தற்போது திருப்பதியை விட செல்வம் மிகுந்த ஆலயம் என்று பெயர் பெற்ற ஆலயத்தை சேவிக்கலாம் வாருங்கள் அன்பர்களே. கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் என்று அழைக்கப்படும்,
கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின்தமர்களும் குறுககில்லார்
விடமுடையரவில் பள்ளிவிரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடைவயல் அனந்தபுரநகர் புகுதும்இன்றே (தி. வா.10-2-1)
பொருள்:
கேசவா என்று ஒரு முறை கூற எல்லாத்துன்பங்களும் அழியும்; எப்பொழுதும் கொடிய
செயல்களையே புரியும் யமதூதர்களும் அணுக மாட்டார்கள்; ஆதலால் நஞ்சு பொருந்திய ஆதிசேஷ சயனத்தில் அரிதுயில் கொள்கின்ற
எம்பெருமானுடைய வண்டுகள் ஒலிக்கின்ற
தடாகங்களையுடைய வயல்கள் சூழ்ந்த திருவனந்தபுரம் என்னும் நகரத்தை இன்றே அடைவோம், என்று
நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த அனந்தபுர
நகரினில் அடியோங்கள் புகுந்த
போது மாலை நேரம் என்பதால் போக்குவரத்து அதிகமாகவே இருந்தது.
மெதுவாகவே பயணம் செய்ய முடிந்தது. ஆலயத்தை அடைந்த போது இரவு 8 மணியாகிவிட்டது. ஆலயத்தினுள்ளும்
கூட்டம் அதிகமாகவே இருந்தது. பெருமாளை சேவிப்பதற்கான வரிசையில் சென்று நின்றோம். வாருங்கள் அன்பர்களே இத்தலத்தின் சிறப்புகளையும், பெருமாள் இங்கு வந்த
வரலாற்றைப் பற்றியும் முதலில் காணலாம்.
மலை நாட்டு திவ்ய தேசங்களில் பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கும் தலங்கள் இரண்டில் ஒன்று திருவனந்தபுரம்.
அனந்தன் மேல் நெடியோனாக மூன்று வாசல்
வழியாக திருவடி, நாபி, திருமுடி சேவிக்கும்
விதமாக பெருமாள் சேவை சாதிக்கின்றார். மற்றொரு
திருத்தலம் திருவாட்டாறு ஆகும்.
இவ்விரண்டு தலங்களிலும் மூலவர்களின் திருமேனி சாளக்கிரமத்துடன் கடுகு சக்கரை
யோகத்தால் ஆனவை. உபய நாச்சியார் மண்டியிட்ட கோலத்தில் சேவை
சாதிக்கின்றனர். தமிழகத்
தலங்களைப் போல உபய நாச்சியார்களுடன் உற்சவர் சேவை சாதித்து அருளுகின்றார்.
அவர் தினமும் புறப்பாடு கண்டருளுவதில்லை, பலி பேரர் தான் சீவேலியின் போது எழுந்தருளுகின்றார். ஒத்தக்கல் மண்டபம் என்னும் பிரம்மாண்ட ஒரே
கல்லால் ஆன மண்டபத்தில் ஏறி சென்று
பெருமாளை மிக அருகில் சென்று நாம்
சேவிக்க முடியும். ஸ்ரீகோவிலில் மின்விளக்குகள் கிடையாது என்பதால் பெருமாளை அருகில் இன்று விளக்கொளியில் சேவிப்பதே ஒரு தனி
அனுபவம். திருவடியில் மனிதர்களும், நாபிப்பகுதியில் தேவர்களும்,
திருமுடிப்பகுதியில் நித்திய சூரிகளுமாக சேவிப்பதால் தான் அனைவருக்கும் சமம்
என்பதை உணர்த்துவதைப் போல் பெருமாள் சேவைச் சாதிக்கின்றார். இரண்டு தலங்களிலும் துலா(ஐப்பசி), மீனம்(பங்குனி) மாதங்களில் திருவிழா நடைபெறுகின்றது. இரண்டு ஆலயங்களும் திருவிதாங்கூர் அரசர்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. திராவிடக்கலை
மற்றும் கேரளக்கலை இரண்டும் கலந்து இந்த இரண்டு கோவில்களும்
கட்டப்பட்டுள்ளன. எனவே சீவேலி பிரகாரத்தில்
அருமையான சிற்பங்களைக் கொண்ட
கற்தூண்களால் ஆன பிரகாரம் உள.
இத்தலத்தில் சிறப்பாக இராஜகோபுரம் திராவிட பாணியில், 100 அடி உயர 7 நிலைகளுடன் ஒரு படகு போல அமைந்துள்ளது,
இரவு நேரத்தில்
மின் விளக்குகள் பிரகாசிக்க எதிரே உள்ள குளத்தில் இதன் பிரதி பிம்பத்துடன் இந்த
இராஜகோபுரத்தை சேவிப்பதே ஒரு தனி அனுபவம்.
இவ்வாலயத்தில் இரண்டு கொடி மரங்கள்
உள்ளன. தங்கக்கவசம் பூண்ட 80 அடி உயர கொடி
மரம் அனந்த பத்மநாப சுவாமிக்கு எதிரிலும்
அடுத்த வெள்ளிக் கவசம் பூண்ட கொடி மரம்
கிருஷ்ணருக்கு எதிரிலும் அமைந்துள்ளது.
மாலை
சீவேலியின் போது முதலில் அனந்த பத்மநாப
சுவாமியும் அடுத்து யோக நரசிம்மரும்
வலம் வருகின்றனர். பெருமாளை தரிசிக்க வரிசையில் நின்று கொண்டிருந்த அடியோங்களுக்கு சீவேலியை சேவிக்கும் பாக்கியம்
கிட்டியது. இனி தலவரலாறு
திவாகர முனிவர் முக்தியடைய வேண்டும் என்பதற்காக பாற்கடல் நாதனைக் குறித்து கடும் தவம் செய்து வந்தார். அவருக்கு அருள திருவுள்ளம்
கொண்ட பெருமாள் திவாகர முனிவரிடம் ஒரு அழகிய இரண்டு வயது பிள்ளையாக வந்து சேர்ந்தார். பிள்ளையின் அழகில்
மயங்கிய முனி வேண்டிக் கொள்ள குழந்தையும் தன்னை கோபித்துக் கொள்ளக் கூடாது
என்ற நிபந்தனையுடன்
அவருடன் இருந்து வந்தார், குழந்தை மலர்களைக் களைவது, சாளக்கிராமங்களை இடம் மாற்றி வைப்பது போன்ற பல
விதமான சேட்டைகளையெல்லாம் செய்து வந்தாலும் முனிவர் கோபம் கொள்ளாமல் இருந்து வந்தார்.
ஒரு சமயம் முனிவர் பூஜிக்கும் சாளக்கிராம மூர்த்தியையே குழந்தை
வாயில் போட்டுக் கொள்ள ஆத்திரமடைந்த
முனிவர் குழந்தையை கோபித்துக் கொள்ள, குழந்தையும்
அங்கிருந்து மறைந்தது. தன்
கையில் சிக்காமல் எங்கேயோ சென்று விட்டக் குழந்தையைத் தேடி அலைந்த திவாகர முனி, ஒரு
புலைச்சி அழுது கொண்டிருந்த தன் குழந்தையை, அழாதே இல்லாவிட்டால் உன்னை அனந்தன்
காட்டில் தூக்கி எறிந்து விடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்ததைக் செவி
மடுத்தார். அவருக்கு ஒரு பொறி தட்டியது அந்தக் குழந்தையும் தன்னை அனந்தன் காட்டில்
காணலாம் என்று கூறியுள்ளதை நினைவு
கூர்ந்து, அப்பெண்ணிடம் அனந்தன் காட்டிற்கான வழியை
விசாரித்துக்கொண்டு அங்கு வந்து
சேர்ந்தார். அவருக்கு அந்தப் பிஞ்சுக்கால்களில் அணிந்திருந்த
கொலுசின் ஒசை கேட்டது. ஆவலுடன் முனிவர் காட்டை நெருங்கிய போது
அங்கிருந்த ஒரு இலுப்ப மரம்
கீழே விழுந்து அதில் மூன்று யோஜனை தூரத்திற்கு அனந்தன் மேல் பள்ளி கொண்ட
கோலத்தில், ஸர்வாங்க சுந்தரனாக,
லக்ஷ்மி, வனமாலை, கௌஸ்துப விராஜிதனாக மந்தகாசமான புன்னகையுடன் பேரெழிலுடன்
பெருமாள் சேவை சாதித்தருளினார். திருமுடி திருவல்லாற்றிலும் திருவடி
திருப்படபுரத்திலும், பிரம்மனுடன் கூடிய நாபி அனந்தன் காட்டிலும் உள்ளவாறு பிரம்மாண்டமாக
சேவை சாதித்தார் பெருமாள். அனந்தன் என்றால் எல்லை இல்லாதவன் என்றும் ஒரு பொருள்.
கால தேச வர்த்தமானங்களுக்குள் அடக்க
முடியாதவர். அவ்வாறே முனிக்கு எம்பெருமான் சேவை சாதித்தார்.
அதே
சமயம் சிவபெருமான் உமையம்மை திருக்கல்யாணத்தின் போது வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது
அதை சமன் படுத்த அகத்தியரை தென் திசை செல்லுமாறுப் பணித்தார் சிவபெருமான், அப்போது
அகத்தியர் தானும் திருக்கல்யாணத்தை தரிசிக்க விழைகின்றேன் என்றார். உமக்கு நாமே வந்து திருக்கல்யாண
தரிசனம் அளிக்கின்றோம் என்றருளினார் பரமன். அகத்தியரும் விந்திய மலையின் செருக்கை
அடக்கி தென் திசை வந்து அனந்தன் காட்டில் தவம் செய்யலானார். உடன் மஹேந்திர
பர்வதம், திரிகூட மலை, மலையாசலம் மற்றும் தாமிரபரணி நதியும் அங்கு தவம்
செய்து கொண்டிருந்தனர். திவாகர முனிக்கு சேவை சாதித்த பெருமாள் அவர்களுக்கும் இவ்வாறு அருளினார். அகத்தியருக்கு முக்தி
அளித்தார், மலைய பர்வதத்திற்கு உனக்கு எந்த குறைவும் வராது, மகேந்திர
பர்வதத்திற்கு பரசுராமனாக அவதாரம் செய்யும் போது உன்னிடம் வசிப்பேன், அனுமன்
முதலியோர் உன்னிடம் வாழ்வார்கள், திரிகூட பர்வதமே கஜேந்திரனுக்கு மோட்சம் அளிக்க
உன்னிடம் வருவேன், தாமிரபரணியே உன்னுடைய கரையில் ஐந்து நம்பி ரூபம் கொண்டு குடி
கொள்வேன். மேலும் ஒன்பது தலங்களில்
வந்தமர்ந்து அருள் புரிவேன் என்று அவர்கள் அனைவருக்கும் வரமருளினார்.
பின்னர் இவ்வளவு பிரம்மாண்ட திருமேனியுடன் இருந்தால்
திருவாராதனம் செய்வது கடினம் எனவே குறுக்கிக் கொள்ள வேண்டும் என்று திவாகர முனிவர்
விண்ணப்பிக்க மூன்று தண்டம் அளவிற்கு அதாவது 18
அடிக்கு தன்னை குறுக்கிக்கொண்டார். தன்னை வைகாசன முறைப்படி
பூஜிக்குமாறும் பணித்தார். முனிவரும் ஒரு தேங்காய் சிரட்டையில் அரிசிக் கஞ்சியும் உப்பு மாங்காயும் நிவேதனம் செய்தார். இன்றும் இதே வழக்கம்
தொடருகின்றது. ஆனால் இன்று பொன் தேங்காயில் நிவேதனம் செய்யப்படுகின்றது.
இவ்வாறே வில்வமங்களம் சுவாமிகளுடனும் பெருமாள்
சிறு பிள்ளையாக வந்து லீலை செய்தார் என்றும்
ஒரு ஐதீகம் உள்ளது. மூன்றாவது ஐதீகம் இந்த
அனந்தன் காட்டில் ஒரு புலைய
தம்பதியர் வசித்து வந்தனர். ஒரு சமயம் காட்டில் அழுது கொண்டிருந்த ஒரு
பச்சிளம் குழந்தையைக் கண்டு அந்த புலைச்சி தன் முலைப் பால் ஊட்டி விட்டாள். இது தொடர்ந்தது. ஒரு நாள் அவள் அந்தக் குழந்தைக்கு ஐந்து தலை நாகம் குடைப்பிடிக்கும் ஒரு தெய்வீக காட்சியைக் கண்டாள். அதைப் பின்னர் அந்த நாட்டு அரசனுக்கு தெரிவிக்க அவரும் வந்து
பெருமாள் அங்கு உள்ள உண்மையை உணர்ந்து திருக்கோவிலைக் கட்டினார்.
ஆதிகாலத்தில்
பெருமாள் திருமேனி இலுப்பை மரத்தால்
ஆனதாகவே இருந்தது. 1686ம்
ஆண்டில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் அந்தத் திருமேனி சேதமடைந்தது. பின்னர்
பெருமாளின் ஆணைப்படி நேபாளத்தில்
சாளக்கிராம க்ஷேத்திரத்தில் இருந்து 12000
சாளக்கிராமங்களை யானைகளில் ஏற்றிக்
கொண்டு வந்தனர். அவற்றில் ஒரு பாதியை உபயோகப்படுத்தி கடுசக்கரை யோகம் என்னும்
முறையில் இன்று நாம் சேவிக்கின்ற அனந்தபத்மநாப சுவாமி திருமேனி உருவாக்கப்பட்டது. மீதமுள்ள சாளக்கிராமங்கள் இன்னும் ஒரு முறை தேவைப்படும் என்று
பெருமாள் கூறியவாறு பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளதாம்.
திருவிதாங்கர் அரசர் மார்த்தாண்டவர்மா, தான் அரசன் அல்ல, சுவாமிக்கு உடைய சொத்து;
எதுவும் நம்முடையதல்ல; அனைத்துமே
அவனுடைய சொத்து என்று உணர்ந்து, தன்னை ”பத்மநாபதாசன்” என்று
அறிவித்து தன்னுடைய வாளை பெருமாளின்
திருவடியில் சமர்ப்பித்து தனது
சொத்துக்கள் அனைத்தையும் பெருமாளுக்கே அர்ப்பணித்தார், இன்று
வரை அரச பரம்பரையினர் அவ்வாறே அதைக் கடைப்பித்து வருகின்றனர். தினமும் காலையில்
அரசருக்கென்று தனி தரிசன நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஏதாவது காரணத்தினால் அரசர்
வரமுடியாமல் போனால் அபராதம் விதிக்கப்படுகின்றது.
மிகவும்
விலாசமான ஆலயம், சீவேலிப் பிரகாரத்தின்
யாளித் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள பாவை விளக்கு சிற்பங்கள் மொத்தம் 370 உள்ளன. ஆனால் ஒன்று போல மற்றது இல்லை. தலை அலங்காரம், அணிந்துள்ள
ஆபரணங்கள், உடையலங்காரம், விளக்கைப்
பிடித்துள்ள தோரணை, ஒயிலாக காலை வைத்துள்ள அழகு என்று ஒவ்வொரு பாவைச் சிற்பமும்
ஒரு விதமாக செதுக்கியுள்ளனர் என்பது சிறப்பு. பெருமாளை நோக்கியவாறு நெடிதுயர்ந்த
கருடன் சிலையும்,
அனுமன் சிலையும் அற்புதமாக உள்ளன. அனுமனுக்கு வெண்ணைக்காப்பு சிறப்பு. ஹனுமன் மீது
சார்த்தப்படும் வெண்ணை வெயில் காலத்திலும் உருகுவதில்லை என்பது ஒரு அற்புதம். அருமையான
கற்சிற்பங்கள் நிறைந்த விசாலமான ஆலயம். நரசிம்மர் சன்னதி திறந்திருக்கும் போது அவரது உக்கிரத்தைக்
குறைக்க இராமாயணம் பாராயணம் செய்யப்படுகின்றது.
புண்ணியஞ்செய்து நல்லபுனலொடுமலர்கள்தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பறுக்கும் அப்பால்
திண்ணம் நாமறியச்சொன்னோம் செறிபொழிலனந்தபுரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார் ( தி.வா 10-2-5)
பொருள்:
பக்தியோடு தண்ணீரையும் மலர்களையும் கொண்டு அருசித்து எம்பெருமானுடைய திருநாமங்களை
நினையுங்கள்; அவ்வாறு நினைத்தால், அந்நினைவு இறப்பினை நீக்கும்; அதற்கு மேல்,
சோலைகள் சூழ்ந்த திருவனந்தபுரத்தில், எழுந்தருளி இருக்கின்ற பெரியோனுடைய திருவடித்தாமரைகளைச் சேர்கின்றவர்கள்
நித்தியசூரிகள் ஆவர்; எல்லாரும் அறியும்படியாக
நாம் அறுதியிட்டுச் சொன்னோம் என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த அனந்தபுரத்து திவ்யதேசத்தின்
மூலவர்: அனந்தபத்மநாப
சுவாமி, புஜங்க சயனம்,
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான்
சேவிக்க வேண்டும்.
தாயார்:
ஹரிலக்ஷ்மி நாச்சியார்
தீர்த்தம்:
மத்ஸ்ய, பத்ம, வராஹ தீர்த்தங்கள்.
விமானம்:
ஹேமகூட விமானம்.
பிரத்யக்ஷம்:
சிவன், இந்திரன், சந்திரன்.
ஆலயத்தில்
கூட்டம் அதிகமாகவே இருந்தது, வரிசையில் சென்று நின்றோம். அத்தாழ சீவேலி
ஆரம்பமானது தீப்பந்தம், பதாகைகள், கொம்பு, மேளம் முழங்க முதலில் அனந்தபத்மநாப சுவாமி பிரகார வலம் வந்தார்
அடுத்து யோக நரசிம்மர் வலம் வந்தார். சீவேலி நிறைவு பெற்ற பின், சேவை
ஆரம்பமானது, கருவறையில் மண்டியிட்ட
கோலத்தில் உபய நாச்சியார்கள், திவாகர
ரிஷி, கௌண்டில்ய ரிஷி, முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, சிவன் ஆகியோருடன்
பெருமாள் ஆனந்தமாக அனந்தன் மேல் பள்ளி கொண்ட கோலத்தில்
சேவை சாதிக்கின்றார். பெருமாளின் நாபியிலிருந்து
தோன்றிய குழந்தையான பிரம்மன் மழலையில், மற்றும் சிவன், முப்பத்து முக்கோடி தேவர்கள்
ஆகியோர் எப்போது பெருமாளின் பெருமையை கூறிக்கொண்டிருக்கின்றனர் என்று மணவாள மாமுனிகள் இவரை மங்களாசாசனம்
செய்துள்ளார்.
அடியோங்களுக்கு ஏகாந்த சேவை மட்டுமே
கிட்டியது அருகில் சென்று சேவிக்கும் பாக்கியம் கிட்டவில்லை. திருமுடி மற்றும் லிங்க ரூபத்தில் சிவனை முதல் வாயில் வழியாகவும் இரண்டாவது வாயில் வழியாக நாபிக்கமலத்தையும்,
பிரம்மனையும், மற்றும் உபய நாச்சியார்களுடன்
உற்சவரையும், மூன்றாவது வாயில் வழியாக திருவடியையும் சேவித்தோம். ஆக்கல், காத்தல்
அழித்தல் என்னும் முத்தொழில் முதல்வனிடம் சரணாகதி செய்தோம். நம்மாழ்வாரின் பாசுரம்
சேவித்துக்கொண்டே பிரகார வலம் வந்தோம். திருப்பாணாழ்வாரின் பாசுரங்களை சேவித்தோம்.
இத்தலத்தில்
பெருவிழாவின் போது கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ஒன்பதாம் திருநாள்
பள்ளி வேட்டையும், பத்தாம் திருநாள்
ஆறாட்டும் மிகவும்
விசேஷம். பள்ளி வேட்டையின் போது பெருமாள் துஷ்ட நிக்ரஹத்திற்காக
வேட்டைக்கு எழுந்தருளுகின்றார். தற்போது பெருமாளின் சார்பாக
மன்னர் வில் அம்புடன் செல்கின்றார் தேங்காயை
அம்பெறிந்து வீழ்த்துகின்றார். பத்தாம்
திருநாள் ஆறாட்டின் போது மலர்
அலங்காரத்துடன் கருட வாகனத்தில் அனந்தபத்மநாப
சுவாமி, நரசிம்மர், ஸ்ரீகிருஷ்ணர் மூவரும் எழுந்தருளுகின்றனர்.
சீவேலி மூர்த்திகள் யானையில் எழுந்தருளுகின்றனர். இராஜா வாளுடன் முன்னே
செல்கின்றார். திருவனந்தபுரம் விமான நிலையம்
வழியாக பெருமாள் சங்கு
முகம் கடற்கரைக்கு எழுந்தருளுகின்றார் என்பதால்
விமான நிலையம்
அன்று மூடப்படுகின்றது. கடலில் தீர்த்தவாரிக்குப் பின்னர் தீப்பந்தங்களுடன் பெருமாள்கள் திரும்பி வருவதுடன்
திருவிழா நிறைவடைகின்றது.
இத்தலத்தில் பெருமாள் நம்மாழ்வாருக்கு
காட்டிய கல்யாண குணம் சௌம்யம் ஆகும். அதாவது அனைவரும் சமம் என்பதைக்
காட்டியருளினார். திருவடியில் மனிதர்களும், நாபிப் பகுதியில் தேவர்களும், திருமுடிப்பகுதியில் நித்ய
சூரிகளும் சேவிக்கும் விதமாக சேவை சாதிக்கின்றார் பெருமாள்.
கோளார், பொறி ஐந்தும் குன்றி உடலம் பழுத்து
மாளா முன், நெஞ்சே! வணங்குதியால் – கேளார்
சினந்தபுரம் சுட்டான், திசைமுகத்தான், போற்றும்
அனந்தபுரம் சேர்ந்தான் அடி. (நூ.தி 59)
பொருள்: மனமே! ஐம்பொறிகளும்
அடங்கி, உடல் தளர்ச்சியடைந்து, இறப்பதற்கு முன்னே, திரிபுரங்களை எரித்த
சிவபெருமானும், நான்முகனும் துதித்து வணங்கும்
திருவனந்தபுரத்தில் பள்ளி கொண்டிருக்கும் பத்பநாபனுடைய திருவடிகளை
வணங்குவாயாக. என்று திவ்யக்கவி
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இந்த திவ்விய
தேசத்தைப் பற்றி பாடியுள்ளார்.
இவ்வாறு இரண்டு நாட்களில் 11
திவ்யதேசங்களை
சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. அடியோங்களுடன் யாத்திரை வந்த
ஸ்ரீகுமார் அவர்கள் இல்லத்தில் அன்றிரவு தங்கினோம்.
ஸ்ரீஅனந்தபுர க்ஷேத்ரே மத்ஸ்ய வராஹ பத்ம புஷ்கரணி தடே ஹேமகூட விமானச்சாயாயாம்
ஸ்திதாய அனந்தசயனாய பூர்வாபிமுகாய ஸ்ரீமதே ஹரிலக்ஷ்மி நாயிகா ஸமேத ஸ்ரீஅனந்தபத்மநாப
பரப்ரஹ்மணே நம: என்ற தியான ஸ்லோகத்தை ஜெபித்துக்கொண்டே வம்மின் அன்பர்களே பத்மநாப சுவாமிக்கும் மூத்தவரான
அருள் பெறுவாரடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவானமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தருமாஞாலத்துள் இனிப்பிறவியான் வேண்டேன்
மருளொழி நீ மடநெஞ்சே! வாட்டாற்றானடிவணங்கே.
(தி.வா 10-6-1)
பொருள்: பெருமானின் அருளைப் பெறுவதற்குப் பாத்திரமாக உள்ள பாகவத சீலர்களுக்கு அடியேன் அடிமைப் பட்டு இருப்பதால், சக்கரத்தை ஏந்தியுள்ள எம்பெருமான் எனக்கு அருள் செய்யத் தானே வருவதாகப் பொருந்தியுள்ளான். அப்படி அவன் அருள் செய்வது நாம் விதித்தபடியே ஆகும். அவன் கருத்தை அறிந்த அடியேன் இனி ஒரு நாளும் அஞ்ஞானத்தை உண்டாக்கும் பெரிய இந்த உலகத்திலே பிறவியை விரும்பமாட்டேன். அறியாமை பொருந்திய மனமே! நீ மயக்கம் நீக்கு; திருவாட்டாற்றில் எழுந்தருளியுள்ள எம்பெருமானுடைய திருவடிகளை வணங்கி அவன் வசப்பட்டு செல்வாயாக, என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த அருளை வாரி வழங்குகின்ற ஆழியான் ஆதி கேசவனை சேவிக்கலாம்.
பொருள்: பெருமானின் அருளைப் பெறுவதற்குப் பாத்திரமாக உள்ள பாகவத சீலர்களுக்கு அடியேன் அடிமைப் பட்டு இருப்பதால், சக்கரத்தை ஏந்தியுள்ள எம்பெருமான் எனக்கு அருள் செய்யத் தானே வருவதாகப் பொருந்தியுள்ளான். அப்படி அவன் அருள் செய்வது நாம் விதித்தபடியே ஆகும். அவன் கருத்தை அறிந்த அடியேன் இனி ஒரு நாளும் அஞ்ஞானத்தை உண்டாக்கும் பெரிய இந்த உலகத்திலே பிறவியை விரும்பமாட்டேன். அறியாமை பொருந்திய மனமே! நீ மயக்கம் நீக்கு; திருவாட்டாற்றில் எழுந்தருளியுள்ள எம்பெருமானுடைய திருவடிகளை வணங்கி அவன் வசப்பட்டு செல்வாயாக, என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த அருளை வாரி வழங்குகின்ற ஆழியான் ஆதி கேசவனை சேவிக்கலாம்.
திவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :
திருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை
திருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்
திருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
குருவாயூர் கொடுங்கல்லூர் திருஅஞ்சைக்களம் குலசேகரபுரம்
சோட்டாணிக்கரை வர்க்கலா நெய்யாற்றங்கரை திருப்பிரயார்
இரிஞ்ஞாலக்குடா பாயம்மல்
மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .
No comments:
Post a Comment