Sunday, February 24, 2013

செங்குந்த கோட்ட மாசி மக பெருவிழா -6

மூன்றாம் திருநாள் இரவு மேஷ வாகன சேவை 


சிவ சுப்பிரமணிய சுவாமி மூலவர் தேவியருடன் அருள் பாலிக்கின்றார். அதே சமயம் தேவியர் இருவருக்கும் தனி சன்னதிகளும் ஐயனின் உள் பிரகாரத்திலேயே உள்ளது. வள்ளி நாயகியை

காமதேனு வாகனத்தில் வள்ளி நாயகி

மாதவனோர் மாதவனாய் மாதவம் செய்திடலும்
     வனமானாய் வந்தெதிர் மலர் மானை புணரப்
பூதல மங்கையர் உருவாய் அவதரித்து வள்ளிப்
     பொருப்புறையும் பொருப்பர் மணை விருப்பமுடன் வளர்ந்து
தீதகலும் திணை காத்து வேங்கை உருவெடுத்த
     செவ்வேளை அவ்வேளை சேர்ந்திருக்கை கோளும்
காதலுடன் புரிந்திறைவன் வளர் பாகத்தருளும்
     கன்னி எனும் வள்ளி கழல் உன்னி வழுத்திடுவாம்.

வள்ளி அன்னையை வணங்கிப்பின் தெய்வ நாயகி சன்னதிக்கு செல்வதற்கு முன் சுவற்றில் அபிராமி அந்தாதி கல்வெட்டு, அபிராமி அம்பாளின் சுதை சிற்பம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.

இடப்பக்கம் தெய்வ நாயகி சன்னதி   அன்னைக்கு முன்னால் யாணை வாகனம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அன்னையை வளர்த்தது ஐராவதம் என்னும் யாணை தானே.  

காமதேனு வாகனத்தில் தெய்வ நாயகி 
ஞான சக்தியான தேவ சேனாவை
சங்கரி தன் மருமகளை சங்கரி தன் மகளைச்
     சங்கரிக்கும் சங்கரனை மாமன் எனும் தயலை
வெங்கரிதங் பிடியை விண்ணவர் கோன் சுதையை
     விண்ணவர்கள் பணிந்தேத்தும் விண்ணுலகத் தணங்கை
பைங்கழு நீர் விழியாளை பைங்கழுநீர் நிழமே
     படைத்தாளை பைங்கழிநீர் செங்கரம் கொண்டாளை
செங்கமலை தரும் அமுதைக் கந்தர்  இடத்தருளும்
     தெய்வயாணையைத் தொழுது திருவருள் பெற்றிடுவாம்.

இந்த இரு துதிப்பாடலும் தணிகாசல புராணத்தில் இடம் பெற்றது கல்வெட்டுகளாக அன்னையர்களின் சன்னதியின் அருகில் அமைத்துள்ளனர். பள்ளியறையும் இப்பிரகாரத்த்ஹில்தான் அமைந்துள்ளது. கோஷ்டத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு எதிரே துக்க நிவாரணி அஷ்டகம் கல்வெட்டு உள்ளது. இதுவரை இத்திருக்கோவிலை வலம் வந்து வணங்கினோம்.  இனி மூன்றாம் நாள் இரவு மேஷ வாகன சேவை காட்சிகளை இப்பதிவில் காணலாமா அன்பர்களே.

                                              ஆட்டுக்கிடா வாகனத்தில் சிவ சுப்பிரமணிய சுவாமி 

முருகனுக்கு சூரனான மயில் மட்டுமா வாகனம் இல்லை , இல்லை தெய்வாணை அம்மையின் தந்தையான இந்திரன் அளித்த ஐராவதமாம் வெள்ளை யாணையும் திருமுருகனுக்கு ஒரு வாகனம். நாரதர் செய்த ஒரு வேள்வியின் போது மந்திர மாறுதல் காரணமாக ஒரு ஆட்டுக்கிடா தோன்றியது அது விண்ணையும் மண்ணையும் கதி கலங்கச்செய்தது. தேவர்கள் தேவ சேனாபதியாம் முருகனிடம் முறையிட வீரபாகுவை அனுப்பி முருகன் முன் கொண்டு வரச்செய்து அதன் திமிரை அடக்கி வாகனமாக கொண்டார்.  இதன் காரணமாக மேஷமும்( ஆட்டுக்கிடா) முருகனுக்கு உரிய வாகனமாகும்.

சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திம் மூன்றாம் திருநாள் இரவு முருகர் தனக்குரிய ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். உடன் தேவியர் இருவரும் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.      
  






2 comments:

Test said...

நன்றி ஐயா

S.Muruganandam said...

வணக்கம் LOGAN ஐயா.