Wednesday, January 27, 2010

முந்திரி மாலையில் முத்துக்குமரன்

முத்துக்குமார சுவாமி தரிசனம் - 4


முந்திரி மாலையில் ஒளிரும் முத்தான முத்துக்குமரன்
முடியா முதலே சரணம்
சரணம்
முருகா குமரா
சரணம் சரணம்

வடிவே லரசே
சரணம் சரணம்
மயிலூர் மணியே
சரணம்சரணம்

அடியார்க் கெளியாய்
சரணம் சரணம்
அரியாய் பெரியா
சரணம் சரணம்

கடியாக் கதியே சரணம்
சரணம்
கந்தா
சரணம்சரணம்சரணம்


சரவணப் பொய்கை குளத்தை சுற்றி வரும் போது விநாயகர், முருகர், சிவசக்தி மற்றும் லலிதாம்பிகை சுதை சிற்பங்களைக் கண்டு இன்புறலாம். பொய்கையில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. கரையில் வாத்துக்கள் ஒயிலாக நடைபயில்கின்றன. குளக்கரையில் மயில் கூண்டும் உள்ளது அதில் சுமார் பத்து மயில்கள் கொஞ்சி விளையாடுகின்றன. சரவணப் பொய்கையில் நம் மெய் அழுக்கை கழுவிக்கொண்டு மேலே ஏறினால் அக அழுக்கை நீக்கும் ஆடல் வல்லானின் தேக்கு மரத்தால் ஆன அழகிய மர சிற்பம்.


ஆடல்வல்லான் மரச்சிற்பம்


108 நடனக் கோலங்களை விளக்கும்
திருக்கதவங்கள்


அதன் இடப்புறம் வாரியார் சுவாமிகள் மற்றும் திருக்கச்சி நம்பிகள் சன்னதி. அந்த நிருத்த மண்டபத்தின் இறுதியில் ஞான தண்டாயுத பாணி சன்னிதி மற்றும் பள்ளியறை. இந்த இரு சன்னதிகளின் கதவுகளில் சிவபெருமானின் 108 தாண்டவக் கோலங்களும் எழிலுடன் செதுக்கப்பட்டுள்ளன. தேக்கு மரத்தால் ஆன அழகிய கலை பொக்கிஷம். பழனியாண்டவரை மனமுருக வழிபட்டு இன்னும் திருக்கோவிலை வலம் வந்தால் தேவஸ்தான அலுவலகம், அதன் அருகே உள்ள மண்டபத்தில் நவ வீரர்கள், நாயன்மார்கள் சன்னதி மேலே அறுபடை வீடுகளின் அழகிய சுதை சிற்பங்கள். அடுத்து சோமாஸ்கந்தர் கிழக்கு நோக்கியும் மற்றும் நடராஜர் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கும் சன்னதிகள் இருபக்கமும் ஆனந்தத் தாண்தவக்கோலமும், ஊர்த்துவத் தாண்டவ சுதை சிற்பங்கள் அருமை . வடபுறம் சுவரில் பல்வேறு திருமுருகனின் கோலங்கள் சுதை சிற்பங்களாக கவினுற அமைக்கப்பட்டுள்ளன.


சூரபத்மன் வாகனத்தில் முத்துக்குமார சுவாமி
அருள் பாலிக்கும் அழகு

இனி மூலவர் கந்த சுவாமியை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்தில் நுழைவோமா? மண்டபத்திற்குள் நுழையும் போது ஒன்றை கவனிக்கலாம், வாயிலின் இரு பக்கமும் சிற்பங்கள் வலப்பக்கம் சைவ புராண சம்பந்தப்பட்ட சிற்பங்கள், இடப்பக்கம் வைணவ புராண சம்பந்தப்பட்ட சிற்பங்கள் குறிப்பாக கிருஷ்ண லீலை சிற்பங்கள், அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்துகின்றன. வடக்கு நோக்கி வினாயகர் சன்னதி, அடுத்து பால முருகன் சன்னதி(நித்யோத்ஸவர்), கோஷ்டத்தில் வீரபாகு மற்றும் சூரியன். கிழக்கு நோக்கி இளையனார் அனைத்து உற்சவ மூர்த்திகள் சன்னதி, வனவள்ளி சன்னதி, மூலவர் சன்னதி வள்ளி தெய்வானையுடன் மாரி செட்டியாருக்காக தானே வந்து அருளிய கந்த சுவாமி மூர்த்தி சிறிதனாலும் கீர்த்தி பெரிதான எம்பெருமான் முருகன், விழாக் காலங்களில் தங்க கவசத்தில் எம்பெருமானைக் காண கண் கோடி வேண்டும். கஜவள்ளி சன்னதி, சுந்தரேஸ்வரர் சன்னதிகள் அமைந்துள்ளன. தெற்கு முகமாக மீனாகக்ஷி அம்மன் சன்னதி, ஆறுமுகர் சன்னதி மயில் மேல் ஷண்முகப்பெருமான் எழுந்தருளி அருள் பாலிக்கும் அழகே அழகு.


இந்திய ஜனாதிபதி பரிசு பெற்ற வாகனம்
இந்த சூரபத்மன் வாகனம்

இம்மண்டபத்தில் அற்புத சிற்பங்கள் நிறைந்த தூண்கள் உள்ளன, அம்மை சிவ பூஜை கோலம், மயில் மேல் கால் ஊன்றி நின்ற முருகர், சதுர்முகன், வினாயாகர், தசாவதார கோலங்கள், ஆட வல்லான், பைரவர், பழனி ஆண்டிக்கோலம், மத்தளம் வாசிக்கும் நந்தி, கல்யாண சுந்தரர், ரிஷபாரூடர், கோபால கிருஷ்ணர், அன்னாரூட பிரம்மா, வில் அம்பு தாங்கிய முருகர், தவழும் கண்ணன், என்று பல் வேறு சிற்பங்கள் அனைத்தும் கலை அழகுடனும் தெய்வீக ஒளியுடனும் மிளிர்கின்றன. கூரையிலே சரவணபவ சக்கரம் நமக்கு அருளை வழங்குகின்றது. இச்சன்னதிகளின் முகப்பு முழுவதும் பித்தளை கவசம் பூண்டுள்ளன அவற்றில் பல்வேறு தெய்வத் திருஉருவங்கள். அனைத்து சன்னதிகளின் கதவுகளும் வெள்ளிக் கவசம் பூண்டுள்ளன. அவற்றில் அற்புத சிற்பங்கள். குறிப்பாக மூலவர் சன்னதியில் விநாயகர், உற்சவர், வள்ளி கல்யாணம், தெய்வயாணை கல்யாணம், சேவல், மயில் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. சொக்கநாதர் சன்னதியில் சிவபெருமான் தவக்கோலம், நடராஜர், சிம்மவாகினி, கண்ணப்ப நாயனார் சரிதம், சதாசிவ சிற்பங்கள், மீனாக்ஷி அம்மன் சன்னதி கதவில் மஹாலக்ஷ்மி, அபிராமி, மீனாக்ஷி திருக்கல்யாணம், காமாக்ஷி சிற்பங்கள் என்று இம்மண்டபம் முழுவதுமே ஒரு கலைக் கூடமாக விளங்குகின்றது. கோஷ்டங்களில் இடும்பன், கடம்பன், விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, கிருஷ்ணர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

மூலவரையும், சிவ சக்தியையும் மனம் குளிர வெளியே வந்து முத்துக் குமரன் அருள் புரியும் இக்கோவிலில் இன்னும் வலம் வரலாமா?
--> மூன்று தளங்களாக விளங்குகிறது இக்கோவில், கீழ்த்தளம் சரவணபொய்கை எனலாம். இரண்டாவது மூலவர் உற்சவர் சன்னதிகள் மேலே மூன்றாவது தளத்தில் கந்தன் கலையரங்கம். . செல்ல படி ஏறி மேலே சென்றால் கோடி புண்ணியம் தரும் கோபுர தரிசனம் காணலாம். அனைத்து விமானங்களையும், இராஜ கோபுரத்தின் பின் புறத்தையும் கண்ணாரக் காணலாம்.
இராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானங்கள்

மூலவர் விமானத்தை விட உயரமான உற்சவர் விமானம்

என்னே விந்தை! மூலவரின் விமானத்தை விட முத்து குமார சுவாமியின் விமானம் உயரமாக உள்ளது. அனைத்து விமானங்களையும் தரிசனம் செய்து விட்டு கீழே வந்து வலப்புறம் சென்றால் வசந்த மண்டபம். முழுதும் கண்ணாடியால் அலங்கரிக்கபட்ட அருமையான மண்டபம், நடுவில் நான்கு தூண்கள், மண்டபம் முழுவதும் பல்வேறு போற்றிகள் மற்றும் முருகன் பாடல்கள், கூரையில் அற்புத கண்ணாடி மலர் வேலைப்பாடுகள் என்று எழிலாக விளங்குகின்றது வசந்த மண்டபம், வைகாசியில் 21 நாட்கள் வசந்தோற்சவம் கண்டருளுகிறார் முத்துக்குமார சுவாமி இம்மண்டபத்தில்.


கந்தருவி வாகனத்தில் வள்ளியம்மை

-->
இக்கோவிலைப் பற்றி கூறும் போது திருஅருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளைப் பற்றி கூறாமல் இருக்க முடியாது. வள்ளலார் சுவாமிகளுக்கு அந்த ஞானத்தை அளித்தவர் தான் கந்த சுவாமி. எனவே அந்த முருகனைப் பாடும் போது எதிர்மறையாக இல்லாமல் நேர் மறையாகவே
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான
பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்க வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்
வளர் தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உன்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வமணியே.
என்று தெய்வ மணி மாலையில் பாடுகின்றார் வள்ளலார் சுவாமிகள்.இப்பதிவில் முந்திரி மாலையில் அருள் பாலிக்கும் முத்துக்குமரன் தரிசனம் பெறுகின்றோம். மூன்றாம் நாள் மாலை சூரபத்மன் வாகனத்தில் அருள் பாலிக்கின்றார் முத்துக்குமார சுவாமி. முந்திரி வியாபரிகள் உபயம் என்பதால் அழகன் முருகனுக்கு இன்று முந்திரி மாலை. எவ்வளவு நேர்த்தியாக கட்டியுள்ளார்கள் முந்திரி மாலையை. இன்றைய தின சூரபத்ம வாகனத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு, இந்த வாகனத்தின் கலைத்திறனைப் பாராட்டி இந்திய ஜனாதிபதி பரிசு வழங்கி கௌரவித்துள்ளார். இவ்வாறு ஜனாதிபதி பரிசுபெற்ற வாகனத்தில் ஒயிலாக முந்திரி மாலையில் வலம் வந்து அருளுகின்றார் முத்துக்குமரர்.

6 comments:

Logan said...

ஐயா உங்கள் வலைபூவினால் முதல் முறையாக முந்திரி மாலையில் முத்துக்குமாரனை தரிசனம் செய்ய அருள் கிடைத்தது, நன்றி

படத்தை பெரிதுபடுத்தி பார்த்த போது எவ்வளவு அழகாக நேர்த்தியாக தொடுக்கப்பட்ட மாலை! அதை முத்துக்குமரன் சூடியவுடன் அழகுக்கு அழகு சேர்ந்தது என உணர்ந்தேன்...

சூரபத்மன் வாகனத்தை பார்த்தவுடன் சூரனே உயிர்தெழுந்து முத்துகுமரன் முன்பு வந்து அடிபணிந்தது போன்ற உணர்வு.

ஜனாதிபதி பரிசு பெற்ற வாகனம் - தகவலுக்கு நன்றி

Kailashi said...

வாருங்கள் Logan ஐயா. தங்களுக்கு தைப் பூச நாள் நல்வாழ்த்துக்கள். அலங்கார மண்டபத்தில் அப்பன் அழகன் முருகனை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்ட போது அங்கிருந்த திருக்கோவில் பணியாளர் கூறியது இது. முத்துக்குமரன் முந்திரி மாலையில் அருள் பாலிக்கின்றார். வெளியே உள்ள சூரபத்மன் வாகனத்தையும் கட்டாயம் படம் எடுங்கள் இவ்வாகனத்திற்கு ஜனாதிபதி பரிசு கிடைத்துள்ளது.

வாகனத்தையும், அதன் கம்பீரத்தையும் அதில் உள்ள வேலைப்பாடுகளையும் கண்டு யாருமே வியக்காமல் இருக்க முடியாது.

வருகைக்கு மிக்க நன்றி.

கவிநயா said...

முதல் படத்தைப் பார்த்ததுமே கண்ணும் மனசும் நிறைஞ்சிட்டது! அனைத்துப் படங்களுமே கொள்ளை அழகு. அரிய செய்திகளையும் பொருத்தமாகப் பகிர்ந்து தந்தமைக்கு மிக்க நன்றி.

Kailashi said...

மிக்க நன்றி கவிநயா. இன்னும் சில பதிவுகள் வரும் அவைகளையும் கண்டு களியுங்கள்.

மாதேவி said...

முந்திரி மாலையில் முத்துக்குமரனின் தரிசனம் படங்களுடன் அழகு.

Kailashi said...

வாருங்கள் சுவையான சமையலுடன் எழுத்து சமையலும் செய்யும் மாதேவி மற்ற பதிவுகளையும் கண்டு அருள் பெறுங்கள்.