திருசிற்றாற்று
திருச்செங்குன்றூர் - இமையவரப்பன்
அடுத்து அடியோங்கள்
சேவிக்கச் சென்ற தலம் திருச்செங்குன்றூர் ஆகும்.
வழி சரியாக தெரியாமல் மீண்டும் திருப்புலியூருக்கே வந்து சேர்ந்தோம் பின்னர் சரியாக விசாரித்துக் கொண்டு சென்றடைந்த போது காலை 11
மணி அளவிலேயே நடை சார்த்தியிருந்தது
திருக்கோவிலை மட்டும் வலம் வந்து சேவித்து விட்டு திருவாறன்விளை சென்றோம்.
பின்னொரு சமயம் பெருமாளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது. வாருங்கள் அன்பர்களே திருச்செங்குன்றூர் திவ்ய தேசத்தின் சிறப்புகளைக்
காணலாம்.
கங்கை
நதி போல் புண்ணிய நதியாம் பம்பை நதியின் ஒரு கிளை ஆறான சிற்றாற்றின்
கரையில் அமைந்துள்ளது இந்தத் தலம். பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர்
பூஜித்த மூர்த்தி ஆவார் இமையவரப்பன். தற்போது பெருமாள் வலக்கையில் சங்கம் இடக்கையில் சக்கரம் தாங்கிய கோலத்தில் சேவைச்
சாதிக்கின்றார்.
தற்போது
சிற்றாறு என்றுதான் அழைக்கின்றனர். செங்கண்ணூரில்
இருந்து
சுமார் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்தலம் . திருவல்லாவில்
இருந்து
ஆரண்முலா என்றழைக்கப்படும் திருவாறன்விளை செல்லும் அனைத்து பேருந்துகளும் இவ்வூர் வழியாக
செல்கின்றன. கொல்லம் – எர்ணாகுளம் இரயில் மார்க்கத்தில் உள்ளது.
மஹாபாரதப்போரில்
அசுவத்தாமா குஞ்சரக ஹத: அதாவது அஸ்வத்தாமன் இறந்தான் என்பதை அஸ்வத்தாமன் என்பதை
பலமாக கூவியும் யானை இறந்து விட்டது என்று மெல்லவும் பொய்யாக
கூறியதால் துரோணர் ஆயுதங்களை
போட்டுவிட்டு நிற்க அதற்காகவே காத்திருந்த திருஷ்டத்தும்யுனன் துரோணரை கொன்றான். இவ்வாறு தமது குருநாதர் வீழ்வதற்கு தான் காரணமாக
இருந்ததை எண்ணி மனம் வருந்திய தர்மபுத்திரர் மன அமைதி பெற பூஜித்த எம்பெருமான்
இந்த செங்குன்றூர் சிற்றாற்று இமையவரப்பன்
ஆவார்.
திருசெங்குன்றூர் நுழைவு வாயில்
தர்மபுத்திரர்
வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரே தேவர்கள் இங்கே குழுமியிருந்து பெருமாளை குறித்து தவம் செய்தனர்,
அவர்களுக்கு சுவாமியாக, அவர்களை உடலாக கொண்டு செயல் புரிபவனாக பெருமாள் சேவை சாதித்ததால் இவருக்கு
இமையவரப்பன் என்னும் திருநாமம்
ஏற்பட்டது.
எங்கள்செல்சார்வு
யாமுடையமுதம் இமையவரப்பனென்னப்பன்
பொங்குமூவுலகும்
படைத்தளித்தழிக்கும் பொருந்துமூவுருவனெம்மருவன்
செங்கயலுகளும்
தேம்பணை புடைசூழ் திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அங்கமர்கின்ற ஆதியானல்லால் யாவர் மற்றென்னமர் துணையே? (தி.வா.8-4-2)
பொருள்: என் தலைவனும் தந்தையுமான பகவான் நாங்கள்
அடையதற்குரிய புகலிடமாக உள்ளான்.
இனிய, எங்கள் அமுதமும் அவனே. நித்திய
சூரிகளுக்கு இறைவனாகவுள்ள அவன்தான் என் இறைவன். மூன்றுலகங்களையும் படைத்துக்
காத்து அழிக்கும் பிரமன், திருமால், சிவன்
என்னும் மூவகைப்பட்ட உருவங்களைக் கொண்டு
இருக்கின்றான். என் ஆத்மாவுக்குள் அந்தர்யாமியாக வடிவம் தெரியாதபடி உள்ளவனும்
அவனே. இப்படிப்பட்ட என் சுவாமி திருச்செங்குன்றூரில் உள்ளான். கயல்மீன்கள்
விளையாடும் நீர் நிலைகள் பொருந்திய
வயல்கள் சூழ்ந்த அந்தத்
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றில்
எழுந்தருளியுள்ள அவன்தான்
எல்லாவற்றுக்கும் ஆதியாக உள்ளவன். அவனையல்லால் எனக்கு வேறு யாரும் துணையில்லை. என்று தேவர்களுக்கு
மட்டுமல்ல, எனக்கும் சுவாமி, என்னுடைய
அமுதம், சார்ந்திருக்கக் கூடியவன், பற்றத்தக்கத் திருவடிகளை உடையவன், அனுக்கிரகம்
புரிந்தவன் என்றெல்லாம் நம்மாழ்வார் மங்களாசாசனம்
செய்த திருசிற்றாற்று திருச்செங்குன்றூர் திவ்ய தேசத்தின்
மூலவர்:
இமையவரப்பன்
தாயார்:
செங்கமலவல்லி
விமானம்:
ஜெகஜ்ஜோதி விமானம்
தீர்த்தம்:
சிற்றாறு, சங்க தீர்த்தம்
பிரத்யக்ஷம்
:சிவ பெருமான்.
ஆலயம்
சாலைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது.
ஆலயத்தின் முன்னரே சங்க தீர்த்தம் உள்ளது,
அதன் அருகில் ஒரு அருமையான தோரண வாயில்
நம்மை
வரவேற்கின்றது. இமையவரப்பன், ஐயப்பன், மஹா லக்ஷ்மி, சரஸ்வதி, துவாரபாலகர்கள்,
விளக்கேந்திய பாவைகள், முக்கிளை விளக்கு, தென்னம்பாளையுடன் நிறை நாழி ஆகிய மங்கலப்
பொருட்கள் அனைத்தும் இவ்வாயிலில் தரிசிக்கலாம்.
அதில் திருசிற்றாற்று பஞ்ச பாண்டவ
மஹா விஷ்ணு க்ஷேத்திரம் என்று மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் குறிப்பிட்டிருக்கின்றனர். சிறிது தூரம் உள்ளே நடந்து சென்ற பின் ஆலயத்தின் வாசலை அடைகின்றோம். ஆலயம் மற்ற
ஆலயங்கள் போல செழிப்பாக இல்லை என்று தோன்றியது. எளிமையான தாமிரக்கவசம் பூண்ட கொடிமரம்.
ஸ்ரீகோவில் வட்டவடிவில் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. இரண்டு தளங்களாக அமைந்துள்ளது மேல்தளம், கீழ்த்தளத்தை விட சிறிதாக
உள்ளது. தொப்பி வடிவ விமானம் உள்ளது. பெருமாள்
சதுர்புஜராக நின்ற
கோலத்தில் வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்கரமும் தாங்கி சேவை சாதிக்கின்றார்.
ஒரே பிரகாரம்தான் ஆனால் விலாசமாக உள்ளது. பிரகாரத்தில் வர்ணம் பூசப்பட்ட தீபங்கள்
அகல் விளக்குகள் போல வரிசை வரிசையாக அமைந்துள்ள காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறதனுள் கண்ட அத்திருவடியென்னும்
திருச்செய்யகமலக்கண்ணும் செவ்வாயும் செய்யடியும் செய்யகையும்
திருச்செய்ய கமலவுந்தியும் செய்யகமல மார்பும் செய்யவுடையும்
திருச்செய்யமுடியுமாரமும் படையும் திகழ என்
சிந்தையுளானே (தி.வா 8-4-7)
நம்மாழ்வார் பாசுர கல்வெட்டு
என்று
இமையவரப்பர் எழிலாக தமது சிந்தையில் உள்ளார் என்று எம்பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்ந்ததை நம்மாழ்வார் பாடியுள்ளார்.
இனி
இத்தலத்தைப் பற்றிய ஒரு வரலாறு, காஷ்யப முனிவரின் இரு புதல்வர்களான சூரன், பத்மன்
இருவரும் சிவபெருமானைக் குறித்து கடும் தவம் செய்தனர். சிவபெருமானும் தவத்திற்கு
இரங்கி என்ன வரம் வேண்டும் என்று வினவ, இருவரும் ஒன்றாகி பெரும் பலம் வாய்ந்தவனாக வேண்டும்,
மும்மூர்த்திகளாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது
என்று கேட்டனர். சிவபெருமானும் அவ்வாறே வரம் அளித்தார். இருவரும் ஒன்றாகி
சூரபத்மன் என்று மிக பலசாலி ஆயினர். தேவலோகத்தைக் கைப்பற்றி இந்திரனை துரத்தி விட்டு அவனது
மகன் ஜெயந்தனையும்
மற்ற தேவர்களையும் சிறையில் அடைத்து பல கொடுமைகள் புரிந்தனர்.
சிவபெருமானும்
இத்தலத்தில் பெருமாளை வணங்க, பெருமாளும் பிரத்யக்ஷமாகி, மும்மூர்த்திகளால்தான்
சூரபத்மனை கொல்ல முடியாது, தங்கள் புதல்வன் முருகனைக் கொண்டு அவனை அழிக்கலாம்,
வேலால் அவனை இரண்டாக பிளக்க, வேல் அவனது சக்தி அனைத்தையும் விலக்கி விடும் என்று சூரபத்மனை அழிக்க உபாயம் கூறினார்.
நமஸ்கார மண்டபக் கூரை
சூரபத்மன்
மாயப்போர் புரிந்தான்
முருகனும் அந்த
மாயங்களை எல்லாம் அழிக்க இறுதியில் மாமரமாக நின்றான், முருகனும் தனது வேலால்
அம்மரத்தை இரண்டாக பிளந்து அசுரர்களின்
ஆணவத்தை அழிக்க அவர்கள் ஞானம்
பெற்றனர். எவ்வாறு தன்னுடன் போரிட்ட
கருடனை திருமால் தனது வாகனமாகவும், கொடியாகவும் கொண்டாரோ அது போல தங்களுடன் போர் புரிந்த நாங்கள் தங்களுக்கு கீழும்,
மேலும் இருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்ட,
முருகப்பெருமான் அவர்களை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி மயிலை வாகனமாகவும்,
சேவலைக் கொடியாகவும் கொண்டார்.
வார்கடாவருவி யானை
மாமலையின் மருப்பிணைக்கு வடிறுத்துருட்டி
ஊர்கொள்திண்பாகனுயிர்
செகுத்து அரங்கின் மல்லரைக்கொன்று சூழ்பரண்மேல்
போர்கடாவரசர்
புறக்கிடமாடமீமிசைக் கஞ்சனைத்தகர்த்த
சீர்கொள்சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருசிற்றாறு எங்கள் செல்சார்வே.
(தி.வா 8-4-1)
பொருள்:
கண்ணபிரானாக அவதாரம் செய்த எம்பெருமான் குவலயாபீடம் என்ற யானையைத் தள்ளிக்
கொன்றான்; மதநீர் அருவி போல் கொட்டவும் மலை போல நின்ற அந்த யானையின் தந்தங்களாகிற
இரு சிகரங்களையும் கண்ணன் முறித்துப் போட்டான். அதனைக் கீழே தள்ளீய பிறகு அதன்
பாகனையும் கொன்றான். கம்சனின் அறையில் இருந்த சாணுர, முஷ்டிக மல்லர்களையும் அவன்
கொன்று தீர்த்தான். சுற்றிலும் இருந்த மஞ்சத்தின் மேலே நின்ற அரசர்களை முதுகு
காட்டி ஓடும்படி விரட்டினான். முடிவில் அவன் உயர்ந்த மாடத்தின் மீதிருந்த தன்
மாமனான கம்சனைக் கொன்று தகர்த்தான். இப்படிப்பட்ட வீரத்தின் சீர்மை பெற்ற இளையவனான
கண்ணபிரான், திருச்செங்குன்றூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.
அங்கேயுள்ள திருச்சிற்றாறே நாங்கள் அடைவதற்கு ஏற்ற புகலிடம் ஆகும்.
பெருமாள் ஆழ்வாருக்கு
இத்தலத்தில் காட்டிய கல்யாண குணம் சௌர்யம்
ஆகும். ”மஹா மதிகள் அச்சங்கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாற்றிலே
பொழிக்கும்” என்று பிள்ளைப் பெருமாள்
ஐயங்கார் ஆச்சார்ய ஹ்ருதயத்தில் குறிப்பிடுகின்றார். ஏனென்றால் நம்மாழ்வார் கண்ணன் ஆயர்ப்பாடியிலிருந்து மதுரா எழுந்தருளி குவலயாபீடம் என்னும் யானையின்
கொம்பொசித்து அதை நிரசனம் செய்து, அதன் பாகன், முஷ்டிக, சாணுர மல்லர்களைக்
கொன்று, எதிர்த்து வந்த
அரசர்களை வென்று, தருக்கில்லானாகி தான் தீங்கு நினைத்து கருத்தைப் பிழைத்த கஞ்சன் வயிற்றில் நெருப்பென நின்ற நெடுமாலின்
பராக்கிரத்தை ஆழ்வார் இத்தலத்தில் சேவித்தார்.
ஸ்ரீகோவில்
எம்பெருமான் தனது வீரம், சூரம், பராக்கிரமம்
ஆகியவற்றை மேலே குறிப்பிட்ட குவலாயபீட நிரசனம் முதல், கம்ச
வதம் ஈறான செயல்களின் மூலம் பெருமாள் இத்தலத்தில் காண்பிக்கிறார், அதாவது
தான் சூரன் – யாரையும் எதிர்த்து ஜெயிக்கக்கூடிய சக்தி உடையவன், வீரன் –எதிரியின் சைன்னியத்தின் உள்ளே நுழைய வல்லவன், சௌரியம் –
எதிரியின் படைகளை பயப்படாமல் சின்னா பின்னம் செய்யக்கூடியவன், பாராக்கிரமம் –
இவையனைத்தையும் கலங்காமல் செய்து
முடிப்பவன் என்பதை காட்டி அருளினான். எதற்காக என்றால் தமக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்து பல்லாண்டு பாடிய
பெரியாழ்வார், கிருஷ்ணனுக்கு ஏதும் ஆகி விடக்கூடாது என்று பயந்த விதுரர் போன்ற மஹாமதிகள் அச்சம் விலகுவதற்காக என்று அழகிய
மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் கூறியுள்ளார்.
வரவேண்டும் கண்டாய்
மதிகலங்கி விக்குள்
பொரவே
உயிர்மாயும் போழ்து – பரமேட்டி!
செங்குன்றூர்
மாலே! சிறைப்பறவை மேல்கனகப்
பைங்குன்று ஊர் கார்போல் பறந்து. ( நூ. தி 64)
பொருள்: பரமபதத்தில் வீற்றிருப்பவனே!
திருச்செங்குன்றூர் என்னும் திருப்பதியில்
எழுந்தருளியிருக்கின்ற திருமாலே! எனது அறிவு ஒடுங்கி விக்கலானது துன்பம்
செய்ய உயிர் போகும் அக்காலத்தில் அழகிய
சிறகுகளையுடைய சுபர்ணன் மீது, பசும் பொன் மயமான மலையின் மீது ஏறி வருகின்ற
காளமேகம் போல, விரைந்து எழுந்தருளிச் சேவை சாதிக்க வேண்டும் திவ்வியகவி பிள்ளைப் பெருமாள்
ஐயங்கார், தமது நூற்றெட்டுத் திருப்பதி
அந்தாதியில் இந்த திவ்ய தேச எம்பெருமானிடம் வேண்டுகின்றார்.
ஸ்ரீசெங்குன்னூர்
க்ஷேத்ரே, சிற்றாறு நதி தீரே, சங்க தீர்த்த புஷ்கரணி தடே, ஜெகஜ்ஜோதி விமானச்
சாயாயாம் ஸ்திதாய, ஸ்ரீமதே செங்கமலவல்லி நாயிகா ஸமேத தேவாதிதேவ ஸ்வாமி
(இமையவரப்பன்) பரப்ரஹ்மணே நம: என்று சரணாகதி செய்துவிட்டு வம்மின்
தொண்டர்களே, சேவித்தாலே ஆனந்தம்
அளிக்கும் ஆரண்முளாவின் பார்த்தசாரதிப்
பெருமாளை சேவிக்கச் செல்லலாம்.
திவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :
திருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை
திருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்
திருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள் : திவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :
திருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை
திருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்
திருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
குருவாயூர் கொடுங்கல்லூர் திருஅஞ்சைக்களம் குலசேகரபுரம்
சோட்டாணிக்கரை வர்க்கலா நெய்யாற்றங்கரை திருப்பிரயார்
இரிஞ்ஞாலக்குடா பாயம்மல்
மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .
No comments:
Post a Comment