Showing posts with label மார்க்கண்டேயர். Show all posts
Showing posts with label மார்க்கண்டேயர். Show all posts

Friday, September 9, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 10

குட்டநாட்டுத்  திருப்புலியூர் – மாயப்பிரான்


குட்டநாட்டுத் திருப்புலியூர் என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பஞ்ச பாண்டவர்களில் பீமன் வழிபட்ட தலம். மஹாபாரதப் போரில் துரோணரைக் கொல்ல பீமன் காரணமாக இருந்ததால் அந்தப் பாவம் தீர மஹாவிஷ்ணுவை இங்கு வழிபட்டதாக ஐதீகம். இத்தலம் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ளது, கொல்லம் எர்ணாகுளம் இரயில் பாதையில் செங்கண்ணூரில் இறங்கி பின்னர் பேருந்து மூலம் மேற்காக மன்னார் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ தூரம் பயணம் செய்து இத்தலத்தை அடையலாம். நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வார் தமது சிறிய திருமடலிலும் இத்தலத்தை பல்லாண்டு பாடியுள்ளனர். புலியூர் என்று தற்போது அழைக்கின்றனர். 

108 திவ்விய தேசங்களில் இரண்டு திவ்விய தேசங்கள் புலி என்னும் அடைமொழியைக் கொண்டு திகழ்கின்றன. ஒன்று இத்தலம் மற்றையது சோழ நாட்டுத் திருப்பதியான சிறுபுலியூர் ஆகும், சப்த ரிஷிகளைக் காப்பாற்ற இந்திரன் புலி ரூபத்தில் வந்ததால் இத்தலம் திருப்புலியூர் என்று அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் செந்தமிழ் கூறும் நல்லுலகம் 1. தென்பாண்டி, 2.குடநாடு, 3.குட்டநாடு, 4.கற்காநாடு, 5.வேணாடு, 6.பூமிநாடு, 7.பன்றிநாடு, 8.அருவாநாடு, 9.அருவாவடதலைநாடு, 10.சீரநாடு, 11.மலைநாடு, 12.புனல்நாடு என்று 12 நாடுகளாக பிரிக்கப்பட்டிருந்தன அவற்றுள் இத்தலம் அமைந்திருக்கும் பகுதி குட்டநாடு என்றிருந்திருக்கவேண்டும் எனவே நம்மாழ்வார் இத்தலத்தை குட்டநாட்டு திருப்புலியூர் என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் ஆலயத்தில் உள்ள திருப்புலியூர் சித்திரம் 


 தல வரலாறு: புறாவிற்காக தனது தொடையை அறுத்தளித்த சிபி சக்கரவர்த்தியின் புதல்வன் வ்ருஷாதர்பி. மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தலையில் கனம் ஏற்றிக்கொண்டு அறம் பிறழ்ந்து வாழ்ந்து வந்தான். இவனுக்குப் பாடம் புகட்ட விரும்பிய பரந்தாமன், ஒரு காலகட்டத்தில் இயற்கையின் சீற்றத்தால் கொடிய பஞ்சம் ஏற்பட செய்தார். ஆனால், அப்போதும் தாகத்தைத் தணிக்க, பசியைப் போக்க தனக்கு நீரும், உணவும்தான் வேண்டும்; வெறும் பொன்னும் பொருளும் தாகத்தையோ, பசியையோ தீர்க்காது என்று புரிந்து கொள்ளவில்லை அவன். அச்சமயம் அத்ரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய சப்த ரிஷிகள் தன் நாட்டிற்கு வருகை தந்திருப்பதை அறிந்த அவன், அவர்களிடம், தன் நாட்டின் வறுமையை அவர்கள் ஒழித்தார்களென்றால், அவர்களுக்குப் பெருஞ்செல்வத்தைத் தான் வாரி வழங்குவதாகத் தெரிவித்தான். நாட்டு மக்கள் அனைவரும் பஞ்சத்தில் தவிக்கும் போது அரசனிடம் தானம் பெற விரும்பாத ரிஷிகள், தாங்கள் யாரிடமும் யாசகம் பெற விரும்பியதில்லை; அதனால் யாரும் தானம் தருவதைத் தங்களால் ஏற்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அதோடு தாங்கள் செல்வ மிகுந்த வாழ்க்கைக்கு மிகவும் அப்பாற்பட்டவர்கள், தங்களை செல்வத்தால் அடிமைப்படுத்திவிட முடியாது என்றும் கோபித்துச் சொன்னார்கள். 

அவர்களால் தன் நாட்டில் நிலவும் பஞ்சத்தைப் போக்க முடியும் என்று உறுதியாக நம்பிய மன்னன், அவர்களை எப்படியாவது தன் வழிக்குக் கொண்டு வர குறுக்கு வழியில் சிந்தித்தான். அவர்களுக்கு சில கனிகளை அனுப்பி வைத்தான். அவற்றினூடே சில தங்க நாணயங்களையும் சேர்த்து, மறைத்து அனுப்பி வைத்தான். ஆனால், அவர்களோ தானம் என்ற பெயரில் வழங்கப்படும் எந்தப் பொருளையும் ஏறெடுத்தும் பார்க்க விரும்பவில்லை. அதனால் அந்தக் கூடைப் பழங்களையும் அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதோடு, ‘‘இப்படி எங்களுக்கு தானமளித்து, எங்கள் தவ ஆற்றலால் உன்னுடைய பஞ்சத்தைப் போக்க வேண்டும் என்று விரும்புவதை விட, நீயே நேரடியாக இறைவனிடம் இறைஞ்சினால், அவர் உன் மீது இரக்கம் கொண்டு, அருள் பொழியக்கூடுமே!’’ என்று அறிவுரையும் சொன்னார்கள். இதைக் கேட்டு வெகுண்டான், வ்ருஷாதர்பி. மேலும் கோபமும், அவமான பாதிப்பும் அதிகரிக்க, உடனே ஒரு தீய யாகத்தைச் செய்தான். அதில் தோன்றிய கிருதை என்ற ஒரு துர்தேவதையை அந்த முனிவர்கள் மீது ஏவினான். ரிஷிகள் உடனே பரந்தாமனை வேண்டினார்கள். இவர்களது நிலையை அறிந்த பரம்பொருள், உடனே இந்திரனிடம், அந்த ரிஷிகளை அவர்களை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்திலிருந்து காக்குமாறு உத்தரவிட்டார். இந்திரனும் புலியாக உருமாறி, துர்தேவதையைச் சிதைத்து வதைத்தான். வ்ருஷாதர்பி திகைத்து நின்றான். அவனிடம், ரிஷிகள், ‘‘செல்வம் எல்லாவற்றையும் கொடுத்துவிடாது என்பதைப் புரிந்துகொள். இணையற்ற செல்வமான ஸ்ரீமன் நாராயணனை நீ தியானித்திருந்தால், உன் நாட்டில் பஞ்சமே வந்திருக்காது. அப்படி வந்துவிட்ட பின்னும் இறையருளை உணராது, வீம்புப் பிடிவாதத்தால் எங்களையும் விலைக்கு வாங்க நினைத்த உன் ஆணவப் போக்கை மாற்றிக்கொள்’’ என்று அறிவுறுத்தினார்கள். அதே சமயம் அவர்கள் முன் காட்சி தந்தார் ஸ்ரீமந் நாராயணன். தமக்கு தரிசனம் அளித்த அந்தப் பரம்பொருளை ‘மாயப்பிரான்’ என்றழைத்துப் போற்றினார்கள். கூடவே, அறியாது பிழை செய்த இந்த மன்னவனை மன்னித்து விடுமாறும் கேட்டுக்கொண்டார்கள். அவன் நாட்டில் நிலவிய பஞ்சத்தைப் போக்கி சுபிட்சம் உண்டாக்குமாறும் சிபாரிசு செய்தார்கள். வ்ருஷாதர்பி தன் தவறை உணர்ந்தான். அப்படியே அவர்கள் முன் தண்டனிட்ட அவன், அந்தப் பரம்பொருள் அங்கேயே கோயில் கொண்டு தன்னையும், தன் நாட்டையும் பரிபாலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். ரிஷிகளும் அதை ஆமோதிக்க, மாயப்பிரான் அவ்வாறே அங்கே அர்ச்சாவதாரம் கொண்டார்.

திருப்புலியூர் முன் வாயில் 

ஒரு சமயம் நாரதர் தனது கலகத்தை கண்ணனின் மனைவிகளிடம் ஆரம்பிக்கலாம் என்று திட்டம் போட்டார். முதலில் ருக்மணி வீட்டுக்குச் சென்றார். அங்கே மனைவிக்குத் தாம்பூலம் மடிச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்கிற கிருஷ்ணரைக் கண்டார். இதைக்கொண்டு ஏழு மனைவிகளின் வீட்டுக்குச் சென்று சொல்லி குழப்பம் ஏற்படுத்தலாம் என்று ராதையின் வீட்டுக்குச் சென்றார். அங்கே ராதைக்காக தன் புல்லாங்குழலில் அழகான இசையை வாசித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணரை கண்டார் இது எப்படி? அங்கே தாம்பூலம் மடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேனே என்ற குழப்பத்தோடு அடுத்து சத்யபாமா வீட்டுப்பக்கம் சென்றார் நாரதர். அங்கே, கணவருக்கு ஆசை ஆசையாக உணவு பரிமாறிக் கொண்டிருந்த பாமாவைக் கண்டார். அங்கிருந்து ஜாம்பவதி இல்லத்திற்கு வந்த நாரதர். அங்கே ஓய்வாகப் படுத்திருக்கும் கிருஷ்ணருக்கு ஜாம்பவதி கால் பிடித்து விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார் இவ்வாறே அனைத்து மனைவியர் இல்லத்திலும் மாயனைக் கண்டு அதிசயித்தார் நாரதர். எனவே இங்கே மூலவருக்கு மாயபிரான் என்று திருநாமம்  என்று ஐதீகம். வாருங்கள் சப்த ரிஷிகளைக் காத்து நாரதரிடம் மாயம் செய்த பெருமாளை சேவிக்கலாம். 

ஊர்வளம் கிளர் சோலையும், கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து
 ஏர்வளம் கிளர் தண் பணைக் குட்ட நாட்டுத் திருப்புலியூர்
 சீர்வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ் தேவபிரான்
 பேர்வளம் கிளர்ந்து அன்றிப் பேச்சு இலள் இன்றிப்புனை இழையே (தி.வா.8-9-4)

பொருள்: குட்டநாட்டுத் திருப்புலியூரில் சோலைகளும் கரும்பும் செந்நெல்லும் சூழ்ந்து காணப்படுகின்றன. ஏர் வளம் மிகுவதால் நீர்நிலைகள் சூழப்பட்ட மருதச்சிறப்பு இங்கு உண்டு. இவ்வூரில் எழுந்தருளியுள்ள பெருமான் குணங்களிலே சிறந்து விளங்கும்படியாக மூன்று உலகங்களையும் காப்பதற்காக அவற்றைப் பிரளய காலத்திலே வயிற்றிலே வைத்துக் காப்பாற்றிய தேவபிரான் அன்றோ! அவனுடைய திருப்பெயர்களை அணிகலன்களாக அணிந்துள்ள இப்பெண் மிகவும் காதல் கிளர்ந்தவளாய்ச் சொல்கின்றாள். அவன் பெயரன்றி வேறு எதனையும் இவள் சொல்வதில்லை. என்று நம்மாழ்வார் தமது மற்றொருவர்க்கடிமையற்றிருக்கும் தன்மையை தோழி மணவிலக்குக்காகத் தாய்மாரோடு கூறும் பாசுரத்தாலே அருளிச் செய்த இத்தலத்தின்

பெருமாள்: மாயப்பிரான் தாயார் பொற்கொடி நாச்சியார். 
விமானம் : புருஷோத்தம விமானம்.
தீர்த்தம்: பிரஞ்ஞா ஸரஸ் தீர்த்தம். 
மங்களாசாசனம்: நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்.

 ........சீரார்திரு வேங்கடமே திருக்கோவ லூரே மதிட்கச்சியூரகமே பேரகமே பேராமறுதிருத்தான் வெள்ளறையே வெஃகாவே பேராலிதண்கால் நறையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த அரங்கம் – கணமங்கை.... ( சி.தி.ம ) 

என்று எம்பெருமானின் கருத்த திருமேனியைக் காண்பதற்காக பரகால நாயகி, அவன் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களுக்கு மடலூர்ந்து செல்வேன் என்று சிறிய திருமடலில் திருமங்கையாழ்வார் இத்திருப்புலியூரையும் பாடியுள்ளார்.

மிகவும் உயரத்தில் அமைந்துள்ளது இத்தலம். அற்புதமான நுழைவு வாயில் உச்சியில் ஆதி சேஷன் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் அழகிய சுதை சிற்பம். அதன் கீழ் இரணியனை தனது மடியில் வைத்து அவன் மார்பை பிளக்கும் உக்ர நரசிம்மர் சிற்பம். இருபுறமும் கணபதி சிவபெருமான் சுதை சிற்பங்கள், துவார பாலகர்கள் அமைத்துள்ளனர். இருபத்தோரு படிகள் ஏறி கோயிலுக்குள் நுழைய வேண்டும். ஆலயத்தில் உள்ளே இடது பக்கத்தில் பெரியதொரு கதையைக் காணலாம். இந்தக் கோயில் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமனால் புனருத்தாரணம் செய்யப்பட்டது, அதன் நினைவாகவே அவனது பிரம்மண்ட கதை ஒரு மேடையின் மேல் சாய்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பீமனைப் போலவே, அழகாக பருத்து உயர்ந்த தூண்கள் கொண்ட சுமார் 500 உட்காரக்கூடிய பிரம்மாண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. நெடிதுயர்ந்த தங்கக் கவசம் பூண்ட கொடி மரம், சூரிய ஒளியில் மின்னுகின்றது. பலி பீடமும் தங்கக் கவசம் பூண்டுள்ளது. வெளிப் பிராகாரச் சுற்றில் ஐயப்பன் தனிச் சன்னதி கொண்டிருக்கிறார்.. அருகே ஒரு பலா மரத்தினடியில் ஆதிசேஷ மஹாவிஷ்ணுவையும், வித்தியாசமாக ஆதிசேஷன் குடைபிடிக்க சிவனையும் தரிசிக்கலாம். சற்றுத் தொலைவில் பெரிய அரசமரம் ஒன்றின் அடியில் மேடை கட்டியிருக்கிறார்கள். பக்கத்தில் மிகப் பெரிய அன்னதானக் கூடம். மற்றொரு பெரிய சன்னதியில் சிவபெருமான் அருள் பாலிக்கின்றார். பொதுவாகவே கேரளத்தில் சிவன் சன்னதியில் கோமுகியை தாண்டி செல்லும் வழக்கம் கிடையாது. இத்தலத்திலும் இவ்வாறே முழு வலம் வருவதில்லை கோமுகியிலிருந்து திரும்பி வந்து விடுகின்றனர்.

பீமனின் கதை 

3200 வருடங்கள் புராதனமானது இக்கோயில் என்கிறார்கள். ஒவ்வொரு தை மாதமும் மகரசங்கராந்தி தினத்தன்று பக்தர்கள் காவடி எடுக்கிறார்கள். பிறகு ஒரு வாரம் கழித்து கொடியேற்றி விழா கொண்டாடுகிறார்கள். நமஸ்கார மண்டபத்தின் தூண்களும் தங்கக் கவசம் பூண்டுள்ளன அவற்றில் தசாவதாரக் கோலங்களை சேவிக்கலாம். ஸ்ரீகோவிலின் வாயிலில் பெரிய துவாரபாலகர்கள் கோரைப்பற்களுடன் தங்க கவசத்தில் மின்னுகின்றனர். மூலக்கருவறை மண்டபத்திற்குள் நுழைய மிகச் சிறிய வழி கொண்டு ஒரு தடுப்பு இருக்கிறது. ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே முதலில் ஒரு காலும், அடுத்து இன்னொரு காலுமாக நுழைத்து உள்ளே செல்ல வேண்டும். ‘ஆடு, மாடுகள் கோயிலுக்குள் நுழைந்து விடாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு’ என்றார்கள். கருவறைச் சுற்றில் மிகச் சிறிய சந்நதியில் பகவதியை தரிசிக்கலாம். அடுத்து சிறு அளவில் ஒரு யாகசாலை. ஸ்ரீகோவில் வட்டவடிவம் தொப்பி விமானம், இதன் நான்கு ஆரங்களில் நான்கு சாளரங்கள். ஆனால், அவை எப்போதும் சார்த்தியே இருக்கின்றன. நான்கு திக்குகளிலிருந்தும் வெளியேயிருந்து வரும் பக்தர்கள் கருவறைப் பகுதியை அடைய முடிகின்ற ஒரு அற்புத அமைப்பு. அது போலவே அபிஷேக நீர் வெளியேறும் கோமுகியும் சற்று வித்தியாசமான அமைப்பில் உள்ளது. அது கோமுகமாக இல்லாமல், உள்ளிருந்து வரும் சிறு கால்வாய் சிற்ப வடிவான ஒரு தேவியின் தலை மீது வந்து முடிகிறது. இதிலிருந்து வரும் அபிஷேக நீரை பக்தர்கள் கையில் ஏந்தி தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். சிலர் நம் தமிழ்நாட்டில் சிலர் நந்தி காதில் வேண்டுகோள் விடுப்பது போல இந்த தேவியின் காதருகே போய் தம் வேண்டுகோளை ரகசியமாகச் சொல்லிவிட்டு வருகின்றனர்.

மூலவர் மாயப்பிரான் நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதை பத்மம் தாங்கி நின்ற கோலத்தில் மாயப்புன்னகையுடன் எழிலாக சேவை சாதிக்கின்றார். முழு சந்தனக்காப்பில் அருமையாக பெருமாளை சேவித்தோம்” பெருமாளின் ஆரத்தி சேவிக்கும் பாக்கியமும் கிட்டியது. 

 கருமாணிக்க மலைமேல் மணித்தடம் தாமரைக்காடுகள் போல். 
திருமார்வு வாய் கண் கை உந்தி காலுடையாடைகள் செய்ய பிரான் திருமாலெம்மான் செழுநீர் வயல் குட்டநாட்டுத் திருப்புலியூர் 
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைமீர்! இதற்கென் செய்கேனோ? ( தி.வா 8-9-1)

பொருள்: திருமால் ஆகிய எம்பெருமான் தன் திவ்ய அவயவங்களுடன் அழகுடன் தோன்றுகின்றான். கரிய மாணிக்க மலையிலே அழகிய தடாகத்தில் தாமரை மலர்கள் மலர்ந்தன போல அவனுடைய திருமார்பும், வாய், கண்கள், கைகள், நாபி, திருவடிகள், ஆடைகள் ஆகியவை அழகுடன் விளங்குகின்றன. இப்படிப்பட்ட சுந்தரனான பெருமான் குட்டநாட்டில் திருப்புலியூரில் எழுந்தருளியுள்ளான். அவனுடைய திருப்பெயரை அன்றி வேறு எதையும் எங்கள் தலைவி பேசவில்லை. அன்னையரே! இதற்கு என் செய்வேன்? இவ்வாறு திருமார்பு, திருவாய், திருக்கண்கள், திருக்கரங்கள், திருவுந்தி, திருக்கால்கள் அனைத்தும் சிவந்த தாமரைகளாக விளங்க மாயப்பிரான் திருவருளில் பராங்குச நாயகி தோற்றுப் போனாள், அப்பன் அவள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டான் என்று நம்மாழ்வார் கூறுகின்றார்.

புன்னையம் பொழில் சூழ் திருப்புலியூர், திடவுசும்பிலமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர், குன்ற மாமணி மாட மாளிகை, திகழு மணி நெடு மாட நீடு திருப்புலியூர், சுனையினுள் தடந்தாமரை மலரும் தண்புலியூர், என்றெல்லாம் நம்மாழ்வார் இத்தலத்தை பலவாறு பிரமித்துப் பாடியுள்ளார். திருப்புலியூரில் எழுந்தருளியுள்ள மாயப்பிரானிடம் மீளாத காதல் கொண்ட பராங்குச நாயகி, மாயப்பிரானைத் தவிர வேறு எவருக்கும் தன்னை மணம் செய்து தரக்கூடாது என்று அன்னையிடன் கூறினாள். 

பராங்குச நாயகிக்கு உள்ள மன உறுதியைத் தோழி புரிந்து கொண்டு அன்னையிடம் தான் ஒன்றும் செய்வதற்கில்லை. நாயகி தேர்ந்தெடுத்த மாயப்பிரான் என்ற மணவாளன் சர்வாங்க சுந்தரனாக உள்ளான். இப்பேர்பட்ட சௌந்தர்யம் உள்ள அரிய வரனை நாயகி தேர்ந்தெடுத்துள்ளாள். அந்த அழகனை திருமணம் செய்து கொள்ளாதே என்று சொல்லி பராங்குச நாயகியை என்னால் தடுக்க முடியவில்லை. அவள் மனதை எப்படி மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை என்பதை 

 அன்றிமற்றோருபாயமென்? இவளந்தண் துழாய் கமழ்தல்
 குன்ற மாமணி மாடமாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி 
தென் திசைத் திலதம்பு ரை குட்டநாட்டுத் திருப்புலியூர்
 நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே (தி. வா 8-9-10)

பொருள்: இப்பெண் திருப்புலியூரில் எழுந்தருளியுள்ள மாயப்பிரானின் திருவருளுக்கு இலக்காகி விட்டாள் என்பது எளிதில் தெரிய வருகிறது. இவள் மேனியிலிருந்து திருத்துழாயின் மணம் எங்கும் வீசுகின்றதே! ஆகவே இவள் திருப்புலியூர் பெருமானை அருளைப் பெற்று விட்டாள் என்பதற்கு வேறு எக்காரணமும் கூறவேண்டியதில்லை. மலை போல உயர்ந்த மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட மாளிகைகள் சூழ்ந்த இவ்வூர் தென்திசைக்கே திலகம் போல விளங்குகிறது. இப்படிப்பட்ட குட்டநாட்டுத் திருப்புலியூரிலுள்ள பெருமானுக்கு இப்பெண் நேர்பட்டு அவன் அருளைப் பெற்றுவிட்டாள் எனவே வேறு ஒரு வரன் தேட வேண்டாம் என்று அன்னைக்குக் கூறும் தோழி பாசுரமாக ஆழ்வார் பாடியுள்ளார்.

 பெண் தன்மையில் நம்மாழ்வார் பாடிய பல பாசுரங்களில் மூன்று பாசுரங்கள் மட்டுமே தோழிப் பாசுரமாக அமைந்துள்ளன அவையாவன தீர்ப்பாரை என்னும் வண்துவராபதி மன்னன் மேல் பாடிய பாசுரம், தொலைவில்லி மங்கலப் பாசுரம் மற்றும் இத்திருப்புலியூர் பாசுரம் ஆகும். எம்பெருமான் மேல் அதீத பிரேமை கொண்ட பாவத்தில் பாடும் பாசுரங்களே தோழிப் பாசுரங்கள் ஆகும்.

புருஷோத்தம விமானம்


 இவ்வாறு பராங்குச நாயகியாகிய தலைவியை ஆட்கொண்டதால் ஆழ்வாருக்கு எம்பெருமான் இத்தலத்தில் காட்டிய கல்யாண குணம் நாயக லட்சணம் ஆகும் என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் கூறியுள்ளார். 

முதல்வண்ணம் ஆமே முலைவண்ணம்; முன்னை
விதிவண்ணம் நீங்கிவிடுமே – சதுரத் 
திருப்புலியூர்  நின்றான் திருத்தண் துழாயின் 
மருப்புலி ஊர் தென்றல் வரின். (நூ.தி 63) 

பொருள்: அழகிய திருப்புலியூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள மாயப்பிரானது, குளிர்ந்த திருத்துழாய் மாலையினது நறுமணத்தைப் பொருந்தி வரும் தென்றல் வந்து வீசுமாயின் எனது தனத்தின் பசலை நிறம் மாறி முன்னைய நிறமே வந்து சேரும். முப்பிறவியில் செய்த தீவினையின் பயனாக நேர்ந்த பிறவித்துயரும் அடியோடு விலகி விடும் என்று தலைவி தோழியருக்கு அறத்தொடு நிற்கும் பாசுரமாக திவ்யகவிப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இத்திவ்ய தேசத்தைப் பற்றி பாடியுள்ளார்.

கோமுகி

இத்தலத்தைப் பற்றி பல சுவையான வரலாறுகள் வழங்கப்படுகின்றன. ஒரு சமயம் நம்பூதிரிகளுக்கும், நாயர்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தில் ஆலயத்தின் உள்ளே பலர் மாண்டனர் அதனால் பல வருடங்கள் மூடப்பட்டிருந்ததாம். பிறகு ஒரு யோகி வந்து இறந்த ஆத்மாக்களை எல்லாம் சாந்தி செய்த பின் ஆலயம் திறக்கப்பட்டதாம். ஒரு சமயம் ஒரு இல்லத்தில் தலைவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட போது புலியூர் எம்பெருமானை தனது வயிற்று வலி சரியானால் அப்பமும் அடையும் சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டிக் கொண்டாராம். எம்பெருமானின் அருளால் அவரது வயிற்று வலியும் சரியாக பீமன் வயிற்றுக்கு போதுமான அளவு அப்பமும் அடையும் சமர்பித்தாராம். ஆண்டாளும் அழகருக்கு நூறு தடாவில் வெண்ணையும், நூறு தடாவில் அக்கார வடிசலும் சமர்பிக்க வேண்டிக்கொண்டது நினைவுக்கு வருகின்றதா அன்பர்களே. 

கொல்லம் பகுதியைச் சேர்ந்த குருவர்கள் தங்களை கௌரவர்களின் வழித்தோன்றலாக கருதுவதால் பீமனுக்கு பயந்து இரவு இத்தலத்தில் தங்குவதில்லையாம். 

இப்பெருமானுக்கு அமுது செய்யப்படும் பிரசாதங்களில் சாத்துச்சாதம் என்னும் பாயசம் மிகவும் சிறப்புப் பெற்றது, எப்போது தயாரித்தாலும் குறைந்த பட்சம் 400 படி அரிசி கொண்டு தயாரிக்கப்படுகின்றது.

ஸ்ரீவ்யாக்ர க்ஷேத்ரே பிராஞ்ஞா சரஸ் புஷ்கரணி தடே, புருஷோத்தம விமானச்சாயாயாம் ஸ்திதாய பூர்வாபிமுகாய ஸ்ரீமதே ஹேமவல்லி (பொற்கொடி நாச்சியார்) ஸமேத ஸ்ரீஆச்சர்ய சக்தியுத ஸ்வாமி (மாயப்பிரான்) பரப்ரஹ்மணே நம: என்ற தியான ஸ்லோகத்துடன் பொற்கொடியையும் மாயப்பிரானையும் திவ்யமாக சேவித்தபின், சிற்றாற்று திருச்செங்குன்றூர் இமையவரப்பனை சேவிக்க புறப்பட்டோம்.

 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்
மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .

Wednesday, September 7, 2016

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 9

திருவண்வண்டூர் – பாம்பணையப்பன்




பஞ்ச பாண்டவர்களில் நகுலன் வழிபட்ட தலம், நாரதருக்கும், மார்க்கண்டேயருக்கும் பெருமாள்  பிரத்யக்ஷம். கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையின் வடபால் அமைந்த தலம்.  எனவே நம்மாழ்வாரும் இத்திருப்பதியை  “தேறுநீர் பம்பை வடபாலைத்  திருவண்வண்டூர்” என்று பல்லாண்டு பாடியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சித்திரம்

பாண்டவர்களில் நகுலன் புனர் நிர்மாணம் செய்து வழிபட்ட ஆலயம் என்பதால்  பாண்டவர் ஊர் என்பதே வண்வண்டூர் என்று மருவி இருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. திருவன் என்ற மலையாளச் சொல்  திருமாலைக் குறிக்கின்றது எனவே திருவன்+உண்டு+ஊர் என்பதே திருவண்வண்டூர் ஆகியதாகவும் ஒரு கருத்து உள்ளது.



செங்கண்ணூரிலிருந்து வடக்கே 6 கி.மீ  தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.  தற்போது திருவமுண்டூர் என்றழைக்கப்படுகின்றது. எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் இரயில் பாதையில் செங்கண்ணூரில் இறங்கி பின்னர் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம்.  தங்கும் வசதிகள் ஒன்றுமில்லை.   திருவல்லாவில் இருந்து  வந்தும் சேவிக்கலாம்.

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள்!
விடலில் வேதவொலி முழங்கும் தண்திருவண்வண்டூர்
 
கடலின் மேனிப்பிரான் கணணனை நெடுமாலைக்கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகுமென்று உணர்த்துமினே
 ( தி.வா.6-1-4 )

பொருள்: பிரிவு இல்லாத போகத்திலே மூழ்கிச் சேர்ந்து அனுபவிக்கின்ற இளமை பொருந்திய அன்னங்களே! குளிர்ந்த திருவண்வண்டூரில் பிரிதல் இல்லாத வேதத்தின் ஒலியானது  ஒலித்துக் கொண்டிருக்கும்; அங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் கடல் போன்ற நிறத்தை உடையவன், உபகாரகன்; கண்ணபிரான்; அந்த நெடிய திருமாலைக் கண்டு ஒரு பெண்ணானவள் உடல் நிலைகுலைந்து உருகுகின்றாள் என்று உணர்த்துங்கோள் என்று நம்மாழ்வார்,   புருஷோத்தமான இராமன் ரக்ஷண தைர்யம் அதாவது தன்னை சரணடைந்தவர்களை காக்கும் உறுதி என்னும் தன் குணத்தை மறந்து தன்னை இரட்சிக்க மறந்து விட்டார் என்று  பறவைகளையும் வண்டையும் தூது விடும் பாவத்தில் மங்களாசாசனம் செய்த திருவண்வண்டூரின்

மூலவர் - பாம்பணையப்பன், கமலநாதன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
தாயார் - கமலவல்லி நாச்சியார்.
தீர்த்தம் - பம்பா தீர்த்தம்.
விமானம் - வேதாலய விமானம்.
ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர், நாரதர்.

மூலவரின் திருநாமம் பாம்பணையப்பன், என்றாலும் பெருமாள் சதுர் புஜங்களுடன் நின்ற கோலத்தில்தான் சேவை சாதிக்கின்றார். பம்பையின் வடபால் அமைந்த  ஆலயம் என்பதால் பம்பை அணை என்பதே பாம்பணையாக மருவியிருக்கலாம் என்றொரு கருத்து உண்டு. எனவே இத்தலம் ”பம்போத்தர க்ஷேத்திரம்” என்றும் அழைக்கப்படுகின்றது.  ஆதி சேஷனின் அரவணைப்புடன் அருள் பாலிப்பவர் என்பதால் இந்த திருநாமம் என்பாரும் உண்டு. நம்மாழ்வார் இப்பெருமாளை   பக்தர்களை இரட்சிக்க உறுதி கொண்ட புருஷோத்தமனாக, இராமனாக அனுபவிக்கின்றார். 

பிரம்மதேவர் சனகாதியர்கள் நால்வரையும் சிருஷ்டியை விருத்தி செய்வதற்காக படைத்தார், அவர்களுக்கு நாரதர் ஞானத்தை போதித்தார்  எனவே  அவர்கள் தவ வாழ்வை மேற்கொண்டனர்,  அதனால் பிரம்மதேவன்  நாரதர் மேல் கோபம் கொண்டு "நீ எந்த இடத்திலும் நிலையாக இருக்க முடியாது"  திரிலோக சஞ்சாரியாகக் கடவது என்று சாபமிட்டார். இதனால் நாரதர் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து, இறுதியில் இத்தலத்திற்கு வந்தார் அப்போது அவருக்கு ஒரு அமைதி கிட்டியது எனவே அவர் இங்கேயே  தங்கி  நாராயணனை நோக்கி தவம் புரிந்தார். மகாவிஷ்ணுவும் காட்சி தந்தார். நாரதர் இரண்டு வரங்களை வேண்டினார். முதலாவது இத்தலத்திலேயே தான் இருக்க வேண்டும், இரண்டாவது தமக்கு தத்துவ ஞானம் உபதேசிப்பதே தொழிலாக வேண்டும்' என்று வேண்ட, பகவானும் அவ்விரண்டு வரங்களையும் அளித்தார்.  பின்னர்   நாரதர் மகாவிஷ்ணுவே பரதத்துவம் என்று நிறுத்தி, அவரை பூஜிக்கும் முறை, துதி முதலியனவற்றை பெருமாள் அருளியபடி இருபத்தைந்தாயிரம் கிரந்தங்களில் நாரதீய புராணத்தை எழுதியதாக தல புராணம் கூறுகின்றது.


தங்கக் கொடிமரம் 

இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவரும் தவம் செய்து பிரளயம், ஜகத் சிருஷ்டி ஆகியவற்றை தரிசிக்க வேண்டும் என்று வேண்ட, 

கரார விந்தேந பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவஶயந்தம் |
வடஸ்ய பத்ரஸ்ய புடேஶயாநம் பாலம் முகுந்தம் ஸ்மராமி ||


என்றபடி பிரளய  காலத்தில் அனைத்து உலகங்களையும் தன் வயிற்றில் அடக்கி ஓர் ஆலிலையில் தனது தாமரைப் போன்ற திருப்பாதவிரலை தாமரைப்போன்ற திருக்கரத்தினால் தாங்கி விரலைச் சுவைத்த வண்ணம் பள்ளி கொள்ளும் அழகை பெருமாளின் திருமேனியில் காணும் பேறு பெற்றார்.
ஆலயத்தை நெருங்கியவுடன் அழகிய அலங்கார முகப்பு வாசல்  நம்மை வரவேற்கின்றது.   உச்சியில்  காளிங்க நர்த்தன  கிருஷ்ணன். அதன் கீழே பெருமாள் கருடன் மேல் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி கஜேந்திரனுக்கு மோக்ஷம் அளிக்கும் அருமையான சுதை சிற்பம். இரண்டு பக்கங்களிலும்  நாரதரும், தும்புருவும் இன்னிசை இசைக்கின்றனர். அடுத்து இன்னும் கீழே  ஹயக்ரீவர். இரு பக்கங்களிலும் இரண்டிரண்டு அவதாரங்கள். மச்சம்,  கூர்மம் ஒரு பக்கமும், நரசிம்மரும், வாமனரும்.  கீழே கை கூப்பிய நிலையில் கருடனும் அனுமனும், மேலும் துவார பாலகர்களும் உள்ளனர் இவ்வாறு  முகப்பு வாசல் அருமையாக உள்ளது.  காளிங்கனின்  உடல் வளைஞ்சு நெளிந்து  போய்,  வால் நாரதர் மாடத்துக்கு மேல் எட்டிப் பார்ப்பது அருமையாக உள்ளது. மறு புறம் பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணன், வராக அவதாரங்களும், கீதோபதேச  காட்சி, பிரம்மா, ஐயப்பன் என்று அழகோ அழகு!  தூண்களுடன்  சிறிதாக  இரண்டு திண்ணைகள்  கதவுக்கு இருபுறமும் மிகவும் அருமை.


அருமையான முகப்பு - முன்புறம் 
பின்புறம் 
 படங்களுக்கு  நன்றி - துளசியம்மா


பெரிய கோவில் என்றாலும் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றது. அன்னதான மண்டபத்தில் தினமும் மதிய வேளையில் அன்னதானம் நடைபெறுகின்றது. வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீகிருஷ்ணன் தனிச் சன்னிதியில் அழகாக கொலுவிருக்கிறார். கையில் வெண்ணெயுடன் காட்சி தரும் இந்த  பாலகிருஷ்ணனை, நவநீத கிருஷ்ணன் என்றழைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்த சன்னதி அமைந்திருக்கும் மண்டபத்தில், மேலே சிறு சிறு தொட்டில்களும், மணிகளும் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. அடுத்து ஒரு உயரமான பீடத்தில் நாக நாராயணன், நாகராஜன், நாக யக்ஷி ஆகியோர் அருள் பாலிக்கிறார்கள். அவர்களுக்கு நிறைய மஞ்சள் பூசி, பக்தர்கள் தம் பக்தியைத் தெரிவிக்கிறார்கள். அர்ச்சகர், அவர்கள் சார்பில் அர்ச்சனை செய்து, மஞ்சள் பொடியையே பிரசாதமாக தருகிறார். 

வெளிப் பிராகாரத்தில் கணபதிக்கென்று சிறு சன்னதி. அடுத்து கோசாலை கிருஷ்ணர். இந்த விக்கிரகம், இத்தல தீர்த்தத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். ஒரு சிறு கிணறாக, கோயிலுக்குப் பின்னால் விளங்குகிறது இந்தத் தீர்த்தம். அருகில் பிரமாண்டமான அரசமரம்  நிழல் தந்து குளிர்விக்கிறது; பிராணவாயு தந்து உயிருக்குப் புத்துணர்வு ஊட்டுகிறது. சற்றுத் தொலைவில்  சிவன்,  சாஸ்தா சந்நதி. தெற்கில் பகவதியின் சன்னதி உள்ளது.  

நமஸ்கார மண்டபத்தில் அருமையாக அனந்த பத்மநாப சுவாமியின் மர சிற்பம் வர்ணத்துடன் அருமையாக உள்ளது. வட்ட வடிவ ஸ்ரீகோவில்  துவிதள (இரண்டடுக்கு) செப்புக் கவசம் பூண்ட தொப்பி வடிவ விமானம். சுட்டு விளக்குகள் எழிலாக தொங்குகின்றன.  மூலவர் சந்நதி மேற்கு நோக்கியிருக்கிறது. பாம்பணையப்பன் என்று போற்றப்படும் இந்தப் பெருமாள், சிறு உருவில், பள பளவென்று ஜொலிக்கிறார்.  நின்ற கோலத்தில் சங்கு, சக்ர, பத்ம,  கதாபாணியாகச் சேவை சாதிக்கின்றார். அருமையான சந்தனக் காப்பு அலங்காரத்தில் பெருமாளை திவ்யமாக சேவித்தோம்.  மூலவர் பாம்பணையப்பனைத் தவிர, இங்கே சன்னதி கொண்டிருக்கும் பிற விக்கிரகங்கள் எல்லாமே கோயிலைப் புனரமைக்க நிலத்தைத் தோண்டிய போது கிடைத்தவை என்கிறார்கள்.  இவ்வாலயத்தில் ஒரு பெரிய மண்டபம் கல்யாண மண்டபமாக உள்ளது. மறுநாள் ஒரு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

ஒருவண்ணம்சென்றுபுக்கு எனக்கொன்றுரைஒண்கிளியே!
செருவொண்பூம்பொழில்சூழ் செக்கர்வேலைத் திருவண்வண்டூர்
கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
செருவொண் சக்கரம்சங்கு அடையாளம் திருந்தக்கண்டே ( தி.வா 6-1-7 )

பொருள்: வடிவழகிலே சிறந்த கிளியே! எம்பெருமான் எழுந்தருளியுள்ள திருவண்வண்டூருக்கு நீ செல்லும் போது  வழியிலே நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகுக்கு ஆட்படாமல் செல்ல வேண்டும், செந்நிறம் பொருந்திய  அவ்வூர் கடற்கரைப் பகுதியில் ஒன்றுக்கொன்று  மாறுபட்ட பல நிறப்பூக்களைச் சொரியும் சோலைகள் உண்டு. இத்தகைய திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள பகவானின் அடையாளங்களைக் கேட்டுக்கொள். அவன் கரிய  திருமேனியுடையவன்; சிவந்த வாயும்; திருக்கண்களும், திருக்கரங்களும், திருவடிகளும் உடையவன். போர் செய்யவல்ல  சக்கரம், சங்கு  இவற்றை ஏந்தியவனாகக் காட்சியளிப்பான். இவ்வடையாளங்களின்படியே அவனைக் கண்டு எனக்காக ஒரு வார்த்தை சொல்வாயாக என்று எம்பெருமானைக் கண்டு சொக்கிய நம்மாழ்வாருக்கு அவர் இத்தலத்தில்  காட்டிய கல்யாண குணம் “ரக்ஷண தைர்யம்”  எனப்படும் காக்கும் உறுதியாகும். எவ்வாறு இராமாவதாரத்தில் தன்னை சரணடைந்தவர்களை காத்தாரோ அதே போல ஆழ்வாரையும் காத்தார் என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் கூறியுள்ளார்.

தேவும், உலகும் உயிரும் திரிந்துநிற்கும்
யாவும் படைத்த இறைகண்டீர் – பூவில்
திருவண்வண் டூர்உறையும் தேவாதி தேவன்
மருவண்வண்டு ஊர்துளவ மால். (நூ. தி 67)

பொருள்: திருவண்வண்டூர் என்னும் திருப்பதியில் நித்திய வாசம் செய்கின்ற தேவர்களுக்கெல்லாம் தேவனான, மணம், வளப்பம் உள்ள, வண்டுகள் மொய்க்கின்ற திருத்துழாய் மாலையை அணிந்த திருமால், தேவர்களையும், உலகங்களையும், விலங்குகளையும், மற்றும் வேறாக நிற்கின்ற அசேதனப் பொருள்கள் அனைத்தையும் படைத்த கடவுளாவான் என்று திவ்வியக்கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது தமது நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.



ஸ்ரீவித ப்ரமர க்ஷேத்ரே பாபநாச புஷ்கரணி தடே, வேதாலய விமானச் சாயாயாம் ஸ்திதாய ப்ரதீச்யாபிமுகாய, ஸ்ரீமதே கமலவல்லி நாயிகா சமேத ஸ்ரீபம்பாச்ரயாய(பாம்பணையப்பன்) கமலநாத பரப்ரஹ்மனே நம: என்ற தியான ஸ்லோகத்தை ஜபித்துக்கொண்டே வம்மின் தொண்டர்களே அடுத்து பீமன் புனருத்தாரணம் செய்த “தென்திசைத் திலதம் புரை குட்டநாட்டுத்    திருப்புலியூர் நின்ற மாயப்பிரான்“ என்று நம்மாழ்வார் பல்லாண்டு பாடிய    பெருமாளை சேவிக்கச் செல்லலாம். 
 மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள்  : 

  குருவாயூர்           கொடுங்கல்லூர்           திருஅஞ்சைக்களம்         குலசேகரபுரம்  

 சோட்டாணிக்கரை        வர்க்கலா            நெய்யாற்றங்கரை             திருப்பிரயார்        

 இரிஞ்ஞாலக்குடா        பாயம்மல்

மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .