Sunday, January 24, 2010

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 1

,
கந்த கோட்டம் முத்துகுமார சுவாமி தரிசனம்


மூலவர் கந்தசுவாமி வனவள்ளி கஜ வள்ளியுடன்


முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா? கந்தா என்றழைக்கவா? கதிர்வேலா என்றழைக்கவா? என்ற முருகன் பாடலை அனைவரும் அறிவோம். அந்த முருகனுக்கு, முத்துக் குமரனுக்கு, கந்தக் கடம்பனுக்கு, கார்மயில் வாகனனுக்கு, கார்த்திகை பாலனுக்கு உரிய விழாக்களில் தைப்பூசமும் மிகவும் முக்கியமானது. தமிழகமெங்கும் தைப்பூசத்தை ஒட்டி கந்தன் ஆலயமெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

தர்மமிகு சென்னை பாரி முனையில் இராசப்ப செட்டி தெருவில் நாம் அனைவரும் உய்ய அற்புதக் கோவில் கொண்டு அருள் பாலிக்கும் கந்த சுவாமி கோவில் என்று அழைக்கப்படும் முத்துக் குமார தேவஸ்தானத்தில் இந்த தைப்பூச உற்சவம் இருபது நாள் உற்சவமாக மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தினமும் காலையும் மாலையும் முத்துக் குமாரசுவாமியும் வள்ளி தெய்வானையும் பல் வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து நமக்காக நம் இல்லம் வந்து அருள் பாலித்து அருளுகின்றனர். அந்த அற்புத காட்சிகளை இனி வரும் சில பதிவுகளில் காணலாம் அப்படியே இத்தலத்தின் பல சிறப்புகளையும் காணலாம்.


முத்துக்குமாரசுவாமி பிரம்மோற்சவத்தின் போது
அற்புத அலங்காரத்தில்


இப்பதிவில் இவ்வாலயம் இங்கு அமைய காரணமாக இருந்த அந்த அற்புத திருவிளையாடலைக் காண்போமா?


வடிவேல் அரசே சரணம் சரணம்
கோலக் குறமான் கணவா சரணம்
ஞாலத்துயர் நீர் நலனே சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
ஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மணிமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய், சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்து, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, திருவிளையாடல் புரிந்து, அம்மை உமாதேவியாரிடம் சக்தி வேல் பெற்று சூரர் குலத்தை கருவறுத்து தேவர் குழாத்தைக் காத்தருளித் தம்மை வழிபடும் அடியவர் துயர் நீங்க போகாங்க மூர்த்த மாஞ்சக உருவந்தாங்கி ஆங்காங்கு திருக்கோவில் கொண்டருளியிருக்கும் படைவீடு முதலான தலங்களைப் போல தொண்டைமண்டலத்திலே, தருமமிகு சென்னையிலே, இராசப்ப செட்டி தெருவிலே, அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப் பெருங்கருணைஎன்றும் வாடிய பயிரைக் கண்ட போது வாடினேன் என்று பாடிய வள்ளலார்சுவாமிகளால் " திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி " என்று பாடல் பெற்ற தலம் தான்சென்னை ஸ்ரீ கந்தசுவாமி கோவிலென வழங்கப்படும் ஸ்ரீ முத்துக்குமார சுவாமிதேவஸ்தானம். ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் முதலாய ஞானியர்களால் பெரிதும் புகழ்ந்து பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் முருகப்பெருமான் கஜவல்லி, வனவள்ளி சமேதராய் கந்தசுவாமி என்னும் திருப் பெயருடன் மூலவராகவும், உடம்பு முழுவதுடம் முத்துக்கள் பெற்றிருப்பதால் முத்துக் குமார சுவாமி என்ற திரு நாமத்துடன் உற்சவராகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். வாருங்கள் அந்த அழகன் முருகன் கொஞ்சி விளையாடும் அவன் தலத்தை தரிசிப்போம்.
இந்த ஆலயம் சுமார் 360 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வரலாறு மிகவும் சுவையானது, அவரது திருவிளையாடல் மூலமாகவே இவ்வாலயம் இங்கு உண்டானது, அதற்கு அவர் தேர்ந்தெடுத்தவர்தான் பேரி செட்டியார் வகுப்பைச் சார்ந்த மாரி செட்டியார். மாரி செட்டியார் தனது நண்பர் கந்தப்பச்சாரி செட்டியாருடன் ஒவ்வொரு கிருத்திகை தோறும் சென்னையிலிருந்து திருப்போரூர் சென்று ஒரு கை முகன் இளவலை, கந்தக் கடம்பனை, கார் மயில் வாகனனை, விளங்கு வள்ளி காந்தனை, மாயோன் மருகனை, பாம்பன் சுவாமிகள் வழிபடும் சுயம்பு கந்தவேளை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னைக் காண வரும் அன்பனின் அருகிலேயே கோவில் கொள்ள விரும்பிய அழகன் ஒரு திருவிளையாடலை நடத்தினான். ஒரு கார்த்திகையன்று மாரி செட்டியாரும் அவரது நண்பர் கந்தசுவாமி தம்பிரானும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த போது வெகு காலமாக ஒரு புற்றில் தான் இருப்பதாகவும் தன்னை எடுத்துச் சென்று ஒரு கோவில் கட்டுமாறும் அசரீரியாக கூறினார். உறக்கத்தில் இருந்து எழுந்த இருவரும் அருகில் இருந்த புற்றில் அடியில் கந்த வேளை தேவியர் இருவருடனும் கண்டெடுத்தனர். முருகன் மயிலுடன் நின்ற கோலத்தில் தன் தேவியருடன் இருந்ததைக் கண்டு அதிசயித்து விழுந்து வணங்கி அந்த விக்கிரகத்தை பயபக்தியுடன் சென்னை கொண்டு வந்து தற்போது கோவில் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தார்.

மாரி செட்டியாரின் வரலாறு இராஜ கோபுரத்தின்
கீழ் தளத்தில் சுதை சிற்பமாக அமைத்துள்ளனர்.

அன்பர் ஒருவர் தன்னுடைய பூந்தோட்டத்தை கோவில் கட்ட இலவசமாக கொடுத்தார், ஆதிகாலத்தில் சித்தி விநாயகர் ஆலயம் மட்டும் தான் இவ்விடத்தில் இருந்தது. தன் மனைவியின் நகைகளை விற்று இத்திருக்கோவிலை உண்டாக்கினார் மாரி செட்டியார். பிறகு ஆயிர வைசிய பேரி செட்டியார் சமூகத்தினரிடம் கோவிலை ஒப்படைத்தார். அவர்களும் இராஜ கோபுரத்தைக் கட்டி கோவிலுக்கு நித்ய கட்டளைகள் ஏற்படுத்தி கோவிலை மேலும் விரிவு படுத்தினர். தொடர்ந்து இவர்களின் வாரிசுகள் இன்றும் எண்ணற்ற திருப்பணிகள் செய்து வருகின்றனர். மேலும் தங்களுக்கு வாரிசு இல்லாதவர்கள் பலர் தங்கள் சொத்தை இக்கோவிலுக்கு எழுதி வைத்து அறப்பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். பள்ளிகள், கல்லுரிகள், நூல் நிலையம், கலாலயம், மருத்துவமனை, கருணை இல்லம் என்று பல் வேறு சமுதாயப்பணிகள் இத்திருக்கோவில் சார்பாக நடத்தப்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர் என்றால் அது அந்த முருகனின் அபார கருணையினால்தான்.

இவ்வாறு அந்த முருகனின் அருளால் திருப்போரூரிலிருந்து கந்த கோட்டத்தில் வந்து கோவில் கொண்டான் முத்துக் குமரன். இனி உற்சவராக முத்துக் குமாரசுவாமி இத்தலத்தில் வந்து கோவில்கொண்ட அற்புத சரிதத்தை காண்போம் அன்பர்களே.

4 comments:

cheena (சீனா) said...

அன்பின் கைலாஷி

அருமை அருமை - கந்த கோட்டம் - முத்துக் குமார சுவாமி தரிசனம் - இடுகை அருமை

படங்கலூம் விவரிக்கும் விதமும் அருமை.

நன்றி கைலாஷி - தரிசனத்திற்கு

நல்வாழ்த்துகள் கைலாஷி

Jayashree said...

முத்துகுமார ஸ்வாமி எத்தனை அழகு. இந்த முறை போக முடியவில்லை. மார்கழியில் காலை கிளம்பினால் ஒரு கோவில் தான் முடிகிற்து. காளிகாம்பாள், பார்தசாரதியோட combine பண்ண முடியவில்லை. திருப்போருர் கந்தசாமி யும் வள்ளி தேவசேனாபதி தான் . அழகாக இருந்தது அது தனி எனர்ஜி என்று தோனியது. இந்த கோவில் தானே பூங்கா கோவில். அடுத்த முறை கட்டாயம் பார்க்கவேணும். இந்த சாந்தானந்த ஸ்வாமிகளோட கந்த கோட்டம் வேறயா? படங்கள் நன்னா இருக்கு. நீங்க முந்தி முத்துகுமார ஸ்வாமி முத்தங்கி படம் போட்டிருந்தீர்கள் ஒரு பதிவில்.

S.Muruganandam said...

மிக்க நன்றி சீனா ஐயா. முருகன் அருள் முன்னிற்கும். அனைவரையும் அந்த அருள் முருகன் காப்பாற்றட்டும்.

S.Muruganandam said...

//காளிகாம்பாள், பார்தசாரதியோட combine பண்ண முடியவில்லை.//

காளிகாம்பாள் கோவில் உள்ள அதே பகுதியில்தான் கந்த கோட்டமும் உள்ளது.

//இந்த கோவில் தானே பூங்கா கோவில். //

ஆமாம் இக்கோவில் பூங்கா நகரில் அமைந்துள்ளது.

//நீங்க முந்தி முத்துகுமார ஸ்வாமி முத்தங்கி படம் போட்டிருந்தீர்கள் ஒரு பதிவில்.//

இதே முத்துக் குமார சுவாமிதான் அவரும், அது ஆடி கார்த்திகை தின வஜ்ரங்கி சேவை.