திருவாறன்விளை - பார்த்தசாரதி
சேரநாட்டுத் திருப்பதி யாத்திரையின் இரண்டாம் நாள் காலை தரிசனத்தின் நிறைத்தலமாக நம்மாழ்வார் திருவாறன்விளை என்று மங்களாசாசனம் செய்த தற்போது ஆரண்முளா என்று அழைக்கப்படும் திவ்வியதேசத்தை அடைந்தோம். பெருமாள் இங்கு பார்த்தன் வழிபட்ட பார்த்தசாரதிப் பெருமாளாய் சதுர்புஜராய் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மிகவும் பிரம்மாண்டமான ஆலயம். நான்கு புறங்களிலும் அற்புதமான கேரளபாணி கோபுரங்கள், தங்கக் கவசம் பூண்ட நெடிய கொடிமரம், விசாலமான பிரகாரம், பெரிய மண்டபங்களுடன் எழிலாக விளங்குகின்றது ஆரண்முளா ஆலயம். செங்கண்ணூரிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. கேரளத்தின் அனைத்து பெரிய ஊர்களில் இருந்தும் இத்தலத்திற்கு பேருந்துகள் உள்ளன.
திருவாறன்விளை ஆலயம்
மலைநாட்டுத் திருப்பதிகளில் பக்தர்களின் மனங்கவர்ந்த தலங்களில் இதுவும் ஒன்று.
பம்பையாறு இத்தலத்தின் வடக்கு வாசலை தொட்டுக் கொண்டு ஓடுகின்றது. மஹாபாரதப்போரில் கர்ணனின் தேர் சக்கரம் பூமியில் புதைந்த போது அதனைத் தோள் கொடுத்து எடுத்து நிறுத்தி மீண்டும் போர் புரிய நினைத்த கர்ணன் தேர் சக்கரத்தைத் தூக்க முயன்ற போது அர்ஜுனன் அம்பெய்து கர்ணனைக் கொன்றான். நிராயதபாணியாய் நின்ற கர்ணனைக் கொன்ற பாவம் தீர அர்ச்சுனன் இங்கு பார்த்தசாரதிப் பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம்.
ஒரு சமயம் மது, கைடபர்கள் என்ற இரு அசுரர்கள் வேதங்களை அபகரித்துக் கொண்டு சென்று விட, பிரம்மன் திருமாலை துதித்து நின்றார், திருமாலும் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். அப்போது பிரம்மா, வாமன அவதாரத்தில் பெருமாளை தரிசிக்க வேண்டுமென வேண்ட அது போன்றே எம்பெருமான் காட்சி கொடுத்தார் என ஒரு வரலாறும் உண்டு எனவே எம்பெருமானுக்கு திருக்குறளப்பன் என்ற ஒரு திருநாமமும் உண்டு. திருக்குறளப்பன் என்பது குள்ளத்தோற்றமுடைய வாமன மூர்த்தியை குறிக்கின்றது. வேத வியாசர் தவம் செய்த தலம். அவர் உருவாக்கிய தீர்த்தமும் உள்ளது.
நுழைவாயில்
மஹாபாரதப் போரின் மூன்றாம் நாள் பீஷ்மப் பிதாமகரின் ஆக்ரோஷத்தைக் குறைக்க, ஆயுதத்தை கையில் எடுக்க மாட்டேன் என்று வாக்களித்த கிருஷ்ண பரமாத்மா தன் ஆழிப்படையை கையில் ஏந்தி பீஷ்மரை நோக்கி பாய்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார் என்றொரு ஐதீகமும் உண்டு.
இந்த தலத்தில்தான் ஸ்ரீசபரிமலை ஐயப்ப சுவாமியின் அணிகலன்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின் போது ஊர்வலமாக சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்படுகின்றது. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.
இனி இத்தலம் ஆரண்முளா என்று அழைக்கப்படுவதன் காரணம் பற்றிக் காணலாமா? அன்பர்களே. ஆதி காலத்தில் இப்பெருமாள் அடர்ந்த வனம் சூழ்ந்த நிலக்கல் என்ற தலத்தில் இருந்தார் அவர் இத்தலத்திற்கு வர வேண்டி ஒரு பிரம்மச்சாரி வேடத்தில் வாமனர் போல கையில் தாழங்குடையுடன் வந்து படகுக்காரர்களிடம் தன்னை ஆற்றில் அழைத்துச் செல்லுமாறு கூறினார். அவர்களும் ஆறு மூங்கில்களால் ஒரு தெப்பம் உருவாக்கி பம்பையாற்றில் அந்தப் பிரம்மச்சாரியை அழைத்து வந்தனர். இடையில் இடைஆரண்முளா என்ற இடத்தில் பிரம்மச்சாரி இறங்கி தன்னுடைய சாயுங்காலக் கடமைகளை செய்தாராம். பின்னர் இரவில் இங்கு வந்து சேர்ந்தார். அப்போது இவ்விடம் பள்ளமாக இருந்ததாம் பெருமாளும் அங்கிருந்த இராட்சசனிடம் இந்த இடத்தை மேடாக்குமாறு பணிக்க ஒரிரவில் கோவில் உருவானது.
முன் மண்டபம்
இன்றும் ஒரு சிறு குன்றின் மேல் உயரத்தில் கோவில் அமைந்துள்ளது 18 படிகள் ஏறிச் சென்றுதான் பெருமாளை தரிசிக்க முடியும். பின்னர் நிலக்கல் நாராயணன் இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். முளா – என்றால் மலையாளத்தில் மூங்கில் எனவே ஆறு மூங்கில்கள் கொண்ட தெப்பத்தில் பெருமாள் இத்தலம் வந்ததால் ஆரண்முளா என்று இத்தலத்திற்கு பெயர் அமைந்தது. எவ்விடத்தில் அந்த தெப்பம் தங்கியதோ அவ்விடம் ஒரு மூங்கில் காடாக மாறியது. இன்றும் மக மாதத்தில் உற்சவத்தின் போது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட மூங்கிலில் கொடியேற்றுகின்றனர்.
இத்தலத்தில் ஓணத்தின் போது நடைபெறும் படகுப்போட்டி மிகவும் சிறப்புப் பெற்றது. அதுவும் இந்தப் பெருமாளின் ஒரு லீலைதான் அது என்ன என்று காணலாமா அன்பர்களே? மாங்காட்டு நம்பூதிரிகள் குடும்பம் ஓணத்தன்று ஒரு அதிதிக்கு போஜனம் செய்து வைத்த பிறகே தாங்கள் உண்ணும் ஒரு சம்பிரதாயத்தை கடைப்பிடித்தனர். ஒரு ஓணத்தன்று எந்த அதிதியும் வரவில்லை. அவர்கள் பெருமாளிடம் வேண்ட, பெருமாளே ஒரு இளம் பிரம்மச்சாரியாக அவர்கள் இல்லம் வந்து அவர்களின் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டார். அவர்களும் பிரம்மச்சாரியிடம் வருடா வருடம் தாங்களே வந்து எங்கள் விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விண்ணப்பிக்க பிரம்மச்சாரியும் சரி என்று கூறி சென்றார். பின்னர் அவர்கள் கனவில் தோன்றி தான் யார் என்பதை உணர்த்தி, தான் வருடா வருடம் வரமுடியாது என்பதால் அவர்கள் உணவுப்பொருட்களை எல்லாம் ஆரண்முளா கொண்டு வந்து தனக்கு விருந்தளிக்குமாறு ஆணையிட்டார். மாங்காடு நம்பூதிரியும் படகில் விருந்துக்கு வேண்டிய பொருட்களை கொண்டு வந்து விருந்தளித்து வரும் போது இவர்கள் மேல் அசூயை கொண்ட சிலர் பாம்புப் படகில் வந்து இவர்கள் செய்யும் சேவையை தடுக்க முயன்றனர். சில கிராமத்தினர் தமது படகில் இவர்களுக்கு துணையாக சேர்ந்தனர், இரு குழுவினருக்கும் இடையில் சண்டை நடந்தது, பெருமாளின் அருளால் மாங்காட்டு நம்பூதிரிகள் அவர்களை வென்று தமது சேவையை தொடர்ந்தனர். அதுவே இன்றைய தினம் வருடா வருடம் ஓணத்தின் போது இத்தலத்தில் படகுப் போட்டியாக கொண்டாடப்படுகின்றது.
பிரசாதத்துடன் தமக்கை
பங்குனி மாதத்தில் இத்தலத்தின் அருகில் உள்ள புன்னத்தோட்டு பகவதி பம்பா நதியில் ஆறாட்டு கண்டருள எழுந்தருளும் போது பார்த்தசாரதி சுவாமியும் கருட வாகனத்தில் உடன் சேவை சாதித்து அருளுகின்றார். மார்கழி மாதத்தில் காண்டவ வனத்தை ஸ்ரீகிருஷ்ணர் அக்னிக்கு இரையாக்கியதை குறிக்கும் வகையில் ஒரு உற்சவம் கொண்டாடப்படுகின்றது. சன்னதி தெருவில் ஒரு காடு உருவாக்கப்பட்டு அன்றைய தினம் தீயிடப்படுகின்றது.
இத்தலத்தில் சேவை புரிந்த ஒரு யானை அருகில் உள்ள ஒரு மாதாகோவிலின் மணியோசை பெருமாளுக்கு இடையூறாக இருக்குமென்று எண்ணிய அந்த மணியை பறித்துக்கொண்டு வந்து பெருமாளுக்கு சமர்ப்பித்து விட்டதாம் அன்று முதல் மாதாகோவிலில் மணியடிப்பதில்லையாம். அந்த இறைவன் திருவடி அடைந்து விட்ட பின் அதன் புகைப்படத்தை இவ்வாலயத்தில் வைத்துள்ளனர்.
ஆகுங்கொல்? ஐயமொன்றின்றி அகலிடம்முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பனமர்ந்துறையும்
மாந்திகழ் கொடி மாடங்கள்நீடு மதிள் திருவாறன் விளை
மாகந்தநீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ? (தி.வா 7-10-2)
பொருள்: எம்பெருமான் அகன்ற உலகம் முழுவதையும் தன் இரண்டு திருவடிகளால் அளந்தான். இப்படி அளந்தவிட முடியுமா என்று சிறிதும் சந்தேகம் இல்லாமல், அழகிய குள்ளவடிவமான வாமனனான அவன் வந்த் அதிசயமாகப் பேருருவம் எடுத்து நிமிர்ந்தான். இப்படிப்பட்ட திருக்குறளப்பன் எழுந்தருளியுள்ள திருத்தலம் திருவாறன்விளை ஆகும். இவ்வூரில் வானத்தைத் தொடுகின்ற கொடிகள் காணப்படும் மாடங்கள் உண்டு; இத்திருப்பதிக்கு சென்று நான் பகவானை மணம் மிகுந்த தண்ணீர் தூவி வலம் வந்து கைகளால் வணங்கி வழிபடும் வாய்ப்பு எனக்குக் கைகூடுமோ? என்று இன்பக்கவி பாடுவித்த எம்பெருமானை ஆழ்வார் திருவாறன்விளையில் சென்று அடிமை செய்யக்கருதும் பாவனையில் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த இத்தலத்தின்
மூலவர்: பார்த்தசாரதி, திருக்குறளப்பன் (ஆழ்வார் மங்களாசாசனம் செய்த நாமம்)
தாயார்: பத்மாசினி நாச்சியார்
விமானம் : வாமன விமானம்
தீர்த்தம்: வேத வியாச தீர்த்தம், பம்பா ஆறு
வாருங்கள் இவ்வளவு சிறப்புக்கள் பெற்ற பெருமாளை சேவிக்கலாம். நான்கு பக்கமும் கேரளப்பாணி கோபுரங்களையுடைய மிகவும் பரந்து விரிந்த ஆலயம் உயரத்தில் அமைந்துள்ளது. 18 படிகளை ஏறிச் சென்றுதான் ஆலயத்தை அடைய முடியும். கோபுரத்தை தாண்டியவுடன் உயரமான தூண்களைக் கொண்ட கூரை வேய்ந்த மண்டபம் அதை அடுத்து தங்கக் கவசம் பூண்ட பலிபீடம் மற்றும் நெடிதுயர்ந்த கொடிமரம். அருகிலே துலாபாரம்.
“மஞ்சாடி வழிபாடு” எனப்படும் வன்னிமரக்காய்களை கொடி மரத்தின் மேல் வீசும் பிரார்த்தனை இத்தலத்தின் சிறப்பான வழிபாடு ஆகும். கொடிமரம் அருகே ஒரு பெரிய கங்காளத்தில் வன்னிக் காய்களை குவித்து வைத்திருக்கின்றனர் இத்தலத்தில் உள்ள வன்னி மரத்திலிருந்து உதிர்ந்த காய்கள் இவையாகும். அர்ஜுனன் ஆயுதங்களை மறைத்து வைத்த வன்னி மரத்திலிருந்து வந்ததால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட காலத்தில் இந்த வன்னிமரத்துக் காய்களை தலையைச் சுற்றி எறிந்தால் அர்ஜுனன் அம்பினால் எதிரிகளின் அம்பு சிதைவது போல், நோய் சிதையும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. எனவே தெய்வ ப்ரிதீக்காகவும், தீராத வியாதி தீரவும் 10 ரூபாய்க்கு அந்த சிவப்பும் கருப்பும் கலந்த காய்களை வாங்கிக் கொடிமரத்தின் மேல் வீசி வழிபடுகின்றனர்.
பலராமர் சன்னதி
அடியோங்கள் சென்ற போது உச்சிக்கால சீவேலி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பலிபேரரை தலையிலே சுமந்து கொண்டு போத்திகள் வேகமாக வலம் வந்து கொண்டிருந்தனர் அடியோங்களும் பெருமாளுடன் பிரகாரம் சுற்றி வந்தோம். ஸ்ரீகோவில் வட்ட வடிவில்தான் உள்ளது. முகமண்டபத்தில் அருமையான லக்ஷ்மி விநாயகர், சுதர்சனர், அனந்தபத்மநாப சுவாமி சிற்பகள் உள்ளன. ஸ்ரீகோவிலின் முன்புறம் மட்டுமல்ல பின் புறத்திலும் துவாரபாலகர்களை அமைத்துள்ளனர். சீவேலி நிறைவு பெற்ற பின் அடுத்து நடைதிறந்த பின் உள்ளே சென்றோம். நமஸ்கார மண்டபத்தில் மலர் மாலை அலங்காரத்துடன் அமர்ந்திருந்த கருட பகவானை சேவித்தோம். இம்மண்டபத்தின் கூரையில் உள்ள நவக்கிரக சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டியிருந்தனர் எனவே மிகவும் அழகாக ஒளிர்ந்தது. சரியான சமயத்தில் அங்கிருந்தோம். அபிஷேக தீர்த்தம் சுவீகரிக்கும் பாக்கியம் கிட்டியது. ஆரத்தி காட்டி தீபங்களை மெலிதாக்கி சுவாமியின் நடை அடைக்கும் அழகை இத்தலத்தில் சேவித்தோம்.
வாய்க்குங்கொல்?நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல்சூழ் திருவாறன்விளை
வாய்க்கும் பெரும் புகழ்மூவுலகீசன் வடமதுரை பிறந்த
வாய்க்கும் மணிநிறக்கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே (தி.வா 7-10-4)
பொருள்: திருவாறன்விளைத் திருத்தலத்தில் கரும்புகளும் பெரிய செந்நெற் பயிர்களும் தழைத்து வளர்ந்துள்ள வயல்கள் சூழ்ந்துள்ளன திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானை அங்கு போகாமலே, இங்கு இருந்து கொண்டே மனத்தால் எல்லாக் காலங்களிலும் எண்ணி வழிபடக்கூடுமோ? அப்பெருமான் நிறைந்த புகழுடைய மூன்றுலகங்களுக்கும் தலைவன் அன்றோ! அவனே வடமதுரையில், வந்து அவதரித்த நீலமணி போலும் நிறம் கொண்ட ஸ்ரீகண்ணபிரான் ஆவான். அவனுடைய தாமரைத் திருவடிகளைத் திருவாறன்விளை செல்லாமலேயே இங்கிருந்து கொண்டே நினைத்து வழிபடக்கூடுமோ?
பார்த்தசாரதி - திருக்குறளப்பன்(வாமனர்)
என்று நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த, நின்ற கோலத்தில் சதுர்புஜராக சேவை சாதிக்கும் பெருமாளை, பார்த்த சாரதியை, திருக்குறளப்பனை சந்தனக் காப்பில் அருமையாக சேவித்தபின், பிரசாதம் சுவீகரிக்கும் பாக்கியம் கிட்டியது அனைவருக்கும் அள்ளி அள்ளி பால் பாயசம் மற்றும் சாதம் இலையில் வைத்து அனைவருக்கும் வழங்கினர். அதனால்தானோ என்னவோ அதிகமாக வயதானவர்கள் இவ்வாலயத்தில் இருந்தனர்.
வடக்கு பிரகாரத்தில் பலராமருக்கு தனி சன்னதி உள்ளது இந்த சன்னதி ஆனால் பூமி மட்டத்தில் இருந்து கீழே அமைந்துள்ளது. அருகில் மிகப்பெரிய ஊட்டுப்புரா 57 படிகள் இறங்கி சென்றால் பம்பையாற்றை அடையலாம்.
நமஸ்கார மண்டப கூரை ஓவியங்கள்
இத்தலத்தில் பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்டிய கல்யாண குணம் ஆனந்த விருத்தி ஆகும். ஆழ்வார் இத்தலத்திற்கு வந்த பெருமாள் இவரை அழைத்து திருவாய்மொழியை விண்ணப்பிக்க வேண்டி, தாயாருடன் செவி மடுத்தாராம். இராமாயணத்தில் லவகுசர்கள் இராமாயணம் விண்ணப்பித்த போது அப்போது தாயார் அருகில் இருக்கவில்லை, அது போலவே மஹாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கீதை மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் உபதேசித்த போதும் தாயார் அருகில் இருக்கவில்லை ஆனால் ஆழ்வார் திருவாறன்விளையிலே திருவாய்மொழி விண்ணப்பித்த போது தாயாருடன் பெருமாள் ஆனந்தமாக செவி மடுத்தார் இதனால் ஆழ்வார் மிகவும் ஆனந்தமடைந்தார். ”பிரணவ சித்தரை பரத்துவ வியூகமாக்கும் ஆனந்த விருத்தி நீள்நகரிலே” என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் இதைக் குறிப்பிடுகின்றார்.
இன்பம்பயக்க எழில்மலர்மாதரும்தானும் இவ்வேழுலகை
இன்பம்பயக்க இனிதுடன் விற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற்றமர்ந்துறைகின்ற அணிபொழில்சூழ் திருவாறன்விளை
அன்புற்றமர்ந்து வலஞ்செய்து கைதொழும்நாள்களு மாகுங்கொலோ? (தி.வா 7-10-1)
பொருள்: எங்கள் பெருமானாகிய இறைவன் அழகுமிகுந்த தாமரைப்பூவில் அமரும் பெரிய பிராட்டியாருடன் மகிழ்ச்சி உண்டாகும்படியாக எழுஉலகங்களையும் காப்பாற்றுகிறான். அவன் மிகுந்த அன்புடன் அழகான சோலைகள் சூழ்ந்த திருவாறன்விளை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளான். நான் அங்கு சென்று அன்பு நிரம்பிய நெஞ்சுடன் அவனை வலம் வந்து கைகளால் என்று தொழுவேன்? என்ற ஆழ்வார் வைகுண்டம் வேண்டாம் மலர் மங்கை தன்னுடன் பெருமாள் அன்புடன் அமர்ந்திருக்கின்ற திருவாறன்விளையிலே கைங்கர்யம் வேண்டும் என்று வேண்டுகின்றார். எனவே இத்தலத்தில் பெருமாளை சேவித்தால் ஆனந்தம் ஆனந்தம், ஆனந்தம்தான்.
சென்று புனல்மூழ்கிச் செய்தவங்கள் செய்தாலும்,
வென்று புலன் அடக்கி விட்டாலும் – இன் தமிழால்
மாறன் விளைத்த மறை ஒதார்க்கு இல்லையே
ஆறன்விளைத் திருமால் அன்பு. (நூ.தி 71)
பொருள்: தீர்த்த யாத்திரையாகச் சென்று புண்ணீய தீர்த்தங்களில் நீராடி செய்வதற்கு உரிய தவங்களை செய்தாலும், ஐம்பொறிகளை வென்று அடக்கினாலும், நம்மாழ்வார் செவிக்கினிய தமிழ்ப்பாட்டாகச் செய்தருளிய வேதத்தை ஓதியுணராதவர்க்கு, திருவாறன்விளை என்னும் திருப்பதியில் எழுந்தருளியுள்ள எம்பெருமானது திருவருள் உண்டாகாது என்று பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் பாடுகின்றார்.
ஆரண்முளா கண்ணாடிகள் உலகப் புகழ் பெற்றவை. இவை மற்ற கண்ணாடிகள் போல அல்லாமல் முழுவதும் உலோகத்தால் ஆனவை. எனவே இவை மங்கலப் பொருட்களாக கருதப்படுகின்றன. குறிப்பாக மலையாள வருடப் பிறப்பான விஷுக்கனியன்று இந்தக் கண்ணாடிகளில் விஷுக்கனி காணும் வழக்கம் உள்ளது.
இவ்வாறாக மலை நாட்டு யாத்திரையின் இரண்டாம் நாள் காலை தரிசனம் அருமையாக முடிந்தது ஆறு திவ்ய தேசங்களில் திருச்செங்குன்றூர் தவிர அனைத்து பெருமாள்களையும் திவ்யமாக சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. 13 மலைநாட்டு திருப்பதிகளில் பத்தை சேவிக்க முடிந்தது. இந்த பத்து திவ்ய தேசங்களிலும் பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதித்தார், திருநாவாய், திருவித்துவக்கோடு தவிர மற்ற எட்டு தலங்களிலும் வட்ட வடிவ ஸ்ரீகோவிலும் தொப்பி விமானமுமாகவே அமைந்திருந்தது.
ஸ்ரீஆரண்விளா க்ஷேத்ரே பம்பா வேத வியாஸ புஷ்கரணி தடே வாமன விமானச் சாயாயாம் ஸ்திதாய பூர்வாபிமுகாய ஸ்ரீமதே பத்மாசனி நாயிகா ஸமேத வாமன (திருக்குறளப்ப) பரப்ரஹ்மணே நம: என்று தியானித்துக்கொண்டே, திருவனந்தபுரம் நோக்கி எம்.சி சாலை வழியாக புறப்பட்டோம். வழியில் வர்க்கலா என்ற தலத்தில் ஜனார்த்தன சுவாமியை சேவித்தோம்.
காலையில் சேவித்த திவ்ய தேசங்கள் அனைத்தும் மத்திய கேரளாவில் அமைந்துள்ளன. திருவனந்தபுரமும் மற்ற இரண்டு திவ்ய தேசங்களும் கேரளத்தின் தென் கோடியில் அமைந்துள்ளன. எனவே பயணம் நீண்டதாக இருந்தது. அதுவும் கொளுத்தும் வெயிலில் பயணம் சிறிது சிரமமாகவே இருந்தது. மாலை சுமார் 7 மணியளவில் திருவனந்தபுரத்தை அடைந்தோம். வம்மின் அன்பர்களே அடுத்து அனந்த பத்மநாப சுவாமியை சேவிக்கலாம்.
திவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :
திருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை
திருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்
திருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
குருவாயூர் கொடுங்கல்லூர் திருஅஞ்சைக்களம் குலசேகரபுரம்
சோட்டாணிக்கரை வர்க்கலா நெய்யாற்றங்கரை திருப்பிரயார்
இரிஞ்ஞாலக்குடா பாயம்மல்
No comments:
Post a Comment