Tuesday, February 19, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -2

முதலாம் திருநாள் காலை கொடியேற்றம்


சிவசுப்பிரமணிய சுவாமி 


"கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்" என்றால் அவ்வைபாட்டி ஏனென்றால் திருக்கோவில்கள்  முழு  கிராமத்திற்கும் ஒரு பாதுகாப்பு அரணாக  விளங்கின உயரமான கோபுரத்தில் உள்ள கலசங்கள் மின்னலில் இருந்து கிராமத்தை காப்பாற்றுகின்றது.  அதில் இட்டு வைத்திருக்கும் வரகு முதலிய தானியங்கள் பஞ்ச காலத்தில் விதை தானியமாகவும் பயன்பட்டன. அதுவுமல்லாமல் கோவில் என்பது பலருக்கும்   வேலை வாய்ப்பை அளிக்கும் நிலையங்களாவே அன்றும் விளங்கின, இன்றும் விளங்குகின்றன.



வள்ளி நாயகி  தேவ சேனா நாயகி 
உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி 


அது போலவே திருக்கோவில்கள் கல்வி மையமாகவும், கலைகளின் இருப்பிடமாகவும், அரங்கேற்றம் நடைபெறும்  இடமாகவும் அறக்கொடைகளால் வறியவர்களுக்கு உணவும், உறையுளும் வழங்கும் ஒரு இடமாகவும் விளங்கி வருகின்றன. ஆகஏ இன்றும் நாம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அந்த் இடத்தில் ஓர் ஆலயத்தை நிறுவி நிர்வகித்து வருகின்றோம். ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்றபடி, இத்திருக்கோவிலின் திருவிழாக்கள் அந்த காலத்தில் விவசாயம் இல்லாத காலத்தில் கிராமத்தினர் அனைவரும் ஒன்றாகக் கூடி இரை வழிபாடு செய்யவும் உதவின.

 கொடி

தர்மமிகு சென்னை என்று வள்ளலார் சுவாமிகளால் பாடப்பட்ட சென்னை மாநகரின் மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் பல பழமையான ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் சில கூத்தாடும் பிள்ளையார், சித்தி புத்தி விநாயகர் என்று முழுமுதற் கடவுள் கணேசருக்கு பல ஆலயங்கள் உள்ளன, சிவபெருமான் இந்திரனுக்கு அருளிய  சொர்ணாம்பாள் உடனுறை காரணீஸ்வரப் பெருமானாகவும், திருமால் அலர்மேல் மங்கை உடனுறை பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாளாகவும், அன்னை கடும்பாடி சின்னம்மனாவும், சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்த முருகபெருமான்  சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உதித்த முருகபெருமான் வள்ளி நாயகி தெய்வநாயகியுடன்  சிவசுப்பிரமணிய சுவாமியாக ஞான வேல் கரங்கொண்டு ஒங்கார ஸ்வரூபமாய்  எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த ஐந்து கோவிகளில் நடு நாயகமாக சிவசுப்பிரமணியர் ஆலயம் அமைந்துள்ளது.  இதல்லாமல் எண்ணற்ற சிறிய கோயில்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. நாம் காணப்போகும் பெருந்திருவிழா சிவசுப்பிரமணிய சுவாமியின் மாசி மாத பெருந்திருவிழாவாகும்.











கொடி மரத்திற்கு அபிஷேகம் 


வாத்தியார் சுப்பிரமணி தெருவில் செங்குந்த கோட்டம் என்னும் இவ்வலயம் அமைந்துள்ளது. சென்னை நகருக்கேற்றார்ப் போல ஒரு உட்பிரகாரத்துடன் கூடிய ஆலயம்தான் இது. கோட்டம் என்றால் கோயில். அதிலும் குன்று தோறாடும் குமரன் மகிழந்து  உரையும் திருக்கோயில்கள் கோட்டம் எனப்படுகின்றன. கந்த புராணத்தை தமிழில் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு அடி எடுத்துக் கொடுத்தவன்  காஞ்சி குமர கோட்ட குமரன், அது போல வள்ளலார் சுவாமிகளை ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தன் உறவு வேண்டும் என்ற பாட வைத்தவன் வடசென்னை  கந்த கோட்ட முருகன். அது போல செங்குந்த மரபினரால் ஸ்தாபிதம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்து வரப்படுகின்ற இக்கோவில் செங்குந்தக் கோட்டம் என்னும் பெயர் பெற்றது.  செங்குந்த முதலியார் என்னும் இவர்கள் சைவத்திற்கு பெரும் தொண்டாற்றியுள்ளனர். காரணீவரர் ஆலயமும் செங்குந்த இனத்தினரின் ஆலயம்தான். இப்பதிவில் முதல்நாள் காலை கொடியேற்றத்தின் சில காட்சிகளை கண்ணுருகின்றீர்கள் அன்பர்களே.


வள்ளி நாயகி                                                                                                                                   தேவ சேனா நாயகி 

வீரபாகு

முதலாம் திருநாள் அன்று காலை நன் முகூர்த்த காலத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி, வள்ளி நாயகி, தேவ சேனா நாயகி, வீரபாகு தேவர் மற்றும் சண்டிகேஸ்வரர். அஸ்திர தேவர்  கொடி மரத்திற்கருகில் எழுந்திருளி கொடியேற்றம் கண்டருளுகின்றனர்.  விக்னேஸ்வர பூஜை முடித்து கொடியேற்றி சகல தேவர்களையும் கொடி மரத்தின் அருகில் வந்து யதாஸ்தானம் கொண்டருளி பெருவிழா முடியும் வரை இருக்குமாறு வேண்திக்கொள்ள அனைவரும்  யதாஸ்தானம் கொள்வதாக ஐதீகம். பின் கொடி மரத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகம் ஆகி, பின்னர் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு கற்பூர ஆரத்தி நடைபெற்று பின் கோவிலுக்கு வெளியே எழுந்தருளி அஸ்தமான கிரி விமானத்தில் கோவிலின் உள்ளே வர முடியாதவர்களுக்கும் காட்சி அளிக்கும் வகையில்  மாட விதி உலா வந்து அருளுகின்றனர் பஞ்ச முர்த்திகள்.     

2 comments:

Test said...

புகைப்படத்திற்கும், சென்னை கோவில்களின் தகவல் களஞ்சியத்திற்கும் நன்றி ஐயா

S.Muruganandam said...

மிக்க ந்ன்றி LOGAN ஐயா,

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!