குட்டநாட்டுத் திருப்புலியூர் என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பஞ்ச பாண்டவர்களில் பீமன் வழிபட்ட தலம். மஹாபாரதப் போரில் துரோணரைக் கொல்ல பீமன் காரணமாக இருந்ததால் அந்தப் பாவம் தீர மஹாவிஷ்ணுவை இங்கு வழிபட்டதாக ஐதீகம். இத்தலம் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ளது, கொல்லம் எர்ணாகுளம் இரயில் பாதையில் செங்கண்ணூரில் இறங்கி பின்னர் பேருந்து மூலம் மேற்காக மன்னார் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ தூரம் பயணம் செய்து இத்தலத்தை அடையலாம். நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வார் தமது சிறிய திருமடலிலும் இத்தலத்தை பல்லாண்டு பாடியுள்ளனர். புலியூர் என்று தற்போது அழைக்கின்றனர்.
108 திவ்விய தேசங்களில் இரண்டு திவ்விய தேசங்கள் புலி என்னும் அடைமொழியைக் கொண்டு திகழ்கின்றன. ஒன்று இத்தலம் மற்றையது சோழ நாட்டுத் திருப்பதியான சிறுபுலியூர் ஆகும், சப்த ரிஷிகளைக் காப்பாற்ற இந்திரன் புலி ரூபத்தில் வந்ததால் இத்தலம் திருப்புலியூர் என்று அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் செந்தமிழ் கூறும் நல்லுலகம் 1. தென்பாண்டி, 2.குடநாடு, 3.குட்டநாடு, 4.கற்காநாடு, 5.வேணாடு, 6.பூமிநாடு, 7.பன்றிநாடு, 8.அருவாநாடு, 9.அருவாவடதலைநாடு, 10.சீரநாடு, 11.மலைநாடு, 12.புனல்நாடு என்று 12 நாடுகளாக பிரிக்கப்பட்டிருந்தன அவற்றுள் இத்தலம் அமைந்திருக்கும் பகுதி குட்டநாடு என்றிருந்திருக்கவேண்டும் எனவே நம்மாழ்வார் இத்தலத்தை குட்டநாட்டு திருப்புலியூர் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் ஆலயத்தில் உள்ள திருப்புலியூர் சித்திரம்
தல வரலாறு: புறாவிற்காக தனது தொடையை அறுத்தளித்த சிபி சக்கரவர்த்தியின் புதல்வன் வ்ருஷாதர்பி. மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தலையில் கனம் ஏற்றிக்கொண்டு அறம் பிறழ்ந்து வாழ்ந்து வந்தான். இவனுக்குப் பாடம் புகட்ட விரும்பிய பரந்தாமன், ஒரு காலகட்டத்தில் இயற்கையின் சீற்றத்தால் கொடிய பஞ்சம் ஏற்பட செய்தார்.
ஆனால், அப்போதும் தாகத்தைத் தணிக்க, பசியைப் போக்க தனக்கு நீரும், உணவும்தான் வேண்டும்; வெறும் பொன்னும் பொருளும் தாகத்தையோ, பசியையோ தீர்க்காது என்று புரிந்து கொள்ளவில்லை அவன்.
அச்சமயம் அத்ரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய சப்த ரிஷிகள் தன் நாட்டிற்கு வருகை தந்திருப்பதை அறிந்த அவன், அவர்களிடம், தன் நாட்டின் வறுமையை அவர்கள் ஒழித்தார்களென்றால், அவர்களுக்குப் பெருஞ்செல்வத்தைத் தான் வாரி வழங்குவதாகத் தெரிவித்தான். நாட்டு மக்கள் அனைவரும் பஞ்சத்தில் தவிக்கும் போது அரசனிடம் தானம் பெற விரும்பாத ரிஷிகள், தாங்கள் யாரிடமும் யாசகம் பெற விரும்பியதில்லை; அதனால் யாரும் தானம் தருவதைத் தங்களால் ஏற்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அதோடு தாங்கள் செல்வ மிகுந்த வாழ்க்கைக்கு மிகவும் அப்பாற்பட்டவர்கள், தங்களை செல்வத்தால் அடிமைப்படுத்திவிட முடியாது என்றும் கோபித்துச் சொன்னார்கள்.
அவர்களால் தன் நாட்டில் நிலவும் பஞ்சத்தைப் போக்க முடியும் என்று உறுதியாக நம்பிய மன்னன், அவர்களை எப்படியாவது தன் வழிக்குக் கொண்டு வர குறுக்கு வழியில் சிந்தித்தான். அவர்களுக்கு சில கனிகளை அனுப்பி வைத்தான். அவற்றினூடே சில தங்க நாணயங்களையும் சேர்த்து, மறைத்து அனுப்பி வைத்தான்.
ஆனால், அவர்களோ தானம் என்ற பெயரில் வழங்கப்படும் எந்தப் பொருளையும் ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை. அதனால் அந்தக் கூடைப் பழங்களையும் அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதோடு, ‘‘இப்படி எங்களுக்கு தானமளித்து, எங்கள் தவ ஆற்றலால் உன்னுடைய பஞ்சத்தைப் போக்க வேண்டும் என்று விரும்புவதை விட, நீயே நேரடியாக இறைவனிடம் இறைஞ்சினால், அவர் உன் மீது இரக்கம் கொண்டு, அருள் பொழியக்கூடுமே!’’ என்று அறிவுரையும் சொன்னார்கள். இதைக் கேட்டு வெகுண்டான், வ்ருஷாதர்பி.
மேலும் கோபமும், அவமான பாதிப்பும் அதிகரிக்க, உடனே ஒரு தீய யாகத்தைச் செய்தான். அதில் தோன்றிய கிருதை என்ற ஒரு துர்தேவதையை அந்த முனிவர்கள் மீது ஏவினான். ரிஷிகள் உடனே பரந்தாமனை வேண்டினார்கள். இவர்களது நிலையை அறிந்த பரம்பொருள், உடனே இந்திரனிடம், அந்த ரிஷிகளை அவர்களை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்திலிருந்து காக்குமாறு உத்தரவிட்டார்.
இந்திரனும் புலியாக உருமாறி, துர்தேவதையைச் சிதைத்து வதைத்தான். வ்ருஷாதர்பி திகைத்து நின்றான். அவனிடம், ரிஷிகள், ‘‘செல்வம் எல்லாவற்றையும் கொடுத்துவிடாது என்பதைப் புரிந்துகொள். இணையற்ற செல்வமான ஸ்ரீமன் நாராயணனை நீ தியானித்திருந்தால், உன் நாட்டில் பஞ்சமே வந்திருக்காது. அப்படி வந்துவிட்ட பின்னும் இறையருளை உணராது, வீம்புப் பிடிவாதத்தால் எங்களையும் விலைக்கு வாங்க நினைத்த உன் ஆணவப் போக்கை மாற்றிக்கொள்’’ என்று அறிவுறுத்தினார்கள்.
அதே சமயம் அவர்கள் முன் காட்சி தந்தார் ஸ்ரீமந் நாராயணன். தமக்கு தரிசனம் அளித்த அந்தப் பரம்பொருளை ‘மாயப்பிரான்’ என்றழைத்துப் போற்றினார்கள். கூடவே, அறியாது பிழை செய்த இந்த மன்னவனை மன்னித்து விடுமாறும் கேட்டுக்கொண்டார்கள். அவன் நாட்டில் நிலவிய பஞ்சத்தைப் போக்கி சுபிட்சம் உண்டாக்குமாறும் சிபாரிசு செய்தார்கள். வ்ருஷாதர்பி தன் தவறை உணர்ந்தான். அப்படியே அவர்கள் முன் தண்டனிட்ட அவன், அந்தப் பரம்பொருள் அங்கேயே கோயில் கொண்டு தன்னையும், தன் நாட்டையும் பரிபாலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். ரிஷிகளும் அதை ஆமோதிக்க, மாயப்பிரான் அவ்வாறே அங்கே அர்ச்சாவதாரம் கொண்டார்.
திருப்புலியூர் முன் வாயில்
ஒரு சமயம் நாரதர் தனது கலகத்தை கண்ணனின் மனைவிகளிடம் ஆரம்பிக்கலாம் என்று திட்டம் போட்டார். முதலில் ருக்மணி வீட்டுக்குச் சென்றார். அங்கே மனைவிக்குத் தாம்பூலம் மடிச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்கிற கிருஷ்ணரைக் கண்டார். இதைக்கொண்டு ஏழு மனைவிகளின் வீட்டுக்குச் சென்று சொல்லி குழப்பம் ஏற்படுத்தலாம் என்று ராதையின் வீட்டுக்குச் சென்றார். அங்கே ராதைக்காக தன் புல்லாங்குழலில் அழகான இசையை வாசித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணரை கண்டார் இது எப்படி? அங்கே தாம்பூலம் மடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேனே என்ற குழப்பத்தோடு அடுத்து சத்யபாமா வீட்டுப்பக்கம் சென்றார் நாரதர். அங்கே, கணவருக்கு ஆசை ஆசையாக உணவு பரிமாறிக் கொண்டிருந்த பாமாவைக் கண்டார்.
அங்கிருந்து ஜாம்பவதி இல்லத்திற்கு வந்த நாரதர். அங்கே ஓய்வாகப் படுத்திருக்கும் கிருஷ்ணருக்கு ஜாம்பவதி கால் பிடித்து விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார் இவ்வாறே அனைத்து மனைவியர் இல்லத்திலும் மாயனைக் கண்டு அதிசயித்தார் நாரதர். எனவே இங்கே மூலவருக்கு மாயபிரான் என்று திருநாமம் என்று ஐதீகம். வாருங்கள் சப்த ரிஷிகளைக் காத்து நாரதரிடம் மாயம் செய்த பெருமாளை சேவிக்கலாம்.
ஊர்வளம் கிளர் சோலையும், கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர்வளம் கிளர் தண் பணைக் குட்ட நாட்டுத் திருப்புலியூர்
சீர்வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ் தேவபிரான்
பேர்வளம் கிளர்ந்து அன்றிப் பேச்சு இலள் இன்றிப்புனை இழையே (தி.வா.8-9-4)
பொருள்: குட்டநாட்டுத் திருப்புலியூரில் சோலைகளும் கரும்பும் செந்நெல்லும் சூழ்ந்து காணப்படுகின்றன. ஏர் வளம் மிகுவதால் நீர்நிலைகள் சூழப்பட்ட மருதச்சிறப்பு இங்கு உண்டு. இவ்வூரில் எழுந்தருளியுள்ள பெருமான் குணங்களிலே சிறந்து விளங்கும்படியாக மூன்று உலகங்களையும் காப்பதற்காக அவற்றைப் பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் காப்பாற்றிய தேவபிரான் அன்றோ! அவனுடைய திருப்பெயர்களை அணிகலன்களாக அணிந்துள்ள இப்பெண் மிகவும் காதல் கிளர்ந்தவளாய்ச் சொல்கின்றாள். அவன் பெயரன்றி வேறு எதனையும் இவள் சொல்வதில்லை. என்று நம்மாழ்வார் தமது மற்றொருவர்க்கடிமையற்றிருக்கும் தன்மையை தோழி மணவிலக்குக்காகத் தாய்மாரோடு கூறும் பாசுரத்தாலே அருளிச் செய்த இத்தலத்தின்
பெருமாள்: மாயப்பிரான்
தாயார் பொற்கொடி நாச்சியார்.
விமானம் : புருஷோத்தம விமானம்.
தீர்த்தம்: பிரஞ்ஞா ஸரஸ் தீர்த்தம்.
மங்களாசாசனம்: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்.
........சீரார்திரு வேங்கடமே திருக்கோவ
லூரே மதிட்கச்சியூரகமே பேரகமே
பேராமறுதிருத்தான் வெள்ளறையே வெஃகாவே
பேராலிதண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கணமங்கை.... ( சி.தி.ம )
என்று எம்பெருமானின் கருத்த திருமேனியைக் காண்பதற்காக பரகால நாயகி, அவன் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களுக்கு மடலூர்ந்து செல்வேன் என்று சிறிய திருமடலில் திருமங்கையாழ்வார் இத்திருப்புலியூரையும் பாடியுள்ளார்.
மிகவும் உயரத்தில் அமைந்துள்ளது இத்தலம். அற்புதமான நுழைவு வாயில் உச்சியில் ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் அழகிய சுதை சிற்பம். அதன் கீழ் இரணியனை தனது மடியில் வைத்து அவன் மார்பை பிளக்கும் உக்ர நரசிம்மர் சிற்பம். இருபுறமும் கணபதி சிவபெருமான் சுதை சிற்பங்கள், துவார பாலகர்கள் அமைத்துள்ளனர். இருபத்தோரு படிகள் ஏறி கோயிலுக்குள் நுழைய வேண்டும். ஆலயத்தில் உள்ளே இடது பக்கத்தில் பெரியதொரு கதையைக் காணலாம். இந்தக் கோயில் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமனால் புனருத்தாரணம் செய்யப்பட்டது, அதன் நினைவாகவே அவனது பிரம்மண்ட கதை ஒரு மேடையின் மேல் சாய்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பீமனைப் போலவே, அழகாக பருத்து உயர்ந்த தூண்கள் கொண்ட சுமார் 500 உட்காரக்கூடிய பிரம்மாண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. நெடிதுயர்ந்த தங்கக் கவசம் பூண்ட கொடி மரம், சூரிய ஒளியில் மின்னுகின்றது. பலி பீடமும் தங்கக் கவசம் பூண்டுள்ளது.
வெளிப் பிராகாரச் சுற்றில் ஐயப்பன் தனிச் சன்னதி கொண்டிருக்கிறார்.. அருகே ஒரு பலா மரத்தினடியில் ஆதிசேஷ மஹாவிஷ்ணுவையும், வித்தியாசமாக ஆதிசேஷன் குடைபிடிக்க சிவனையும் தரிசிக்கலாம். சற்றுத் தொலைவில் பெரிய அரசமரம் ஒன்றின் அடியில் மேடை கட்டியிருக்கிறார்கள். பக்கத்தில் மிகப் பெரிய அன்னதானக் கூடம். மற்றொரு பெரிய சன்னதியில் சிவபெருமான் அருள் பாலிக்கின்றார். பொதுவாகவே கேரளத்தில் சிவன் சன்னதியில் கோமுகியை தாண்டி செல்லும் வழக்கம் கிடையாது. இத்தலத்திலும் இவ்வாறே முழு வலம் வருவதில்லை கோமுகியிலிருந்து திரும்பி வந்து விடுகின்றனர்.
பீமனின் கதை
3200 வருடங்கள் புராதனமானது இக்கோயில் என்கிறார்கள். ஒவ்வொரு தை மாதமும் மகரசங்கராந்தி தினத்தன்று பக்தர்கள் காவடி எடுக்கிறார்கள். பிறகு ஒரு வாரம் கழித்து கொடியேற்றி விழா கொண்டாடுகிறார்கள். நமஸ்கார மண்டபத்தின் தூண்களும் தங்கக் கவசம் பூண்டுள்ளன அவற்றில் தசாவதாரக் கோலங்களை சேவிக்கலாம். ஸ்ரீகோவிலின் வாயிலில் பெரிய துவாரபாலகர்கள் கோரைப்பற்களுடன் தங்க கவசத்தில் மின்னுகின்றனர். மூலக்கருவறை மண்டபத்திற்குள் நுழைய மிகச் சிறிய வழி கொண்டு ஒரு தடுப்பு இருக்கிறது. ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே முதலில் ஒரு காலும், அடுத்து இன்னொரு காலுமாக நுழைத்து உள்ளே செல்ல வேண்டும். ‘ஆடு, மாடுகள் கோயிலுக்குள் நுழைந்து விடாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு’ என்றார்கள்.
கருவறைச் சுற்றில் மிகச் சிறிய சந்நதியில் பகவதியை தரிசிக்கலாம். அடுத்து சிறு அளவில் ஒரு யாகசாலை. ஸ்ரீகோவில் வட்டவடிவம் தொப்பி விமானம், இதன் நான்கு ஆரங்களில் நான்கு சாளரங்கள். ஆனால், அவை எப்போதும் சார்த்தியே இருக்கின்றன. நான்கு திக்குகளிலிருந்தும் வெளியேயிருந்து வரும் பக்தர்கள் கருவறைப் பகுதியை அடைய முடிகின்ற ஒரு அற்புத அமைப்பு. அது போலவே அபிஷேக நீர் வெளியேறும் கோமுகியும் சற்று வித்தியாசமான அமைப்பில் உள்ளது. அது கோமுகமாக இல்லாமல், உள்ளிருந்து வரும் சிறு கால்வாய் சிற்ப வடிவான ஒரு தேவியின் தலை மீது வந்து முடிகிறது. இதிலிருந்து வரும் அபிஷேக நீரை பக்தர்கள் கையில் ஏந்தி தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். சிலர் நம் தமிழ்நாட்டில் சிலர் நந்தி காதில் வேண்டுகோள் விடுப்பது போல இந்த தேவியின் காதருகே போய் தம் வேண்டுகோளை ரகசியமாகச் சொல்லிவிட்டு வருகின்றனர்.
மூலவர் மாயப்பிரான் நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதை பத்மம் தாங்கி நின்ற கோலத்தில் மாயப்புன்னகையுடன் எழிலாக சேவை சாதிக்கின்றார். முழு சந்தனக்காப்பில் அருமையாக பெருமாளை சேவித்தோம்” பெருமாளின் ஆரத்தி சேவிக்கும் பாக்கியமும் கிட்டியது.
கருமாணிக்க மலைமேல் மணித்தடம் தாமரைக்காடுகள் போல்.
திருமார்வு வாய் கண் கை உந்தி காலுடையாடைகள் செய்ய பிரான்
திருமாலெம்மான் செழுநீர் வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர்! இதற்கென் செய்கேனோ? ( தி.வா 8-9-1)
பொருள்: திருமால் ஆகிய எம்பெருமான் தன் திவ்ய அவயவங்களுடன் அழகுடன் தோன்றுகின்றான். கரிய மாணிக்க மலையிலே அழகிய தடாகத்தில் தாமரை மலர்கள் மலர்ந்தன போல அவனுடைய திருமார்பும், வாய், கண்கள், கைகள், நாபி, திருவடிகள், ஆடைகள் ஆகியவை அழகுடன் விளங்குகின்றன. இப்படிப்பட்ட சுந்தரனான பெருமான் குட்டநாட்டில் திருப்புலியூரில் எழுந்தருளியுள்ளான். அவனுடைய திருப்பெயரை அன்றி வேறு எதையும் எங்கள் தலைவி பேசவில்லை. அன்னையரே! இதற்கு என் செய்வேன்?
இவ்வாறு திருமார்பு, திருவாய், திருக்கண்கள், திருக்கரங்கள், திருவுந்தி, திருக்கால்கள் அனைத்தும் சிவந்த தாமரைகளாக விளங்க மாயப்பிரான் திருவருளில் பராங்குச நாயகி தோற்றுப் போனாள், அப்பன் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டான் என்று நம்மாழ்வார் கூறுகின்றார்.
புன்னையம் பொழில் சூழ் திருப்புலியூர், திடவுசும்பிலமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர், குன்ற மாமணி மாட மாளிகை, திகழு மணி நெடு மாட நீடு திருப்புலியூர், சுனையினுள் தடந்தாமரை மலரும் தண்புலியூர், என்றெல்லாம் நம்மாழ்வார் இத்தலத்தை பலவாறு பிரமித்துப் பாடியுள்ளார்.
திருப்புலியூரில் எழுந்தருளியுள்ள மாயப்பிரானிடம் மீளாத காதல் கொண்ட பராங்குச நாயகி, மாயப்பிரானைத் தவிர வேறு எவருக்கும் தன்னை மணம் செய்து தரக்கூடாது என்று அன்னையிடன் கூறினாள்.
பராங்குச நாயகிக்கு உள்ள மன உறுதியைத் தோழி புரிந்து கொண்டு அன்னையிடம் தான் ஒன்றும் செய்வதற்கில்லை. நாயகி தேர்ந்தெடுத்த மாயப்பிரான் என்ற மணவாளன் சர்வாங்க சுந்தரனாக உள்ளான். இப்பேர்பட்ட சௌந்தர்யம் உள்ள அரிய வரனை நாயகி தேர்ந்தெடுத்துள்ளாள். அந்த அழகனை திருமணம் செய்து கொள்ளாதே என்று சொல்லி பராங்குச நாயகியை என்னால் தடுக்க முடியவில்லை. அவள் மனதை எப்படி மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை என்பதை
அன்றிமற்றோருபாயமென்? இவளந்தண் துழாய் கமழ்தல்
குன்ற மாமணி மாடமாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம்பு ரை குட்டநாட்டுத் திருப்புலியூர்
நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே (தி. வா 8-9-10)
பொருள்: இப்பெண் திருப்புலியூரில் எழுந்தருளியுள்ள மாயப்பிரானின் திருவருளுக்கு இலக்காகி விட்டாள் என்பது எளிதில் தெரிய வருகிறது. இவள் மேனியிலிருந்து திருத்துழாயின் மணம் எங்கும் வீசுகின்றதே! ஆகவே இவள் திருப்புலியூர் பெருமானை அருளைப் பெற்று விட்டாள் என்பதற்கு வேறு எக்காரணமும் கூறவேண்டியதில்லை. மலை போல உயர்ந்த மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட மாளிகைகள் சூழ்ந்த இவ்வூர் தென்திசைக்கே திலகம் போல விளங்குகிறது. இப்படிப்பட்ட குட்டநாட்டுத் திருப்புலியூரிலுள்ள பெருமானுக்கு இப்பெண் நேர்பட்டு அவன் அருளைப் பெற்றுவிட்டாள் எனவே வேறு ஒரு வரன் தேட வேண்டாம் என்று அன்னைக்குக் கூறும் தோழி பாசுரமாக ஆழ்வார் பாடியுள்ளார்.
பெண் தன்மையில் நம்மாழ்வார் பாடிய பல பாசுரங்களில் மூன்று பாசுரங்கள் மட்டுமே தோழிப் பாசுரமாக அமைந்துள்ளன அவையாவன தீர்ப்பாரை என்னும் வண்துவராபதி மன்னன் மேல் பாடிய பாசுரம், தொலைவில்லி மங்கலப் பாசுரம் மற்றும் இத்திருப்புலியூர் பாசுரம் ஆகும். எம்பெருமான் மேல் அதீத பிரேமை கொண்ட பாவத்தில் பாடும் பாசுரங்களே தோழிப் பாசுரங்கள் ஆகும்.
இவ்வாறு பராங்குச நாயகியாகிய தலைவியை ஆட்கொண்டதால் ஆழ்வாருக்கு எம்பெருமான் இத்தலத்தில் காட்டிய கல்யாண குணம் நாயக லட்சணம் ஆகும் என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் கூறியுள்ளார்.
புருஷோத்தம விமானம்
இவ்வாறு பராங்குச நாயகியாகிய தலைவியை ஆட்கொண்டதால் ஆழ்வாருக்கு எம்பெருமான் இத்தலத்தில் காட்டிய கல்யாண குணம் நாயக லட்சணம் ஆகும் என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் கூறியுள்ளார்.
முதல்வண்ணம் ஆமே முலைவண்ணம்; முன்னை
விதிவண்ணம் நீங்கிவிடுமே – சதுரத்
திருப்புலியூர் நின்றான் திருத்தண் துழாயின்
மருப்புலி ஊர் தென்றல் வரின். (நூ.தி 63)
பொருள்: அழகிய திருப்புலியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள மாயப்பிரானது, குளிர்ந்த திருத்துழாய் மாலையினது நறுமணத்தைப் பொருந்தி வரும் தென்றல் வந்து வீசுமாயின் எனது தனத்தின் பசலை நிறம் மாறி முன்னைய நிறமே வந்து சேரும். முப்பிறவியில் செய்த தீவினையின் பயனாக நேர்ந்த பிறவித்துயரும் அடியோடு விலகி விடும் என்று தலைவி தோழியருக்கு அறத்தொடு நிற்கும் பாசுரமாக திவ்யகவிப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இத்திவ்ய தேசத்தைப் பற்றி பாடியுள்ளார்.
கோமுகி
இத்தலத்தைப் பற்றி பல சுவையான வரலாறுகள் வழங்கப்படுகின்றன. ஒரு சமயம் நம்பூதிரிகளுக்கும், நாயர்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தில் ஆலயத்தின் உள்ளே பலர் மாண்டனர் அதனால் பல வருடங்கள் மூடப்பட்டிருந்ததாம். பிறகு ஒரு யோகி வந்து இறந்த ஆத்மாக்களை எல்லாம் சாந்தி செய்த பின் ஆலயம் திறக்கப்பட்டதாம்.
ஒரு சமயம் ஒரு இல்லத்தில் தலைவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட போது புலியூர் எம்பெருமானை தனது வயிற்று வலி சரியானால் அப்பமும் அடையும் சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டிக் கொண்டாராம். எம்பெருமானின் அருளால் அவரது வயிற்று வலியும் சரியாக பீமன் வயிற்றுக்கு போதுமான அளவு அப்பமும் அடையும் சமர்பித்தாராம். ஆண்டாளும் அழகருக்கு நூறு தடாவில் வெண்ணையும், நூறு தடாவில் அக்கார வடிசலும் சமர்பிக்க வேண்டிக்கொண்டது நினைவுக்கு வருகின்றதா அன்பர்களே.
கொல்லம் பகுதியைச் சேர்ந்த குருவர்கள் தங்களை கௌரவர்களின் வழித்தோன்றலாக கருதுவதால் பீமனுக்கு பயந்து இரவு இத்தலத்தில் தங்குவதில்லையாம்.
இப்பெருமானுக்கு அமுது செய்யப்படும் பிரசாதங்களில் சாத்துச்சாதம் என்னும் பாயசம் மிகவும் சிறப்புப் பெற்றது, எப்போது தயாரித்தாலும் குறைந்த பட்சம் 400 படி அரிசி கொண்டு தயாரிக்கப்படுகின்றது.
ஸ்ரீவ்யாக்ர க்ஷேத்ரே பிராஞ்ஞா சரஸ் புஷ்கரணி தடே, புருஷோத்தம விமானச்சாயாயாம் ஸ்திதாய பூர்வாபிமுகாய ஸ்ரீமதே ஹேமவல்லி (பொற்கொடி நாச்சியார்) ஸமேத ஸ்ரீஆச்சர்ய சக்தியுத ஸ்வாமி (மாயப்பிரான்) பரப்ரஹ்மணே நம: என்ற தியான ஸ்லோகத்துடன் பொற்கொடியையும் மாயப்பிரானையும் திவ்யமாக சேவித்தபின், சிற்றாற்று திருச்செங்குன்றூர் இமையவரப்பனை சேவிக்க புறப்பட்டோம்.
திவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :
திருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை
திருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்
திருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
குருவாயூர் கொடுங்கல்லூர் திருஅஞ்சைக்களம் குலசேகரபுரம்
சோட்டாணிக்கரை வர்க்கலா நெய்யாற்றங்கரை திருப்பிரயார்
இரிஞ்ஞாலக்குடா பாயம்மல்
மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .
6 comments:
அருமை
நன்றி நாகேந்திர பாரதி ஐயா.
அடியேன் தாசன். மலைநாடு திவ்ய தேசங்கள் சேவிக்க விரும்புகிறோம். பயண தூரம் மற்றும் தங்கும் வசதி பற்றி அறிய விரும்புகிறேன். விளக்க முடியுமா?.
குறைந்தது மூன்று நாட்கள் தேவைப்படும். கொச்சி திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் தங்கி அனைத்து திவ்யதேசங்களையும் தரிசிக்கலாம். தங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தரவும்,
மின் புத்தகம் அனுப்பி வைக்கிறேன் அதில் அனைத்து தகவல்களூம் உள்ளன.
Can you send to vasant46@yahoo.com details about stay, distance ,places of visit related to malai nattu tirupatis?
மலை நாட்டு திவ்ய தேசங்கள்
திவ்ய தேசம் அருகில் உள்ள இரயில் நிலையம் தூரம் தங்க அருகில் உள்ள பெரிய ஊர் தூரம்
திருவித்துவக்கோடு பட்டாம்பி 6 கி.மீ சொரனூர்/ பாலக்காடு 18 /60 கி.மீ
திருநாவாய் குட்டிபுரம் 7 கி.மீ தேவசம் போர்ட் விடுதிகள் உள்ளன.
திருமூழிக்களம் அங்கமாலி 10 கி.மீ அங்கமாலி 10 கி.மீ
திருகாட்கரை ஆலுவா 10 கி.மீ எர்ணாகுளம்/ சோட்டாணிக்கரை 10 கி.மீ/ 15 கி.மீ
திருவல்லா திருவல்லா 5 கி.மீ செங்கண்ணூர் 10 கி.மீ
திருக்கடித்தானம் செங்கணச்சேரி 3 கி.மீ செங்கண்ணூர் 16 கி.மீ
திருச்சிற்றாறு செங்கண்ணூர் 1 கி.மீ செங்கண்ணூர் 1 கி.மீ
திருப்புலியூர் செங்கண்ணூர் 5 கி.மீ செங்கண்ணூர் 5 கி.மீ
திருவாறன்விளை செங்கண்ணூர் 5 கி.மீ செங்கண்ணூர் 5 கி.மீ
திருவண்வண்டூர் செங்கண்ணூர் 1 கி.மீ செங்கண்ணூர் 1 கி.மீ
திருவனந்தபுரம் திருவனந்தபுரம் 1 கி.மீ திருவனந்தபுரம் 1 கி.மீ
திருவாட்டாறு குழித்துறை 5 கி.மி மார்த்தாண்டம்/ குலசேகரம் 7 கி.மீ/ 6 கி.மீ
திருவண்பரிசாரம் நாகர்கோவில் 5 கி.மீ நாகர்கோவில் 5 கி.மீ
ஒரே தடவையில் வண்டியில் இவ்வாறாக சென்றால், மூன்று நாட்களில் அனைத்து திவ்ய தேசங்களையும் சேவிக்க இயலும்.
1. தங்கள் ஊரிலிருந்து கோயம்புத்தூர்.
2. கோவை – பாலக்காடு 54 கி.மீ
3. பாலக்காடு – சொரனூர் 50 கி.மீ
4. சொரனூர் – பட்டாம்பி 12 கி.மீ
5. பட்டாம்பி – திருமித்தக்கோடு( திருவித்துவகோடு) 08 கி.மீ
6. திருமித்தக்கோடு – திருநாவாய் (குட்டிபுரம் வழி) 40 கி.மீ
7. திருநாவாய் – திருச்சூர் (குன்னங்குளம் வழி) 60 கி.மீ
8. திருச்சூர் – திருமொழிக்களம்( திருமூழிக்களம்) 50 கி.மீ அல்லது
9. திருநாவாய் – குருவாயூர் – கொடுங்கல்லூர்- திருமூழிக்களம் 115 கி.மீ
10. திருமூழிக்களம் – திருக்காக்கர( திருக்காட்கரை) 25 கி.மீ
11. திருக்காக்கர – எர்ணாகுளம் 10 கி.மீ (இரவு தங்கல்)
12. எர்ணாகுளம் – செங்கணச்சேரி – திருக்கடித்தானம் 85 கி.மீ
13. திருக்கடித்தானம் – திருவல்லா 07 கி.மீ
14. திருவல்லா – செங்கண்ணூர் 10 கி.மீ
15. செங்கண்ணூர் – திருசிற்றாறு 01 கி.மீ
16. செங்கண்ணூர் - திருப்புலியூர் 05 கி. மீ
17. செங்கண்ணூர் – ஆரண்முழா (திருவாறன்விளை) 11 கி.மீ
18. செங்கண்ணூர் – திருவண்வண்டூர் 01 கி.மீ
19. செங்கண்ணூர் – திருவனந்தபுரம் (வழி கொட்டாரக்கர) 110 கி.மீ (இரவு தங்கல்)
20. திருவனந்தபுரம் – திருவாட்டாறு ( வழி மார்த்தாண்டம்) 60 கி.மீ
21. திருவாட்டாறு – திருப்பதிசாரம் (திருவண்பரிசாரம் , வழி தக்கலை) 30 கி.மீ
22. திருப்பதிசாரம் – நாகர்கோவில் 08 கி.மீ
Post a Comment