Monday, February 25, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -7


  1. நான்காம் திருநாள் மாலை நாக வாகன சேவை -1

குழலூதும் கண்ணனாக சிவசுப்பிரமணிய சுவாமி 

இத்திருக்கோவிலை வலம் வரும் போது ஒன்றை கவனிக்கலாம், பல கல்வெட்டுகளில் அன்பர்கள் செய்த திருப்பணிகளைப் பற்றியும் அவர்கள் கொடுத்த நன் கொடைகளைப் பற்றியும் இவை கூறுகின்றன.  அநேகமாக அனைத்து திருவிழாக்களுக்கும் யாராது ஒருவர் உபயம் செய்து அதை குறிப்பிட்டும் வைத்துள்ளனர்.

புல்லினால் ஆறு கோடி
     புது மண்ணால் பத்துக் கோடி
செல்லுமாம் ஞாலம் தன்னில்
     செங்கல்லால் நூறுகோடி
அல்லியங்கோதை பாகன்
     ஆலயம் மடாலயங்கள்
கல்லினார் செய்த பேர்கள்
     கயிலை விட்டு அகலார் தாமே.
என்ற படி நம் இறைவனுக்கு எப்படியும் சேவை செய்ய வேண்டுமென்று செங்குந்த சபையினரும், பக்தர்களும் சேர்ந்து சுமார் 25  லட்சத்தில் 11.5 அடி உயரம் கொண்ட வெள்ளி ரதம் செய்து முருகனுக்கு அர்பணித்துள்ளனர்.


நான்காம் நாள் காலை வெள்ளித் தொட்டி உற்சவம்

ஆலயமெங்கும்  திருப்புகழ், குமாரஸ்தவம், கந்தரலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் சஷ்டி கவசம், தெய்வ மணிமாலை, திருமுறுகாற்றுப்படை,    கந்தர் சரணப் பத்து, சண்முக கவசம், அபிராமி அந்தாதி, துக்க நிவாரணி அஷ்டகம், போற்றித் திருத்தாண்டகம்,  சர்வ தேவதா ஸ்துதிகள், அனுமன் துதி, முப்பெரும் தேவியர் துதி என்று பல்வேறு ஸ்தோத்திரங்கள் படிக்கக் கிடைக்கின்றன.  தினமும் நான்கு கால பூஜைகள் கிரமமாகவும் சிரத்தையாகவும் நடைபெறுகின்றன.

சமயம் கிட்டும் போது
நாடிய வானோர்க்கென்றும்
     நண்ணுதல் அரியாய் போற்றி
பாடிய பக்தர்க்கென்றும்
     பரிந்தருள் மூர்த்தி போற்றி
நீடிய செல்வம் கல்வி
     நித்ய மங்களங்கள் யாவும்
கூடிய செங்குந்தக் கோட்டம்
     சிவசுப்பிரமணியனே போற்றி போற்றி
என்று வணங்க வாருங்கள் மேற்கு சைதாப்பேட்டை.

சிவசுப்பிரமணிய சுவாமியின் மாசி மகப் பெருவிழாவின் நான்காம் திருநாள் காலை வெள்ளித்தொட்டி உற்சவம். மாலை நாக வாகனம். நாக வாகனத்தில் முருகர் கிருஷ்ணன் கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். ஒவ்வோரு வருடமும் ஒரு வித அலங்காரம் இப்பதிவில்  நின்ற கோல குழலூதும் கிருஷ்ணனாக -  வேணு கோபாலனாக சிவசுப்பிரமணிய சுவாமி அருள் பாலிக்கும் அழகை காணுங்கள் அன்பர்களே.  





 நாகம்  என்பதால் முருகனுக்கு விஷ்ணு ரூப  அலங்காரம் செய்கின்றனர் இவ்வாலயத்தில். ஒயிலாக  தேவியர் இருவரும்  சாய்ந்த கோலத்தில்   குழலூதும்  வேணு கோபாலனாக தரிசனம் தரும் அழகான  கோலத்தை பாருங்கள்.


இனி ஒரு வருடம் என்ன  அலங்காரம் என்பதை அடுத்த  பதிவில் காணுங்கள் அன்பர்களே. 


2 comments:

Test said...

'நாகம் என்பதால் முருகனுக்கு விஷ்ணு ரூப அலங்காரம் செய்கின்றனர் இவ்வாலயத்தில்" :)
அழகன் முருகனுக்கு அருமையான அலங்காரம் ஐயா.

S.Muruganandam said...

இந்த அழகில் சொக்கித்தான் வருடா வருடம் திருவிழாக்களின் போது இவ்வாலயத்திற்கு முருகனை தரிசிக்க செல்கின்றேன் ஐயா.