திருவனந்தபுரத்திற்கும் முற்பட்ட ஆலயம் என்பதால் ”ஆதிஅனந்தசயனம்” என்றும், சேரநாட்டில் அமைந்துள்ளதால் “சேர ஸ்ரீரங்கம்“ என்றும். வட்டமாக ஆறுகள் ஓடுவதால் ”வட்டாறு என்பது மருவி ”திருவாட்டாறு” என்றும் அழைக்கப்படுகின்றது இத்தலம். திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 50
கி.மீ தூரத்திலும், நாகர்கோவிலிலிருந்து
சுமார் 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. மார்த்தாண்டலிருந்தும், தொடுவெட்டியிலிருந்தும் நகர்ப்பேருந்துகள் உள்ளன. மலை நாட்டு திவ்ய தேசமாக கருதப்படும்
இத்தலமும், திருவண்பரிசாரமும் தற்போதைய தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளன. ஆதிகாலத்தில் திருவிதாங்கூர் இராச்சியத்தின் தலைநகரமாக கன்னியாகுமரி விளங்கியது பின்னரே திருவனந்தபுரம் தலைநகரமாகியது. மலை நாட்டு திவ்ய தேசம் என்பதால் ஆராதனைகள் இன்றும் கேரளப்பாணியிலேயே நடைபெறுகின்றது.
தமிழ்ச்சங்க இலக்கியமான புறநானூற்றில்
இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மேலே திருவனந்தபுரத்திற்கும் திருவாட்டாற்றுக்கும் உள்ள சில
ஒற்றுமைகளைப் பற்றிப் பார்த்தோம் வாருங்கள்
இனி அவற்றின் இடையே உள்ள சில வேற்றுமைகளைப் பற்றிக் காணலாம். ஆதி கேசவர் அனந்த பத்மநாப சுவாமிக்கு மூத்தவர் என்பதால் இவரது நாபியில்
கமலமும் இல்லை அதில் தோன்றிய பிரம்மனும் இல்லை. கேசவர் மேற்கு நோக்கிய
திருமுக மண்டலத்துடன் சயனம் கொண்டுள்ளார். பத்மநாபரோ கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார். இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது போல உள்ளது. பொதுவாக பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிக்கும் ஆலயங்களில்
பெருமாளின் திருவடி சேவிக்கும் பக்தர்களின் வலப்புறமும், ஆதிசேஷனும் திருமுடியும்
இடப்புறமும் இருக்கும். திருவாட்டாறு மற்றும் திருக்கச்சியின் திருவெஃகாவில் அரி
துயில் கொண்டுள்ள ”சொன்ன வண்ணம் செய்த பெருமாள்” ஆகிய இருவர் மட்டுமே மாறு சயனமாக சேவை சாதிக்கின்றனர். அதனால் இத்தலத்தில்
பெருமாளின் இடது திருக்கர சேவை
கிட்டுகின்றது. ஆதி கேசவர் 22 அடி நீளம், 16108 சாளக்கிராமங்களால் ஆன
திருமேனி, பெருமாளின் திருவடி அருகில் சிவலிங்கம் உள்ளது. அனந்தபத்மநாபரோ 18
அடி நீளம் 1200 சாளக்கிராமங்களால் ஆன திருமேனி, சிவலிங்கம் பெருமாளின் திருமுகப்பகுதியில்
உள்ளது. ஒத்தக்கல் மண்டபங்களும் பெருமாளின் அளவிற்கேற்ப மாறுபடுகின்றன. திருவாட்டாற்றில்
ஒரு கொடிமரம் மட்டுமே உள்ளது. திருவாட்டாறு மலை மாடக்கோவில் அமைப்பில் 55 அடி உயரத்தில்
அமைந்துள்ளது. வாருங்கள் இனி கேசி என்னும்
அசுரன் மேல் பெருமாள் பள்ளி கொண்ட திருவிளையாடலைக்
காணலாம்.
அனந்த சயனத்திற்கு தென் கிழக்கே பொன்பிரளை என்ற தலத்தில் பிரம்மா ஒரு யாகம்
நடத்தினார். பிரசன்னரான பெருமாள் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று வினவினார்.
பிரம்மாவும், பெருமாளே தாங்கள் இராமாவதாரத்தில் காகாசுரனுடைய கண்ணைக் கிளறிய காகாக்ஷசைலம்
என்னும் மலையினிடத்தில் தவம் செய்யும்
முனிவர்களை கேசி என்னும் அசுரன் துன்புறுத்துகின்றான், அவன் என்னுடைய கேசத்திலிருந்து
தோன்றியவன், அவன் என்னிடம் சாகா வரம் பெற்றுள்ளான், மேலும் அவனது இரத்தம் ஒரு துளி
கீழே சிந்தினாலும் அது தன்னைப்போல உருமாற வேண்டும் என்றும் வரம் பெற்றுள்ளான்.
தேவரீர்தான் அவனை வென்று முனிவர்களை அவன்
கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும்
என்று விண்ணப்பித்தார்.
ஆதி கேசவர்
பெருமாள் அங்கு சென்று அவனுடன் மல்யுத்தம் செய்யும் போது கேசியை கீழே
தள்ளி, அனந்தனை அழைத்து அசுரன் வெளியே வராதபடி அவனை வளைத்துக் கொள்
என்று அருள அனந்தனும் அவ்வாறே செய்தான் கேசன் மேலே வரமுடியாதபடி
பெருமாள் அனந்தன் மேல் சயனித்துக் கொண்டார்.
இதைக்கண்ட கேசியின் பத்தினி ஆஸுரி என்பவள்
கங்கையை துணைக்கு அழைத்தாள், கங்கை தாமிரபரணியுடன் பெருமாளை கீழே தள்ளி அசுரனை
விடுவிக்க ஆவேசமாக பாய்ந்தாள்,
தன் பர்த்தாவைக் காப்பாற்ற பூமாதேவியானவள்
அந்த இடத்தை உடனே மேடாக்கி விட்டாள்,
ஒன்றும் செய்ய முடியாத நதிகள் தமது ஆணவத்திற்காக வருந்தி பெருமாளை வணங்கி
வட்டமிட்டு ஓடின. இன்றும் அவ்வாறே பரளி ஆறு கோதை
ஆறு என்ற பெயரில் இரு நதிகளும் பெருமாளை
வட்டமாக சுற்றி ஓடிக்கொண்டிருக்கின்றன. எனவே இத்தலத்திற்கு திருவாட்டாறு என்னும்
திருநாமம் வழங்குகின்றது..
மேலும் அசுரன் தப்பிக்காமல் இருக்க தன்னை சுற்றி பன்னிரண்டு இடங்களில் உருத்திரர்களை
நிறுத்தினார், அவை
இப்போது சிவாலயங்களாக விளங்குகின்றன.
இவ்வாறு கேசி முழுதும் அடைபட்டான், அவன் பெற்ற சாகாவரமும் வீணானது.
பெருமாள் அதே சயன கோலத்தில் இன்றும் நமக்கு சேவை சாதிக்கின்றார்.
ஒவ்வொரு வருடமும்
சிவராத்திரியன்று பக்தர்கள் இந்த
பன்னிரண்டு சிவாலயங்களுக்கும் கோபாலா கோவிந்தா
என்று ஜபித்துக்கொண்டே ஓடி வந்து ஆதிகேசவரின் சன்னதியில் உள்ள
சிவலிங்கத்தை தரிசித்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர்.
கங்கையும் தாமிரபரணியும் வேண்டிக் கொண்டதற்கிணங்க வருடத்தில் ஒரு
முறை பங்குனி திருவிழாவின் நிறை நாள்
ஆறாட்டின் போது பரளி ஆறு கோதை ஆறும்
கடலுடன் சங்கமிக்கும் மூவாத்து முகம்
என்றும் தோதை பிரளி என்றும் வழங்கப்படும் இடத்திற்கு தங்க கருட வாகனத்தில்
எழுந்தருளி ஆறாட்டு கண்டருளுகின்றார் ஆதி
கேசவப் பெருமாள்.
இன்னொரு விதமாகவும் இந்தப்
புராணம் கூறப்படுகின்றது. பிரம்மா யாகம் செய்யும் போது மஹாவிஷ்ணுவை மதிக்காது
செய்ததால் சரஸ்வதி தேவி இவரது நாக்கைப்பிரளச்
செய்ததால் யாகத்திலிருந்து
கேசன் மற்றும் கேசி தோன்றினர். இருவரும் பிரம்மதேவரை குறித்து கடும் தவம் செய்து
சாகா வரம் பெற்றனர். இதில் கேசனை பெருமாள்
அவனுடன் போர் செய்யும் போது அவனை மகேந்திர மலை மேல் வீசினார், பெருமாள் சங்கை
முழங்க அனந்தன் அவனைச் சுற்றிக் கொண்டான், அவன் வெளியே வராதபடி இன்றளவும் அனந்தன் மேல் சயனம் செய்கின்றார்.
கேசி தன் தோழி கோதையுடன் ஆறாக ஒடி வந்து
தன் சகோதரனை விடுவிக்க முயலும் போது
பூமாதேவி அந்த இடத்தை உயர்வாக்கினாள். இரண்டு நதிகளும் சாபம் பெற்றன பின்
பெருமாளின் அருளினால் ஆணவம் நீங்கி சாப விமோசனம் பெற்று இன்றளவும் பெருமாளை வட்டமாகச் சுற்றிக் கொண்டு
ஓடுகின்றனர்.
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண்வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வின்றி
என்னெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே என்று திருமார்பில்
திருமங்கை, வாகனமாக கருடாழ்வார், அசுரர்களை அழித்தவர் என்று சகல சிறப்புகளையும் பெற்ற பெருமாள் சேர்ந்த இடம் திருவாட்டாறு என்று நம்மாழ்வார் மங்களாசாசனம்
செய்த திருவாட்டாற்றில்
மூலவர்: ஆதி கேசவப்பெருமாள், புஜங்க சயனம் (மாறு சயனம்), மேற்கு நோக்கிய
திருமுகமண்டலம், மூன்று வாசல் வழியாகத்தான் சேவிக்க முடியும்.
தாயார் : மரகதவல்லி நாச்சியார்.
தீர்த்தம்: கடல்வாய், வாட்டாறு, இராம தீர்த்தம்.
விமானம்: அஷ்டாங்க விமானம்
பிரத்யக்ஷம்: பரசுராமர், சந்திரன்.
கற்சிற்பங்கள், மரச்சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள் என்று ஒரு
பிரம்மாண்ட கலைக்கோவிலாக விளங்கும் இக்கோவிலின் அழகை
இரசிக்கலாம் வாருங்கள் அன்பர்களே. முதல் தடவை அதிகாலையில் சென்றதால் முதலில்
ஆலயத்திற்கு பின் புறம் சென்று வாட்டாற்றில் நீராடினோம். பூமாதேவி உயர்த்தியதால்
சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது மலை
மாடக்கோவில் ஆகவே 18 படிகள் ஏறிச்செல்ல
வேண்டும். ஆலயத்தின் பின்புறம் கதகளி மண்டபம் உள்ளது. ஒரு வருடம் சபரிமலை யாத்திரையின்
போது ஓரிரவு இந்த மண்டபத்தில்தான்
படுத்துத் தூங்கினோம். அதிகாலை எழுந்து கூட்டம் இல்லாத நேரத்தில் ஆலயம்
முழுவதையும் எந்த அவசரமும் இல்லாமல் அங்குலம் அங்குலமாக சேவிக்கும் பாக்கியம்
கிட்டியது. சீவேலி மண்டபத்தின் இரு
புறத்தூண்களில் தான் எத்தனை எத்தனை கற்சிற்பங்கள், பொதுவாக சிலபஞ்சிகள் என்று
மலையாளத்தில் அழைக்கப்படும் கை விளக்கேந்திய காரிகைகள், மேலோட்டமாக
கண்ணில்படும் ஆனால் ஒவ்வொரு தூணிலும் மூன்றடுக்காக சிற்பங்கள் அமைந்துள்ளன, சைவ
வைணவ பேதம் இல்லாமல் அனைத்து சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. சிற்பிகளுக்கு யோகத்தின் மேல் அதிக
ஈடுபாடு போல தெரிகின்றது, குண்டலினி சக்தியை குறிக்கும் பிணையல் நாகங்களும், மலை மேல் தியானத்தில் ஆழ்ந்துள்ள முனிவர்களும் அதிக அளவில் காணக் கிடைக்கின்றனர்.
ஒவ்வொரு தூணிலும் ஒரு சிலபஞ்சி ஆனால் ஒருத்தி போல் இன்னொருத்தி இல்லை. தலை
அலங்காரம், முக பாவம், கண்கள், அணிந்துள்ள
அணிகலன்கள், ஆடை அணிந்துள்ள விதம், கையில் விளக்கை ஏந்தியுள்ள எழில், காலை
வைத்துள்ள ஒயில் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உள்ளது, இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக மேல் குடிப்பெண்களும், கீழ்க்குடிப் பெண்களும் இந்த
சிலபஞ்சிகளில் அமைத்துள்ளனர்.
முன்பக்கம் கதவில் அருமையான மரசிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. குறிப்பாக இடது
திருக்கரத்தை நீட்டிக்கொண்டு அனந்தன் மேல் துயில் கொண்டுள்ள மூலவரின் சிற்பம்
அப்படியே கண்ணை விட்டு அகல மறுக்கின்றது. கொடி மரம் அமைந்துள்ள உதய மார்த்தாண்ட
மண்டபத்தில் ஆறு அற்புத ஆள உயர சிற்பங்கள் அனைத்தும் கொள்ளை அழகு. பெருமாளின்
அழகில் சொக்கி நிற்கும் கிளி வாகன இரதியும், கரும்பு வில், மலர்க்கணையுடன் மன்மதனும் அம் மனதை
சொக்க வைக்கின்றனர், நந்தி மத்தளம்
வாசிக்க ஊர்த்துவதாண்டவர் நடனமாட, அவரைக்
கண்டு திகைத்து காளி நிற்கின்றாள், கோபாலகிருஷ்ணரின் வேணு
கானத்தை அனுபவித்த ஆவினங்கள் அப்படியே
தன்னை மறந்து கிடக்கின்றன, மேலும் பரசுராமர், அனுமன், துவார பாலகர்கள்,
யாழிகள் சிற்பங்கள் அனைத்தும் காணக் காண
தெவிட்டாத அற்புத கலை பொக்கிஷங்கள் ஐயகோ என்ன அழகு விவரிக்க வார்த்தைகளே இல்லை.
விமானத்தில் ஐந்து கலசங்களுடன் அருமையான
மரச்சிற்பங்கள், மூலிகை ஓவியங்களுடன் எழிலாக அமைந்துள்ளது. அடியோங்கள் சென்ற சமயம் உபய நாச்சியார்களுடன் உற்சவருக்கு ஒத்தக்கல் மண்டபத்தில்
திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது.
ஒன்பது வெள்ளிக்குடங்களின் மந்திர
தீர்த்தம், பால், தயிர், தேன், சந்தனம்
என்று அருமையாக திருமஞ்சனம் நடைபெற்றது. பிரயோக சக்கரத்துடன் உற்சவர் அருள்
பாலிக்கின்றார். மூலவர் பெருமாளின் நாபிப்பகுதி
சேவை மட்டுமே அப்போது கிட்டியது. காலை 8:30 மணிக்கு மேல்தான் முழு சேவையாம். பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்ற போது ஒத்தக்கல் மண்டபம் முழுவதும் பெருமாளின் திருமேனியாக
கருதப்படுவதால் சேவார்த்திகள் யாரும் அதை தொடாமல் பார்த்துக்கொள்கின்றனர். புரட்டாசி
மாதத்தில் 3 முதல் 9 நாள் வரை மாலை மூலவரின் திருமேனியைச் சூரியக்கதிர்கள் தழுவுகின்றன.
மூன்று சுற்றுக்கள் கொண்ட ஆதிசேஷன்
மேல் பள்ளி கொண்ட கோலத்தில் மேற்கு நோக்கிய
திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கின்றார். மாற்று சயன
கோலம் இடது திருக்கரத்தை கீழே தொங்கவிட்டிருக்கின்றார். வலது திருக்கரத்தை மேலே தூக்கிய சின் முத்திரை தாங்கிய கோலம்.
பிரம்மாவைப் படைப்பதற்கும் முன்பு கோவில் கொண்டதால் நாபியில் பத்மமும் இல்லை அதில்
பிரம்மனும் இல்லை. கருவறையில் உபயநாச்சியார்களும் காதலேஹ முனிவரும் எழுந்தருளியுள்ளனர்.
தர்மசாஸ்தாவிற்கும், குழலூதும் கோலத்தில் வேம்பாடி கிருஷ்ணருக்கும்
பிரகாரத்தில் தனி சன்னதி உள்ளது. திருவாட்டாறு கிராமத்தில் சிறப்பாக கருடனுக்கு
ஒரு தனிக்கோவில் உள்ளது. ஆறாட்டிற்காக பெருமாள் எழுந்தருளும் போது இக்கோவிலுக்கு
வந்து கருடனுக்கு அருளிச்செல்கின்றார்.
வாருங்கள் இனி இத்தலத்தைப் பற்றிய
பல சுவையான வரலாறுகளைக் காணலாம் அன்பர்களே. மூலவருடன் கருவறையில் உபய நாச்சியார்களுடன் காதலேஹ மஹாமுனியும் எழுந்தருளி உள்ளார். சோமாயாஜி என்பவர்
புத்திரப்பேறு வேண்டி இத்தலத்தில் யாகம்
செய்து வழிபட்டார். அவருக்கு ஒரு மகன் பிறந்தான்.
பிள்ளையையும் பக்தியுடன் வளர்த்தார். ஒரு சமயம்
சுசிவிரதன் என்ற தேவன் பரிகாசமாக அந்தப்
பிள்ளையிடம் உன் தாய், தந்தை யார் என்று கேட்க, பிள்ளை திகைத்து அருகில் இருந்த வாழை மரத்தைக்
காட்டி இதுதான் என்று கூற, பிள்ளையைக் காக்க பெருமாள் கதலி(வாழை) மரத்தில் இருந்து தோன்றி அப்பிள்ளைக்கு
அஷ்டாக்ஷர மந்திரத்தையும் உபதேசித்து தன் அருகிலேயே இறுத்திக் கொண்டார். எனவே விமானமும் அஷ்டாக்ஷர விமானம்
என்றழைக்கப்படுகின்றது.
மெய்ந்நின்று கமழ்துளவ விரையேறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனா
என்னெஞ்சில் திகழ்வதுவே? என்று நம்மாழ்வார் பல்லாண்டு பாடியுள்ள ஆதிகேசவப்பெருமாள் பல அரசர்களுக்கு அருள் புரிந்துள்ளார் அவற்றை இனி காணலாம். வஞ்சி
இராஜக்களுக்கு எதிராக முகலாயர்கள் படையெடுத்தபோது உமையம்மை என்ற இராணி கோட்டயம் கேரள ராஜவை உதவ வேண்ட அவரும் படை கொண்டு வந்த போது, முகலாயப்படைகளைப்
பார்த்து பயந்து ஆதி கேசவப் பெருமாளை
சரணடைந்து 16 பாடல்கள் கொண்ட படை சங்கீர்த்தனம் என்னும் ”ஆதிகேசவஸ்த்வம்” என்ற கீர்த்தனையைப்
பாட. பெருமாளின் அருளினால் எங்கிருந்தோ
தேனீக்கள் திரண்டு வந்து முகலாயப் படைகளை
தாக்கியது, அதில் முகலாய தளபதி மரணமடைய, பீதியில் முகலாயப்படை பின் வாங்கி ஓடியது, அவர்களை கேரளராஜா வென்று அவர்களின் 300 குதிரைகளையும் கைப்பற்றி தனது குதிரைப்படையை உருவாக்கினார்
என்பது வரலாறு. இன்றும் தினமும் மாலை படைச்
சங்கீர்த்தனம் பெருமாள் முன் சேவிக்கப்படுகின்றது.
அஷ்டாங்க விமானம்
திருவனந்தபுரம் திருக்கோவிலை புனரமைத்த இராஜா மார்த்தாண்ட வர்மா ஒரு சமயம் எதிரிகளிடமிருந்து தப்பிக்க மாறு வேடத்தில் அலைந்து கொண்டிருந்த போது, திருவாட்டாற்றில் ஒரு மூதாட்டி பசி தாகத்தால் வாடியிருந்த
இவருக்கு அரிசிக்கஞ்சியும் உப்பு மாங்காயும் அளித்து பசியாற்றினாள், ஆதிகேசவர்
அருளால் அரசனும் எதிரிகளை வென்று திருவிதாங்கூர் இராச்சியத்தை மீட்ட போது, அதே
அரிசிக்கஞ்சியும், உப்பு மாங்காயும் பெருமாளுக்கு நிவேதனம் ஆக வேண்டும் என்றும்
அந்த மூதாட்டியின் சந்ததியினருக்கு திருக்கோவிலில் முன்னுரிமையும் அளித்து
ஆணையிட்டார். இன்றும் ஆறாட்டு விழாவின் போது அரசனின் பிரதிநிதி ஆறாட்டு வந்து வாளை
கொடிமரத்தின் அடியில் வைத்து சரணடைந்து உற்சவத்தில் கலந்து கொள்கின்றார். அரசன் நியமித்த
ஒரு தச்சன் ஓண வில் செய்து சமர்ப்பிக்கின்றார்.
கேரளத்தின் வளமை
ஒரு சமயம் ஆற்காட்டு நவாப் படையெடுத்து வந்த போது உற்சவரை கவர்ந்து சென்று
தன்னுடைய கஜானாவில் எறிந்து விட்டான். உற்சவரை எவ்வளவு கீழே போட்டாலும் தானாக மேலே
வந்து கொண்டிருந்தது. அதே சமயம் அவனது இராணிக்கு தீர்க்க முடியாத ஒரு வியாதி
பற்றிக்கொண்டது. பெருமாள் அர்ச்சகர் கனவில் தோன்றி நவாப்பிடம் சென்று
உற்சவரைத் திருப்பித் தந்தால் இராணியின் வியாதி விலகும்
என்று கூறப் பணித்தார். நவாபும் உற்சவரை திரும்பக் கொண்டு வந்து திருக்கோவிலில்
சேர்க்க இராணியின் நோயும் விலகியது. நன்றிக்கடனாக நவாப் பெருமாளுக்கு தங்கக்கிரீடமும், வெள்ளி தட்டும் உபயமாக அளித்தான். தீர்த்தவாரி தினத்தன்று ”திருவளா
பூஜை” (அல்லா பூஜை) நடத்தினான்.
அப்போது பெருமாளுக்கு அவல், பொரி, சாதம் நிவேதனம்
செய்யப்படுகின்றது.
வம்மின் தொண்டர்களே திரை குழல் கடல் புடைசூழ் தென்னாட்டுத் திலதமன்ன வரை குழுவு
மணிமாட வாட்டாற்றான், வானேற வழி தந்த வாட்டாற்றான், வன்னெஞ்சத்திரணியனை மார்விடந்த வாட்டாற்றான், மலை மாடத்தரவணை
மேல் வாட்டாற்றான், வளம்மிக்க வாட்டாற்றான் என்று மங்களாசாசனம் செய்த நம்மாழ்வாருக்கு பெருமாள் இத்தலத்தில் காட்டிய கல்யாண குணம் என்ன
என்று காணலாம். அடியார் கேட்டபடி
கேட்கின்ற குணத்தை எம்பெருமான் ஆழ்வாருக்கு காட்டி அருளினார். இதை அழகிய
மணவாளப் பெருமாள் நாயனார் தமது
ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் ”அழகிய மோட்சதானத்தில் பிரணபாரதந்த்ரியம் வளம் மிக்க நதியில் கரைபுரளும்” என்று கூறுகின்றார்.
அழகிய சிற்பங்கள் கொண்ட திருச்சுற்று
மண்ணுலகில் வளம் மிக்க
வாட்டாற்றான் வந்து இன்று விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் என்று ஆழ்வாரே
கூறியபடி பெருமாள் நம்மாழ்வாருக்கு
உடலுடனே வைகுந்தம் அளிக்க விழையும் போது ஆழ்வார் உடலுடன் வைகுந்தம் செல்ல
விரும்பாததால் அவரது அவாவிற்கிணங்கி உடல் இல்லாமல் வைகுந்தப் பேறளிக்கின்றார்.
இவ்வாறு அடியார்கள் சொன்ன வண்ணம் செய்யும் பெருமாள் என்னும் குணத்தை காட்டுகிறார்
ஆதிகேசவர் இத்தலத்தில்.
வாருங்கள் அன்பர்களே இனி திவ்வியக்கவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது
நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இந்த திவ்விய தேசத்தைப் பற்றி எவ்வாறு
பாடியுள்ளார் என்று காணலாம்.
மாலைமுடி நீத்து மலர்ப்பொன் அடிநோவப்
பாலைவனம்புகுந்தாய் பண்டுஎன்று –
சாலவும்நான்
கேட்டால் துயிலேன்காண் கேசவனே பாம்பணை மேல்
வாட்டாற்றுக் கண்துயில்கொள் வாய் (நூ.தி 68)
பொருள்: கேசவன் என்னும்
திருநாமத்தை உடையவனே! ’மாலையையும் முடியையும் நீத்து, (சிற்றவையின் சொற்படி) தாமரை மலர் போன்ற அழகிய திருவடிகள் வருந்தும்படி
கொடுங்காட்டில் நடந்து சென்றாய்’ என்று கேட்டால், அடியேன் அடியோடு கண்துயில்
கொள்ளேன்; நீயோ திருவாட்டாறு என்னும் திருத்தலத்தில் பாம்பணையில் மீது
கவலையின்றிக் கண்ணுறங்குகின்றாய்! என்று
அங்கலாய்க்கின்றார்.
"ஸ்ரீ வர்துல நதிபுர சாகர நிமக்நாய க்ஷேத்ரே ராம புஷ்கரணி தடே அஷ்டாங்க விமானச் சாயாயாம் ஸ்திதாய அனந்தசயனாய பக்ஷிமமுகாய
ஸ்ரீமதே மரகதவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீஆதிகேசவ
பரப்ரஹ்மணே நம: என்ற தியான ஸ்லோகத்தை
ஜபித்துக்கொண்டே வைகுந்த வாழ்வளிக்கும் ஆதி கேசவரிடம் சரணமடைந்து, வாருங்கள்
அன்பர்களே மலை நாட்டுத் திருப்பதிகளில் நிறைத் திருப்பதியான திருப்பதிசாரம்
என்று தற்போது அழைக்கப்படும் திருவண்பரிசாரத்தில் திருவாழ்மார்பனை சேவிக்க செல்லலாம்.
திவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :
திருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை
திருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்
திருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
குருவாயூர் கொடுங்கல்லூர் திருஅஞ்சைக்களம் குலசேகரபுரம்
சோட்டாணிக்கரை வர்க்கலா நெய்யாற்றங்கரை திருப்பிரயார்
இரிஞ்ஞாலக்குடா பாயம்மல்
மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .
No comments:
Post a Comment