திருவல்லவாழ் என்று
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பிராட்டியாரின் பெயரால் அழைக்கப்படும் இந்த ”வல்லப க்ஷேத்திரம்” தற்போது திருவல்லா
என்றழைக்கப்படுகின்றது. இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் கருட புராணம் மற்றும்
மத்ஸ்ய புராணத்தில் உள்ளன. திருமங்கயாழ்வார் 11 பாசுரங்களால்
பல்லாண்டு பாடிய ஒரே மலை நாட்டு திவ்ய தேசம் இது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள திருவல்லவாழ் சித்திரம்
கொச்சி எர்ணாகுளம் புகைவண்டி
மார்க்கத்தில் கோட்டயத்தில் இருந்து
விரைவுப் புகைவண்டி மூலம் 15 நிமிடத்தில் நாம் திருவல்லா புகைவண்டி
நிலையத்தை அடையலாம். பெரிய ஊர் என்பதால் தங்கும் வசதிகளும் உள்ளன. திருவல்லா அல்லது கோட்டயத்தில் இருந்து ஆட்டோ அல்லது கார் மூலம் இந்த ஆறு திவ்விய தேசங்களையும் ஒரே
நாளில் சேவிக்க முடியும். ஆலயத்திற்கு செல்லும் போதே திருமலை சுவாமிகள்
இத்தலத்து பெருமாள் மிகவும் அழகானவர் சில காலம் முன்பு வரை பெண்கள் பெருமாளை உள்ளே
சென்று சேவிக்க அனுமதிக்கப்படவில்லை என்று பெருமாளின் வைபவத்தைக் கூறினார்.
மற்றொரு மலைநாட்டு திவ்விய தேசமான திருவண்பரிசாரத்து
எம்பெருமானுக்கும் திருவாழ்மார்பன் என்று திருநாமம்.
இவ்வளவு அழகான
பெருமாள் இங்கு வந்து கோவில் கொண்டதற்கான ஒரு சுவையான கதை உள்ளது அது என்ன என்று
அறிந்து கொள்ளலாமா அன்பர்களே?. துவாபர யுகத்தில் விஸ்வகர்மாவால் வடிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் ஆராதித்த இந்த மூர்த்தியை
பின்னர் அவர் தனது சாரதியான சாத்யகியிடம்
அளித்தார். அவர் பின்னர் இம்மூர்த்தியை கருடபகவானிடம் அளித்தார். கருடபகவான் பிறகு
இந்த விக்கிரகத்தை நேத்ரவதி ஆற்றில்
மறைத்து வைத்தார். சுமார் 3000 ஆண்டுகள் பெருமாள் ஆற்றில்
இருந்தார். இந்த கலியுகத்தில் பெருமாள்
சேரமான் பெருமாள் மனைவி செருந்தேவி கனவில்
தோன்றி தான் இருக்கும் இடத்தை குறிப்பால் உணர்த்தினார். பெருமாளை தேடும் பணியில்
போத்திகளோடு துளுபிராமணர்களும் இணைந்தனர். இருவருக்குமாக பெருமாள் கிடைத்தார்.
பின்னர் அவரை இங்கு பிரதிஷ்டை செய்தனர். செருந்தேவி பின்னர் கோவிலை
கட்டினார். மற்ற கேரள ஆலயங்கள் போல அல்லாமல் இந்த ஆலயத்தில்
வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன என்பது சிறப்பு.
ஆலய முகப்பு
இனி பெருமாளுக்கு
திருவாழ் மார்பன் என்னும் திருநாமம் எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் காணலாமா? பல மலைநாட்டு திவ்ய தேசங்களின் ஐதீகங்கள் ஏகாதசி விரத மகிமையை
பகர்வதைப் போலவே இந்த திவ்யதேசத்தின் ஐதீகமும் அமைந்துள்ளது. சங்கரமங்கலத்தம்மை
என்றொரு பதிவிரதை தன் கணவனுக்கு பணிவிடைகள் செய்த பின் புஷ்ப தோட்டம் உண்டாக்கி,
மலர் மாலைகள் தொடுத்து பெருமாளுக்கு சமர்பித்து வந்தார். அவருக்கு பிள்ளை பேறு இல்லை என்னும் ஒரு பெரிய குறை
இருந்தது. பின்னர் இவர் பெரியவர்களிடம் வேண்ட அவர்களும், எவ்வாறு அதிதி ஏகாதசி விரதம் அனுஷ்டித்து பெருமாளையே
மகனாக பெற்றாள் அது போலவே நீயும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து வர புத்திர பாக்கியம் கிட்டும் என்று அருளினர்.
சங்கரமங்கலத்தம்மையும்
அவ்வாறே ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்தாள். விரதம் முடித்து பாரணையின் போது
ஒரு பிரம்மச்சாரிக்கு உணவு அளித்த பின்னரே தான் உணவு உண்ணும் வழக்கத்தை
கொண்டிருந்தார். அதே சமயம் தோலகாசுரன் என்ற அசுரனும் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு
துன்பம் விளைவித்து வந்தான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல அம்மைக்கு அருளவும்,
அசுரனுக்கு முடிவு கட்டவும் முடிவு செய்த பெருமாள் ஒரு துவாதசி தினத்தன்று ஒரு
பிரம்மச்சாரி கோலத்தில் அம்மையின் இல்லத்திற்கு எழுந்தருளினார்.
அம்மையும் தன்
இல்லத்திற்கு வந்த அதிதியை இன்முகத்துடன் வரவேற்று உணவு உண்ணுமாறு வேண்டினாள்.
அதற்கு அந்த பிரம்மச்சாரி தான் போய்
முதலில் நீராடி விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். வந்திருப்பது
யார் என்று அறியாமல் அம்மையும் அசுரனிடம்
கவனமாக இருந்து விரைவில் நீராடி வருமாறு அறிவுரை கூறி அனுப்பினாள். வெளியே சென்ற பெருமாள் தனது சுதர்சன
சக்கரத்தினை ஏவினார், சுதர்சனமும்
தோலகாசுரனுடைய தலை, கை, கால்களை துண்டித்து பின் ஒரு தீர்த்தத்தில்
தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு பெருமாளின் திருக்கரத்திற்கு வந்து சேர்ந்தது.
பின்னர் பிரம்மச்சாரி சங்கரமங்கலத்தம்மையின் இல்லத்திற்கு எழுந்தருளி தோலகாசுரன்
மாண்டான் என்றார். இந்த பிரம்மச்சாரி யார் என்று சங்கரமங்கலத்தம்மை உற்று நோக்க
மான் தோலால் தனது மார்பை பிரம்மச்சாரி
மறைத்திருந்தாலும் அந்த திருமார்பில் அகலகில்லேன் இறையும் என்று உறையும்
பிராட்டியை அம்மை கண்டார். வந்திருப்பது
திருவாழ்மார்பனே என்பதை உணர்ந்த அம்மை
அவரை சரணடைந்தாள். பெருமாளும் அவளுக்கு வைகுண்ட பிராப்தி அளித்தார். பெருமாளும் திருவாழ்மார்பன் என்னும்
திருநாமம் பெற்றார். இன்றும்
பெருமாளுக்கு நைய்வேத்யம் செய்வதற்கு முன்னால் அன்று சங்கரமங்கலத்தம்மை பிரம்மச்சாரியாக வந்த பெருமாளுக்குப் படைத்தது போல ஒரு பிராம்மணருக்கு கமுகு இலையில்
உப்பு மாங்காய்
ததியோன்னம் படைக்கின்றனர்.
தோலாசுரனை துண்டாடிய சுதர்சனருக்கும் ஒரு தனிச் சன்னதி உள்ளது.
தோலாசுரனை துண்டாடிய சுதர்சனருக்கும் ஒரு தனிச் சன்னதி உள்ளது.
இத்தலத்தின் இன்னொரு
சுவையான வரலாறு கண்டாகர்ணன் முக்தி பெற்ற வரலாறு ஆகும். கண்டா கர்ணன் தீவிர சிவ
பக்தன், குபேரனின் பரிசரகன், தன் காதுகளில் சிவநாமத்தை தவிர வேறு எந்தச் சப்தமும்
விழக்கூடாது என்பதற்காக காதுகளில் மணியை மாட்டிக்கொண்டு திரிந்தான். வேறு சப்தம்
கேட்கும் போது அந்த மணியை ஆட்டிக்கொள்வான். அவன் சிவபெருமானிடம் தனக்கு முக்தி
வேண்டும் என்று வேண்டிய போது சிவபெருமானும் முக்தியை ஜனார்த்தனனே வழங்க முடியும்
எனவே நீ திருவல்லவாழ் சென்று
தவம் செய் என்று பணித்தார். அவனும் அவ்வாறே இத்தலம் வந்து தவம் செய்து முக்தியடைந்தான்.
திருமங்கையாழ்வார்
இத்தலத்தை 10
பாசுரங்கள் கொண்ட பதிகத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது ஒரு சிறப்பு. அதில்
ஒரு பாசுரம்
உருவின் ஆர்பிறவி சேர்
ஊன்பொதி அரம்பு தோல் குரம்பையுள் புக்கு
அருவி நோய் செய்து இன்று
ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்
திருவின் ஆர வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா
வல்லை ஆய் மருவு நெஞ்சே.(பெ.தி 9-7-6)
பொருள்: நெஞ்சே! சூட்சும சரீரத்தோடு கூடியிருந்து பிறந்து, மாமிசத்தைப்
பொதிந்து கொண்டு கிடக்கின்ற நரம்பும் தோலுமாகிற குடிசையின் (மனித உடல்) உள்ளே
ஐம்பொறிகளானவை புகுந்து துன்புறுத்தி வருத்திக் கொண்டு குடியிருப்பதற்கு நீ
பயந்தாய் என்றால், ஞானச்செல்வம் நிறைந்த நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும்,
ஐந்து அக்னிகளையும், ஐந்து வேள்விகளையும் பொருந்தி இருப்பவர்கள் வாழும்
திருவல்லவாழ் என்னும் திருப்பதியை அடைவாயாக என்று பல்லாண்டு பாடிய இந்த
திருவல்லவாழ் திவ்வியதேசத்தின்
மூலவர் : ஸ்ரீவல்லபன்,
கோலப்பிரான், திருவாழ் மார்பன், திருவல்லபன்
தாயார் :
செல்வத்திருக்கொழுந்து நாச்சியார்.
வாஸ்தல்யவல்லி
தீர்த்தம்: பம்பை,
கண்டா கர்ண தீர்த்தம் (சக்ர தீர்த்தம்)
விமானம் : சதுரங்க
விமானம்.
நம்மாழ்வார் பராங்குச
நாயகியாக, சேமங்கொள் தென்னகர் திருவல்லாவாழ் திருவாழ்மார்பனிடம் சரணாகதி
அடையும் பாவத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
பெரிய ஆலயம் மற்ற
ஆலயங்களில் இருந்து சிறிது வித்தியாசமாக
கோவிலுக்கு முன்னாள் ஒரு கொடி மரம். ஒரு முன்
மண்டபம், அம்மண்டபத்தை அழகிய ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.
தசாவதார ஓவியங்களும், கதகளி சிற்பங்களும்
கூரையில் ஆயிரம் இதழ் தாமரை சுதை சிற்பமும் மிகவும் அருமையாக அமைத்துள்ளனர். இத்தலத்தின் சிறப்பு
வழிபாடு கதகளி பூஜை ஆகும். குழந்தை
பாக்கியம் வேண்டுபவர்கள் தினந்தோறும் கதகளி பூஜை செய்கின்றனர். அதற்காகவே இந்த மண்டபம் கட்டியுள்ளார்களாம்.
12 அடி உயர மதில்சுவர்
நான்கு பக்கமும் வாயில்கள் கேரள பாணிக்
கோபுரங்கள், வடக்கு வாயில் எப்போதும் மூடப்பட்டிருக்கின்றது ரிஷபமாதம் (ஆனி)
உத்திரத்தன்று மட்டுமே திறக்கப்படுகின்றதாம். அன்றைய அருகில் உள்ள ஊர்களான காவில்.
படப்பாடு, ஆலம்துரா ஆகிய மூன்று
ஆலயத்தின் தேவிகள் இவ்வாலயத்திற்கு இந்த
வடக்கு வாசல் வழியாக எழுந்தருளி பெருமாளின் சீர்களை ஏற்றுக்கொண்டு மறு நாள்
திரும்பிச் செல்கின்றனர். விளக்கு
மாடமும் இத்தலத்தில் உள்ளது. பிரதான
நுழைவாயிலின் உச்சியில் திருவாழ்மார்பன் நின்ற கோலத்தில் கருவறையில் சேவை
சாதிப்பது போலவே சுதை சிற்பமாகக்
காட்சியளிக்கிறார். கீழே “ஓம் ஸ்ரீவல்லபாய நம:” என்று மலையாளத்தில் சுதையினால்
அமைத்துள்ளனர்.
முன் மண்டபத்தைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் நிமிர்த்தி வைத்த
நிலையில் சங்கு ஒன்று சுதைச் சிற்பமாகக் காணப்படுகிறது. அந்த சங்கைச் சுற்றி, ‘ஓம்
சங்கபதே நம:, ஓம் விஷ்ணுபதே நம: ’ என்று
மலையாளத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தப் பகுதியின் முன் மண்டபத்தில்
திருமால் “அனந்த சயனனாக” எழிலாக சேவைச் சாதிக்கின்றார்.
கருட மடம்
இத்தலத்திற்கே
சிறப்பானது மூன்றடுக்கு கருட மடம் ஆகும்,
தனியாக தங்கக் கவசம் பூண்ட கொடிமரமும் தற்போது உள்ளது. கருட கம்பத்தை செருந்தேவி கனவில் வந்து பெருமாள் கூறியபடி முதலில்
பிரதிஷ்டை செய்தாராம், அதில் பறக்கும் நிலையில்
கருடன் வந்து அமர்ந்ததால் இது கருட
கம்பமாக மாறியது. சில காலத்திற்கு பிறகு இந்த கம்பம் சாய ஆரம்பித்ததாம் பின்னர்
கீழே உள்ள ஆதார மடங்கள் எழுப்பப்பட்டன.
கீழ் மட்டத்தில் அருமையான ஒரு கருடனின் ஓவியம் உள்ளது. ”பொரு சிறை உவந்து புள் ஏறும்” என்று ஆழ்வார் மங்களாசாசனம்
செய்தபடி, கம்பத்தின் உச்சியில் ஒரு
கரத்தை நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டு, ஒரு கரத்தை கீழே வைத்துக்கொண்டு, இரு சிறகுகளையும் விரித்துக் கொண்டு, பெருமாளைத்
தோளில் தாங்கிய நிலையில்
வானத்தைப் பார்த்து பறக்கத் தயாராக உள்ள கருடனின் சிலை அருமையாக அமைந்துள்ளது.
காலை சூரிய ஒளியில் தங்கத்தில் மின்னும் கருடாழ்வாரை சேவிப்பதே ஒரு அருமையான
அனுபவம். கருட கம்பத்திற்கு சிறிது முன்னே 60 அடி உயர புதுக் கொடி மரம் உள்ளது,
கொடி மரத்திற்கு தங்கக் கவசம் சார்த்தியுள்ளனர், பள பளவென்று அதுவும் மின்னுகின்றது.
கொடிமரத்தை அடுத்து மிகப் பெரிய
பலிபீடம். அருகே துலாபாரம் காணிக்கைப்
பகுதி முன் மண்டபத்தின் அருகே
இவ்வாலயத்திற்கு சேவை செய்த ஒரு யானையின்
ஆளுயர படத்தை வைத்துள்ளனர்.
வெளி பிரகாரத்தை வலம்
வரும் போது பின் பக்கம் யானையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். மூன்று கற்களை வடக்குப்
பிரகாரத்தில் காணலாம் ரிஷிகள் பேசிக் கொண்டிருக்கிறனர் என்று கூறினார்கள். வழக்கம் போல் கணபதி, சாஸ்தா, பகவதி
சன்னதிகளுடன் வராஹ மூர்த்தி சன்னதிகளுடன்,
மேற்கூரையில்லாத ‘குறையப்ப
சாமி’ அருளும் சன்னதியும் அமைந்துள்ளது. அது என்ன குறையப்ப
சாமி? பக்தர்களின் குறைகளை எல்லாம் களையச் சொல்லி திருவாழ்மார்பனுக்கு சிபாரிசு
செய்பவராம்!, மற்றும் யக்ஷிகள், வடக்கும் தேவர், தக்ஷிணாமூர்த்தி சன்னதிகளும் உள்ளன.
வட்ட வடிவ ஸ்ரீகோவில்
அதில் பாவை விளக்குகள் எழிலாக தொங்குகின்றன. நமஸ்கார மண்டபத்தின் கூரையின் உள் பக்கத்தில்
அருமையாக நவக்கிரங்களின் மரச்சிற்பங்களைக்
காணலாம். பெருமாள் சதுர்புஜங்களுடன் 5அடி
உயரத்தில் மேற்திருக்கரங்களில் பிரயோக சக்கரம், சங்கம் தாங்கி கீழ்
வலத்திருக்கரத்தில் பத்மம், இடதிருக்கரம்
கடி ஹஸ்தமாக, கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்ற கோலத்தில் எழிலாக சேவை சாதிக்கின்றார்.
அருகில் சென்று சேவித்தால் திருமுகத்தையும், தூரத்தில் இருந்து சேவித்தால்
திருவடிகளையும் சேவிக்கும் படியான அற்புதமான
அமைப்பு எழிலாக சேவை சாதிக்கின்றார் பெருமாள். தாயார் அகலகில்லேன் இறையும்
என்று திருமார்பிலேயே இருப்பதால் அவளது அழகும் பெருமாளுக்கு சேர்ந்து பேரழகனாக
சேவை சாதிக்கின்றார்.
பூஜா விவரம்
( நன்றி: துளசியம்மா)
மார்கழி திருவாதிரை
மற்றும் சித்திரை விஷு அன்று பெருமாளுடைய மார்பு தரிசனம் மிகவும் விசேஷம் அன்றைய
தோலாகாசுரனுடன் பெருமாள் போரிட்ட மான் தோலுடன் வேடன் வடிவத்தில் திவ்யமாகச்
சேவிக்கலாம். ஸ்ரீகோவிலின் முன்பக்கம்
பித்தளைக் கவசம் சார்த்தியுள்ளனர். கருவறை வாயிலின் ஒரு பக்கம் சங்கமும் ஒரு
பக்கம் சக்கரமும் எழிலாக அமைத்துள்ளனர். கருவறைச் சுவற்றில் விஷ்ணுவின் பல கோலங்களும், கிருஷ்ணனின் லீலைகளும்
ஓவியங்களாக மிளிர்கின்றன. அடியோங்கள் சென்ற சமயம் பெருமாளின் திருமஞ்சனம்
சேவிக்கும் பாக்கியம் கிட்டியது, பூஜையின்
ஓர் அங்கமாக மஹாவிஷ்ணுவின் புகழை மேளதாளத்துடன் சிலர் பாடிக்கொண்டிருந்தனர்.
ஸ்ரீகோவிலின் பின்புறம் தோலகாசுரனை வீழ்த்திய சுதர்சனாழ்வாருக்கு தனி சன்னதியுள்ளது.
இச்சன்னதியில் சந்தனத்துடன் விபூதிப் பிரசாதமும் தருகின்றனர். இந்தச் சுற்றில் விளக்கு ஏந்திய பாவைச் சிற்பங்களை எழிலாக அமைத்துள்ளனர்.
சதுரங்க விமானம்
தினசரி பூஜையில் ஆறு
காலங்களில் முதல் இரண்டு காலங்களில் பிரம்மச்சாரியாகவும், அடுத்த இரண்டு
காலங்களில் கிருஹஸ்தராகவும், நிறை இரண்டு காலங்களில் காவி முண்டு துளசி மாலையுடன்
சந்நியாசியாகவும் வணங்கப்படுகிறார்.
வியாசரும், துர்வாசரும் வந்து தங்கி பெருமாளை வழிபட்டிருக்கிறார்கள். இவர்களில்
துர்வாசர் பிரதிஷ்டை செய்த மூலவர் திருவாழ்மார்பன் என்கிறார்கள். இரவு பள்ளியறை பூஜைக்குப் பிறகு இன்றும் துர்வாசர் வந்து பூஜை செய்கின்றார் என்பது
ஐதீகம், சங்க நாதம் மேள நாதம் கேட்கின்றதாம்.
துர்வாசர் பெருமாளுக்கு பன்னிரண்டாயிரம் வாழைப் பழங்கள் சமர்ப்பித்து
வழிபட்டாராம். எனவே ஸ்ரீவல்லபனுக்கு பந்தீராயிரம் என்ற வழிபாடு பக்தர்களால்
சிறப்பாக செய்யப்படுகின்றது. அதாவது 12000 வாழைக்காய்களை குலை
குலையாக வாங்கி வேள்வி செய்து அந்த வேள்வியில் பழுக்க வைத்து மேளதாளத்துடன் புதுக்கூடைகளில் சுமந்து வந்து
பெருமாளுக்கு சமர்ப்பிக்கின்றனர். பாதிப்பழம் நிவேதனம் ஆகும் மீதி பிரசாதமாக
விநியோகிக்கப்படுகின்றது.
மாசி மாதத்தில் பிரம்மோற்சவத்தின்
போது ஒன்பதாம் திருநாள் அன்று, தோலகாசுரனை பெருமாள் அன்று சம்ஹாரம் செய்ததை குறிக்கும் வகையில்
பள்ளி வேட்டை உற்சவமும், பத்தாம் திருநாள் பூச நட்சத்திரத்தன்று இரத்தம் தோய்ந்த சுதர்சன சக்கரத்தை கழுவும் ஆராட்டு
உற்சவமும் மிக சிறப்பாக நடைபெறுகின்றது. பெருமாள் அன்று தாளம் போட
வைக்கும் செண்டை மேளத்துடன் திரும்பி வருகின்றார்.
கழல்வளைபூரிப்பயாம்கண்டு கைத்தொழக்கூடுங்கொலோ?
குழலென்னயாழுமென்னக் குளிர்சோலையுள்தேனருந்தி
மழலைவரிவண்டுகளிசைபாடும் திருவல்லவாழ்
சுழலின்மலிசக்கரப்பெருமானது தொல்லருளே (தி.வா 5-9-9)
பொருள்: திருவல்லவாழ் என்னும் திருத்தலத்தில்,
இளமையான வண்டுகள் குளிர்ந்த சோலையில்
தேனைக் குடித்துக் குழலைப் போலவும் யாழைப் போலவும், இசைக்கின்றன. இத்தலத்தில்
எழுந்தருளியிருக்கின்ற சுழலின் மலி
“சக்கரப்பெருமானுடைய தொல்” அருளால், சுழலுகின்ற வளையல்கள் தங்கும்படியாக நாம்
கண்டு தொழுவதற்குக் கூடுமோ? என்று
பராகுங்ச நாயகியாக எம்பெருமானின்
கிருபையை வேண்டுகிறார் நம்மாழ்வார்.
பாஞ்சஜ்ன்யம்
ஆழ்வார் இத்தலத்திற்கு வந்த சமயம் மிகவும் மெலிந்து
விட்டதால் ஊருக்குள் வரமுடியாமல் வெளியில் உள்ள சோலையில் இருந்து கொண்டே நாயகி பாவத்தில் பெருமாளிடம் சரணாகதி அடைகின்றார். பெருமாளும் அதை ஏற்றுக்கொண்டு ஆழ்வாருக்கு அருள் பாலிக்கின்றார். எனவே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில் “மெலிவிலும் சேமங்கொள்விக்கும் கிருபை தென்நகரிலே நித்யம்” என்று அருளியுள்ளார். ஆகவே பெருமாள் ஆழ்வாருக்கு
இத்தலத்தில் காட்டிய கல்யாண குணம் கிருபையாகும்.
நம்மாழ்வார் முதலில் நாங்குனேரியில் தெய்வநாயகனிடம்
மோட்சம் வேண்டி சரணாகதி செய்கின்றார், அடுத்து திருக்குடந்தையில்
ஆராவமுதனிடம் சரணாகதி செய்கின்றார் மூன்றாவதாக திருவல்லவாழில் திருவாழ்மார்பனிடம்
சரணாகதி அடைகிறார். எனவே மோக்ஷ நாட்டில்
இது மூன்றாவது தலமாகும்.
அடுத்து விவபாவதாரமான கிருஷ்ணரிடம் சரணமடைகின்றார். நிறைவாக
திருமலையப்பனிடம் ”அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா!” என்று தாயாரை முன்னிட்டு சரணமடைய
பெருமாள் அவரது சரணாகதியை ஏற்று அருள் பாலிக்கின்றார் என்று பெரியோர்கள் கூறுவர்.
தந்தைதாய்மக்களே சுற்றமென்றுஉற்றவர்பற்றிநின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ
பழியெனக்கருதினாயேல்
அந்தமாய் ஆதியாய் ஆதிக்குமாதியாய் ஆயனாய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவு
நெஞ்சே! (பெ.தி 9-7-1)
பொருள்: மனமே! தந்தை என்றும், தாய் என்றும்,
பிள்ளைகளென்றும், சுற்றங்களென்றும் மற்றும் உறவினர்களென்றும்,
பற்றிக்கொண்டிருக்கின்ற சம்சார பந்தம் வாய்ந்த வாழ்வை நீ வெறுத்து இந்த வாழ்வு
பழியானது என்று நினைப்பாயாகில், பிரளயத்தில் முடிவுக்கு இடமாயும், உற்பத்திக்கு
இடமாயும், காரணாவஸ்தையிலுள்ள உயிர்களுக்குத் தலைவனாயும், கோபால கிருஷ்ணனாயும்
அவதரித்துள்ளவனான எம்பெருமானுடைய திருவல்லவாழ்
என்னும் திருப்பதியை வாயால் மொழிவதுடன் வலிமையாக நெஞ்சினாலும்
பொருந்துவாயாக என்று தன்
நெஞ்சுக்கு அறிவுறுத்தும் விதமாக
திருமங்கையாழ்வார் பத்துப்பாடல்கள் கொண்ட ஒரு முழுப்பதிகத்தால்
இந்த மலை நாட்டு திவ்விய தேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது ஒரு தனி
சிறப்பு ஆகும்.
உகந்தார்க்கு
எஞ்ஞான்றும் உளன் ஆய், உகவாது
இகந்தார்க்கு
எஞ்ஞான்றும் இலன் ஆய் – திகழ்ந்திட்டு,
அருஅல்ல,
வாழ்உருவம் அல்ல, என நின்றான்
திருவல்ல
வாழ் உறையும் தே. ( நூ. தி 66 )
பொருள்: திருவல்லவாழ் என்னும் திருப்பதியில் உறைகின்ற
திருமால் தன்னை விரும்பும் அடியார்களுக்கு எக்காலத்தும் உள்ளவனாகியும், தன்னை
விரும்பாதவர்களுக்கு எக்காலத்தும் இல்லாதவனாகியும், ’அருவப்பொருளும் ஆகான்;
கண்களுக்குப் புலப்படும் உருவப் பொருளும் ஆகான்’ என்று கூறுமாறு இருக்கின்றான்
என்று திவ்வியக்கவி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் தமது நூற்றெட்டு
திருப்பதி அந்தாதியில் கோலப்பிரானைப் பற்றி பாடியுள்ளார்.
“ஸ்ரீவல்லப க்ஷேத்ரே பம்பா நதி
தீரே கண்டாகர்ண புஷ்கரணி தடே, சதுரங்க கோல
விமானச்சாயாயாம் ஸ்திதாய பூர்வாபிமுகாய ஸ்ரீமதே வாத்ஸல்யவல்லி, ப்ரேம வஸுபல்லவித வல்லி
(செல்வத்திருக்கொழுந்து நாச்சியார்) நாயிக சமேத சுந்தராய(கோலப்பிரான்) ஸ்ரீவல்லபாய பரப்ரஹ்மனே நம: என்ற
தியான ஸ்லோகத்தை ஜபித்துக்கொண்டே திருவாழ்மார்பனிடம் சரணாகதி செய்து, பின்னர் நாரதருக்கும் மார்க்கண்டேயருக்கும்
அருளிய கமலநாதனையும் கமலவல்லியையும் சேவிக்கத் திருவண்வண்டூர்
புறப்பட்டோம்.
திவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :
திருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை
திருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்
திருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
மற்ற தலங்களை இங்கே சேவியுங்கள் : திவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :
திருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை
திருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்
திருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு
திருவண்பரிசாரம்
குருவாயூர் கொடுங்கல்லூர் திருஅஞ்சைக்களம் குலசேகரபுரம்
சோட்டாணிக்கரை வர்க்கலா நெய்யாற்றங்கரை திருப்பிரயார்
இரிஞ்ஞாலக்குடா பாயம்மல்
மலை நாட்டு திவ்ய தேச யாத்திரை தொடரும் . . . . . .
3 comments:
ஐயா,
இது போன்ற ஓர் அற்புதமான பயண + திவ்யதேசம் போற்றும், மிக விளக்கமான கட்டுரையை வாசித்ததில்லை. எத்தனை தகவல்கள். ஸ்ரீவல்லபப் பெருமாள் அருள் தங்களுக்கு என்றும் நிறைந்திருக்கப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
பாலா
மிக்க நன்றி
மிக்க நன்றி பாலா ஐயா. இப்பதிவ்களை இட்டதன் பலனை பெற்றேன். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
Post a Comment