Saturday, January 30, 2010

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 6

தங்க மயில் வாகன சேவை

முத்துக் குமார சுவாமிக்கு பிரம்மோற்சவம் தை மாதத்தில். தைபூசத்தையொட்டி 20 நாள் நிகழ்ச்சியாக வெகு பிரசித்தியாக நடைபெறுகின்றது. முதல் பத்து நாட்கள் தினமும் காலையும் மாலையும்முத்துக்குமார சுவாமி சர்வ அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் சேவைசாதிக்கின்றார். உடனே வன வள்ளியும் , கஜ வள்ளியும்பல் வேறுவாகனங்களில் சேவை சாதிக்கின்றனர். தைப்பூசத்தன்று இரவு கொடியிறக்கம் அதன் பிறது பத்து நாட்கள் மாலை வேளை உற்சவம் மட்டுமே. தெய்வயாணை மற்றும் வள்ளித்திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது.

மூஷிக வாகனத்தில் முதல்வன் விநாயகர்

மயில் வாகன சேவைக்கு புறப்பாடு கண்டருளும்
முத்துக்குமார சுவாமி

முன் ஒரு பதிவில் எழிலாக முந்திரி மாலையில் தரிசனம் தந்த அழகனை கண்டீர்கள் இன்றைய தினம் என்ன மாலை என்று தெரிகிறதா?

படத்தைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.

ஆம் ஏலக்காய், கிராம்பு, மற்றும் உலர்ந்த திராட்சை ஆகிய மூன்றும் கலந்து இந்த மாலை அணிந்து வாசனைப்பொருட்கள் வியாபாரிகளுக்கும் நமக்கும் அருள் பாலிக்கின்றார் கந்த கோட்டம் முத்துக் குமார சுவாமி.


முத்துக்குமார சுவாமி பின்னழகு

எல்லா பிரம்மோற்சவங்களிலும் ஐந்தாம் திருநாள் இரவு மிகவும் சிறப்பானது அன்றைய தினம் சிவாலயங்களில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். மற்றும் அன்றைய தினம் தான் பஞ்ச மூர்த்திகள் தங்கள் தங்கள் வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். மேலே தாங்கள் பார்த்த விநாயகரின் மூஷிக வாகன சேவையும் அடுத்து காணும் சந்திரசேகரின் விருஷப வாகன சேவையும் இவ்வாறு அமைந்தவையே. சிறப்பு நாள் என்பதால் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்திருக்கின்றனர் ஆகவே இன்றைய தினம் முருகரின் பின்னழகையும் தரிசனம் செய்கின்றிர்கள்.

சந்திர சேகரர் விருஷப வாகன சேவை

தைப்பூச பிரம்மோற்சவத்தின் போது இவ்வாறு அருள் வழங்குகின்றார் முத்துக்குமார சுவாமி. முதல் நாள் காலை கொடியேற்றம், சவுடல் விமான சேவை. மாலை கற்பக விருக்ஷ சேவை. இரண்டாம் நாள் காலை நூதன இரட்டைத்தலை சிம்ம வாகன சேவை, மாலை தங்க முலாம் சிம்ம வாகன சேவை. மூன்றாம் நாள் காலை புருஷா மிருக வாகனத்தில் பாரி உலா சேவை, மாலை தங்க முலாம் சூரபத்ம வாகன சேவை. நான்காம் நாள் காலை மேஷ வாகன சேவை, மாலை தங்க முலாம் நாக வாகன சேவை, ஐந்தாம் நாள் காலை தேவேந்திர மயில் வாகன சேவை, மாலை பஞ்ச மூர்த்திகளுடன் தங்க மயில் வாகன சேவை, பஞ்ச மூர்த்திகள் கற்பூர கிளை தீபாராதானை. ஆறாம் நாள் காலை சிவிகையில் மோகினி திருக்கோலத்தில் சூர்ணோற்சவம், மாலை தங்க முலாம் யாணை வாகன சேவை.






ஏழாம் நாள்

ஆகாத தீவினைகள் அத்தனையும் போக்கி அன்பர்க்கு

ஏகாந்த சேவை நல்க இன்றுதான் எண்ணினையோ!

நாகாதிபன் விரும்பும் நல்ல சென்னை மாநகரில்

žகாழி அந்தணனை தேரின் மிசை கண்டேனே!

என்று வண்ண சரபம் தண்டபாணி சுவாமி பாடிய சிறப்புடைய இரதோற்சவம் . (கந்த சுவாமி மயில் மீதும் தேரின் மீதும் தண்டபாணி சுவாமிக்கு காட்சி தந்துள்ளார்.) மாலை சிறப்பு அலங்காரத்துடன் முத்துக்குமார சுவாமி திருக்கோவிலுக்கு புறப்பாடும் பின் அபிஷேகமும் நடைபெறுகின்றது. எட்டாம் நாள் சூளையில் பார் வேட்டைக்கு போகுதல் மாலை குதிரை வாகனத்தில் பார் வேட்டை. ஒன்பதாம் நாள் காலை பதினாறு கால் விமான சேவை இரவு சண்முகசாமி திருக்கல்யாணம் மற்றும் கயிலாய பர்வத ரதோற்சவம், பிரம்மன் தேர் சாரதியாக திகழ, சிவபெருமானும் , அம்பிகையும் இரு புறமும் உடன் வர சண்முகர் கைலாய பர்வத இரதத்தில் வீதி உலா வருகிறார். பத்தாம் நாள் தைப்பூசத்தன்று பழனியாண்டவர் விமானத்திலும், முத்துகுமார சுவாமி தங்க தொட்டியிலும் சேவை சாதிக்க்கின்றனர். மாலை துவஜாரோகணம்.



தங்க மயில் வாகனத்தில் அருள் பாலிக்கும்
முத்துகுமார சுவாமி




கான மயிலின் பின்னழகு


பதினோறாம் நாள் உற்சவர் தங்கத் தொட்டியில் எழுந்தருளி முத்தியாலுப்பேட்டை கச்சாலீஸ்வரர் ஆலயத்திற்கு காலை எழுந்தருளும் சுவாமி மாலை தெப்பல் உற்சவம் கண்டருளி திரும்பி வருகிறார். பன்னிரெண்டாம் நாள் மாலை பழனியாண்டவருக்கு உபநயன உற்சவம், நூதன 16 கால் ஸ்கந்த கிரி விமானத்திலும், உற்சவர் இரத்தின செட்டியார் பாரியாள் அபரஞ்சி அம்மாள் கண்ணாடி பல்லக்கு சேவை. பதிமூன்றாம் நாள் மாலை , தேவேந்திர போஹம், நு‘தன மங்களகிரி விமானத்தில் தேவ சேனாபதியாக பட்டாபிஷேகம், பதினான்காம் நாள் மாலை தெய்வயானை திருக்கல்யாணம் பின் வெள்ளை யானை வாகனத்தில் புறப்பாடு, இவ்வாகனத்தின் தும்பிக்கை, காதுகள் மற்றும் வால் ஆடுவது போல் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பதினைந்தாம் நாள் காலை வெள்ளியங்கிரி விமானத்தில் இராயபுரம் எழுந்தருளுகின்றார் உற்சவர் . மாலை வேடர் பறி உற்சவம். பதினாறாம் நாள் வள்ளியம்மை திருக்கல்யாணம், மயில் வாகன சேவை மற்றும் திருவூடல் உற்சவம். பதினேழாம் நாள் காலை கந்தப்பொடி உற்சவம், மாலை தவன உற்சவம். பதினெட்டாம் நாள் மாலை ஆறுமுக சுவாமி பவழக்கால் விமானத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு. பத்தொன்பதாம் நாள் மாலை உற்சவருக்கு உற்சவ சாந்தி அபிஷேகம் . விடாயாற்றி முடிந்து சங்காபிஷேகம் கண்டருளி நூதன சலவைக் கற்கள் அமைந்துள்ள ஆஸ்தானத்திற்கு உற்சவர் எழுந்தருளுகின்றார். மறு நாள் விஸ்வரூப தரிசனம், மதியம் உற்சவர் ரகஸ்ய அபிஷேகம் என வெகு சிறப்பாக வேத பராயணம், தேவார, திருவாசக, திருப்புகழ், தெய்வ மணி மாலை பாராயணத்துடன் வெகு சிறப்பாக தைப்பூச பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.



பச்சை மயில் வாகனத்தில் வள்ளி
தெய்வாணை அம்மையர்


வெளிப்பந்தலில் பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு நாள் வாகன சேவையும் ஒவியமாக வரையப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளன. நேரில் பார்க்க முடியாதவர்களும் எம்பெருமானின் பல்வேறு வாகன சேவையை காணவேண்டும் என்பதாலோ இவ்வாறு அமைத்துள்ளனர். பிரம்மோற்சவ காலங்களில் வெளியே பந்தலில் மாட்டப்படும் இந்த தஞ்சாவூர் சிற்பங்கள் மற்ற காலங்களில் குளக்கரை மண்டபத்தில் மாட்டப்பட்டுள்ளன.

இப்பதிவில் தாங்கள் காணும் படங்கள் எல்லாம் ஐந்தாம் திருநாள் மாலை உற்சவத்தின் காட்சிகள் ஆகும். பஞ்ச முர்த்திகளுடன் தங்க மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் தரிசனம் தருகின்றார். முத்துக்குமார சுவாமி. இந்த வருடம் ஐந்தாம் திருநாள் தைக்கிருத்தி்கையுடன் சேர்ந்து வந்தது மிகவும் சிறப்பாக அமைந்தது. அன்பர்கள் அனைவருக்கும் தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்.

தைப்பூசத் திருநாளில் தமிழ்க்கடவுள் தரிசனம்


பத்து மலை முருகன் தரிசனம்

அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவசகதியின் அருமைப் புதல்வன் அழகன் முருகனுக்கு உரிய மிக முக்கிய திருநாள் தைப்பூசம். கடல் கடந்த மலேசியாவில் தைப்பூசம் மிகசிறப்பாக கொண்டாடப்பட்டு, தைப்பூசம் என்றால் அது பத்துமலை முருகன் கொண்டாட்டம் என்று வான்(உலக)புகழ் கொண்டூ விட்ட இந்த தைப்பூச நன்னாளில் அந்த கந்தப்பெருமானின் வாகனமான மயில் வாகன தரிசனத்தை கண்டு அவன் அருள் பெற்று ஆனந்த அடைவோமாக. அப்படியே பத்து மலை முருகனின் தரிசனமும் பெறலாம்.


32 அடி உயர முருகப்பெருமான் சிலை

முருகன் பின்னழகு

முருகனுக்கு பூசப்பட்டுள்ள வர்ணம் ( பெயிண்ட்) இப்பகுதிகளில் புத்தர் சிலைகளுக்கு பூசப்படும் சிறப்பு வர்ணம் ஆகும்

பத்து மலையில் உள்ளே குகையில் திருமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. மலைக்கு ஏறி செல்ல உதவும் படிகள்.

குகையின் நுழைவு வாயில்

உள்ளே பல்வேறு திருமுருகன் ஆலயங்கள் மற்றும் முருகனின் திருவிளையாடகள் சுதை சிற்பங்களாக மைத்திருக்கின்றனர்.

தரிசனம் முடித்து திரும்பி வரும் போது காணும் காட்சி.

மீனாக்ஷி திருக்கல்யாண சுதை சிற்பங்கள்




முருகப்பெருமானின் அருளினாலே அவரை தரிசிக்கும் பாக்கியக் கிடைத்தது அப்போது எடுத்த படங்கள் இவை. அன்பர்கள் அனைவருக்கும் தைப்பூச நன்னாள் வாழ்த்துக்கள்.

Friday, January 29, 2010

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 5

முத்துக்குமார சுவாமி நாகவாகன தரிசனம்



பூவே மணமே சரணம் சரணம்

பொருளே அருளே சரணம் சரணம்

கோவே குகனே சரணம் சரணம்
குருவே திருவே சரணம் சரணம்

தேவே தெளிவே சரணம் சரணம்
சிவசண் முகனே சரணம் சரணம்

காவே தருவே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்



நாள் தோறும் நான்கு கால பூஜை நடைபெறும் இத்திருக்கோவிலில் வார உற்சவமாக வெள்ளிக்கிழமையும், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், ஸ்கந்த , சஷ்டிபுத்தாண்டு, தைப்பூசம், மாசி மகம், மஹா சிவராத்திரி, ஆடிக் கிருத்திகை ஆகியநாட்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சைவத்தலமானதால் சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் முருகனுக்கும் உரிய அனைத்து பண்டிகைகளும்கொண்டாடப்படுகின்றன இத்தலத்தில் , சைவ குரவர்கள் நால்வருக்கும், அருணகிரி நாதருக்கும், வள்ளலாருக்கும், வண்ண சரபம் தண்டபாணிசுவாமிகளுக்கும் பத்து நாள் உற்சவம் நடைபெறுகின்றது. நடராஜ பெருமாளுக்குஆறு கால அபிஷேகம், மீனாக்ஷஅம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும்சுக்கிரவார உற்சவம். வைகாசியில் வஸந்தோற்சவம் கல்யாண மண்டபத்தில்உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார் முத்து குமாரசுவாமி, சுற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்தில்எம்பெருமான் எழுந்தருளி சேவை தரும் அந்த அழகை வர்ணிக்க வார்ட்தைகளேஇல்லை. வஸந்தோற்சவத்தின் 19 நாள் உற்சவர் சந்தன காப்பு அலங்காரத்தில்சேவை சாதிக்கின்றார். கடைசி நாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அடுத்தநாள் விடையாற்றி உற்சவத்தின் முதல் நாள் புஷ்பநாக ஊஞ்சல் சேவை. ஆடிப்பூரத்தை ஒட்டி பத்து நாள் உற்சவம் , ஆடிப்பூரத்தன்று மீனாக்ஷதிருக்கல்யாணம். புரட்டாசியில் நவராத்திரியின் போது எழிலாக கொலு தரிசனம்தருகின்றாள் அன்னை விஜய தசமியன்று பாரி வேட்டை நடைபெறுகின்றது. ஐப்பசியில் கந்தர் ஷஷ்டி திருவிழா, கார்த்திகை மாத சோம வாரத்தன்றுஅபிஷேகம், செவ்வாயன்று அர்த்த சாமத்தில் பைரவர் பூஜை. மார்கழி மாதத்தில்தனுர் மாத பூஜை, தையில் பிரம்மோற்சவம். பங்குனியில் பங்குனி உற்சவம் எனவருடம் முழுவதும் திருவிழாதான்.சிறப்பு நாட்களில் வெள்ளி ரதத்தில்எழுந்தருளி அருள் பாலிக்கிறார் முத்து குமார சுவாமி.


இவற்றுள் ஸ்கந்த சஷ்டி விழா ஆறு நாட்கள் வெகு சிறப்பாக கோடி அர்ச்சனையுடன் நடைபெறுகின்றது. மூலவர் கந்த சுவாமிக்கு மூலவர் சன்னதியிலும், உற்சவர் முத்துக் குமார சுவாமி ஆஸ்தான மண்டபத்தில் உஞ்சலிலும் , சரவணப் பொய்கை குளக்கரையிலே ஞான தண்டாயத பாணிக்கும், கல்யாண மண்ட்பத்தில் ஆறு முக சுவாமிக்கும் என நான்கு இடங்களில் கோடி அர்ச்சனை பெரு விழாவாக நடைபெறுகின்றது. அப்போது ஒவ்வொரு வேளையிலும் அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், சோடசோபசாரம். வேத பாராயணம், திருமுறை பாராயணம், ஜபம், ஹோமம் சந்தர்ப்பணை முதலிய வைபவங்களுடன் கோடி அர்ச்சனை சிறப்ப நடைபெறுகின்றது. சமஸ்கிருதத்தில் சகஸ்ரநாமம் முடிந்த பிறகு அன்பர்கள் அனைவரும் முருகனை துதிக்க ஏதுவாக தமிழில் நுற்றியெட்டு போற்றிகள் கூறுவது வேறு எக்கோவிலிலும் இல்லாத ஒரு புதுமை. கோடி அர்ச்சனையில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக பால சுப்பிரமணியர் குளக் கரையில் எழுந்தருளுகிறார். கந்தன் கலையரங்கத்தில் ஆறு நாட்களும் ஆறு விதமான கொலு, மஹா ஸ்கந்த ஷஷ்டி ஆரம்பிப்பதற்கு முதல் நாள் வள்ளியை மணம் புரிய யானையாக வந்து உதவிய யானை முகருக்கு சிறப்பு பூஜை மற்றும் உற்சவர் வைர அங்கியில் அருட் காட்சி. இரண்டம் நாள் முருகப் பெருமான் ஈசனுடன் ஞான மொழி பேசும் பிரணவ உபதேச திருகோலம்,


மூன்றாம் நாள் நவ வீரர்களுடன் சூர சம்ஹார மந்திர ஆலோசனை, நான்காம் நாள் திரு முருகன் சிவபெருமானை வழிபடும் திருக்கோலம், ஐந்தாம் நாள் திருமுருகன் மாறுபடு சூரரை வதைக்க சிவசக்தியிடம் சக்தி வேல் வாங்கும் திருக்கோலம், மஹா ஸ்கந்த சஷ்டியன்று சூர சம்ஹார திருக்காட்சி என்று நாள் ஒரு அலங்காரம். அன்று மாலை ஆறு மணியளவில் தொண்டை மண்டல வழக்கப்படி சூர சம்ஹாரத்திற்கு குதிரை வாகனத்தில் அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் எழுந்தருளி , ஆணவமாம் சூரர்களை சம்ஹாரம் செய்தருளுகின்றார். அடுத்த நாள் காலையில் மூலவர், ஸ்ரீ சண்முகர், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி மஹா அபிஷேகமும், மூலவருக்கு 108 சங்காபிஷேகமும், உற்சவருக்கு 108 பன்னீர் அபிஷேகமும் சிறப்ப நடைபெறுகின்றது. அன்று மாலை தெய்வானை அம்மை திருக்கல்யாணம் பின் மயில் வாகன உற்சவம் திருவீதி உலா என வெகு சிறப்ப நடை பெறுகின்றது ஸ்கந்தர் ஷஷ்டி பெரு விழா. முத்துக் குமரனின் நாமங்கள் நீங்காது ஒலித்திடும் நன்னாளான இந்த ஸ்கந்த ஷஷ்டி நாட்களில் நீங்கா மனத்தினராய் வழிபடும் அன்பர்களுக்கு, நித்தம் துனையிருந்து அருள் பாலிக்கும் கந்த வேளை இத்திருநாட்களில் நாடி வந்து வணங்கும் பக்த கோடிகள் எண்­ணிலடங்கர்.






வடிவேல் அரசே சரணம் சரணம்

கோலக் குறமான் தலைவா சரணம்

ஞாலத்துயர் நீர் நலனே சரணம்

கந்தா சரணம் சரணம் சரணம் என்று வள்ளலார் பாடிய முத்துக் குமார சுவாமிக்கு பிரம்மோற்சவம் தை மாதத்தில். தைபூசத்தையொட்டி 20 நாள் நிகழ்ச்சியாக வெகு பிரசித்தியாக நடை பெறுகின்றது. இந்த தைப்பூச பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் மாலை நாக வாகன தரிச்னத்தின் காட்சிகளை இப்பதிவில் காண்கிறீர்கள். தைப்பூச பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் தொடரும்.

Thursday, January 28, 2010

முந்திரி மாலையில் முத்துக்குமரன்

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 4


முந்திரி மாலையில் ஒளிரும் முத்தான முத்துக்குமரன்
முடியா முதலே சரணம்
சரணம்
முருகா குமரா
சரணம் சரணம்

வடிவே லரசே
சரணம் சரணம்
மயிலூர் மணியே
சரணம்சரணம்

அடியார்க் கெளியாய்
சரணம் சரணம்
அரியாய் பெரியா
சரணம் சரணம்

கடியாக் கதியே சரணம்
சரணம்
கந்தா
சரணம்சரணம்சரணம்


சரவணப் பொய்கை குளத்தை சுற்றி வரும் போது விநாயகர், முருகர், சிவசக்தி மற்றும் லலிதாம்பிகை சுதை சிற்பங்களைக் கண்டு இன்புறலாம். பொய்கையில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. கரையில் வாத்துக்கள் ஒயிலாக நடைபயில்கின்றன. குளக்கரையில் மயில் கூண்டும் உள்ளது அதில் சுமார் பத்து மயில்கள் கொஞ்சி விளையாடுகின்றன. சரவணப் பொய்கையில் நம் மெய் அழுக்கை கழுவிக்கொண்டு மேலே ஏறினால் அக அழுக்கை நீக்கும் ஆடல் வல்லானின் தேக்கு மரத்தால் ஆன அழகிய மர சிற்பம்.


ஆடல்வல்லான் மரச்சிற்பம்


108 நடனக் கோலங்களை விளக்கும்
திருக்கதவங்கள்


அதன் இடப்புறம் வாரியார் சுவாமிகள் மற்றும் திருக்கச்சி நம்பிகள் சன்னதி. அந்த நிருத்த மண்டபத்தின் இறுதியில் ஞான தண்டாயுத பாணி சன்னிதி மற்றும் பள்ளியறை. இந்த இரு சன்னதிகளின் கதவுகளில் சிவபெருமானின் 108 தாண்டவக் கோலங்களும் எழிலுடன் செதுக்கப்பட்டுள்ளன. தேக்கு மரத்தால் ஆன அழகிய கலை பொக்கிஷம். பழனியாண்டவரை மனமுருக வழிபட்டு இன்னும் திருக்கோவிலை வலம் வந்தால் தேவஸ்தான அலுவலகம், அதன் அருகே உள்ள மண்டபத்தில் நவ வீரர்கள், நாயன்மார்கள் சன்னதி மேலே அறுபடை வீடுகளின் அழகிய சுதை சிற்பங்கள். அடுத்து சோமாஸ்கந்தர் கிழக்கு நோக்கியும் மற்றும் நடராஜர் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கும் சன்னதிகள் இருபக்கமும் ஆனந்தத் தாண்தவக்கோலமும், ஊர்த்துவத் தாண்டவ சுதை சிற்பங்கள் அருமை . வடபுறம் சுவரில் பல்வேறு திருமுருகனின் கோலங்கள் சுதை சிற்பங்களாக கவினுற அமைக்கப்பட்டுள்ளன.


சூரபத்மன் வாகனத்தில் முத்துக்குமார சுவாமி
அருள் பாலிக்கும் அழகு

இனி மூலவர் கந்த சுவாமியை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்தில் நுழைவோமா? மண்டபத்திற்குள் நுழையும் போது ஒன்றை கவனிக்கலாம், வாயிலின் இரு பக்கமும் சிற்பங்கள் வலப்பக்கம் சைவ புராண சம்பந்தப்பட்ட சிற்பங்கள், இடப்பக்கம் வைணவ புராண சம்பந்தப்பட்ட சிற்பங்கள் குறிப்பாக கிருஷ்ண லீலை சிற்பங்கள், அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்துகின்றன. வடக்கு நோக்கி வினாயகர் சன்னதி, அடுத்து பால முருகன் சன்னதி(நித்யோத்ஸவர்), கோஷ்டத்தில் வீரபாகு மற்றும் சூரியன். கிழக்கு நோக்கி இளையனார் அனைத்து உற்சவ மூர்த்திகள் சன்னதி, வனவள்ளி சன்னதி, மூலவர் சன்னதி வள்ளி தெய்வானையுடன் மாரி செட்டியாருக்காக தானே வந்து அருளிய கந்த சுவாமி மூர்த்தி சிறிதனாலும் கீர்த்தி பெரிதான எம்பெருமான் முருகன், விழாக் காலங்களில் தங்க கவசத்தில் எம்பெருமானைக் காண கண் கோடி வேண்டும். கஜவள்ளி சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிகள் அமைந்துள்ளன. தெற்கு முகமாக மீனாகக்ஷி அம்மன் சன்னதி, ஆறுமுகர் சன்னதி மயில் மேல் ஷண்முகப்பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகே அழகு.


இந்திய ஜனாதிபதி பரிசு பெற்ற வாகனம்
இந்த சூரபத்மன் வாகனம்

இம்மண்டபத்தில் அற்புத சிற்பங்கள் நிறைந்த தூண்கள் உள்ளன, அம்மை சிவ பூஜை கோலம், மயில் மேல் கால் ஊன்றி நின்ற முருகர், சதுர்முகன், வினாயாகர், தசாவதார கோலங்கள், ஆட வல்லான், பைரவர், பழனி ஆண்டிக்கோலம், மத்தளம் வாசிக்கும் நந்தி, கல்யாண சுந்தரர், ரிஷபாரூடர், கோபால கிருஷ்ணர், அன்னாரூட பிரம்மா, வில் அம்பு தாங்கிய முருகர், தவழும் கண்ணன், என்று பல் வேறு சிற்பங்கள் அனைத்தும் கலை அழகுடனும் தெய்வீக ஒளியுடனும் மிளிர்கின்றன. கூரையிலே சரவணபவ சக்கரம் நமக்கு அருளை வழங்குகின்றது. இச்சன்னதிகளின் முகப்பு முழுவதும் பித்தளை கவசம் பூண்டுள்ளன அவற்றில் பல்வேறு தெய்வத் திருஉருவங்கள். அனைத்து சன்னதிகளின் கதவுகளும் வெள்ளிக் கவசம் பூண்டுள்ளன. அவற்றில் அற்புத சிற்பங்கள். குறிப்பாக மூலவர் சன்னதியில் விநாயகர், உற்சவர், வள்ளி கல்யாணம், தெய்வயாணை கல்யாணம், சேவல், மயில் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. சொக்கநாதர் சன்னதியில் சிவபெருமான் தவக்கோலம், நடராஜர், சிம்மவாகினி, கண்ணப்ப நாயனார் சரிதம், சதாசிவ சிற்பங்கள், மீனாக்ஷி அம்மன் சன்னதி கதவில் மஹாலக்ஷ்மி, அபிராமி, மீனாக்ஷி திருக்கல்யாணம், காமாக்ஷி சிற்பங்கள் என்று இம்மண்டபம் முழுவதுமே ஒரு கலைக் கூடமாக விளங்குகின்றது. கோஷ்டங்களில் இடும்பன், கடம்பன், விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, கிருஷ்ணர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

மூலவரையும், சிவ சக்தியையும் மனம் குளிர வெளியே வந்து முத்துக் குமரன் அருள் புரியும் இக்கோவிலில் இன்னும் வலம் வரலாமா?
--> மூன்று தளங்களாக விளங்குகிறது இக்கோவில், கீழ்த்தளம் சரவணபொய்கை எனலாம். இரண்டாவது மூலவர் உற்சவர் சன்னதிகள் மேலே மூன்றாவது தளத்தில் கந்தன் கலையரங்கம். . செல்ல படி ஏறி மேலே சென்றால் கோடி புண்ணியம் தரும் கோபுர தரிசனம் காணலாம். அனைத்து விமானங்களையும், இராஜ கோபுரத்தின் பின் புறத்தையும் கண்ணாரக் காணலாம்.
இராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானங்கள்

மூலவர் விமானத்தை விட உயரமான உற்சவர் விமானம்

என்னே விந்தை! மூலவரின் விமானத்தை விட முத்து குமார சுவாமியின் விமானம் உயரமாக உள்ளது. அனைத்து விமானங்களையும் தரிசனம் செய்து விட்டு கீழே வந்து வலப்புறம் சென்றால் வசந்த மண்டபம். முழுதும் கண்ணாடியால் அலங்கரிக்கபட்ட அருமையான மண்டபம், நடுவில் நான்கு தூண்கள், மண்டபம் முழுவதும் பல்வேறு போற்றிகள் மற்றும் முருகன் பாடல்கள், கூரையில் அற்புத கண்ணாடி மலர் வேலைப்பாடுகள் என்று எழிலாக விளங்குகின்றது வசந்த மண்டபம், வைகாசியில் 21 நாட்கள் வசந்தோற்சவம் கண்டருளுகிறார் முத்துக்குமார சுவாமி இம்மண்டபத்தில்.


கந்தருவி வாகனத்தில் வள்ளியம்மை

-->
இக்கோவிலைப் பற்றி கூறும் போது திருஅருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளைப் பற்றி கூறாமல் இருக்க முடியாது. வள்ளலார் சுவாமிகளுக்கு அந்த ஞானத்தை அளித்தவர் தான் கந்த சுவாமி. எனவே அந்த முருகனைப் பாடும் போது எதிர்மறையாக இல்லாமல் நேர் மறையாகவே
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான
பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்க வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்
வளர் தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உன்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வமணியே.
என்று தெய்வ மணி மாலையில் பாடுகின்றார் வள்ளலார் சுவாமிகள்.







இப்பதிவில் முந்திரி மாலையில் அருள் பாலிக்கும் முத்துக்குமரன் தரிசனம் பெறுகின்றோம். மூன்றாம் நாள் மாலை சூரபத்மன் வாகனத்தில் அருள் பாலிக்கின்றார் முத்துக்குமார சுவாமி. முந்திரி வியாபரிகள் உபயம் என்பதால் அழகன் முருகனுக்கு இன்று முந்திரி மாலை. எவ்வளவு நேர்த்தியாக கட்டியுள்ளார்கள் முந்திரி மாலையை. இன்றைய தின சூரபத்ம வாகனத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு, இந்த வாகனத்தின் கலைத்திறனைப் பாராட்டி இந்திய ஜனாதிபதி பரிசு வழங்கி கௌரவித்துள்ளார். இவ்வாறு ஜனாதிபதி பரிசுபெற்ற வாகனத்தில் ஒயிலாக முந்திரி மாலையில் வலம் வந்து அருளுகின்றார் முத்துக்குமரர்.