Wednesday, December 7, 2022

சுவாமியே சரணம் ஐயப்பா - 9

 குளத்துப்புழை பாலகன்


அலங்கார வளைவு


இத்தொடரின் மற்ற பதிவுகள்:    

             4                  10    11   12      13     14     15     16     17     18     19     20    21     22     23     24     
 
சிரஞ்சீவியான பரசுராமர் ஐயப்பனுக்காக நான்கு முக்கியக் கோவில்களை உருவாக்கினார் என்று புராணங்கள் பகர்கின்றன. குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில் மற்றும் சபரிமலை. ஆகிய இத்தலங்கள் நான்குமே கேரள மாநிலத்தில் ஒரே மலைத் தொடரில் அமைந்துள்ளது சிறப்பான விஷயமாகும். அவற்றுள் அடுத்து குளத்துப்புழை ஆலயத்தை அடுத்து தரிசிக்கலாம் அன்பர்களே.  இத்தலம் ஐயனின் ஆதாரத் தலங்களுள் அநாகதத் தலமாகும்




கேரளத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது இத்தலம்.செங்கோட்டை-த்ருவனந்தபுரம்  சாலையில்     செங்கோட்டையிலிருந்து சுமார் 40-50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மதுரை - கொல்லம் இருப்புப் பாதை வழியாகவும் இக்கோவிலை அடையலாம். மேலும் இவ்வூர் திருவனந்தபுரத்திலிருந்து 62 கிமீ தூரத்திலும், கொல்லத்திலிருந்து 64 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இங்கு ஐயப்பன் பால சாஸ்தாவாக அருள் பாலிக்கின்றார். இத்தலத்திற்கு அருகில் கல்லடா ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.

மனித வாழ்க்கையின் பால பருவத்தைக் குறிக்கும் தலமாக இக்கோயில் விளங்குவதால், பால பருவத்தினர் தங்களது படிப்பு, உடல்  ஆரோக்கியம் போன்ற விஷயங்களில சிறந்த பலனைப் பெற இங்கு வந்து வழிபடுவது சிறந்தது என்கிறார்கள். 

பாலகனாக ஐயன் அருள் பாலிக்கும் இத்தலத்தின்  நுழைவு வாயில்  சிறுவர்கள் நுழையும் அளவிலான உயரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது.  தலை குனிந்து உள்ளே செல்ல முடியும்.  இங்கு விஜயதசமி தினத்தன்று குழந்தைகளுக்கு  ‘வித்யாரம்பம்’ செய்து வைத்தால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.   குழந்தை வரம் வேண்டுவோரும் வழிபட ஏற்ற தலம் இது.

 இத்தலத்தின் தல வரலாறு. கொட்டாரக்கரை பகுதியை ஆண்ட ஒரு அரசரும் அவருடைய ஆட்களும் இராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வரும் போது இக்காட்டில் கல்லடையாற்றின் கரையில்  தங்க நேர்ந்தது. அப்போது உணவு சமைப்பதற்காக அடுப்பு மூட்டக் கல் தேடினர். மூன்று கற்களும் ஒரே அளவில் கிடைக்கவில்லை. ஒரு கல் மட்டும் சற்றுப் பெரிதாக இருந்தது. அளவில் பெரிதாக இருந்த கல்லை அதைவிட பெரிதான ஒரு கல்லைக் கொண்டு உடைக்க முயற்சித்தனர். உடைக்க நினைத்த கல் உடையாமல் உடைக்கப் பயன்படுத்திய கல் எட்டு துண்டுகளாக உடைந்தது. உடைந்த பகுதிகளில் இருந்து இரத்தம் வழிந்தது. அரசரிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், சிதறிய கல் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் உருவம் என்று தெரிய வந்தது. பரிகாரமாக அவ்விடத்தில் குழந்தை வடிவான ஐயப்பனுக்குக் கோவில் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

குளத்துபுழை ஆலயம் 

சிதறிய எட்டுத் துண்டுகளும் கருவறையுள் உள்ளன. பூசை சமயத்தில் இவை ஒன்றாக வைக்கப்பட்டு வழிபட்டபின் வழக்கமான நிலையில் வைக்கப்படுகின்றன. உடன் சிவபெருமானும் சீவேலி மூர்த்தியும் எழுந்தருளி அருள்  பாலிக்கின்றனர். பால சாஸ்தாவிற்கு துளசியும் சிவபெருமானுக்கு வில்வமும் சார்த்துவது சிறப்பு. 

குளத்துப்புழை ஐயப்பனின் அழகில் மயங்கிய மச்சக் கன்னி ஒருத்தி அவரைத் திருமணம் செய்ய விழைய ஐயப்பன் மறுத்து விட்டார். அதனால் அவள் அவரைப் பார்த்துக் கொண்டே அப்பகுதியில் வாழும் வரத்தையாவது தனக்குத் தர வேண்டுமென ஐயப்பனிடம் வேண்ட அவரும் தனது தலத்தில் ஓடும் ஆற்றில் மீனாக இருக்கும்படி அருளினாராம்.மச்சக் கன்னியும் அவள் தோழியரும் கல்லடையாற்றின் இப்பகுதியில் மீன்களாக வாழ்வதாக நம்பிக்கை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேண்டுதலுக்காக இங்குள்ள மீன்களுக்குப் பொரி போடுகின்றனர். இதை "மீனூட்டு" என்றழைக்கின்றனர்.  மீனூட்டு இத்தலத்தின் ஒரு சிறப்பான வழிபாடாகும்.  ஆற்றின் மற்ற பகுதிகளில் இல்லாத அளவில் இங்கு மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் இவை அடித்துச் செல்லப்படுவதில்லை. இம்மீன்களை யாரும் பிடிப்பதும் இல்லை. 

அடியோங்கள் இத்தலத்திற்குச் சென்ற போது நடை சார்த்தியிருந்தது. ஆகவே கல்லடா ஆற்றில் குளித்தோம்.  பின்னர் தரிசனம் கிட்டியது. ஆலயத்தை அடைய ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும் பாலத்தின் முகப்பில் அலங்கார வளைவு பக்தர்கள் அனைவரையும் வரவேற்கின்றது. 



குளத்துப்புழா கோவில் கேரளக் கட்டிட அமைப்பைச் சேர்ந்தது. மரத்தாலான கோவில். கொடி மரம் இல்லை. பலி பீடம் ஒரு மண்டபத்தில் அமைந்துள்ளது. நமஸ்கார மண்டப கூரையில் நவகிரக சிற்பங்கள், யானை குதிரை வாகனங்கள் உள்ளன. துவாரபாலகர்கள் கோரைப்பற்களுடன் அமைந்துள்ளனர். அவர்களின் காது குண்டலமாக யானை மற்றும் இவர்களின் வீரத்தையும் பிரம்மாண்டத்தையும் உணர்த்துகின்றது.  நடுவில் சதுர வடிவ  ஸ்ரீகோவில் (கருவறை)  சுற்றி மரத்தாலான சாய்ந்த  கூரையுடன் கூடிய சதுர வடிவப் பிரகாரம். விளக்கு மாடத்துடன் கூடிய சுற்றம்பலம். இங்கு ஐயப்பன் பாலகனாகக் கருவறையுள் காட்சி தருகிறார். திருக்கரங்களில் வில், அம்பு ஏந்தி மகிஷியை  கொல்ல காட்டுக்குள் சென்ற கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். 

மச்சக்கன்னிகள்

பிரகாரத்தின் வலப்புறத்தில் யட்சியம்மன் சன்னிதி உள்ளது. குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனுக்குத் தொட்டில் கட்ட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தை வலம் வரும்போது தனியே பிரிந்து செல்லும் பாதை, திறந்தவெளிக் கோவிலாக அமைந்துள்ள நாகராஜர் கோவிலுக்கு இட்டுச் செல்லுகிறது. இவ்விரண்டு சன்னிதிகள் தவிர கோவிலைச் சுற்றி, விநாயகர், மாம்பழத்துறை  பகவதி, பிரயோக சக்கரத்துடன் மஹா விஷ்ணு,  பூதத்தார் சன்னிதிகளும் அமைந்துள்ளன. குழந்தைகளின் கல்விக்காக பலர் நீராஞ்சனத்திற்கு பணம் கட்டியதை கவனித்தோம். 

சித்திரை விஷு மகோத்சவம் இத்தலத்தில் சிறப்பாக  கொண்டாடப்படுகிறது.  கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரிமலைக்குச் சென்று வரும் பக்தர்கள் இங்கும் வந்து செல்வார்கள். தை மாதம் முதல் தேதி மகர விளக்கு வைபவமும் மிக விமரிசையாக நடைபெறுகின்றது.. 

அடர்ந்த கானகத்தில் அருமையான பசுமை சூழ்ந்த பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது. தென்மலை அணை அருகில் அமைந்துள்ளது.  மேலும் இத்தலத்தைச் சுற்றி 1000 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள பாதுகாப்பு வனச்சரகமும் அமைந்துள்ளது. ராக் வுட் எஸ்டேட் மற்றும் செந்தூரணி காட்டுயிர் சரணாலயம்,  போன்ற முக்கிய சுற்றுலா அம்சங்களும் குளத்துப்புழாவுக்கு அருகில் அமைந்துள்ளன. சமயம் கிடைக்கும்  போது சென்று தரிசியுங்கள். 

********
பிறந்தது முதல் பதினெட்டு வயது வரை `பால்ய பருவம்'. இந்தப் பருவத்தை விளக்கும் அவதாரத்தை விளக்கும் திருத்தலம் குளத்துப்புழா. பத்தொன்பது முதல் முப்பத்தைந்து வயது வரை உள்ள பருவம் `யௌவன பருவம்.' இப்பருவத்தை விளக்கும் தலம், ஆரியங்காவு. முப்பத்தாறு முதல் ஐம்பத்தைந்து வயதுவரை `   கிருஹஸ்த பருவம்' இப்பருவத்தை விளக்கும் தலம் அச்சன்கோவில். ஐம்பத்தொரு முதல் எண்பத்தைந்து வயது வரை, `வானப்பிரஸ்தம்' இப்பருவத்தை விளக்கும் தலம் சபரிமலை. எண்பத்தாறு வயது முதல் ஏகாந்த' நிலை - காந்தமலை . இப்படி மனித வாழ்வோடு தொடர்புடைய நிலைகளை விளக்கும் தனது அவதாரங்களாக சுவாமி ஐயப்பன் எழுந்தருளியுள்ள கோவில்கள் என்பர் பெரியோர்.


குருசாமி திருவடிகளே சரணம் 

சுவாமியே சரணம் பொன் ஐயப்பா


ஐயப்ப தரிசனம் தொடரும் . . . . . . . .

No comments: