பதக்கம், இரத்தின அபய ஹஸ்தம், இரத்தின கலிங்க தோளா, முத்துச் சரம், பவளமாலை, காசு மாலைகளுடன்  எழிலாக சேவை தந்தருளுகிறார்.



 
விமான பதக்கம்

அரங்கநாதர்,  பெரிய பிராட்டியார், பரவாசுதேவன், உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் மற்றும் துவாரபாலகர்கள் இந்த பிராணவாகர விமான பதக்கத்தில் சேவிக்கலாம்.

காவேரி விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம் |
ஸவாஸு  தேவோ ரங்கேஸ:   ப்ரத்யக்ஷம்  பரமம் பதம் |
விமானம் ப்தணவாகாரம் வேதஸ்ருங்கம் மஹாத்புதம் |
ஸ்ரீரங்கஸாயி பகவான் ப்ரணவார்த்த ப்ரகாஸ : 

காவேரியே வைகுந்தத்தின் விரஜா நதி, திருவரங்கமே வைகுண்டம். சர்வேஸ்வரனான ஸ்ரீவாசுதேவனே ஸ்ரீரங்கநாதன். காணக்கூடிய பரமபதம் இதுவே. ஸ்ரீரங்கவிமானமே பிரணவத்தின் உருவம்.அதன் அற்புதமான கலசங்களே வேதங்கள்.  திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளே கடவுளாகவும், பிரணவத்தின் பொருளாகவும் விளங்குகிறார்.

    

  

ஸ்ரீநிவாசர்  இராஜகோபாலன் திருக்கோலம்



பகல் பத்து உற்சவத்தின் ஐந்தாம் நாள் முதல் ஆயிரத்தில் உள்ள மற்ற ஆழ்வார்களின் பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.

திருமழிசையாழ்வாரின் திருச்சந்த விருத்தம்

தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலை, திருபள்ளியெழுச்சி.

திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரான்

மதுர கவியாழ்வாரின் கண்ணி நுண் சிறுத்தாம்பு ஆகிய பாசுரங்கள் இன்று சேவிக்கப்படுகின்றன.


திருமழிசையாழ்வார் பெருமாளையே சொன்ன வண்ணம் செய்ய வைத்தவர், திருக்குடந்தை ஆராவமுதரை எழுந்து பேச வைத்தவர். முதலில் சிவ வாக்கியர் என்று சைவராக இருந்தவர் ஸ்ரீமந் நாராயணனே முழு முதற் கடவுள் என்பதை உணர்ந்து வைணவராகியவர். பக்தி ஸாரர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருசந்த விருத்தம். நான் முகன் திருவந்தாதி என்ற நூல்களை அருளினார்.


தொண்டரடிப்பொடியாழ்வார் ஒருவர்தான் அரங்கனைத் தவிர வேறு ஒரு பெருமாளையும் மங்களா சாசனம் செய்யாதவர். விதி வசத்தால் தேவ தேவி என்ற பெண்ணினால் திசை மாறி சென்ற ஆழ்வாரை தடுத்து அந்த திருவரங்கத்து இன்னமுதன் ஆட்கொள்ள அவரையே பற்றுக்கோடாக கொண்டு வாழ்ந்தவர்.

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகமாளும்
அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே ! என்று பாடியவர். மேலும் அரங்கனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியவரும் இவரே.



திருப்பாணாழ்வார் அரங்கன் மீது மிகவும் பக்தி கொண்டிருந்தவர் யாழ் கொண்டு பண்பாடும் குலத்தை சார்ந்தவர். தெரியாமல் அரங்கனுக்கு தீர்த்தம் கொண்டு வரும் வழியில் நின்றிருந்தவரை பட்டர் தாக்க அவர் தலையிலிருந்து இரத்தம் கொட்டியது. கருவறையை அடைந்த போது அரங்கன் தகையிலும் அதே இடத்திலிருந்து இரத்தம் கொட்டுவதை கண்டு வருந்தி ஆழ்வாரின் பெருமையை உணர்ந்து அவரை மரியாதையுடன் அழைத்து வந்து கருவறையில் நிறுத்திய போது அவர் பாடிய பாசுரம் தான் அமலனாதிபிரான்.
அரங்கனது திருவடி தொடங்கி திருமுடியீறாக நன்கு சேவித்து அவ்வெழிலைக் கூறும் அமலனாதிபிரான் என்ற பத்து பாசுரங்களைப் திருவாய் மலர்ந்தருளினார்.


அவரது முதல் பாசுரம் அமலனாதிபிரான் என்று ’அ’காரத்தில் துவங்குகின்றது இரண்டாவது பாசுரம் உந்தி ’உ’காரத்தில் துவங்குகின்றது. மூன்றாவது பாசுரம் மந்தி ’ம’காரத்தில் துவங்குகின்றது . அ+உ+ம = ஓம் ஆகவே திருப்பாணாழ்வாரின் பாசுரம் பிரணவத்தின் விளக்கம்.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
யுண்டவாயன் என்னுள்ளம்கவர்ந்தானை
அண்டர்கோனணியரங்கன் என்னமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே. என்று நிறைவாக அருளி பெரிய பெருமாளின் திருவடியில் இரும்புண்ட நீர் போல கலந்து மறைந்தார்.




பெருமாளைப் பாடாமல் தந்து ஆச்சாரியனான நம்மாழ்வாரை மட்டுமே பாடியவர் மதுரகவியாழ்வார். வேதங்களையும், சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்து செவிக்கினிய செஞ்சொற்கவி பாடுமாற்றல் பெற்று மதுரகவி என்று பெயர் பெற்றார். இவர் வட நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்த போது தென் திசையில் ஒரு பேரொளி தோன்றியதைக் கண்டு அங்கே வந்து நம்மாழ்வாரை சேவித்து அவரது žடரானார். அவரது புகழை பரப்பினார். அவர் எழுதிய பாசுரம் கண்ணிநுண்சிறுத்தாம்பு.

அத்யயனோற்சவம் - 5

                                பகல் பத்து -   நான்காம் நாள்

இத்தொடரின் மற்ற பதிவுகளையும் காணுங்கள்

1    2    3      4    6    7     8    9    10    11    12    13    14    15    16    17    18    19   20   21   22     

           



மஹாலக்ஷ்மி பதக்கம்

திருமொழித்திருநாளின் நான்காம் நாளான இன்று நம்பெருமாள் சௌரி கொண்டை, வைர அபய ஹஸ்தம், மார்பில் மஹா லக்ஷ்மி பதக்கம்,  முத்துச்சரம், பவளமாலை , அவுரி சரம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து அர்ஜுன மண்டபம் எழுந்தருளி அருள் பாலித்தார். 

திருவடி சரணம் 


அரங்கமா நகருளான்


பகல் பத்து உற்சவத்தின் நான்காம் நாள் குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி சேவிக்கப்படுகின்றது. 

ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. குலசேகர ஆழ்வாரின் சிறப்பு அவர் இராமன் மேல் கொண்ட பக்தி . பெருமாள் என்று அழைக்கப்படும் இராமபிரானின் மேல் உணர்ச்சி உந்திய அன்புப் பேராறு பூண்டமையின் ஆழ்வாரை "குல சேகர பெருமாள்" என்று சிறப்பாக வழங்கலாயினர். இவர் இயற்றிய பாசுரங்கள் "பெருமாள் திருமொழி" என்று அழைக்கப்படலாயின. 

பெரியாழ்வார் கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடியது போல குலசேகராழ்வார்.

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே!தென்னிலங்கைக்கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்கன்னிமாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே!என்னுடையவின்னமுதே! இராகவனே! தாலேலோ -  என்று  இராமனுக்கு தாலாட்டுப் பாடியவர். 

                             

ஸ்ரீநிவாசர் யோகநரசிம்மர் திருக்கோலம்

                            

இந்த கலி காலத்தில் நல்லவர்கள் தான் மிகவும் துன்பப்படுகிறார்கள், எவ்வளவுக்கு எவ்வளவு கொடிய பாவங்களை செய்கின்றார்களோ அவர்கள் எல்லாரும் மிகவும் நன்றாக இருக்கின்றார்கள் என்று பொதுவாக தோன்றுகிறது அது உண்மையள்ள என்பதற்கு குலசேகராழ்வார் ஒரு பாசுரம் பாடியுள்ளார். தமிழ் படித்த அனைவரும் பள்ளியில் சிறு வயதில் இந்த பாசுரத்தை படித்திருப்போம். 

வாளாலறுத்துச்சுடினும் மருத்துவன்பால்
மாளாதகாதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர்தரினும் விற்றுவக் கோட்டம்மா! நீ
ஆளாவுனதருளே பார்ப்பனடியேனே.

மருத்துவர் நம் நோய் தீர கத்தியால் அறுத்து சுடுவது போல மாயையால் நமக்கு துன்பன் அளிப்பவரும் பெருமாளே. நமது கர்ம விணைகள் தீர்ந்தால் தான் அவரது திருவடியை அடையலாம் ஆகவே துன்பங்கள் எல்லாம் நம்மை அவரிடம் அழைத்துச் செல்லும் படிகள். ஒன்றே ஒன்று வேண்டும் அது தான் பூரண சரணாகதி, மற்ற எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார். 

குலசேகராழ்வார் மஹாவிஷ்ணுவின் கௌஸ்துபத்தின் அம்சமாக அவரரித்தவர்.


வைணவத்திருக்கோவில்களில் கர்ப்பகிரகத்தின் திருப்படி (உள் வாயிற் படி) "குலசேகராழ்வார் திருப்படி " என்று அழைக்கப்படுகின்றது அதற்கு குலசேகரர் பாடிய பாசுரத்தில் என்ன என்ன கூறுகின்றார் பாருங்கள் 

அரசராக இருந்து மண்ணாண்ட அவர் வேண்டாதது:

ஊனேறு செல்வத்து உடற்பிறவியான் வேன்டேன்

வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்

மின்னனையநுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்அன்னவர்தம்பாடலொடும் ஆடலவையாதரியேன்

மன்னவர்தம் கோனாகிவீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்

ஆனால் அவர் வேண்டுவது

வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே - பறவையாய்


திருவேங்கடச் சுனையில் மீனாய் பிறப்பேனே - மீனாய்
வேங்கடக் கோந்தானுமிழும் பொன் வட்டில் பிடித்து உடனே புகப்பெறுவெனாவேனே - பணியாளனாய்

பண்பகரும்வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துசெண்பகமாய் நிற்கும் தவமுடையெனாவேனே - மலராய்/மரமாய்


எம்பெருமானீசன் எழில் வேங்கடமலைமேல்தம்பகமாய்நிற்கும் திருவிடையெனாவேனே - புதராய்

தென்னென வண்டினங்கள்பண்பாடும் ங்கடத்துள்அன்னனையபொற்குவடாம் அருந்தவத்தெனாவேனே -சிகரமாய்

திருவேங்கட மலையில் கானாறாய்ப்பாயும் கருத்துடையயெனாவேனே - ஆறாய்


திருவேங்கட மலை மேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையெனாவேனே - பாதையாய்


திருவேங்கடமென்னும் பொன்மலை மேல் ஏதேனுமாவேனே - எதுவாக ஆனாலும் சரி

செடியாய்வல்விணைகள் தீர்க்கும்திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோவில் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.

வேங்கடம் என்பது வேம் - பாவம் + கடம் - எரித்தல் அதாவது பாவங்களை அழிக்கும் மலை. என்றும் வேம் - அழியாத + கடம் - ஐஸ்வர்யம் , அதாவது அழியாத ஐஸ்வர்யம் அளிக்கும் மலை என்றும் பொருள் படும். அந்த திருவேங்கடமலையில் அனைவரும் ஏறிச்சென்று எம்பெருமானை வழிபடும் படியாக கிடந்து பெருமாளின் பவள வாயைக் காண வேண்டும் என்று பாடியதால் தான் கர்ப்பகிரகத்து படி குலசேகராழ்வார் படி என்று அழைக்கப்படுகின்றது. 

திருவரங்கத்தில் இன்று

அரையர் அபிநயம் & வியாக்கியானம்-

“கண்ணனென்னும் கருந்தெய்வம்” நாச்சியார் திருமொழி பாசுரம்

“இருளிரிய சுடர்மணி” பெருமாள் திருமொழி பாசுரம்

இன்றைய சிறப்பு – 2 அரையர் சேவைகள்

இரண்டாம் அரையர் சேவையில் இன்றைய நிகழ்வு: கம்சவதம்